பரமேஸ்வரா! பண்டரிநாதா!

அசைக்க முடியாத நம்பிக்கையை இறைவன் மீது வைத்து விட்டால் போதும். அவன் நமக்கு நன்மை தீமைகளை நேரடியாகவே கொடுத்துவிடுகிறான். நம்பிக்கையோடு ஒவு மலையை ஓங்கி அடித்தால், அந்த மலையைக்கூட உடைத்து விடலாம். உடும்பைப் போல உறுதியாக இறைவனின் பாதங்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டால், அந்தப் பரமன் தன் பக்தனுக்காகத் தானே கீழே இறங்கி வந்து விடுகிறான். பக்தன் இறைவன் மீது காட்டும் அன்பு பக்தியாகிறது.

இறைவன் பக்தன் மீது காட்டும் பரிவு கருணையாகிறது. நீ உயர்ந்தவனா, நான் உயர்ந்தவனா என்ற போட்டி அன்றே சிவபுராணத்தில் நடந்து முடிந்துவிட்டது. கடைசியாக ஆண்பாதி, பெண்பாதி என்று அந்தப் பரமனே முடிவையும் சொல்ல வேண்டிதாயிற்று. அதேபோல் சிவன் உயர்ந்தவனா? விஷ்ணு உயர்ந்தவனா? என்ற போட்டியும் வரத்தான் செய்தது. ஏனோ அதற்கு மட்டும் இன்னும் முழு முடிவு கிடைக்கவில்லை. நாதமுனிகள், விஷ்ணுவே உயர்ந்தவன் என்று உறுதி செய்து விட்டுப்போய் விட்டார். சிவாச்சாரியர்களோ, சிவனே பெரியவன் என்று அடித்துச் சொல்லுகிறார்கள்.இறை பக்தியிலே இவனென்ன?

அவனென்ன? ஈசனென்ன? குழம்பிப் போன பக்தர்களில் சிலர் மன உறுதியோடு சிவனை மட்டுமே சிந்தனையில் வைத்து ஹரியை அறவே வெறுத்தவர்களும் இருக்கிறார்கள். பெருமாளே பெரிதென்று சொல்லி சிவபெருமானைப் பேச்சுக்குப் பேச்சு மட்டம் தட்டிப் பேசுபவர்களும் இருக்கிறார்கள். வடநாட்டி லே, பண்டரிபுரத்தில் நரஹரிசோனார் என்ற சிவபக்தர் பொன்வேலைகளைச் செய்து வந்தார். பொற்கொல்லரான அவர், தீவிரமான சிவபக்தர்.

எந்த நேரமும், அந்தப் பண்டரீபுரத்தில் கிருஷ்ணனின் நாமஸங்கீர்த்தனம் ஒலித்துக் கொண்டே இருக்கும். ஹரியின் பெயரை உச்சரிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். ஹரி என்ற அந்த ஒலியே தன் காதுகளில் கொஞ்சமும் விழக்கூடாது என்று விரும்புபவர் நரஹரிசோனார். இப்படிப்பட்ட இவர், அந்த ஊரிலே மிகவும் பாழடைந்த சிவாலயத்தில் நித்தய பூஜைகளையும், ஆராதனைகளையும் சிவபெருமானுக்கு செய்து வந்தார்.

வெள்ளையடிக்கப்படாத அந்த சிவன் கோயிலின் மதில் சுவர்கள் முழுதும் கருத்துப் போய் கிடந்தது. காரைப் பூச்சுக்கள் அரித்துப் போய் செங்கல் மட்டுமே வெளியே தெரிந்தது. சில சுவர்களின் மீது மரமும் செடியும் வளர்ந்து இருந்தது. கோயில் உள்ளே…சொல்லவே வேண்டாம். நெருஞ்சி முள்ளும், குத்தும் கல்லும் ஏகதேசமாய் இருந்தது. ஒத்தையடிப்பாதையிலேதான் மூலக்கிரஹம் செல்லவேண்டும். தன்னுடைய இவ்வளவு மோசமான நிலையிலுள்ள இந்த சிவாலயத்தை யாரும் கவனிப்பாரில்லையே என்று அனுதினமும் மனவேதனையோடு அந்தக் கோயிலுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார் நரஹரிசோனார்.

ஏட்டிக்குப்போட்டி என்று வந்து விட்டால் பகவான் கூட படாதபாடு படுகிறான். பண்டரீநாதனின் ஊரில் பரமசிவனை யார்தான் மதிப்பார்கள்? வடநாட்டின் ஒரு பகுதியில், செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்த செல்வந்தன் ஒருவருக்குப் பல ஆண்டுகளாகக் கொஞ்சி விளையாட ஒரு பிள்ளை இல்லை. பிள்ளை இல்லையே என்று மன வேதனைப்பட்ட அந்த செல்வந்தர், பண்டரீநாதனிடம் வேண்டிக்கொண்டார்.

‘‘பண்டரீநாதா! பாண்டுரங்கா! எனக்கு ஒரு பிள்ளையைக் கொடுத்து என்னையும் என் செல்வத்தையும் காப்பாற்று. உனக்கு நான் மறக்காமல் தங்கத்திலே உடல் முழுவதும் கவசம் செய்து சார்த்துகிறேன்’’ என்று பிரார்த்தனை செய்து கொண்டார். அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்பவன் கண்ணன். கேட்டவர் குரலுக்கு அபயம் தருவேன் என்பவன் கண்ணன். செல்வந்தன் ஒரு பிள்ளையைத்தானே வரமாகக் கேட்டான்?

பண்டரீநாதன், கொஞ்சமும் வஞ்சமில்லாமல் அந்த செல்வந்தனுக்குக் கேட்டதைக் கேட்டபடி ஓர் அருமையான ஆண்மகனைக் கொடுத்து, அந்த செல்வந்தனை ஆனந்தப் பட வைத்தான். வேண்டுதல் பலித்துவிட்டதால், அவர் பிரார்த்தனை செய்து கொண்டபடியே பண்டரீநாதனுக்கு ஒரு தங்கக் கவசம் சார்த்த, நல்ல தரமான முறையிலும், அழகாகவும் பொன் வேலை செய்யும் பொற்கொல்லரைத் தேடி கொண்டிருந்தார். பொதுவாக மனித சுபாவம் என்னவென்றால், எந்த ஒரு காரியமும் தனக்கு ஆக வேண்டுமென்றால், அந்த நிமிடத்திலேயே ஆண்டவனை நினைத்து வேண்டிக்கொள்வார்கள்.

‘‘நான் அதைச் செய்கிறேன். இதைச் செய்கிறேன், இப்போது இத்துயரத்திலிருந்து என்னை விடுதலை செய்’’ என்று இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்வாார்கள். துன்பமும், துயரமும் தீர்ந்து போய் விட்டால், அந்தக் கடவுளிடம் வேண்டிக் கொண்டதை அத்தோடு மறந்து விடுவார்கள். ஆனால், தனது வேண்டுதலை மறக்காமல் செய்ய அருமையான பொற்கொல்லனைத் தேடிக் கொண்டிருந்த அந்த செல்வந்தனுக்கு அந்த ஊர் பெருமக்கள் நரஹரிசோனாரையே பரிந்துரை செய்தார்கள்.

ஊர் மக்களின் உறுதியான பரிந்துரையைக் கேட்ட செல்வந்தனும் இந்த வேலையைச் செய்துதர நரஹரியே சரியானவராக இருப்பார் என்று முடிவு செய்து அவர் வீட்டை வந்தடைந்து, தனது விருப்பத்தைத் தெவித்தார். செல்வந்தரின் கோரிக்கையைத் தன் காதுகளால் கேட்ட மாத்திரத்திலேயே ஆத்திரமடைந்தார் நரஹரி. ‘‘செல்வந்தரே! நீங்கள் என்னிடம் வந்து அந்தப் பண்டரீநாதனுக்குத் தங்கத்திலே கவசம் செய்துதரக் கேட்பது எப்படியிருக்கிறது தெரியுமா? பாம்புக்குப் பக்கத்திலே கீரிப்பிள்ளைக்குப் படுக்கை விரித்துத்தரக் கேட்பது போலவும், புள்ளிமானுக்கு அருகிலேயே புலியை நிறுத்தச் சொல்வது போலவும் உள்ளது. நான் ஒருபோதும் அந்த ஹரிக்கு இந்தக் கவசத்தைச் செய்துதர மாட்டேன்.

போய்விடுங்கள்’’ என்று கோபத்தோடு கூறினார். ஆனால், தவந்தரோ நரஹரியை விடுவதாக இல்லை. தனக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். ‘‘ஆச்சாரியாரே! தாங்கள் கோவிலுக்கு வர வேண்டாம். அந்த ஹரியையும் பார்க்க வேண்டாம். நாங்கள் அளவு எடுத்துக் கொண்டு வருகிறோம். அந்த அளவுப்படி செய்து கொடுத்தால் போதும்’’ என்றார்.

‘‘நீங்கள் வேண்டுதலை செலுத்த வேண்டும் என்பதற்காக நான் என்கொள்கையை விட்டுக் கொடுக்க வேண்டுமா?’’ நீங்கள் அளவு எடுத்து வந்து கொடுத்து அதை நான் செய்து கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை; நீங்கள் போகலாம்’’ என்றார். செல்வந்தருடன் வந்த அவருடைய காரியதரிசி, செல்வந்தரை அழைத்து ஏதோ காதில் சொன்னார். அதைக்கேட்டு செல்வந்தரும், சரியென்று தலையசைத்து விட்டு மீண்டும் நரஹியிடம் வந்தார்.

‘‘பொற்கொல்லரே! நீங்கள் எனக்கு இந்தத் தங்கக் கவசத்தைச் செய்து கொடுத்தால், நான் உங்களுக்குள்ள ஆசையை நிறைவேற்றுவேன்’’ என்றார். ‘‘எனக்கு ஆசையா? அப்படி

யொன்றுமில்லையே’’ என்றார் நரஹரி. ‘‘ஏனில்லை…நீங்கள் அன்றாடம் பூஜிக்கும் உங்கள் ஈசன் அமர்ந்திருக்கும். அந்த ஈஸ்வரன் கோயில் எவ்வளவு சோமாக இருக்கிறது. அதை நான் புதுப்பித்துத் தருகிறேன். அந்தக் கோயிலை யாராவது அக்கறை எடுத்துப் புதுப்பிக்க மாட்டார்களா என்று நீங்கள் ஆசைப்பட்டதில்லையா? அதை நான் நிறைவேற்றுகிறேன்’’ என்றார் செல்வந்தர்.

சிவாலயத்தை சீர் செய்து தருவதாக உறுதி அளித்த ஒரே காரணத்திற்காக நரஹரியும், அந்தப் பண்டரிநாதனுக்குத் தங்கக் கவசம் செய்து தர ஒப்புக் கொண்டு, அளவு எடுத்துவரும்

படிக் கேட்டு கொண்டார். அப்போது நரஹரி ஒரு நிபந்தனையும் போட்டார். ‘‘ஒருக்காலும் நான் அந்தப் பண்டரீநாதன் ஆலயத்தை மிதிக்க மாட்டேன். நான் செய்து தரும் கவசத்தை நீங்கள் தான் அணிவிக்க வேண்டும் என்றார்’’.

அதையும் சரியென்று ஒப்புக்கொண்டு செல்வந்தர் பண்டரீநாதன் கோயிலுக்குச் சென்று தகுந்த ஆட்களை வைத்து, இம்மியளவும் தவறு ஏற்படாவண்ணம் அளவு எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார். பொற்கொல்லரும் கணகச்சிதமாக ஒரு வார காலத்தில் அதை செய்து கொடுத்தார். மகிழ்ச்சியோடு அதை எடுத்துச் சென்று அந்தத் தங்கக் கவசத்தைப் பகவானுக்கு அணிவித்தார் செல்வந்தர். ஆனால், அது பாண்டுரங்கனுக்கு மிகப் பெரிய கவசமாக இருந்தது. மீண்டும் அளவு எடுத்து வந்து மீண்டும் ஒரு கவசம் தயாரிக்கப்பட்டது, அது இப்போது பண்டரீநாதனுக்கு சிறியதாகப் போய் விட்டது.

கோயிலில் பூஜை செய்யும் பண்டாக்களோ, அந்தப் பொற்கொல்லரே நேரில் வந்ததுதான் அளவு எடுத்து இந்தக் கவசத்தை செய்ய வேண்டும். வேறு வழியில்லை

என்றனர்.நரஹரியோ பிடிவாதமாகக் கோவிலுக்கு வர மறுத்துவிட்டார். ‘‘இந்தக் கண்கள் அந்தப் பண்டரீநாதனைப் பார்க்கவே பார்க்காது’’ என்று பிடிவாதமாகக் கூறினார். பிறகு தவந்தரும், அவரது சகாக்களும் ஒரு முடிவுக்கு வந்தனர்.

‘‘நரஹரியின் கண்களைக் கருப்புத் துணியால் கட்டிவிட்டு, இரண்டு பேர் அவரை டோலியில் தூக்கிக் கொண்டு போய் உள்ளே வைத்து, அவர் தன் கைகளால் பண்டரீ நாதன் உருவச்சிலையைத் தடவிப்பார்த்து அளவு எடுத்தக் கொள்ளட்டும்’’ என்றனர். சிவாலயம் புதுப்பிக்கப்பட வேண்டுமே என்ற ஆதங்கத்தில், இந்தச் செயலை ஒப்புக் கொண்டு, நரஹரியும் கண்களை இறுகக் கட்டிக் கொண்டு, டோலியில் ஏறி அமர்ந்தார். அவரைத் தூக்கிக் கொண்டு போய் பண்டரீநாதன் முன்பு வைத்தனர்.

அவர் அந்தத் தங்கக் கவசத்தைச் சார்த்துவதற்காக பண்டரீநாதனின் உடலைத் தடவிப் பார்த்துப் படிப்படியாகக் கையை சிரஸிற்குக் கொண்டு போனார். தலையில் கை வைத்ததும் அவருக்கு ஜடாமுடியும், பிறைச்சந்திரனும், கங்கைப் பிரவாகமும், சர்பத்தின் ஸ்பரிசமும் ஏற்பட்டது. அதிசயப்பட்டுப் போன நரஹரி, ‘‘இதென்ன… நம்முடைய சிவபெருமான் போலல்லவா இருக்கிறது. இவர்கள் என்னை வேறு ஏதாவது சிவ ஆலயத்திற்கு கொண்டு வந்துவிட்டார்களா என்று வியந்து அவர்களைப் பார்த்துக் கேட்டார்.

‘‘செல்வந்தரே! என்ன வேடிக்கை செய்கிறீர்கள்? இந்த பகவானைத் தொட்ட இடமெல்லாமல் சிவபெருமானின் அச்சடங்கள் அல்லவா தெரிகிறது. இதோ என் ஈசனின் ஜடாமுடி, பிறைச்சந்திரன், சர்ப்பம்’’, என்று சொல்லிக் கொண்டே போனர். செல்வந்தரும், மற்றவர்களும் ஆச்சரியப்பட்டனர். எதுவும் புரியாமல் தவித்தனர்.‘‘பொற்கொல்லரே! தவறு ஏதும் நாங்கள் செய்யவில்லை. நீங்கள் தொட்டுப் பார்ப்பது பண்டரீநாதனே’’ என்றனர்.

நம்பவில்லை நரஹரி. மீண்டும் தான் சொல்லியதையே பகவானைத் தொட்டுத் தொட்டு சொன்னான். நரஹரி தொட்ட இடமெல்லாம் சிவனாகவே இருந்தது. ‘‘என் கண் கட்டை அவிழ்த்து விடுங்கள். நான் இந்த பகவானைப் பார்க்கிறேன். இது சிவனா? இல்லை ஹரியா?’’ என்று ஓங்கிக் கத்தினான். கட்டு அவிழ்க்கப்பட்டது. அவன் உறுத்துப் பார்த்தான் அவன் கண்களுக்குப் பண்டரீநாதன் தெரிந்தான்.

‘‘சிவ…சிவ’’ என்று கண்களை மூடிக்கொண்டான். மூடிய கண்களுக்குள் சிவபெருமான் தெரிந்தான். மீண்டும் கண்ணைத் திறந்தான். எதிரே பண்டரீநாதனே தெரிநாதன். மீண்டும் மீண்டும் இப்படியே கண்ணைத் திறந்தும், மூடியும் செய்து பார்த்தான். ஒவ்வொரு முறையும் மூடிய கண்களுக்கு சிவனும், திறந்த கண்களுக்குப் பண்டரீநாதனும் தெரிந்தான். தவித்தான் நரஹரி, தடுமாறினான். திக்குமுக்காடிப் போனான்.

கண்ணனின் குழலோசை அவனுக்குக் காதில் கேட்டது. சற்று நேரத்திற்கெல்லாம் ருத்ராட்ச மாலையும், கபாலை மாலையும் அவன் கண்களுக்குள் வந்து போனது.

மீண்டும் மீண்டும் இப்படியே நடக்க, அவன் மயங்கிப் போனான். அப்போது அவன் காதுகளில் ஏதோ ஒலித்தது. ‘‘பக்தனே… இறைவனாகிய எங்களுக்குள் சிவனென்றும்

ஹரியென்றும் பேதமில்லை நாங்கள் இருவரும் ஒருவரே! ஒன்றுக்குள் ஒன்றாக இருக்கிறோம்… நீங்கள் தான் எங்களை இரண்டாகப் பிரிக்கிறீர்கள்’’ என்றது. கண் திறந்து பார்த்த நரஹரி, தன்னையும் அறியாது செய்த பிழைக்குப் பகவானின் காலில் விழுந்தான். எழுந்து அந்தத் தங்கக் கவசத்தை ஹரிக்கு சார்த்தினான்.

அந்தத் தங்கக் கவசம் இப்போது பகவானுக்கு சரியாக இருந்தது. சிவன் வேறு; ஹரி வேறு அல்ல. இரண்டும் ஒன்று தான். பரமேஸ்வரனும் பண்டரீநாதனும் சர்வ வியாபகமாக உள்ளார் என்ற ஞானத்தை அறிந்த நரஹிரியின் கண்களில்; நீர் மல்க, அவன் சிலையாக அமர்ந்தான்.

ராமசுப்பு

Related Stories: