பிட்ஸ்

ராமேசுவரம் அருகில் உள்ளது ராமர்பாதம். இங்கு ராமபிரான் தன் ஜாதகப்படி செவ்வாய் மற்றும் ராகு தோஷங்கள் நீங்க நாகப்பிரதிஷ்டை செய்து வழிபட்டு தன் தோஷங்கள் நீங்கப் பெற்றார். இத்தலத்தில் ராமபிரானின் பாதங்களை குளத்தினருகில் தரிசிக்கலாம்.

ராமேசுவரம்-தனுஷ்கோடி பாதையில் வங்காளவிரிகுடா, மன்னார்வளைகுடா இரண்டுக்கும் மத்தியிலுள்ள தீவில் கோதண்டராமரை தரிசிக்கலாம்.

பொதுவாக ராமரின் காலடியில் அனுமனிருப்பார்; இங்கு விபீஷணன் காணப்படுகிறார்.

இத்தல அனுமன்

‘பரிந்துரைத்த அனுமன்’ என போற்றப்

படுகிறார்.  ராமரிடம், விபீஷணரை

ஏற்றுக்கொள்ளலாம் என்ற பரிந்துரை!

திருநின்றவூரில் ஏரிகாத்தராமரை தரிசிக்கலாம். பெரிய திருமேனி உடைய இந்த ராமரோடு சந்நதியின் வெளிப்புறத்தில் தன் தோள்களில் ராம லட்சுமணரை சுமந்த நிலையில் ராமபக்தரான அனுமனையும் தரிசிக்கலாம்.

தஞ்சாவூர், திருப்புள்ளம்பூதங்குடியில் வல்வில் ராமன், சயனதிருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். ராமபிரான், ஜடாயுவிற்கு நீத்தார் கடன் நிறைவேற்றிய தலமாக இது கருதப்படுகிறது.

சென்னை மடிப்பாக்கம், ராம்நகரில் ஒப்பிலியப்பன் ஆலயத்தில் ராமபிரான் பட்டாபிஷேக ராமராக சீதை, பரதன், சத்ருக்னன், லட்சுமணனனோடு அமர்ந்த திருக்கோலத்தில் திருவருள்பாலிக்கிறார்.

திருவண்ணாமலையை அடுத்த நெடுங்குன்றத்தில் ராமச்சந்திர பெருமாளை தரிசிக்கலாம். வில் அம்பு இல்லாத ராமன் இவர்! அனுமனுக்கு ராமபிரான் முக்திகோபநிஷத் எனும் உபநிஷத்தை உபதேசித்த தலம் இது. ஸ்ரீ ராமநவமி வைபவத்தின் ஏழாம் நாள் தேரும், பத்தாம் நாள் இந்திரவிமானத் திருவிழாவும் இத்தல விசேஷம்.

திருவள்ளூரில் வைத்திய வீரராகவனாக ராமபிரான் அருள்கிறார். ஒவ்வொரு அமாவாசையன்றும் இவரை தரிசித்தால் அனைத்து நோய்களும் நீங்கிவிடுகின்றன. ஆலய திருக்குளத்தில் வெல்லம் கரைப்பதாக நேர்ந்து கொண்டால் சரும உபாதைகள் மறைகின்றன. திருவையாறு புது அக்ரஹாரத்தில் ராமன், பட்டாபிராமனாக அருட்பாலிக்கிறார். வால்மீகி முனிவர் அருளிய பட்டாபிஷேக தியானத் திருக்கோலத்தில் இவரை தரிசிக்கலாம்.

விபாண்டக மகரிஷியின் பிரார்த்தனைக்கு இணங்கி தன் திருக்கல்யாணக் கோலத்தை ராமபிரான் காட்டியருளிய தலம் மதுராந்தகம். ராமானுஜர் தன் ஆச்சாரியரான பெரியநம்பிகளிடம் வைணவத்திற்குரிய பஞ்ச ஸம்ஸ்காரத்தைப் பெற்றதும் இங்குதான்.

ஈரோடு, கருங்கல்பாளையத்தில் வில்லேந்திய கோதண்ட ராமரை தரிசிக்கலாம்.  இத்தல சீதாபிராட்டியாருக்கு வெள்ளிக்கிழமைகளில் நெய்தீபமேற்றி 12 முறை வலம் வந்தால் மாங்கல்ய பாக்கியம் கிட்டுகிறது.

சென்னை நங்கநல்லூர் ஆதிவியாதிஹர ஹனுமனுக்கு எதிரில் ராமர், சீதை, லட்சுமணர் சந்நதி உள்ளது. இந்த ஹனுமானைபிரதிஷ்டை செய்யும்முன் வால் தலைக்கு மேலிருக்கும்படியாக திருவுரு அமையவிருந்தது. எதிரில் ராமர் இருக்கும் போது அவ்வாறு இருக்கக்கூடாது என சிருங்கேரி ஸ்வாமிகளின் கடிதம் வந்த அன்று தலைக்கு மேலே செதுக்கப்பட இருந்த வாலுக்கான கல் பகுதி மட்டும் தானே பெயர்ந்து விழுந்த அற்புதம் நிகழ்ந்தது.

உத்திரப்பிரதேச மாநிலம் பைசாபாத்தில் உள்ள அயோத்தியில், ராமபிரான் அன்னை சீதாதேவியுடன் அருள்கிறார். கருவறையில் ராமசகோதரர்களுடன் அனுமனையும் கருடனையும் தரிசிக்கலாம். இத்தல தீர்த்தமான சரயுநதியில் நீராடுவது மிகவும் புண்ணியமானது.

- ராகவேந்திரன்

Related Stories: