இந்த வாரப் பண்டிகைகளை கொண்டாடுவோம்

20. 10. 2021 புதன்கிழமை

அன்னாபிஷேகம்

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். இன்று புதன்கிழமை மட்டுமல்ல. புதனுக்குரிய ரேவதி நட்சத்திர நாள். பௌர்ணமி கூட.  ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் தான் நினைவுக்கு வரும் இந்த அபிஷேகத்தை சேவித்தால் நாட்டிலும் சரி வீட்டிலும் சரி சாப்பாட்டுக்கு பஞ்சம் வராது என்பார்கள்.ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமி தினம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.சந்திரன், பூமிக்கு மிக அருகில், முழு ஒளியையும் பூமியில் வீசச் செய்யும் தினம்.  அந்த ஒளியாற்றலை நாம் பரிபூரணமாகப் பெறுவதற்காகவே ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

அன்று அனைத்து சிவாலயங்களிலும்  ‘அன்னாபிஷேகம்’ நடை பெறும். லிங்கத்திருமேனியாக இருக்கும் சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்படும். மாலையில் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, இறைவனின் திருமேனியை மூடும் அளவுக்கு அன்னத்தை சாத்துவார்கள். பிறகு இறைவனுக்கு தீபாராதனை செய்யப்படும். இறைவனின் திருமேனியில் உள்ள அன்ன அலங்காரத்தைக் களைந்து, அதில் சிறிதளவு அன்னத்தை எடுத்து லிங்கம்போல் செய்து பூஜிப்பார்கள். அதை எடுத்துக் கொண்டுபோய், ஊரில் உள்ள குளம், ஏரி, நதி போன்ற நீர்நிலைகளில் விடுவார்கள். இதனால் ஊரில் விளைச்சல் அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தானங்களில் சிறந்த தானமாக அன்னதானம். வேறு தானத்தில் திருப்தி இருக்காது. அன்னதானத்தில் திருப்தி இருக்கும்.‘‘போதும், போதும்” என்று சொல்ல வைக்கும். உலகில் தோன்றிய ஒவ்வொரு உயிர்களுக்கும் உணவு என்பது கிடைத்தாக வேண்டும். அப்படிப்பட்ட அன்னத்தை தனக்கானதாக மட்டுமே வைத்திருப்பவர்கள் எவராக இருந்தாலும், அவர்களால் இறையருளை பெற முடியாது என்பது  உண்மை. இந்த உண்மையை உணர்த்தவே  கோயில்களில் அன்னாபிஷேகம் நடத்தப் படுகிறது. இறைவன் திருமேனியில் வைக்கப்பட்ட அன்னம், பக்தர்களுக்கும், நீர்நிலை களில் உள்ள ஜீவராசிகளுக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.        அன்னாபிஷேகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு, அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்கு குறைவிருக்காது என்று கூறப்படுகிறது. பலருக்கு செல்வம் கோடி கோடியாக இருந்தாலும் ஒரு வாய்உணவு உண்ண முடியாத நிலை இருக்கும்.இதை  ‘அன்ன த்வேஷம்’ என்பார்கள்.இந்த தோஷம் தீர சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, ஏழைகளுக்கு தானம் செய்து வந்தால், அன்ன த்வேஷம் விலகும்.

அன்று மாலை விளக்கு வைத்து கொஞ்சம் அன்னம் படைத்து இந்த தேவாரம் படியுங்கள்.அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற்றம்பலம்பொன்னம் பாலிக்குமேலுமிப் பூமிசைஎன்னம் பாலிக்கு மாறுகண் டின்புறஇன்னம் பாலிக்குமோவிப் பிறவியே. அன்னம் என்பது அன்னத்தை மட்டுமல்ல  வீட்டின்பத்தையும் குறிக்கிறது.  “பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்” என்னும் திருவாசகத்தில் சோறு என்பது பேரின்பம் என்னும் பொருளில் வரும் .கடவுளை அன்னம் (அமுதம்) என்னும் சொல்லால் குறித்தலுமுண்டு . தில்லையில் இன்றும் (அன்னப் பாவாடம்) நிவேதனம் உண்டு.

22. 10. 2021 வெள்ளிக்கிழமை

அசூன்ய சயன விரதம்

இன்று சுக்கிரனுக்குரிய பரணி நட்சத்திர வெள்ளிக்கிழமை. அசூன்ய சயன விரத பூஜை செய்ய ஏற்ற நாள். இதன் மூலம் மனதில் இருக்கக்கூடிய சூனியங்கள் அதாவது என்ன செய்வது என்று தெரியாத குழப்பமான  நிலை நீங்கும். மனதில் தெளிவு பிறக்கும். அசூன்ய சயன விரத நாளில் விடியற்காலை எழுந்து வழக்கமாக பூஜைக்கு எப்படி தயாராவது போலவே தயாராகவேண்டும் . அவசியம் அன்று திருமால் ஆலய தரிசனம் செய்ய வேண்டும். குறிப்பாக பள்ளிகொண்ட பெருமாள் சேவை தரும் ஆலய தரிசனம் சாலச் சிறந்தது. மாலை பூஜையறையில் விளக்கேற்றி கிருஷ்ணர் - ராதை அல்லது மஹாவிஷ்ணு மஹாலஷ்மி இணைந்த  விக்ரகம் அல்லது படத்தை ஒரு பலகையில் கோலமிட்டு வைத்து ஆவாகனம் செய்ய வேண்டும். அதனைப் பூக்களால்

அலங்கரிக்க வேண்டும்.

இப்பூஜையை தனியாகச் செய்வதை விட, தம்பதிகளாக அமர்ந்து செய்வது உத்தமம். ரங்கநாத அஷ்டகம், கிருஷ்ணாஷ்டகம் மற்றும் பெருமாளுக்குரிய தோத்திரப் பாடல்களைப் பாடி அர்ச்சனை செய்ய வேண்டும். ஏலக்காய், குங்கும பூ போட்டு காய்ச்சிய வாசனையுள்ள பசும்பால் நிவேதனம் செய்ய வேண்டும். புதிதாக வாங்கப்பட்ட பஞ்சுமெத்தை அல்லது பாய், தலையணை, போர்வையுடன் கூடிய படுக்கையில்

கிருஷ்ணரையும் மகாலட்சுமியையும் சயனிக்க வைக்க வேண்டும்.அப்போது தாலாட்டுப்  பாட வேண்டும்.

“மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி

ஆணிப்பொன்னால் செய்த வண்ணச்சிறுதொட்டில்

பேணியுனக்குப் பிரமன் விடுதந்தான்

மாணிக்குறளனே தாலேலோ!

வையம் அளந்தானே தாலேலோ!”

பிறகு, ‘லக்ஷ்ம்யா வியுஜ்யதே தேவந கதாசித்யதோ பவான் ததா களத்ர ஸம்பந்தோ தேவமா மே வியுஜ்யதாம்’

(ஸ்ம்ருதி கெளஸ்துபம்-147)

(ஹே க்ருஷ்ண! எவ்வாறு மகாலட்சுமியுடன் எப்போதும் இணை பிரியாது இருக்கிறீர்களோ, அப்படி நாங்களும் இணைபிரியாமல் ஒன்று

சேர்ந்தே இருக்க அருள்புரிய வேண்டும்) என்னும் ஸ்லோகம் சொல்லி பிரார்த்தித்துக் கொள்ளவேண்டும். பிறகு

“உறகல் உறகல் உறகல் ஒண்சுடராழியே! சங்கே!

அறவெறி நாந்தகவாளே! அழகியசார்ங்கமே! தண்டே!

இறவுபடாமல் இருந்த எண்மர்

உலோகபாலீர்காள்!

பறவைஅரையா!  உறகல் பள்ளியறைக்குறிக் கொண்மின்”

என்று பாடி, பள்ளி அறையைச்  சாத்திவிட்டு இரவு பகவான் சிந்தனையோடு படுத்து உறங்க வேண்டும். மறுநாள் காலை எழுந்து, முறையாகப்  புனர் பூஜை செய்து, கிருஷ்ணர், மஹாலக்ஷ்மி விக்கிரஹம்படம், தட்சிணை, வெற்றி லை பாக்கு பழம் புஷ்பம் வைத்து தானம் செய்து விட வேண்டும்.தானம் செய்யும்போது, “கிருஷ்ண ப்ரீத்யர்த்தம் இமாம் சய்யாம் இமம் உபபர்ஹணம், அனுஷ்டித அசூன்ய சயன விரதாங்கம் ஸம்ப்ரததே நமஹ; நமம” என்று சொல்லி தானம் செய்து விட வேண்டும்.அசூன்ய சயன விரதத்தை நிறைவு செய்வதற்கு உரியத் தலங்கள், கரூரில் அபய ரெங்கநாதர் ஆலயம், திருத்தங்கல் ரெங்கநாத மூர்த்தி திருக்கோயில், திருச்சி மண்ணச்சநல்லுர் அருகே உள்ள அழகிய மணவாளம் ஊரின் அருகே உள்ள பழமையான ரெங்கநாதர் கோயில் போன்றவையாம்.

இந்த விரதத்தை எல்லோரும் கடைப் பிடிக்கலாம். நன்றாக தூக்கம் வருபவர்களும் கூட.அவர்களுக்கு நற்சிந்தனையும், நல்வாழ்க்கையும் அமையும். கிருஷ்ண பக்தி பெருகும்.

Related Stories: