நல்லூர் கணநாதருக்கு நள்ளிரவில் பூஜை

கும்பகோணம் அருகேயுள்ளது நல்லூர் அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் ஸ்வாமி கோயில். இங்குள்ள மேற்கு கோபுர வாயிலின் வெளிப்புறத்தில் வெட்டவெளியில் இரு ‘பலி பீடங்கள்’ உள்ளன. அவர்கள்தான் ‘கணநாதர்’ என்றழைக்கப்படும் ‘பெருமானார்’ ஆவார். முன்னோர்கள் இந்த தெய்வத்திற்குக் கோயில் எழுப்ப முயற்சித்தபோது அசரீரியால் தடுக்கப்பட்டு, அந்த முயற்சி கைவிடப்பட்டது. இது போன்ற பலிபீட கணநாதர் வடிவம் காசி க்ஷேத்திரத்தில் மட்டுமே உள்ளதாம். கணங்களைக் காத்திட, சுற்றுப் புறமும் அழுக்கு நீக்கம் பெற்று நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள கிருமிகள் நாசமடைய, கணங்களின் அதிபதியாம் கணநாதர் வழிபாடு கும்பகோணம் அருகேயுள்ள நல்லூரில் நடக்கிறது.

இந்த தெய்வத்திற்கு அதாவது, பலிபீடத்திற்கு நித்ய பூஜை, நைவேத்யம் என்று எதுவும் கிடையாது.

ஆண்டுக்கு ஒரு முறை ஒரு நள்ளிரவில் பூஜை நடைபெறும். அதுவும் ஆண்டவன் திருவுளம் கொண்ட ஆண்டில் குறிப்பிட்ட மாதத்தில், குறிப்பிட்ட நாளில் மட்டுமே நடைபெறுகிறது. குறிப்பிட்ட நாளில், ஊரில் அன்று கணநாதருக்குப் பூஜை போடப்போவது பற்றி அறிவிக்கப்படும். வெளியூரில் உள்ள பக்தர்களும் மனமுவந்து தாராளமாகக் காணிக்கைகளை அனுப்பிவைப்பார்கள். அதைக் கொண்டு பூஜைக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வார்கள். அன்று நல்லூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வரும் தங்கள் வீட்டிலுள்ள பசு, எருமைகளின் பாலைக் கறந்து, ஒரு சொட்டு பாலை கூட சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தாது, இருவேளையும் பூஜைக்கு வேண்டிய ஏற்பாடுகள் நடத்தப்படும் பொது இடத்திற்குக் கொண்டு வந்து கொடுப்பார்கள்.

அப்படிப் பால் கொடுக்கத் தவறினால், அவர்களின் வீட்டுக் கால் நடைகளுக்கு நோய் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. பூஜைக்கு பக்தர்கள் ஆசார சீலத்துடன் இருந்து ஸ்வாமி நைவேத்தியத்திற்குப் பால் பாயசம் தயார் செய்வார்கள். அதுபோல், ஒரு ரூபாய் நாணய அளவிலான அதிரசம், வடை தயாரிக்கப்பட்டு சாட்டாங்கூடைகளில் வைக்கப்

படும். கிராம மகளிர் ஒன்று கூடி இவைகளையெல்லாம் தயார் செய்வார்கள். அன்று இரவு கிராமத்தார்கள் அனைவரும் கூடி அபிஷேக சாமான்களையும், நைவேத்தியப் பொருட்களையும்எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு பானை தூக்குபவர்களுக்கும் முன்னால், தீவட்டியுடன் ஒரு பையன் வழி காட்டிச் செல்ல, யாவரும் கோயிலை அடைவார்கள்.

கூரை ஏதுமின்றி வெட்ட வெளியில், பலிபீட வடிவில் இருக்கும் கணநாதர் எனும் பெருமானாருக்கு வேத கோஷம் முழங்க, பசும்பால் முழவதும் அபிஷேகம் செய்யப்படும். சுமார் ஐம்பது கிலோ கட்டிச் சூடம் இரண்டு மண்வாணாவில் இடம் பெற்று, தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும். அந்த வெளிச்சமே போதுமானதாக இருக்கும். மங்கள வாத்தியம் எதுவும் இசைக்கமாட்டார்கள். அபிஷேகம் முடிந்து, சந்தனக் காப்பு சாற்றப்பட்டு வடை, பாயசம், தேங்காய் பழங்கள் முதலியவை நைவேத்தியம் செய்யப்பட்டு, கற்பூர ஆரத்தி எடுக்கப்பட்டு, வடிகட்டிய சாம்பிராணித் தைலம் மற்றும் வாசனைப் பொருட்கள் சேர்க்கப்பட்ட விபூதி கொண்டு ஸ்வாமிக்கு லேசாக அணிவித்து, அந்த பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படும். இத்துடன் பூஜை நிறைவு பெறும்.

நள்ளிரவில் நடைபெறுவதால், இந்த பூஜைக்கு பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அது போல, அன்று இரவு யாரும் வெளித் திண்ணையில் படுத்துறங்க மாட்டார்கள். ஏனென்றால், கணநாதர் ‘சல்...சல்..’ என்ற சலங்கை ஒலியுடன் வீதிஉலா வருவாராம். இதை பலரும் கேட்டிருக்கிறார்களாம். மறுநாள் காலையில், மக்கள் தரிசனத்திற்குச் செல்வர். நைவேத்தியம் செய்யப்பட்ட வடை, பாயசம், முதலிய பிரசாதங்கள் மீண்டும் பொது இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, வெளியூர் பக்தர்களுக்கு முதலில் வழங்கப்பட்ட பின்னர் உள்ளூர் வாசிகளுக்கு வழங்கப்படும்.நல்லூர் கணநாதருக்கு நள்ளிரவில் பூஜை செய்யப்படுவதால் ஊர்மக்கள் நலமாக இருப்பதுடன், தொற்று நோய்களும் கால்நடைகளுக்கு வரக் கூடிய நோய்களும் வருவதில்லை என்று அனுபவபூர்வமாகக் கண்ட பக்தர்கள் கூறுகிறார்கள்.

Related Stories: