அசோகாஷ்டமி தெரியுமா உங்களுக்கு?

அசோகாஷ்டமி: 9 - 4 - 2022

பதினைந்து  திதிகளில் அஷ்டமியையும் நவமியையும்  மக்கள் புறக்கணிக்கிறார்களே என்ற  ஏக்கம் வந்தது ..இத்திதிகள் நேரே சென்று  பகவானிடம் முறையிட்டன.பகவான் “உங்கள் ஏக்கம் புரிகிறது.தக்க ஏற்பாடு செய்வோம்” என வாக்களித்தார். அதற்காகவே இராமபிரான், நவமி திதியில் தன்னுடைய அவதாரத்தை வைத்துக்கொண்டார். இப்பொழுது அஷ்டமிக்கு ஏக்கம் அதிகமாகிவிட்டது. பகவானிடம் கேட்டதற்கு,” நீ ஒன்றும் கவலைப்படாதே, அடுத்து கிருஷ்ண அவதாரம் எடுக்கப் போகிறேன். அதில் அஷ்டமியில் தான் என்னுடைய ஜனனம் இருக்கும். உன் புகழ் சிறக்கும்” என்று வாக்களித்தார். இராமாவதார நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தன.

சீதையைக் கவர்ந்து இலங்கையிலே கொண்டுபோய், ஒரு மலர்ச்  சோலையிலே சிறை வைத்தான் இராவணன்.  குளிர்ந்த அந்த மலர் சோலையிலே சீதையின் உள்ளம் மட்டும் இராமனைப் பிரிந்த வருத்தத்தால் அனலாய் சுட்டது.  சீதையின் இந்த சோகத்தைப்  போக்குவதற்காக ,இலைகளையும் மலர்களையும், சீதையின் மேல் சொரிந்து ,அவளைச்  சாந்தப்படுத்த முயன்றது அவள் அமர்ந்திருந்த   மரம்.  சீதையின் தாபத்தையும்  சோகத்தையும்  தணித்த அந்த மரம் அசோகமரம். (சோகத்தைத்  தணித்த மரம்)  அந்த மரம் எப்படியாவது இராமன் வந்து சீதையை மீட்டுச்  செல்ல வேண்டும் என்று  பகவானைப் பிரார்த்தனை செய்தன.  அந்தப் பிரார்த்தனை விரைவில் நிறைவேறியது.

சீதை அசோகவனத்தில் சிறையிலிருந்து விடுபட்ட போது அந்த மரங்கள் பிரியாவிடை கொடுத்தன.  அப்பொழுது சீதை, அசோக மரங்களை நோக்கி, “ என்ன வரம் வேண்டும்?” என கேட்டார். “அம்மா, பதிவிரதையான தங்களுக்கு வந்த இந்த துன்பம் வேறு எந்த பெண்மணிக்கும்  வரக்கூடாது. “ எனக்கேட்க,   சீதாதேவியும், “மருதாணிமரங்களான(அசோக மரங்களுக்கு மருதாணி மரம் என்று ஒரு பெயர் உண்டு ) உங்களை யார் ஜலம் விட்டு வளர்க்கிறார்களோ, பூஜிக்கிறார்களோ, இலையை கைகளில் பூசிகொள்கிறார்களோ, இலைகளை யார் சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு எந்த துன்பமும் நேராது என்று வரமளித்தாள். ஆகவேதான் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் மருதாணி இலைகளை அறைத்து கைகளில் பூசிக் கொள்கிறார்கள். சீதாதேவி மருதாணி மரங்களுக்கு வரமளித்த  நன்னாளே அசோகாஷ்டமி நாளாகும்.

இந்த வரத்தால் அஷ்டமி திதியின் ஏக்கமும் தீர்ந்தது.பங்குனி மாத அமாவாசையிலிருந்து எட்டாவது நாளில் வரும் அஷ்டமி திதிக்கு துன்பத்தை போக்கி இன்பத்தை தரும் சக்தி உள்ளது.

அன்று சுத்தமான இடங்களில் மருதாணி மரங்களைப் பயிர் செய்விக்கலாம். தண்ணீர் ஊற்றலாம். மூன்றுமுறை வலம் வரலாம். முட்கள் இல்லாமல் ஏழு மருதாணி இலைகளைப் பறித்து அதை கீழ்கண்ட ஸ்லோகம் சொல்லி வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.அல்லது அரைத்து பூசிக்கொள்ளலாம்.மருதாணி உடல் பிணிகளையும் தீர்க்கும்.

சொல்ல வேண்டிய ஸ்லோகம்.

த்வாம சோக நராபீஷ்ட மது மாஸ ஸமுத்பவ;

பிபாமி சோக ஸந்தப்தோ மாம் அசோகம் ஸதாகுரு.

இதன் பொருள்:  “ஓ மருதாணி மரமே உனக்கு அசோகம் (துன்பத்தை போக்குபவன்) எனப் பெயர் அல்லவா. மது என்னும் வஸந்த காலத்தில் நீ உண்டாகி இருக்கிறாய். நான் உனது அருளைப் பெறுவதற்காக உனது இலைகளை சாப்பிடுகிறேன். நீ, எனது துன்பங்களை விலக்கி  துன்பம் இல்லாமல் என்னை எப்போதும் பாதுகாப்பாயாக.”

விஷ்ணுபிரியா

Related Stories: