சிற்பமும் சிறப்பும்-இந்தியாவின் பிரம்மாண்ட சிவலிங்கம்

காலம்:   பொ.யு. 1010-1055, போஜராஜ மன்னர்.

ஆலயம்: போஜேஸ்வர் ஆலயம், போஜ்பூர்,  மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இருந்து 32 கி.மீ. தொலைவு.

மத்திய பாரதத்தில் உள்ள மாளவ பிரதேச பகுதியை மையமாகக் கொண்டு, வடக்கே சித்தூர் (இன்றைய ராஜஸ்தான் மாநிலம்) முதல் தெற்கில் கொங்கன் வரையிலும், மேற்கில் சபர்மதி நதியிலிருந்து கிழக்கில் விதிஷா வரையிலும் பரவியிருந்த பெரும் நிலப்பரப்பை ஆண்ட `பரமாரா’ வம்சத்தை சேர்ந்த பேரரசர் போஜராஜர் (ஆட்சிக்காலம் பொ.யு. 1010-1055). ராஜேந்திர சோழரின் சமகாலத்தவரான போஜராஜர், ராஜேந்திர சோழருடன் நட்பு பாராட்டி, அவரின் கங்கை படையெடுப்பின் போது படை உதவி செய்ததாகவும் சில வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

பாரதநாட்டின் பெரும் வீரர்களில் ஒருவராகவும், கலைகளை போற்றுபவராகவும், வட மொழி இலக்கியங்களிலும், வரலாற்று நூல்களிலும் குறிப்பிடப்

படும் மாமன்னர் போஜராஜர், ஏராளமான சிவாலயங்களைக் கட்டியுள்ளார்.  போஜ்பூர் கிராமத்தில் உள்ள பழம்பெரும் சிவாலயமான ‘போஜேஸ்வர் கோயில்’ அவற்றுள் மிகவும் புகழ் பெற்றது.அந்த பகுதிகளில், அதிக அளவில் காணப்படும் இளஞ்சிவப்பு நிற கற்பாறை கொண்டு ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான 23 அடி முழு உயரம் (21 அடி அகலம் கொண்ட சதுர வடிவ ஆவுடையார் அடிப்பகுதி யுடன்) கொண்ட சிவலிங்கம், இந்தியாவிலேயே மிக உயரமானது.

அழகிய அப்சரஸ்கள் இருபுறமும் அலங்கரிக்கும் 33 அடி உயர வாயிலுடன், நான்கு புறமும் 41 அடி உயர தூண்கள் தாங்கி நிற்கும் அழகிய கந்தர்வர் சிற்பங்களுடன் கூடிய பிரம்மாண்ட குவிமாட வடிவ மேற்கூரை அமைப்பு ஒரு பொறியியல் அற்புதம். ஆலயத்தின் பெரும் அடிப்புற கட்டுமானங்கள், சுமார் 250 அடிக்கும் உயரமான விமானத்தை தாங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது கட்டடப் பொறியாளர்களின் கருத்து. அக்காலத்திலேயே இக்கோவில் கட்டுமான வரைபடத்தை சிற்ப வல்லுனர்கள், கோவில் அருகிலேயே செதுக்கி வைத்துள்ளனர் என்பது மற்றொரு சிறப்பு.

இவ்வளவு வியப்பூட்டும் அம்சங்களை தன்னகத்தே கொண்ட போஜேஸ்வர் ஆலயத்தின் மேற்பகுதி என்ன காரணத்தினாலோ முழுமை பெறாமல் விமானம் இன்றியே

காட்சியளிக்கிறது. `மஹா சிவராத்திரி’ தினத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்களை கவர்ந்து இழுக்கும் இந்த தொன்மையான ஆலயம், இந்திய தொல்லியல் துறையினரால் சிறப்பாக புனரமைத்து, பராமரிக்கப்பட்டு வருகின்றது.

மது ஜெகதீஷ்

Related Stories: