தைப்பூசம் காணாதே போதியோ!

திருமயிலை எனப் பெறும் மயிலாப்பூர் திருக்கோயில் முன்பு சிவநேசரின் திருமகள் பூம்பாவையை எண்புக்குடத்திலிருந்து எழுப்ப வேண்டி திருஞானசம்பந்தப் பெருமானார் திருப்பதிகம் ஒன்றினை பாடி அப்பாவையை உயிரோடு எழச் செய்தார். அப்போது பாடிய அந்த பதிகத்தில் மாந்தோறும் நிகழும் முக்கிய விழாக்கள் யாவை என்பதைப் பட்டியலிட்டுள்ளார்.

புரட்டாசியில் நிகழும் மாகேஸ்வர பூஜை, ஐப்பசி மாத ஓணம் விழா, கார்த்திகை மாதத்து விளக்கிடு, தை மாதத்து பூசம், மாசி மாதத்து மகநாள் கடலாட்டு, பங்குனி உத்திரம், சித்திரை மாதத்து அட்டமி, வைகாசி வசந்த உற்சவத்து பொன்தரப்பு, ஆனிமாதத்து சம்வத்சரபிஷேகம் எனப்பெறும் பெருஞ்சாந்தி என் பல ஞானசம்பந்தப் பெருமானார் கூறும் திருவிழாக்

களாகும். அவர் பாடிய பதிகத்தின் ஐந்தாம் பாடலில்,

‘மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்

தைப்பூசும் நீற்றான் கபாலீச்சுரம் அமர்ந்தான்

நெய்ப் பூசும் ஒண் புழக்கல்

நேரிழையார் கொண்டாடும்

தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்’

எனக் கூறி தைப்பூச விழாவின் சிறப்பினை எடுத்து வைத்துள்ளார். இப்பாடலில், கண்களில் மை தீட்டிய அழகான பெண்கள் திருநீறு பூசிய பெருமான் அமர்ந்து

கபாலிச்சரம் எனும் திருக்கோயில் உள்ள மயிலாப்பூரில், நெய் மிகுதியாக பெய்த பொங்கலினை செய்து தை பூச விழா

வினைக் கொண்டாடினர் என்ற செய்தி

யினைப் பதிவு செய்துள்ளார். எனவே, கி.பி.

6-7 ஆம் நூற்றாண்டுகளில் தைப்பூச நாளில் பொங்கலிட்டு ஈசனை

வழி பெருவிழாவாகத்தான் பூச நாள் திகழ்ந்துள்ளது.

தற்காலத்தில், நாம் தை முதல் நாளினை பொங்கலிடும் பொங்கல் விழாவாகக் கொண்டாடுகிறோம். பண்டு திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்றோர் வாழ்ந்த காலத்தில் தை முதல் நாளிலே பொங்கலிடும் வழக்கம் இல்லை. மாறாக அந்த புனித நீர்த்துறைகளில் நீராடுவது தான் மரபு. அதனை, தை நீராடல் எனக் குறிப்பர். பல கல்வெட்டுச் சாசனங்களில் தை முதல் நாளில் நூற்று எட்டு கலசங்களில் புனித நீரினைக் கொணர்ந்து ஈசனுக்கு நீராட்டுவதை சிறப்பு விழாவாகக் குறிப்பிடுகின்றன.

அந்த நாளினை மகர சங்கராந்தி எனவும் கூறுவார். அந்நாளில், அறுவடையைத் தொடங்கும் திருநாளாகவே பண்டு திகழ்ந்திருந்துள்ளது. இலங்கை நாட்டில், கி.பி.

13-14ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் ஒரு மன்னவனால் “சரசோதிமாலை” என்ற நூல் எழுதப்பெற்றுள்ள அந்த நூலில், தை முதல் நாளில் அறுவடையைத் தொடங்கி, அவ்வாறு அறுவடை செய்யப் பெற்ற புது நெல்லின் அரிசியை தைப்பூச நாளில் நெய் பெய்த பொங்கலாகக் கடவுளுக்கு படையல் இடுவதைக் குறிக்கின்றது. எனவே பண்டு தமிழகத்திலும் ஈழத்திலும் தைப்பூச நாளே பொங்கல் திருநாளாகக் கொண்டாடப் பெற்றுள்ளது என்பது உறுதியாகத் தெரிகின்றது.

திருஞானசம்பந்தர் திருமயிலைப் பதிகத்தில் கூறும்போது, பொங்கலிடும் நிகழ்வை “மைப் பூசு ஒண் கண் மடநல்லார்” என பெண்களைக் குறிப்பிட்டு “நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம்” என அவர்களே அவ்விழாவினைக் கொண்டாடின எனக் குறிப்பிட்டுள்ளார்.பெண்கள் தைமாதத்தில், தங்களுக்கு நல்ல கணவன் வாய்க்க வேண்டும் என்பதற்காக நோன்பு மேற்கொள்வர் என்ற செய்தியினை நற்றிளை, கலித்தொகை, ஐங்குறுநூறு போன்ற பல நூல்கள் எடுத்துரைக்கின்றன. பரிபாடலும் தை நீராடும் பெண்கள் பற்றி பேசுகின்றது. எனவே தைமாதம் என்பது பெண்கள் நோன்பு இருப்பதும், புனித நீராடலும் செய்யும் மாதமாகவே ஈராயிரம் ஆண்டுகளாக இருந்துள்ளது.

“வான் பெயல் நனைந்த புறத்த நோன்பியர்தையூண் இருக்கையில் தோன்றும் நாடன்”என்ற நற்றிணை பாடலடிகளும், “தையில் நீராடிய தவந்தலைப்படுவாளோ” என்ற கவித்தொகைப் பாடலடியும் மகளிர் நோக்கும் தைமாத நோன்பு பற்றியும் தைநிராடல் பற்றியும் தெளிவுற எடுத்துரைப் பணவாகும். மணிவாசகர் அருளிய திருவெம்பாவை பாவையரை குறித்தும் அவர்கள் ஈசனைப் போற்றும் திறம் குறித்தும் பேசும் இருபது பாடல்கள் கொண்டதாகும்.

அவரே அருளிய திரும்பள்ளி எழுச்சியில், திருபெருந்துறை பெருமானுக்கு விண்ணப்பம் செய்வதாக அமைந்த பத்துப்  பாடல்கள் கொண்டதாகும். திருவெம்பாவையின் ஈற்றடியில் “மார்கழி நீர் ஆடு ஏல் ஒர் எம்பாவாய்” எனவும் குறிப்பிட்டு மார்கழி நீராடுதலையும் சிறப்பித்துக் கூறியுள்ளார். ஆண்டாள் நாச்சியாரோ தம் திருப்பாவை எனும் முப்பது பாசுரங்கள் அடங்கி பாடல்களில் முதற் பாடலில் “மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போது மினோ நேரிழையீர்” எனக் குறிப்பிட்டுள்ளார். முதற் பாடல் பாட வேண்டிய நாள், மார்கழி மாதத்து முழு நிலவாகிய பெளர்ணமி நாளே என்பது அவர் வாக்காலேயே உறுதியாகின்றது.

மார்கழி முழு நிலவுநாளில் முதல் பாடலைப் பாடத் தொடங்கி நாளொன்றுக்கு ஒரு பாடல் என்றால் அடுத்த பெளர்ணமி நாளில் அது முடிவு பெறும். அதாவது, தைமாதத்து தை பூச நாளிலோ அல்லது அதன் முதல் நாளோ நிறைவு பெறும். பண்டைய மரபுப் படி நோக்குவோமாயின் மார்கழி முழு நிலவு தொடங்கி, தை முழு நிலவு நாள் வரை பெண்கள் நோன்பிருந்து மார்கழி நீராடலையும், தை நீராடலையும் செய்து பூச நாளில் நெய் வழியும் பொங்கலினைப் படையிட்டு வழிபாடு செய்தனர் என்பதறிகிறோம். எனவே தைப் பூசம் என்பது மகளிர் கொண்டாடிய நோன்புத் திருவிழாவின் நிறைவு நாளே என்பது உறுதியாகின்றது. திருநாவுக்கரசு சுவாமிகள், தைப்பூச நாளில் தான் திருவிடை மருதூரில், காவிரி நீராடினார் என்பதை அவரே தம்பதிகத்தில்,பாசம் ஒன்று இவராய் பல பந்தர்கள்

வாசம் நாள் மலர் கொண்டு அடி வைகலும்

ஈசன் எம்பெருமான் இடையருதினில்

பூசம் நாம் புகுதும் புனல் ஆடவே

என்று குறிப்பிட்டுள்ள மையால் பூச நாளின் பெருமைதனை நாம் உணரலாம்.

அதே திருவிடை மருதூரில் பூசநாளில்

நீராடுவதில் சிறப்பினை திருஞானசம்பந்தர்,

வருந்திய மாதவத்தோர் வானோர் ஏணேர் வந்து ஈண்டிப்

பொருந்திய தைப்பூசம் ஆடி உலகம் பொலிவு எய்தப்

திருந்திய நால் மறையோர் சீரால் ரத்த இடைமருதில்

பொருந்திய கோயிலே கோயிலாகப் புக்கீரே,

என்று பாடி தைபூச நாளில் காவிரி நீராடுவதின் சிறப்பினை எடுத்துரைத்துள்ளார். அதனால், தான் திருவிடை மருதூர் காவிரிப் படித்துறை மண்டபத்திற்கு “பூச படித்துறை மண்டபம்” எனப் பெயர் வழக்கு இன்றும் உள்ளது. திருவாரூர் திருக்கோயிலின் கிழக்குக் கோபுர சன்னதியில் திருநீலகண்ட ஈஸ்வரம் என்ற தேர் கோயில் உள்ளது. திருநீலகண்ட குயவர் பூசித்த கோயில் என்பது அதன் தலவரலாறு. அக்கோயிலுக்குரிய செப்பேடு சாசனம் ஒன்று திருவாரூர் தியாகேசன் கோயிலில் உள்ளது.

அதில் தில்லையில் பூச நாளில் பதஞ்சலி, வியாக்ர பாதர், இரணியவர்மன், திருநீலகண்ட குயவனார் ஆகியோர்க்கு சபாபதி தன் தூக்கிய இடது பாத தரிசனம் கொடுத்தார் என்ற செய்தி கூறப்பெற்றுள்ளது. சோழர் கால கல்வெட்டு சாசனங்கள் பலவற்றுள் தைபூச நாளில் சிவனார்க்கு செய்த சிறப்பு வழிபாடுகள் பற்றிய பல குறிப்புகள் காணப்பெறுகின்றன.

ஈராயிரம் ஆண்டுகளாகத் தமிழ் நாட்டுப் பெண்களும், அடியார்களும் தை மாத நோன்பிருந்து, தை நீராடல் செய்து பூச நாளில் நெய் யொழுகும் பொங்கல் செய்து வழிபாடு செய்தனர் என்பதறிகிறோம். பண்டைய நாளின் தைப் பொங்கல் நாள் என்பது தைப்பூச நாளே என்பது இயக்கிய கல்வெட்டுச் சான்றுகளால் உறுதியாகின்றது. அப்புனித நாளில் பூசநாள் விழா காணாமல் நாம் வேறு எங்கும் செல்லலாமா?!

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

Related Stories: