பரணி எழுதிய பாராளும் நாயகி!

அற்புதமான காலைப் பொழுது அது. தனது வீட்டின் திண்ணையில் ஒட்டக்கூத்தர் அமர்ந்திருந்தார். அப்போது அவ்வழியே குடந்தை, வீர சிங்காசன மடத்து சிவனடியார் ஒருவர் தேவாரத்தை பாடிக் கொண்டு சென்றார். அந்த சிவனடியார், சம்பந்தப் பெருமானின் தேன் அமுத, இன்தமிழை இன்னிசையோடு கலந்து தாளம் போட்டுக்கொண்டே நீட்டி, இழுத்து, இழுத்துப் பாடினார். அப்படி அவர் பாடுவதால் பாடலின் பொருளை உணர முடியாத கூத்த பெருமான், அந்த சிவனடியாரை நிறுத்தி, பாடலின் பொருளை எடுத்துரைக்குமாறு வேண்டினார்.

கூத்த பெருமானின் இந்த கோரிக்கையை கேட்ட உடனே, அந்த சிவன் அடியாருக்கு கோபம் வந்துவிட்டது. ‘‘தேவாரம் என்பது இன் தமிழில் மலர்ந்த வேதமாகும். இதன் ஆழ்ந்த பொருளை அந்த ஆலமுண்ட அரனைத் தவிர, அறிந்தவர் யாரும் இதுவரை இருந்ததும் இல்லை. இனி இருக்கப்போவதும் இல்லை. அறிவுச் செருக்கால் இதை அறிந்தும் அறியாதவர் போல என்னை வினவும் கூத்தரே, உமது முன் நின்று பேசுவதும் மகா பாவம். நான் வருகிறேன்” என்று பொரிந்து தள்ளிவிட்டு அந்த சிவனடியார் விறு விறு வென நடக்க ஆரம்பித்தார்.

சிவனடியாரின் பேச்சும் செயலும் கூத்தருக்கு அவமானத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. சினத்தின் மிகுதியால் அருகில் இருந்த சவுக்கை எடுத்து அந்த சிவனடியாரை ஓங்கி ஒரு அடி அடித்தார். முதிர்ந்த சிவனடியார் அந்த அடி தாங்காமல் சுருண்டு விழுந்து உயிர் துறந்தார். விரதத்தாலும் தவத்தாலும் மெலிந்த அவர் உடலால் சவுக்கடியை தாள முடியவில்லை. பாவம். நடந்ததை அறிந்த கூத்தர் செய்வதறியாது திகைத்து நின்றார்.

கூத்தரால் சிவனடியார் கொல்லப்பட்ட செய்தி விக்ரம சோழ அரசனை எட்டியது. அரசனிடம் முறையிட்டது அந்த சிவனடியாரின் மடத்தை சேர்ந்தவர்கள்தான். ‘‘சைவ சமயத்துக்கு எமனாக வந்திருக்கும் கூத்த பெருமானை கொல்வது தான் சிவனடியாருக்கு தீங்கிழைத்தமைக்கு தக்க தண்டனையாகும்” என்று மற்ற சிவனடியார்கள் அரசனிடம்,

பொங்கினார்கள். காலத்தால் அழியாத கவிதைகளைப் படைத்து தமிழகத்தை வாழவைக்கும் கவி ராஜனை காப்பதா? இல்லை காலம் காலமாக ஈசனை பூஜித்து வந்த தவராஜருக்கு நியாயம் வழங்குவதா? என்று அறியாமல் மன்னன் திண்டாடினான்.

இறுதியாக தனது மகனை அழைத்த மன்னன், ‘‘உனது குருநாதரான கூத்தரை காக்க, உன் உயிரை தருவாயா?” என்று மனதை கல்லாக்கிக் கொண்டு வினவினான். ‘‘தமிழ் காக்கும் புலவரை காக்க என் உயிரைத் தருவது நான் செய்த பாக்கியம்” என்று இளவரசன் சம்மதித்தான். மைந்தன் சொல் கேட்டு மன்னனது கண்கள் குளமானது. அது ஆனந்தக் கண்ணீரா சோகக் கண்ணீரா என்பது விளங்காதப் புதிராகும். மகனின் தியாக உள்ளத்தை புகழ்வதா இல்லை அவனை இழக்கப் போவதை எண்ணி கலங்குவதா என்று அறியாமல் மன்னன் திண்டாடினான். இறுதியில் மகனை ஒரு மூடு பல்லக்கில் ஏற்றி, சிவனடியார்களிடம் ஒப்படைத்தான்.

‘‘இந்த மூடு பல்லக்கில் கூத்தர் உள்ளார். கூத்தரை ஊர் எல்லைக்கு அழைத்து சென்று நீங்கள் தர விரும்பும் தண்டனையை தரலாம். ஆனால் ஊர் எல்லைக்கு செல்லும் வரை பல்லக்கை திறக்கக்கூடாது” என்று மன்னன் கட்டளையிட்டான். மன்னன் மொழியை கேட்ட சிவனடியார்கள் ஆனந்தமாக, மன்னனுக்கு நன்றி சொல்லிவிட்டு, பல்லக்கை எடுத்துச் சென்றார்கள். பல்லக்கு கண்ணை விட்டு மறையும் வரை கண்களில் நீர் வழிய அதை பார்த்துக் கொண்டிருந்தான் மன்னன்.

ஊர் எல்லைக்கு சென்று பல்லக்கை திறந்த சிவனடியார்கள், பல்லக்கில் இளவரசன் இருப்பதை கண்டு பயந்து போனார்கள். பின்பு நடந்ததை உணர்த்த சிவனடியார்கள், தமிழை காக்க தவப் புதல்வனை தந்த தென்னவனை மனதார வாழ்த்தினார்கள். ஆனாலும் ஒரு பாவமும் அறியாத இளவரசனை கொல்ல மனம் வராத சிவனடியார்கள், அவனையும் அழைத்துக் கொண்டு அரண்மனைக்கு சென்றார்கள்.

‘‘அரசே! தமிழை காக்க தவப் புதல்வனை தந்தது மாபெரும் தியாகம். அதற்கு இளவரசும் ஒத்துழைத்தது அதனிலும் பெரிய தியாகம். ஆனால் இவ்வளவு தியாகம் செய்து கொலைகாரனாகிய கூத்தனை காப்பது நியாயம் இல்லை. ஆகவே எங்களுக்கு தகுந்த நீதி வழங்க வேண்டுகிறோம்” என்று சிவனடியார்கள், பணிவாக மன்னனிடம் முறையிட்டார்கள். மன்னன் செய்வதறியாது மவுனம் சாதித்தான். அச்சமயம் இவ்வளவு கூத்தும், கூத்தனான என்னால் தான் வந்தது என்று வருந்திய கூத்தர், மன்னன் முன் வந்தார். ‘‘வேந்தே! என்னை இவர்களிடம் ஒப்படையுங்கள். என்னை அந்த அம்பிகை ரட்சிப்பாள். கவலை வேண்டாம்” என்று அம்பிகையின் மீது இருந்த நம்பிக்கையால் உறுதியாக சொன்னார். கூத்தருக்கு, செய்வ தறியாது திணறும் மன்னனின் மவுனம்தான் பதிலாக கிடைத்தது. மவுனத்தையே சம்மதமாகக் கொண்ட கூத்தர் சிவனடியார்களோடு சென்றார்.

சிவனடியார்களோடு சென்ற கூத்தர் மாலை நேரம் நெருங்குவதை உணர்ந்தார். ஆகவே தன்னை தூக்கிக்கொண்டு ஊர் எல்லைக்கு செல்லும் சிவனடியார்களை நோக்கி, ‘‘ஐயன்மீர், நான் மூன்று வேளையும் சிவ பூஜை செய்யும் ஒழுக்கமுடையவன். மாலைவேளை ஆகி விட்டது. இறுதியாக ஒரு முறை சிவ பூஜை செய்து விடுகிறேன். பிறகு நீங்கள் எம்மை கொல்லலாம்” என்று கூத்தர் வேண்டினார்.  சிவனடியார்கள் சம்மதிக்கவே, பல்லக்கை விட்டு நீங்கி, அரிசொலார் நதியில் நீராடி, திருநீறு பூசி ருத்ராக்ஷம் பூண்டு , ஈசனை மனதார வேண்டினார். பின்பு அருகில் இருந்த காளி கோவிலுக்குள் புகுந்த கூத்தர், சன்னதிக்குள் சென்று கதவை உள் பக்கமாக தாழிட்டுக் கொண்டார்.

விஷயம் அறிந்த சிவனடியார்கள், கோபத்தால் கொந்தளித்தார்கள். விடிந்தபின் எப்படியும் பூஜைக்காக கதவை திறந்து தான் ஆக வேண்டும். அப்போது கூத்தன் நம் கையில் சிக்குவான். அதுவரையில் கோவிலைச் சுற்றி காவலிருக்கலாம் என்று சிவனடியார்கள், தீர்மானித்தார்கள். இது இப்படி இருக்க, உள்ளே சென்ற கூத்தர் அம்பிகையை மனதார சரணாகதி செய்தார். தான் செய்த தவறுக்காக கண்ணீர் வடித்தார். கதறினார். குழந்தை அழுவதை எந்தத் தாய் தான் வேடிக்கை பார்ப்பாள். கூத்தன் அழுவது பொறாமல் அம்பிகை கொடி சூரிய பிரகாசத்தொடு தோன்றி, பாசத்தோடு கூத்தரின் தலையை கோதினாள்.

தாயின் ஸ்பரிசத்தை உணர்ந்த குழந்தை அழுகையை நிறுத்தியது. எதிரே நிற்கும் ஆனந்த ஜோதியை கண்ணார கண்டு, வாயாரப் பாடி, மனமாரப் பக்தி செய்து, திருவடியில் விழுந்தது.

‘‘கூத்தனே! குழந்தாய்! வருந்தாதே! இந்த சிவனடியார்களை, சங்கமர்கள் என்று அழைப்பார்கள். இவர்கள் வீரபத்திரரின் அதி தீவிர பக்தர்கள் ஆவார்கள். வீரபத்திரரின் பக்தர்களுக்கு ஒரு தீங்கும் செய்ய மாட்டார்கள்.

ஆகவே, ஈசனை மதிக்காமல் தட்சன் நடத்திய வேள்வியை அழித்த வீரபத்திரரின், வீர பராக்ரமத்தைப் பாடு. உன் பாடலை கேட்டபின் அவர்கள் உன்னை துன்புறுத்தமாட்டார்கள். ஏனெனில் நீ அவர்களது தெய்வத்தை போற்றிப் பாடிய புலவன். உன்னை கொல்வது அவர்களை பொறுத்த வரையில் பெரும் பாவமாகும்” அம்பிகையின் இன்மொழி கூத்தருக்கு ஊக்கம் தந்தது. அம்பிகையின் கருணையை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தபடியே வீர பத்திரரின் வீரசாகசத்தை புகழும், தக்கயாகப்பரணி பாட ஆரம்பித்தார்.

கூத்தர் பாடப்பாட அம்பிகை அதை எழுதினாள். வியாசர் சொல்லச் சொல்ல அன்று மகா பாரதத்தை ஆனைமுகன் எழுதியது போல இன்று அகிலாண்ட நாயகி பரணி எழுதினாள். அவள் பரணி எழுதும் அழகே அழகு. மேலிரு கைகளில் விளக்கை பிடித்துக் கொண்டு, கீழிரு கைகளில் ஒன்றில் எழுத்தாணியும் மற்றொன்றில் ஓலையையும் வைத்துக் கொண்டு, வேத கானம் கேட்டு கசந்துபோன செவிகளால் தேன் தமிழ் அமுத கானத்தை கேட்டு அதை தன் செங்கரத்தால் எழுதினாள்.

இது இப்படி இருக்க வீசும் காற்றில் அம்பிகையின் கையில் இருந்த விளக்கு அலைபாய்ந்தது. அப்போது, கூத்தர், வீரபத்திரர் தட்சனின் யாகத்தை அழிக்கும் கட்டத்தை பாடிக்கொண்டிருந்தார். விளக்கு அலை பாய்ந்து, கூத்தரின் மனதையும் அலை பாயவைத்தது. தன்னை மறந்து கவியில் லயித்து பாடல் பாடும் இயல்பினர் கூத்தர். பாடலில் பொங்கும், வீர பத்திரரின் வீர ரசம் இவர் மனதிலும் பொங்கி வழியவே, எதிரில் இருக்கும் அம்பிகையின் கண்ணாடிக் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்தார். பாலுக்காக அழும் குழந்தை மார்பில் உதைக்கும் போது தாய் கோபப்படுவாளா என்ன? மாறாக குழந்தையின் மீது பாசம் தானே கொள்வாள். உலக அன்னையான அம்பிகை மட்டும் அதற்கு விதி விலக்கா என்ன? கவிதை பாடும் பரபரப்பில் நடந்துவிட்ட இந்த சம்பவத்தை அம்பிகை நொடியில் மன்னித்து அருளினாள்.

ஒருவழியாக கூத்தர் வீரபத்திரரை பாடினார். அதைக்காளிதேவியே அங்கீகரித்து எழுதியும் தந்துவிட்டாள். இதனை அறிந்த சங்கமர் சிவனடியார்கள், கூத்தரின் பெருமையை அறிந்தார்கள். அவரிடம் மன்னிப்பும் வேண்டினார்கள். கூத்தரும் தான்செய்த தவறுக்காக சங்கமர் சிவனடியார்களிடம் மன்னிப்பு வேண்டினார்.

தமிழ் பாடும் பக்தனுக்காக இறங்கிவந்து அவன் பாடும் பாடலை எழுதி, அவன் கையால் அடியும் பட்ட அம்பிகையின் கருணைக்குத் தான் நிகர் ஏது. இப்படி காளியின் மனம் களிக்கும் படி கூத்தரை தமிழ் பாட வைத்தது கலை வாணியின் இன்னருள் தான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஞானத்தை வாரிவழங்கும் அந்த ஞானாம்பிகையை, கலைவாணியை, அவளது பிறந்தநாளான வசந்த பஞ்சமியில் வணங்குவோம்.

ஜி.மகேஷ்

Related Stories: