வியாழனும், வெள்ளியும் பகைவர்களானதேன்?

A.M. ராஜகோபாலன்

தேவர்களின் ஆசார்யரான, குருவிற்குப் பல சிறப்புப் பெயர்கள் உண்டு. பிருஹஸ்பதி, தேவகுரு, பொன்னன், வியாழன் என்று பல சிறப்புப் பெயர்களுண்டு. அதே போன்று, அசுரர்களின் ஆசார்யரான சுக்கிரனுக்கும், வெள்ளி, பார்கவன் என்று ஏராளமான விசேஷப் பெயர்கள் உண்டு. செய்தற்கரிய மிகக் கடுமையான தவமியற்றி, “ம்ருத சஞ்ஜீவினி” எனும் அரிய மந்திரத்தைத் தெரிந்துகொண்டார், சுக்கிராச்சாரியார். இதன் சக்தியினால், தேவர்களுக்கும், அசுரர்களுக்குமிடையே அடிக்கடி நடைபெற்ற போர்களில், மடிந்த அசுரர்களை மீண்டும் உயிர்ப்பித்து வந்தார், சுக்கிரன். இதனால், தேவர்களால் அசுரர்களை வெல்ல முடியவில்லை.

எவ்விதமாவது, சுக்ராச்சாரியாரிடமிருந்து சஞ்ஜீவினி மந்திரத்தைத் தெரிந்துகொண்டுவிடவேண்டும் என தேவர்கள் முடிவு செய்தனர். அவ்விதம் தெரிந்துகொண்டு விட்டால், போரில் மரணமடையும் தேவர்களை மீண்டும் உயிர்ப்பித்துவிடலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு! இதற்குத் தகுதிபெற்றவர் யார்? என தேவர்கள் ஒன்றுகூடி விவாதித்தபோது, அத்தகைய திறமை பெற்றது குருவின் குமாரனும், ஒழுக்கங்களில் சிறந்தவனுமான கச்சன் என்ற இளைஞனை அனைத்துத் தேவர்களும் ஒருமனதாகத் தேர்ந்தெடுத்து, அவனை சுக்கிராச்

சாரியாரிடம் அனுப்பினர்.

கச்சனும், சுக்கிரரை அணுகி, வணங்கி தன்னை அவரது சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி, வேண்டினான். அவனது முகப்பொலிவையும், அடக்கத்தையும், அறிவையும் கண்ட சுக்கிரனும், அவனைத் தனது சீடனாக ஏற்றுக்கொண்டார். சுக்கிராச்சாரியாருக்கு அழகிலும், அறிவிலும், ஆற்றலிலும், தவத்திலும் சிறந்த தேவயானி என்ற மகள் இருந்தாள். தினமும் தனது தந்தைக்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் தவறாது செய்துவந்தாள், தேவயானி! மகளிடம் அளவற்ற பாசம் வைத்திருந்தார், சுக்கிரர்!! தந்தைக்குப் பணிவிடை செய்யும்போதெல்லாம், கச்சனும் அருகிலிருப்பது வழக்கம். நாளடைவில், தேவயானி, கச்சனிடம் தன் மனதைப் பறிகொடுத்தாள். ஆயினும், வைராக்கிய சித்தனான கச்சன், அவள்மீது தன் சித்தத்தை இழக்கவில்லை.

இதற்கிடையில், ம்ருத சஞ்ஜீவினி மந்திரத்தைத் தெரிந்துகொள்வதற்காகவே, தேவர்களால் அனுப்பப்பட்டவன் கச்சன் என்பதை அறிந்து கொண்டார்கள், அசுரர்கள். ஆதலால், கச்சனைக் கொல்வதற்குப் பல தடவைகள் முயன்றார்கள். அத்தருணங்களில் உயிரிழந்த கச்சனை, தேவயானி தன் தந்தையிடம் மன்றாடி, ம்ருத சஞ்ஜீவினி மந்திரத்தின் மூலம் உயிர்ப்பித்து வந்தாள். இதனைக் கண்டுகொண்ட அசுரர்கள், கச்சனைக் கொன்று, எரித்து, அந்தச் சாம்பலை சோம பானத்தில் கரைத்து சுக்கிராச்சாரியாருக்குக் கொடுத்துவிட்டார்கள்! அன்று இரவு வெகுநேரமாகியும், கச்சன் ஆசிரமத்திற்குத் திரும்பாததைக் கண்ட தேவயானி, கவலையுற்றாள். பின்பு, விசாரித்து, அவனது சாம்பலை, தனது தந்தை சோமபானத்தில் பருகிவிட்டதையறிந்து, துடிதுடித்துப்போனாள்.

கச்சன் இல்லாத உலகில், தான் உயிர் வாழ மாட்டேன் எனப் பிடிவாதம் பிடித்தாள், தந்தையிடம்!! வேறு வழியின்றி சுக்கிராச்சாரியார், கச்சனுக்கு சஞ்ஜீவினி மந்திரத்தை உபதேசிப்பதாகவும், அதனால், அவன் உயிர் பெற்று, அவரது வயிற்றைப் பிளந்துகொண்டு, வெளிவந்துவிடவேண்டுமென்றும், அதன்பிறகு, அந்த மந்திரத்தைப் பிரயோகித்துத் தன்னை உயிர்ப்பிக்க வேண்டும் என்றும்  கூறினார். தேவயானியும் மகிழ்ந்தாள். கச்சனும், சுக்கிராச்சாரியார் கூறியபடியே, அவர் வயிற்றிலிருந்து வெளிவந்து, மீண்டும் அவரை உயிர்ப்பித்தான்.

சஞ்ஜீவினி மந்திரத்தை, சுக்கிரரிடமிருந்து, அறிந்துகொண்டுவிட்டதால், இனியும் அங்கிருக்க வேண்டிய அவசியமில்லை. தேவர்கள் காத்திருக்கிறார்கள். என எண்ணிய கச்சன், தேவர்கள் உலகிற்குத் திரும்பிட எண்ணி, தேவயானியிடம் விடைபெற்றான். அவனிடம் தனது உயிரையே வைத்திருந்த தேவயானி, அவன் கால்களைப் பிடித்துக்கொண்டு, கதறி அழுதும்கூட, அவன் மனம் இரங்கவில்லை. “உன் தந்தையிடம் கல்வி கற்றதினால், அவர் எனக்குக் குரு! குருவின் புதல்வி எனக்கு சகோதரியாவாள்; நான் எங்ஙனம் உன்னைத் திருமணம் செய்துகொள்ள இயலும்? மேலும் அவர் எனக்கு உயிரைக் கொடுத்ததினால் என் தந்தைக்குச் சமமானவர்!!” எனக் கூறி, தேவர்கள் உலகிற்குப் புறப்பட்டுவிட்டான்.

ஏமாற்றத்தினால், மனம் உடைந்து கோபமடைந்த தேவயானி, கச்சன் அறிந்துகொண்ட சஞ்ஜீவினி மந்திரத்தை அவன் மறக்கக் கடவது! என சாபமிட்டாள். பாடுபட்டு கற்றுக்கொண்ட, பெறற்கரிய அந்த மாமந்திரத்தை இழந்து, மனமுடைந்து கச்சன் தேவர்கள் உலகமான சுவர்க்கத்திற்குத் திரும்பினான். அன்றிலிருந்து, குருவும், சுக்கிரனும் ஒருவருக்கொருவர் பகைவர்களானார்கள். ஜோதிடக் கலையில் இருவரும் சமம் என்றே கூறப்பட்டுள்ளது. உலக சுகங்களை அளிப்பவர், சுக்கிரன். ஆன்மிக நெறிமுறைகளுக்கு ஏற்ற மன நிறைவை அளிப்பவர் குரு பகவான்.

இருப்பினும், மக்களுக்குப் பிறவிச் சுகங்களை அனுபவிப்பதற்கு, குரு, சுக்கிரன் ஆகிய இருவரின் கருணையும் வேண்டும். ஏனெனில், இருவருமே தங்கள் தவ வலிமையினால் நவகிரகங்களில் இருவராகத் திகழும் பேறுபெற்றவர்கள்.

Related Stories: