ஆனந்தனுக்கு 1000 நாமங்கள்!

413. சத்ருக்னாய நமஹ: (Shathrughnaaya namaha)

(திருநாமங்கள் 391 [பரர்த்தி:] முதல் 421 [பரிக்ரஹ:] வரை - இறந்தோர்க்கும் உயிர் அளிக்கும் ஸ்ரீராமனின் சரித்திரம்)ராமாவதாரத்தின் மூலம் ஸ்ரீராமன் நமக்கு உணர்த்தும் வேதாந்த தத்துவத்தை சுவாமி வேதாந்த தேசிகன், சங்கல்ப சூரியோதயம் என்னும் காவியத்தில் தெரிவிக்கிறார்:

“தர்ப்போதக்ர தசேந்த்ரியானன மனோ நக்தஞ்சராதிஷ்டிதே

தேஹேஸ்மின் பவஸிந்துனா பரிகதே தீனாம் தசாம் ஆஸ்தித:

அத்யத்வே ஹநுமத் ஸமேன குருணா ப்ரக்யாபிதார்த்த புமான்

லங்காருத்த விதேஹ ராஜ தனயா ந்யாயேன லாலப்யதே”

ராமன் தான் பரமாத்மா. மகாலட்சுமியின் அம்சமான சீதாதேவி பிறவிப் பிணியில் சுழலும் ஜீவாத்மாவின் பாத்திரத்தை ஏறிட்டுக்கொள்கிறாள். கடல்சூழ்ந்த இலங்கையே பிறவிப் பெருங்கடல். அசோக வனமே நம் உடல். சீதை என்னும் ஜீவாத்மாவை ராமன் என்னும் பரமாத்மாவிடம் இருந்து பிரித்து, பிறவிப் பிணியாகிய இலங்கையில் உடலாகிய அசோகவனத்தில் ராவணன் சிறைவைத்துள்ளான். இந்த ராவணன்தான் நம் மனமும் பத்து இந்திரியங்களும்.

மனதுக்குப் பத்து இந்திரியங்கள் தலைபோன்றவை. மெய், வாய், கண், மூக்கு, செவி, நாக்கு, கை, கால், மலத்துவாரம், ஜலத்துவாரம் ஆகிய பத்து இந்திரியங்களோடு கூடிய மனமே பத்து தலைகொண்ட ராவணன் ஆவான். இந்த மனமும் புலன்களும் சேர்ந்து தான் ஜீவாத்மாவைப் பிறவித்துயரில் அழுத்தி இறைவனை அடையவிடாமல் தடுக்கின்றன. இந்த மனம், புலன்களை மூன்று குணங்கள் பாதிக்கின்றன.

சத்துவ குணம், ரஜோகுணம், தமோகுணம் ஆகியவையே அந்த மூன்று குணங்கள். சத்துவ குணமே சாந்தமான விபீஷணன். ரஜோகுணம் தான் காமம், கோபம் நிறைந்த சூர்ப்பணகை. தமோ குணம் தான் சோம்பலில் ஆழ்ந்த கும்பகர்ணன். ராவணன் என்னும் மனமும் புலன்களும் விபீஷணனாகிய சத்துவ குணத்தை விரட்டிவிட்டு, சூர்ப்பணகை கும்பகர்ணனாகிய ரஜோகுணம், தமோகுணம் ஆகியவற்றைத் தன்னுடன் வைத்துக்கொள்வதாலே, ஜீவாத்மாவாகிய சீதை மேலும் துன்புறுகிறது.

இந்நிலையில், பரமாத்மாவாகிய ராமனை அடைய வேண்டும் என்று ஜீவாத்மாவாகிய சீதை தவிக்கும்போது, பரமாத்மாவான ராமன், ஆஞ்ஜநேயரை அனுப்பி வைக்கிறார். அந்த ஆஞ்ஜநேயர் தான் குரு, ஆசார்யன். இறைவன் எல்லாச் சமயங்களிலும் நேராக வருவதில்லை, குருவை அனுப்பிவைத்து, குருவருளின் மூலம் திருவருள் நமக்குக் கிட்டும்படிச் செய்கிறான். ஆஞ்ஜநேயர் சீதையைக் கண்டுபிடித்து, ராமாயணம் பாடியது போல், ஆசார்யன் ஜீவாத்மாவுக்கு இறைவனின் பெருமைகளை எல்லாம் எடுத்துச் சொல்கிறார்.

ஆஞ்ஜநேயர், ராமனின் முத்திரை மோதிரத்தைச் சீதைக்கு வழங்கியது போல், ஆசார்யன் சீடனாகிய ஜீவாத்மாவுக்கு இறைவனின் சங்கு சக்கர முத்திரைகளைத் தோளில் பொறிக்கிறார். நிறைவாக, அனுமன் இலங்கையை எரித்தது போல், பிறவிப் பிணியையே எரிக்கிறார் ஆசார்யன். அதன்பின் ராமனைத் தன் தோளில் சுமந்தபடி இலங்கைக்கு அனுமன் அழைத்து வந்ததுபோல், நம்மைக் காக்கும் பொருட்டு இறையருளை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கிறார் ஆசார்யன்.

அனுமனின் துணையோடு ராமன் இலங்கையில் உள்ள மொத்த அரக்கர்களையும் அழித்தது போல், ஆசார்யன் துணையோடு இறைவன் ஞானம் என்னும் அம்பை எய்து நமது மொத்தப் பாபங்களையும் அழித்து விடுகிறான். அனுமன் சீதா-ராமர்களை இணைத்து வைத்தது போல், ஆசார்யன் ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் இணைத்து வைக்கிறார். இதே கருத்தை ஸ்ரீபாஞ்சராத்ர ஆகமத்தின் ஸாத்வத ஸம்ஹிதையில் உள்ளது.

“தசேந்த்ரியானனம் கோரம் யோ மனோ ரஜனீசரம்

விவேக சர ஜாலேன சமம் நயதி யோகினாம்”

என்ற ஸ்லோகம் தெரிவிக்கிறது.

இப்படி ஆத்மாவுக்கு எதிரிகளாக இருக்கும் பாபங்களையும், தறிகெட்டு ஓடும் புலன்களையும் ஞானம் என்னும் அம்பால் வீழ்த்தி வெல்வதால், ஸ்ரீராமன் ‘சத்ருக்ன:’ என்று அழைக்கப்படுகிறான். ‘சத்ரு’ என்றால் எதிரி. ‘சத்ருக்ன:’ என்றால் எதிரிகளை அழிப்பவர். தறிகெட்டு ஓடும் மனம், புலன்கள் மற்றும் பாபங்களாகிய எதிரிகளை அழிப்பதால் ராமன் ‘சத்ருக்ன:’ என்று அழைக்கப்படுகிறான். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 413-வது திருநாமம். [ராமனின் தம்பிக்கு சத்ருக்னன் என்ற திருப்பெயர் இருப்பதற்கான காரணம் வேறு, அதை இத்துடன் குழப்பிக் கொள்ளலாகாது.] “சத்ருக் னாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் அனைத்துப் பாபங்களையும் ஸ்ரீராமன் போக்கி அருள்வான்.

414. வ்யாப்தாய நமஹ: (Vyaapthaaya namaha)

ராமனைப் பலரும் பலவிதமாக அழைப்பார்கள். தந்தை தசரதன் “ராமா!” என்று வாயார அழைப்பார். ‘ராம:’ என்றால் மனத்துக்கு இனியவன் என்று பொருள். தசரதனின் மனத்துக்கு இனிய குழந்தையாக ராமன் விளங்கியபடியால் “ராமா!” என்று அழைப்பார் தசரதன். அன்னை கௌசல்யா தேவி, “ராமபத்ரா!” என்று ராமனை அழைப்பாளாம். பத்ரம் என்றால் மங்கலம். உனக்கு என்றென்றும் மங்கலம் உண்டாகட்டும் என்று ராமபிரானை வாழ்த்தும் த்வனியில் “ராமபத்ரா!” என்றழைப்பாள் கௌசல்யை.

சிற்றன்னை கைகேயி “ராமச்சந்திரா!” என்று ராமனை அழைப்பாளாம். ராமனின் மீது மிகுந்த அன்பு வைத்திருந்த கைகேயிக்குக் குளிர்நிலவாக ராமன் ஒளிவீசியதால், அந்த அழகை ஆசையோடு அனுபவித்து, “ராமச்சந்திரா!” என்பாள் அவள். குருவான வசிஷ்டர் ராமனை “வேத:” என்று அழைப்பாராம். ‘வேதஸ்’ என்றால் அனைத்து வேதங்களிலும் வல்லவர் என்று பொருள்.

திருமாலின் அவதாரமான ராமன் இயல்பாகவே அத்தனை வேதங்களின் விழுப்பொருளையும் அறிந்திருந்தபடியால், அதை உணர்ந்துகொண்ட வசிஷ்டரும் “வேத:!” என்று ராமனை அழைப்பதை வழக்கமாய்க் கொண்டிருந்தார்.

அயோத்தி மக்கள் ராமனை “ரகுநாதா!” என்று அழைப்பார்கள். ரகு குலத்துக்கு நாதனாக, ரகு குலத்துக்குப் பெருமை சேர்க்கும் விதமாக ராமன் அவதரித்தான் அல்லவா? அதைக் கொண்டாடும் பொருட்டு, “ரகுநாதா!” என்று அயோத்தி மக்கள் அழைப்பது வழக்கம்.சீதா தேவியோ, “நாதா!” என்று ராமனை அழைப்பாள். தான் ராமன்மேல் வைத்திருக்கும் அன்பு, காதல், பக்தி, மரியாதை, அக்கறை அனைத்தும் கலந்த குரலில் “நாதா!” என்று சீதை அழைக்கையில் இருவரும் பரஸ்பரம் கொண்டிருக்கும் அன்பின் ஆழத்தை உணர முடியும். மிதிலை தேசத்து மக்கள் ராமனைக் குறிப்பிடுகையில், “சீதாபதி” என்று குறிப்பிடுவார்களாம்.

தங்கள் தேசத்தில் தோன்றிய சீதையை மணந்து கொண்டு மிதிலைக்கு மாப்பிள்ளை ஆனவர் என்பதை உணர்த்தும் வகையில் சீதாபதி என்பார்கள். இவற்றை இணைத்துத்தான்,

“ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே

ரகுநாதாய நாதாய ஸீதாயா பதயே நமஹ:”

என்று ஒரு ஸ்லோகம் ராமனைக் குறித்துப் பிரசித்தமாகச் சொல்வார்கள். கௌசல்யாவின் அரண்மனையில் பணிபுரிந்து வந்த வயதான காவலாளி ஒருவர், கௌசல்யாவைப் போலவே “ராமபத்ரா!” என்று ராமனை அவனது இளம் பிராயத்தில் அழைத்து வந்தார். பின்னாளில் ராமன் பட்டாபிஷேகம் செய்துகொண்ட பின், ராமனை அவர் பார்த்த போது, “சக்கரவர்த்திக்கு வணக்கம்!” என்று சொன்னார். அதைக் கேட்டு ராமன் கோபித்துக்கொண்டான்.

“பெரியவரே! நீங்கள் முன்பு போல் ஆசையுடன் ராமபத்ரா என்று என்னை அழைத்தால்தான் எனக்கு மகிழ்ச்சி. ஊராருக்கு வேண்டுமானால் நான் சக்கரவர்த்தியாக இருக்கலாம். ``உங்களுக்கு என்றுமே உங்கள் ராமபத்ரன்தான் நான்!” என்று ராமன் சொல்ல, அவரும் “ராமபத்ரா!” என்றே ஆசையுடன் ராமனை அழைத்தாராம்.ஆக, சக்கரவர்த்தியாக விளங்கும்போது கூட உயர்ந்தவர்-தாழ்ந்தவர், ஏழை-பணக்காரர், கற்றவர்-கல்லாதவர், இளையவர்-முதியவர் என எந்த வேறுபாடும் பாராது அத்தனை பேரிடமும் ஒரே மாதிரியான அன்பைக் காட்டி, அயோத்தியில் வாழும் ஒவ்வொருவருமே எங்கள் வீட்டுப் பிள்ளை என்று ராமனை அபிமானிக்கும் படி ராமன் வாழ்ந்தான் என்பதற்கு இது ஒரு சான்று.

இவ்வாறு எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவரிடமும் அன்பு காட்டி, அன்பு நிறைந்தவனாக ராமன் திகழ்ந்தபடியால், ஸ்ரீராமன் ‘வ்யாப்த:’ என்று அழைக்கப்படுகிறான். ‘வ்யாப்த:’ என்றால் நிறைந்தவர். அன்பர்கள் மீது கொண்டிருக்கும் அன்பால் நிறைந்திருப்பதால் ராமன் ‘வ்யாப்த:’ என்று அழைக்கப்படுகிறான். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 414-வது திருநாமம். “வ்யாப்தாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களை ராமன் தனது அன்பு மழையால் நனைப்பான்.

415. வாயவே நமஹ: (Vaayave namaha)

சீதையை ராவணன் அபகரித்துச் சென்ற நிலையில், அவளைத் தேடிக்கொண்டு வந்த ராமனும், லக்ஷ்மணனும் வழியில் கபந்தன் என்ற அரக்கனை வதைத்தார்கள். ராமனின் திருவருளால் சாப விமோசனம் பெற்ற கபந்தன், கந்தர்வ வடிவம் பெற்று ராமனைத் துதித்தான். தனது இறைத்தன்மையை வெளிக்காட்ட விரும்பாத ராமன், மனித சுவபாவத்தை அனுசரித்து, கபந்தனிடம், “சீதையைத் தேடுவதற்கு ஏதாவது வழிகூற வேண்டும்!” என்று கேட்டான். சற்று ஆலோசித்த கபந்தன், ரிஷ்யமுக மலையில் வாழும் சுக்ரீவன் மற்றும் அவனைச் சார்ந்த வானரர்களின் உதவியை நாடுமாறு அறிவுறுத்தினான்.

மேலும், ரிச்யமூக மலைக்குச் செல்லும் வழியை அறிவதற்கு, மதங்க முனிவருடைய ஆசிரமத்தில் வசிக்கும் சபரி என்ற வேடுவப் பெண்ணின் உதவியை நாடுமாறும் கூறினான். இவ்வாறு சொல்லிவிட்டுத் தேவலோகம் சென்றான் கபந்தன். அவன் சொன்னபடி மதங்க முனிவரின் ஆசிரமத்தில் தவம்புரிந்து கொண்டிருந்த சபரியைத் தேடி வந்தான் ராமன். ராம லக்ஷ்மணர்களைத் தரிசித்த சபரி ஆனந்தத்தின் எல்லையை அடைந்தாள்.

“ஆண்டவள் அன்பின் ஏத்தி அழுது இழி அருவிக் கண்ணள்

மாண்டது என் மாயப்பாசம் வந்தது வரம்பில் காலம்

பூண்ட மாதவத்தின் செல்வம் போயது பிறவி என்பாள்”

என்று அந்த ஆனந்தத்தைக் கம்பர்

வர்ணிக்கிறார். இரு கண்களில் இருந்தும் அருவி போல் கண்ணீர் பெருகி வர, ராமனைப் பார்த்து, “எனது பிறவித் தளை இன்றோடு நீங்கி விட்டது. இத்தனை நாட்கள் அடியேன் புரிந்த தவத்தின் பலன் குருவின் அருளால் இன்று கிட்டிவிட்டது!” என்று ராமனை நோக்கிச் சொன்னாள். “நீ என்ன தவம் புரிந்தாய்? அதற்கு என்ன பலன் கிடைத்தது?” என்று ஒன்றும் அறியாதவன் போல் கேட்டான் ராமன். அதற்கு சபரி, “இங்கே வாழ்ந்து வந்த மதங்கர் உள்ளிட்ட முனிவர்களுக்கு அடியேன் பணிவிடைகள் செய்து வந்தேன். அந்த முனிவர்கள் அடியேனுக்கு ராம நாமத்தை உபதேசம் செய்து அதை ஜபிக்கச் சொன்னார்கள். இந்த ராம நாமத்தின் பொருள் என்ன என்று அடியேன் கேட்ட போது, இதை நீ ஜபித்துக் கொண்டே இருந்தால் இதன் பொருள் உன்னைத் தேடி வரும் என்று சொன்னார்கள்.

இப்போது அந்த ராம நாமத்தின் பொருளான நீயே அடியேனைத் தேடி வந்து

விட்டாயே! அடியேன் உன்னை நாடி வரும்படி வைக்காமல் நீயே என்னைத் தேடி

வந்தாயே! இதுவல்லவோ உன் கருணையின் சிறப்பு!” என்று ராமனைக் கொண்டாடினாள்.

அதன்பின் ராமனுக்குச் சமர்ப்பிப்பதற்காகத் தான் ஆசையோடு சேகரித்து வைத்திருந்த பழங்களை ராமனுக்குச் சமர்ப்பித்தாள் சபரி. அதை ஆசையோடு வாங்கி ராமன் அமுதுசெய்து மகிழ்ந்ததை,

“மாங்கனி தாழையின்காய் வாழையின் கனிகளோடும்

ஆங்கனி ஆவதே என்று அருந்தி நான் விரும்பி வைத்தேன்

பாங்கினில் அமுது செய்மின் என்றவள் பரிவில் நல்கும்

தேங்கனி இனிதின் உண்டு திருவுளம் மகிழ்ந்த வீரன்”

என்று கம்பர் பாடுகிறார்.

அதன்பின் சபரி காட்டிய வழியில் சுக்ரீவனை நோக்கிப் பயணித்தான் ராமன். ஆக, குகன், சபரி, சுக்ரீவன் போன்ற அடியார்கள் யாருமே தன்னைத் தேடி வர வேண்டாதபடி அவர்களைத் தானே தேடிச் சென்று அருள்புரிகிறான் ராமன் என்று ராமாயணத்தில் காண்கிறோம் அல்லவா? அதனால்தான் ராமன் ‘வாயு:’ என்று அழைக்கப்படுகிறான்.

‘வாயு:’ என்றால் பயணிப்பவர் என்று பொருள். எப்போதும் பயணித்துக் கொண்டே இருப்பதால், காற்றுக்கும் ‘வாயு:’ என்று பெயர். ராமன் தனது அடியார்களின் இருப்பிடத்தைத் தேடிப் பயணிப்பதால், (அடியார்களின் இருப்பிடத்தைத் தேடி அவனே வந்துவிடுவதால்) ‘வாயு:’ என்று அழைக்கப்படுகிறான். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 415-வது திருநாமம். “வாயவே நமஹ:” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களைத் தேடிச் சீதாராமன் நிச்சயம் வருவான்.

416. அதோக்‌ஷாஜாய நமஹ: (Adhokshajaaya namaha)

ராமன் சீதையைத் திருமணம் செய்து கொண்டு, பெரும் ஊர்வலமாக மிதிலையிலிருந்து அயோத்திக்குத் திரும்பி வரும் வேளையில், சில சுப நிமித்தங்களும் சில அசுப நிமித்தங்களும் தென்பட்டன. அவற்றைக் கவனித்த தசரதன், வசிஷ்டரிடம் அவை குறித்து வினவினான். அதற்கு வசிஷ்டர், “மன்னா! பறவைகள் வானில் பயங்கரமாகக் கூவுவதால், ஏதோ அசுபம் நடக்கப் போகிறது. ஆனால் பூமியில் மிருகங்கள் நம்மை வலம் வருவதால், அந்த அசுபம் விரைவில் விலகப் போகிறது!” என்று சொன்னார். அப்போது பெருங்காற்று வீசியது, நிலம் நடுங்கியது, மரங்கள் சாய்ந்தன. சூரியனை இருள்சூழ்ந்தது. திசை எங்கும் புழுதி பரவியது. தசரதன், தசரதனின் மகன்கள், வசிஷ்டர், சில முனிவர்களைத் தவிர மீதமுள்ளோர் எல்லோரும் மயங்கி விழுந்துவிட்டார்கள்.

தோளில் கோடாரியோடும் கையில் வில் அம்போடும் பரசுராமர் அங்கே தோன்றினார். ரிஷிகள் எல்லோரும் அவரை வணங்கி நிற்க, ராமனைப் பார்த்துப் பரசுராமர், “ராமா! நீ சிவ தனுஸ்ஸை முறித்து விட்டுப் பெரிய வீரன் என்று உன்னைக் கருதுகிறாய். இதோ என் கையில் உள்ள விஷ்ணு தனுஸ்ஸை வாங்கி நாண் ஏற்றிக் காட்டு. நீ அவ்வாறு நாண் ஏற்றினால், என்னுடன் போரிட உனக்குத் தகுதி இருக்கிறது என்று பொருள். அதன்பின் நாம் மல்யுத்தம் புரிவோம்!” என்றார்.

தசரதன் பரசுராமரின் பாதங்களில் விழுந்து, ராமனை ஒன்றும் செய்யாதீர்கள் என மன்றாடினான். ஆனால், அவனைப் பரசுராமர் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. ராமன் தன் தந்தையை வணங்கி விட்டு, எந்த ஆரவாரமும் இல்லாமல் பரசுராமரிடம் இருந்து அந்த வில்லை வாங்கிக் கொண்டான். அனாயாசமாக அதில் நாண் ஏற்றி, அம்பைப் பூட்டிய ராமன், “பரசுராமரே! நீங்கள் வேதம் வல்லவர். என் குருவான விஷ்வாமித்ரரின் உறவினர். உங்கள் மீது பாணம் போட எனக்கு விருப்பமில்லை.

அதனால், இந்த அம்புக்கு ஓர் இலக்கைக் கூறுங்கள்!” என்றான். தனது கர்வத்தை மொத்தமாக இழந்த பரசுராமர், “என் தவ வலிமையையே இந்த அம்புக்கு இலக்காக்குக!” என்று ராமனிடம் சொல்ல, அவ்வாறே அந்த பாணத்தால் பரசுராமரின் தவத்தைத் தாக்கினான் ராமன். அதன்பின் ராமனிடம் இருந்து விடைபெற்றுக் கொள்ள விரும்பிய பரசுராமர், ராமனைப் பார்த்து,

“அக்ஷய்யம் மது ஹந்தாரம் ஜானாமி த்வாம் ஸுரோத்தமம்”என்றார்.

“ராமா! நீ குறைவில்லாதவன், என்றும் நிறைவோடு இருப்பவன். முன்பு, மது என்னும் அசுரனை அழித்த திருமால்தான் நீ. நீயே தேவாதி தேவன் என்பதை அறிந்து கொண்டேன். எப்போதுமே முழுமையானவனாக, நிறைவுபெற்றவனாக, குறையொன்றும் இல்லாதவனாக இருக்கும் உன்னை வீழ்த்த முடியுமா? நான் மட்டும் அல்லன், உலகில் யாருமே உன்னை வீழ்த்த வல்லவர்கள் அல்லர்!” என்று ராமனைப் போற்றி விட்டுப் பிரதட்சிணமும் செய்து விட்டுப் புறப்பட்டார்.

அதன்பின் திசைகள் இருள் நீங்கின. மயங்கி விழுந்தவர்கள் அத்தனை பேரும், மயக்கம் தெளிந்து மீண்டும் எழுந்தார்கள். தேவர்களும், முனிவர்களும் பூமாரி பொழிந்து ராமனைக் கொண்டாடினார்கள். பரசுராமர் அளித்த விஷ்ணு தனுஸை வருணனிடம் கொடுத்து வைத்தான் ராமன். பின்னாளில் அதே விஷ்ணு தனுஸைத் தான் வருணன், அகத்திய முனிவர் மூலம் ராமனுக்கு அளித்தான் என்கிறது வால்மீகி ராமாயணம். குருவான வசிஷ்டரையும், தந்தை தசரதனையும் வணங்கிவிட்டு அயோத்தி நோக்கிப் பயணிக்கத் தொடங்கினான் ராமன். இந்தப் பரசுராமன் - ராமன் சந்திப்பில் பரசுராமர் சொன்னபடி, ராமன் என்றுமே எந்தக் குறையும் இல்லாதவனாக, நிறைவு மிக்கவனாக இருக்கிறான். அவனுக்குத் தோல்வியோ, வீழ்ச்சியோ, குறைபாடோ எதுவுமே நேருவதில்லை. எனவேதான் ராமன் ‘அதோக்ஷஜ:’ என்று அழைக்கப்படுகிறான்.

அமுதக் கடலில் இருந்து எவ்வளவு அமுதைப் பருகினாலும் அது எப்படிக் குறையாமல் இருக்குமோ, அதுபோல் எத்தனை பேர் ராமனை அனுபவித்தாலும், அல்லது எத்தனை பேர் அவனை எதிர்த்தாலும் கூட, அதனால் எந்தக் குறையும் நேராதபடி தன் நிலையில் என்றும் நிறைவோடு இருக்கிறான் ராமன். ‘அதோக்ஷஜ:’ என்றால் குறைவில்லாமல் நிறைந்திருப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 416-வது திருநாமம். “அதோக்ஷஜாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் குறையொன்றும் ஏற்படாதபடி ஸ்ரீராமன் அருள்புரிவான்.

417. ரிதவே நமஹ: (Rithave namaha)

தசரதன் ஒருமுறை தனது மந்திரியான சுமந்திரனை அழைத்து, ``ராமனை உடனடியாக நான் பார்க்க வேண்டும்! உடனே அழைத்து வாருங்கள்!” என்றான். சுமந்திரனும் ராமனின் இருப்பிடத்துக்குச் சென்று, “சக்கரவர்த்தி தங்களை உடனே காண வேண்டும் என்று அழைக்கிறார்!” என்று சொன்னார். அருகிலிருந்த சீதாதேவி, “சுவாமி! ஏதோ முக்கியமான விஷயமாகத் தந்தை அழைக்கிறார் போலும்! சீக்கிரம் புறப்படுங்கள்!” என்றாள்.

ராமனும் விரைவாகப் புறப்பட்டுச் சுமந்திரனோடு தசரதனின் அரண்மனைக்குச் சென்றான். ராமன் வருவதைக் கண்ட தசரதன் மிகவும் மனம் மகிழ்ந்து “வா ராமா! வா ராமா!” என்று உல்லாசத்தோடு வரவேற்றான். தந்தையின் பாதங்களை வணங்கிய ராமன், தந்தையின் உத்தரவுக்காகக் கைகூப்பிய படி நின்று கொண்டிருந்தான். ராமனின் அழகையே கண்களால் பருகிக் கொண்டிருந்த தசரதன் எதுவுமே பேசவில்லை. சற்று நேரம் கழித்துத் தந்தையிடம் ராமன், “தந்தையே! என்ன விஷயமாக அடியேனை அழைத்தீர்கள்?” என்று கேட்டான்.

“ஒன்றுமில்லை ராமா! சும்மாதான் அழைத்தேன், நீ சென்று வா!” என்று சொல்லிவிட்டான் தசரதன். “சரி தந்தையே!” என்று சொல்லி ராமன் புறப்பட்டுத் தசரதனின் அரண்மனைக்கு வெளியே வந்தான். மீண்டும் சுமந்திரனை அனுப்பி ராமனை அழைத்து வரச் சொன்னான் தசரதன். சுமந்திரன் போய் ராமனை அழைத்து வந்தான். தந்தையை நமஸ்கரித்தான் ராமன். “என்ன விஷயம் தந்தையே?” என்று பணிவோடு கேட்டான் ராமன். “ஒன்றுமில்லை ராமா! சென்று வா!” என்றான் தசரதன். மீண்டும் அரண்மனையை விட்டு வெளியேறினான் ராமன்.

மீண்டும் சுமந்திரனிடம் ராமனை அழைத்து வருமாறு கூறினான் தசரதன். ராமன் வந்தவாறே, “ஒன்றுமில்லை ராமா! சென்று வா!” என்றான் தசரதன்.    

இதைக் குலசேகரப்பெருமாள் பெருமாள் திருமொழியில்,

“வா போகு வா இன்னம் வந்து ஒருகால்

கண்டு போ மலராள் கூந்தல்

வேய்போலும் எழில்தோள் இதன்பொருட்ட

விடையோன் தன் வில்லைச் செற்றாய்

மாபோகு நெடுங்கானம் வல்வினையேன்

மனம் உருக்கும் மகனே இன்று

நீ போக என் நெஞ்சம் இருபிளவாய்ப்

போகாதே நிற்குமாறே!”

என்ற பாசுரத்தில் பாடுகிறார்.

எந்த ஒரு விஷயமுமே இல்லாமல் தசரதன் ஏன் ராமனை இத்தனை முறை ‘வா...போ’ ‘வா...போ’ என்று நடக்க வைக்க வேண்டும்? இதற்கான காரணத்தை வால்மீகி பகவான் அயோத்யா காண்டம் 3ம் ஸர்கம் 39-ம் ஸ்லோகத்தில் தெரிவிக்கிறார்:

“தர்மாபிதப்தா: பர்ஜன்யம் ஹ்லாதயந்தம் இவ ப்ரஜா:”

என்கிறார் வால்மீகி.

ராமனுடைய குணங்கள் அனைத்தும் காண்பவர், மனங்களுக்கு மிக உயர்ந்த ஆனந்தத்தைத் தரவல்லவை. நீண்ட நாள் வெயிலிலும் பஞ்சத்திலும் வாடியவர்களுக்குக் கார்மேகத்தைப் பார்த்தால் எப்படிப்பட்ட மகிழ்ச்சியும் மன நிறைவும் ஏற்படுமோ, அவ்வாறே ராமனின் அழகையும் குணங்களையும் காண்போர், மனங்களில் அத்தகைய மகிழ்ச்சியும் நிறைவும் ஏற்படும். அந்த வகையில், ராமனின் நடையழகு தசரதனுக்கு மிகவும் பிடிக்கும். ராமனை வா... என்று அழைத்து, அவனது நடையழகை முன்னே இருந்து ரசிப்பான் தசரதன். போ... என்று சொல்லி, அவனது நடையழகைப் பின்னே இருந்து ரசிப்பான் தசரதன்.

இவ்வாறு முன்னும் பின்னும் அவனது நடையழகைக் கண்டு ரசிக்கவே வா...போ...வா...போ... என்று ராமனை நடக்கச் சொல்வானாம் தசரதன்.இப்படித் தன் குணங்களால் அடியார்களின் மனங்களை மகிழ்வித்து, அவர்களின் மனங்களைச் சென்று அடைவதால், ராமன் ‘ரிது:’ என்று அழைக்கப்படுகிறான். ‘ரிது:’ என்று சென்று அடைபவர் என்று பொருள். இங்கே அடியார்களை மகிழ்விக்க வல்ல குணங்களாலே அவர்களின் மனங்களைச் சென்று அடைவதால் ராமன் ‘ரிது:’ என்று அழைக்கப்படுகிறான். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 417-வது திருநாமம். “ரிதவே நமஹ:” என்று தினமும் சொல்லி வருவோரின் உள்ளங்களில் ராமன் வந்து குடிகொள்வான்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Related Stories: