திருநீலகண்டர் இல்லத்தரசி

அறுபத்து  மூவர் சரிதத்தில், ஆச்சர்யமூட்டும் பெண்கள் திருநீலகண்டர் இல்லத்தரசி  திருப்புலீச்சரம் என்ற தலத்தில் அவதாரம். சிதம்பரம் நகருள் அமைந்துள்ளது  அருள்மிகு “திருப்புலீசுவரர்”அருள்மிகு “திரிபுரசுந்தரி அம்பாள்”  அருளாட்சி செய்யும் தலம். சிதம்பரம் நகரில் இளமையாக்கினார் ஆலயம்  என்றால்தான் தெரியும். ஏனெனில், திருநீலகண்ட நாயனாருக்கு கடைசியாக இளமையைத்  தந்ததினால் இளமையாக்கினார் ஆலயம் எனப் பெயர்பெற்றது. தை மாதம் விசாகம்  நட்சத்திரம் குருபூசை நன்னாள்.

திருநீலகண்ட நாயனார்:குயவர்  குலத்தில் தோன்றிய வைராக்கியச் சிங்கம். மண்பாண்டம் செய்து விற்று அதன்  மூலம் இல்லறம் நடத்தியவர். சிவபெருமானுடைய அடையார்களுக்கு, திருவோடு தந்து  மகிழ்வதில் சிவனைக் கண்டவர். சிவபுராணம் தெரிந்ததினால், அதில் உச்சபட்ச  கருத்தான ஆலகால விடத்தை உண்டு இறைவன் உலகினைக் காத்தார் என்ற செய்தி இவர்  உள்ளத்தைக் கவர்ந்தது. அந்த உணர்வு ஆழ்மனதில் நங்கூரமிட்டதால், பரமசிவன்  மட்டும் விடத்தைக் கண்டத்தில் நிறுத்தியிராவிட்டால், உலகம்  அழிந்திருக்குமே!

உலகைக் காத்தவரின் கண்டம் நீலமாகிப் போனதால்  வருத்தமுற்றாலும், அந்த நீலகண்டத்தின் அழகில் மயங்கி சதாசர்வ காலமும்  திருநீலகண்டம், திருநீலகண்டம்” என்றே கூறிக் கொண்டிருந்ததால், இவரின்  இயற்பெயர் மறைந்து திருநீலகண்டர் என்றே நிலைபெற்றது. இவர் ஒரு சமயம்  காமவயப்பட்டு ஒரு தாசியுடன் உறவு கொண்டதை அவரின் அருமை மனைவி அறிந்து  கொண்டதினால் ஏற்பட்ட மனவருத்தமே இவர் சரிதத்தின் ஆணிவேர். பெண்கள்  கணவனுக்காக எதை வேண்டுமானாலும் சகித்துக் கொள்வர்.

 ஆனால், தன்  துணை வேறு பெண்ணுடன் உறவு கொண்டவர் எனத் தெரிந்தால், பத்ரகாளியாக  மாறிவிடுவாள். அப்படி மாறிய திருநீலகண்டர் சுவாமிகளின் மனைவி, “நீர்  என்னய்யா யோக்கியர்? நான் அப்படிச் செய்தால் நீர் சும்மா இருப்பீரோ? பெரிய  பக்திமான்போல் எந்நேரமும் ‘திருநீல கண்டம்’ எனச் சொல்ல வேண்டியது. ஆனால்,  செய்வதெல்லாம் தப்பு வேலை. இனிமேலாவது திருந்தி நடக்க வழியைப் பாரும்” எனப்  பொங்கியிருப்பார் போலும்.

போட்ட சப்தத்தில் சர்வமும் அடங்கியவர்,  ஒருவாறாகத் தேறி மெல்ல மனைவியிடத்துச் சென்று மன்னிப்பு கேட்டாராம்.  ஒப்புக் கொள்ளாத மனைவி, “என்றைக்கு நீர் இந்தத் தப்பு செய்துவிட்டீரோ, இனி  நமக்குள் இல்லறம் இல்லை” என திட்டவட்டமாக மறுத்து, “எம்மைத் தீண்டுவீராயின்  திருநீலகண்டம்” என்று எச்சரித்தாராம். தவறை உணர்ந்த திருநீலகண்ட  சுவாமிகள், தனக்குத் தானே தண்டனையாக “இனி இவ்வுலகில் எப்பெண்ணோடும் தொடர்பு  கொள்ளேன்” என்று சத்தியமிட்டார். இதுவே உனக்குச் செய்யும் பிராயச்சித்தம்  என்றார். இப்படி ஒரு சத்தியம் செய்தது யாருக்கும் தெரியாவண்ணம் இருவரும்  வாழ்க்கையை நகர்த்தியுள்ளனர்.

“வாளால் மகவரிந்து ஊட்ட வல்லேன்

அல்லன் மாது சொன்ன

சூளால் இளமை துறக்க வல்லேன்

அல்லன் தொண்டு செய்து நாளாறில்

கண் இடத்து அப்ப வல்வேன்

அல்லன் நான் இனிச் சென்று

ஆளாவது எப்படியோ? திருக்காளத்தி

அப்பாருக்கே…”

என்று, பட்டினத்தார் சுவாமிகள் திருநீலகண்ட சுவாமிகள் போல் மனைவி சொன்ன சூளுரைக்காக இளமையைத் துறக்க முடியாதவன் என்று வருந்துகிறார்கள். இப்படி  வியக்கும் வண்ணம் வாழும் தன் அடியாரின் பெருமையை உலகறியச் செய்ய வேண்டி,  சிவபிரான் ஒரு திருவோடு உலகறியச் செய்ய வேண்டி, சிவபிரான் ஒரு திருவோடு ஏந்திய சிவயோகியாக திருப்புலீச்சரத்திற்கே வந்துள்ளார்.

வந்தவர் திருநீலகண்ட சுவாமிகளிடமே, நீர் எல்லோருக்கும் திருவோடு தந்து மகிழ்வீராமே!  எனக்கு ஒரு உதவி செய்வீரோ?” என்று வினவியுள்ளார். “காத்திருக்கிறேன் சுவாமி, தங்கள் சித்தம், என் பாக்கியம்” என்று பணிந்தவர், “உத்தர விடுங்கள்  சுவாமி” என்றுள்ளார். சிவபிரானும் மனம் மிக மகிழ்ந்து, “எனக்கு நீ எதுவும்  தரவேண்டாம். என்னிடமுள்ள இந்த திருஓட்டினை உன்னிடம் தருகிறேன். அதை நீ  பத்திரமாக வைத்திரு. நான் கேட்கும் சமயம் தந்தால் போதும்” என்றிட, சரியென சம்மதித்த

இவரும் பெற்றுக் கொண்டாராம்.

 சிவபெருமான் மீண்டும் மீண்டும் பத்திரம் பத்திரம் என்றிடவே, “பயப்படாதீர் சுவாமிகளே. இது திரு ஓடு அல்ல என் உயிர்” என்றாராம். பரமதிருப்தியான பரமசிவனும் மறைந்து  சென்றாராம். மீண்டும் சில நாள் கழித்து திருப்புலீச்சரம் வந்த சிவபெருமான்  மீண்டும் நாயனாரைச் சந்தித்து, “அப்பனே, நான் சில நாள் முன்பு தந்த  திருஓட்டினைத் தந்தால் நலம்” என்றுள்ளார். இவரும் விரைந்து சென்று ஓடு  வைத்த இடத்தில் தேடினார். அங்கு அவ்வோடு இல்லாமல் போகவே, குடிசை முழுதும்  தேடியும் ஓடு மட்டும் கிட்டவில்லை.

ஒன்றும் தெரியாததுபோல் நடித்த  சிவபெருமானும், “என்னப்பா? இன்னுமா ஓட்டினைத் தேடுகிறாய்” என அதட்டவே, பயந்துபோய் வெளியே வந்த திருநீலகண்டசுவாமிகள் பயந்தபடியே, “தேவரீர்! சிறு  தவறு நேர்ந்துவிட்டது. “ஓடு காணவில்லை” என்றதும் குபீரென எழுந்த பெரியவர், “என்னது? ஓட்டினைக் காணவில்லையா? என்ன சொல்லிவிட்டுக் கொடுத்தேன்? உயிர்  என்றாயே? இப்படித் தொலைத்தாயே?” எனக் கடுகடுத்தார்.

“பெரியவரே!  கோபப்படாதீர். தொலைந்தது போகட்டும். அதற்குப் பதில் புது ஓடு தருகிறேன்” என்றார் திருநீலகண்டர். அது கேட்டு பால்போல் பொங்கிய பரமசிவனார், “என்னது?  புது ஓடா? பழையதைத் தர வழியில்லை. இதில் புதிது வேறா? எனக்கு நான் தந்த  பழையதைத் தா” என அடம்பிடித்தாராம். அதோடு நில்லாது, “என் ஒட்டினை நீ திருடவில்லையென உன் பிள்ளை மீது சத்தியமிடு” என்றுள்ளார். அந்த பாக்கியம்  இல்லை சுவாமி என்று பதில் தந்தவரிடம், “அப்படியானால் நீ உன் மனைவியின் கரம்  பற்றி குளத்தில் மூழ்கி எழுந்து சத்தியமிடு” என்றார். “சுவாமி” எனப் பதறிய  திருநீலகண்ட சுவாமிகள், ‘என் மனைவியை தீண்டமாட்டேன் என்று சத்தியம்  செய்துள்ளேன்.

ஆதலால் அதைத் தவிர்த்து நான் மட்டும் எத்தனை முறை  வேண்டுமானாலும் குளத்தில் மூழ்கி சத்தியமிடுகிறேன் சுவாமி” எனப்  பணிந்துள்ளார். கோபம் கொண்ட சிவபெருமான், “என்னப்பா குயவரே! உன்  சவுகரியத்திற்கே பேசுகிறாய்? உன்னை நல்லவன் என நம்பியது என் பிழையோ? பெரிய  நாடகக்காரனாக இருக்கிறாயே? ஒரு பெரியவரிடம் பேசும் பேச்சா இது? எனப்  பொரிந்து தள்ளினார்.

மேலும், இதுபற்றி உன்னிடம் பேசிப்  புண்ணியமில்லை. நான் நேராக தில்லைவாழ் அந்தணர்களிடம் முறையிட்டு நியாயம் தேடிக் கொள்கிறேன்” என்றபடி விருட்டென அங்கிருந்து நகர முயன்றவரின் காலில்  விழுந்த திருநீலகண்ட சுவாமிகள், “தேவரீர்! நான் என்ன திருடனா? உம் ஓட்டைத்  திருடி என்ன செய்துவிட முடியும்? புதிது தருகிறேன்” என்று எவ்வளவோ  முறையிட்டும் நில்லாத பெரியவர், தில்லைச் சபைக்குச் சென்று முறையிட்ட  பின்புதான் நின்றாராம். அறிவில் மிக்க அந்தணர்களாயிற்றே! ஒரு தரப்பு  வாதத்தை ஏற்றவர்கள், திருநீலகண்ட சுவாமிகள் நோக்கி என்ன? பெரியவர் சொல்வது  உண்மையா? என்றிட, “ஆமாம் என பதில் தந்தாராம் திருநீலகண்ட சுவாமிகள்.“அப்படியானால் ஓட்டினைத் தொலைத்ததின் நோக்கம்?” என வினவிட, “ஐயா, இவர் பொன்னினும் மேலான  ஒரு ஓடு தந்ததும் உண்மை. அதை நான் தொலைத்ததும் உண்மை. தீர்ப்பை நீங்கள்தான் தரவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

நியாய சிகாமணிகளாகிய தில்லைவாழ்  அந்தணர் சபையினர், “குற்றம் நிரூபணமானதால் பெரியவர் கூறுவது போல் நீர் உம் மனைவியின் கரம் பற்றி குளத்தில் மூழ்கி எழுந்து சத்தியம் இடுவீர். இதுவே  எம் தீர்ப்பு என்றனர். சரியென சம்மதித்தவர் அருகிலிருந்த குச்சி ஒன்றை எடுத்து, தான் ஒரு முனையைப் பிடித்து, மறுமுனையை மனைவியிடம் தந்து குளத்தில் மூழ்கப் போனபோது, தடுத்த சிவபெருமான், “இல்லை, இல்லை. தீர்ப்பின்படி கரத்தினைப் பிடித்து மூழ்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

மனம் எனும் காட்டாற்றினை எத்தனை தடுப்புகளால் தடுத்திட முடியும்? மடைதிறந்த  வெள்ளம் போல், தான் தாசி வீட்டிற்குப் போனதையும், மனைவிக்கு தெரிந்தபடியால் அவரோடு ஏற்பட்ட சண்டையால் அவரைத் தீண்டாமல் வாழ்வதையும் சபையோர் முன் கண்ணீர் மல்க ஒப்புக் கொண்டார். இதை கேட்ட அனைவரும் ஒரு சத்தியத்தைக் காக்க இத்தனை ஆண்டு தவமா? என ஊரார் அதிசயப்பட்டனர்.

தீர்ப்பை  மதிக்கும் விதமாக மனைவியோடு குளம் மூழ்கி எழுந்தபோது, இறைவனின் தனிப்பெருங் கருணையினாலே, கிழவன், கிழவியாக மூழ்கியவர்கள், குமரன், குமரியாக சண்டையிட்டு சத்தியம் செய்த அன்று எப்படி இருந்தனரோ, அதே  தோற்றத்தில் எழவே, கூடியிருந்த கூட்டம் எழுப்பிய ‘சிவ சிவ’ முழக்கம் விண்ணை  எட்டியது. நாயகியோடு எழுந்தருளிய திருப்புலீச்சர நாயகன், தம்பதி சமேதராய்  வானில் காட்சி தந்து “வென்ற ஐம்புலனால் மிக்கீர்” என ஆசீர்வதித்து, குன்றாத  இளமையோடு என் அருகில் இருப்பீர் என இருவரையும் தன் கணத்தோடு இணைத்தாராம்.  சுந்தரமூர்த்தி சுவாமிகள் அடையாளம் காட்டிய அறுபது பேரில், முதலாவதாக  நிற்கும் தனியடியார் இவரே.

மின்னும் பெண்மை: காம, குரோத,  அக்கினியெனும் முத்தீயினும் பெரியது கற்பு எனும் பெருந்தீ. பெண்கள் இயல்பே  தன்னைக் கற்பால் காத்துக் கொள்வதுதான். கணவனை எமனிடமிருந்து மீட்டும்,  பூக்குழி கடந்தும், நகரத்தை எரித்தும், தன் கற்பின் திறத்தை  வெளிப்படுத்தியோர் ஏராளம். கணவனால் ஏற்படும் அனைத்துத் துயர்களைத்  தாங்கினாலும், வேறு ஒரு பெண்யோடு தொடர்பு என்பதை மட்டும் தாங்க  மாட்டார்கள்.

அப்படி ஒரு பொல்லாப் பிழையை செய்த திருநீல கண்டர் சுவாமிகளை அவர் மனைவி வெறுத்து ஒதுக்கிடாமல், எவ்வளவு நாசூக்கான தண்டனை தந்தார் தெரியுமா? ‘நமக்குள் கணவன் மனைவி பந்தம் தொடரட்டும். ஆனால் உறவு மட்டும் கூடாது. நான் மனைவியாகச் செய்ய வேண்டிய காரியங்களை மட்டும் செய்வேன். வேறு எந்த உறவும் கூடாது’ என சூளுரைத்து வாழ்ந்ததால் தான் திருநீலகண்டரின் பக்தியே வெளிவந்தது என்றால் அது பொய்யல்ல.

ப. ஜெயக்குமார்

Related Stories: