கடக ராசிப் பணியாளர் - செய்யும் தொழிலே தெய்வம்

என்னோட  ராசி    நல்ல    ராசி

கடக ராசிப் பணியாளர் பண்புகள் என்று இங்கு விளக்கப்படுவது ஆடி மாதத்தில் பிறந்தவர், ஜூன் 21 முதல் ஜூலை 22க்குள் பிறந்தவர், சந்திரனின் நட்சத்திரத்தில் பிறந்தவர், கடக லக்கினத்தில் பிறந்தவர் போன்றவர்களுக்குப் பொருந்தி வரும்.  

பணியகம் ஒரு குடும்பம்

கடக ராசி நீர் ராசி என்பதால் இயற்கையிலேயே இவர்களுக்கு ஈர நெஞ்சம் இருக்கும். இரக்க குணம் இருக்கும். நேர்மை, நியாயம். பண்பாடு பாரம்பரியம் என்ற பண்புகளில் தீவிர நம்பிக்கை உடையவர். வேலை செய்யும் இடத்தைக் கோயிலாக மதிப்பார்கள். அங்கு தப்பு, தவறு நடக்கக் கூடாது’ என்பதில் கவனமாக இருப்பார்.  தன்னுடன் பணியாற்றும் சக பணியாளர்களை தனது குடும்ப உறுப்பினர்போல நடத்துவார். அவர்களின் இன்ப துன்பங்களைக் கேட்டு அதற்குரிய ஆலோசனைகளையும் சொல்லி தன்னாலான உதவிகளையும் செய்வார்.

விசுவாசம் மிகுந்தவர்

கடக ராசிப் பணியாளர் முதலாளிக்கு மிகவும் விசுவாசமாக இருப்பார். அவரைப் படியளக்கும் பெருமாளாகப் போற்றுவார். மனதுக்குள் மிகுந்த மரியாதையும் அன்பும் கொண்டிருப்பார். தான் பார்க்கும் வேலைக்குத் தானே சம்பளம் தருகிறார் சும்மாவா தன் சொத்தில் இருந்து அள்ளிக் கொடுக்கிறார் என்று கருத மாட்டார். இவ்வாறு பேசும் நபர்களை துரோகியாகக் கருதுவார். முதலாளியிடம் சொல்லிக் கொடுப்பார். ‘இவர் உங்களுக்கு துரோகம் செய்கிறார். வேலையை தமது கடமையாக செய்யாமல் ஏனோ தானோவென்று செய்கிறார்’ என்று முதலாளியிடம் சொல்லிக் கொடுப்பார். அவருக்கு மனம் பொறுக்கவே பொறுக்காது.  

சம்பளம்  கொடுக்கும் முதலாளியையும் வேலை பார்க்கும் நிறுவனத்தையும் யாராவது பழித்துப் பேசினால் இவரால் பொறுத்துக் கொள்ள இயலாது. செய்யும் தொழிலே தெய்வம் என்று கருதும் கடக ராசிப் பணியாளர்  தனது வேலைத் திறமைக்கேற்ற சம்பளம் தர வேண்டும் என்று எதிர்பார்ப்பார். அதில் கொஞ்சமும் குறைத்துக் கொடுத்தால் வாங்க மாட்டார். நேரம் காலம் பார்க்காமல் வேலை பார்ப்பார். ஓவர் டைம் சம்பளம் எதிர்பார்க்க மாட்டார். ஒரே நிறுவனத்தில் அதிக காலம் வேலை பார்த்து தனது தொழில் திறமைகளை வளர்த்துக் கொள்வார்.  தகுதியை உயர்த்துவார். சம்பளத்தைக்  கூடுதலாகக் கேட்டுப் பெறுவார். முதலாளியின் நிறுவனம் என்று பார்க்காமல் தனது சொந்த நிறுவனம்போல உழைப்பார்.

பொறுப்புணர்ச்சியும் தலைமையிடமும்

கடக ராசிப் பணியாளர் தந்து நிர்வாகத்தில் முழுப் பொறுப்பையும்  ஏற்று தனது சொந்த நிறுவனத்தைப் போல நடத்துவார். கீழ்நிலைப் பணியாளராக வேலைக்குச் சேர்ந்தாலும் விரைவில் தலைமைப் பொறுப்புக்கு வந்துவிடுவார். இவர் தலைமை ஏற்கப் பிறந்தவர். பிறர் இவரை வேலையில் ஏதாவது குறை கூறி விட்டால் மனமுடைந்து அழுதுவிடுவார். மிகவும் வருத்தப்படுவார். வேலையை விட்டு விடுவதுமுண்டு. சுடு சொல் தாங்க மாட்டார். மிகவும் உணர்ச்சி வசப்படுவார்.

யாராவது தேரிந்தே தவறு செய்து முதலாளிக்கு நட்டம் ஏற்பட்டால் அவரை கடுமையாகத் திட்டி தண்டிப்பார். இவருக்கு பொறுப்புணர்ச்சியும் நேர்மையும் இரு கண்கள். எல்லோரையும் சரியாக வேலை செய்யும்படி வழிநடத்துவார். அவர்களுக்கு வேண்டிய சம்பளம் மற்றும் சலுகைகளை முதலாளியிடம் கேட்டு பெற்றுத் தருவார். கடவுளுக்குப் பயந்து வேலை செய்பவர் என்பதால் முதலாளிக்குப் பயப்பட மாட்டார். அவரையும் தனது குடும்ப உறுப்பினர்போல அன்புடன் மரியாதையுடன் நடத்துவார்.

நிதானமும் நேர்த்தியும்

கடக ராசிக்காரர் எந்த வேலையையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்ய மாட்டார். நன்றாக ஸ்டடி செய்து நிதானமாக பிளான் செய்து வேலையைத் தொடங்குவார். வேலை செய்வதில் மகர ராசிக்காரரைப் போல கௌரவம் பார்க்க மாட்டார், மேஷ ராசிக்காரர் போல ஆணவம் கொள்ள மாட்டார். எந்த வேலையாக இருந்தாலும் இறங்கிச் செய்வார். சுத்தமாகச் செய்வார். உருப்படியாக செய்வார். நேர்த்தியாகச் செய்வார். பதறாத காரியம் சிதறாது என்ற பழமொழி இவருக்கு தலைப்பாடம்.  நிதானமாக செய்து வெற்றிகரமாக முடித்துவிடுவார்.

பணப் பாதுகாப்பு

கடக ராசிக்காரர் தனது வருமானத்தைச் சேமிப்பதில் கெட்டிக்காரர். மற்ற பணியாளர்களுக்கும் பி எஃப் லோன் போடுவது, வட்டி எந்த வங்கியில் அதிகம், எந்த திட்டத்தில் குறைவு, எதில் பணத்தைச் சேமிக்கலாம், எங்கு தங்கம் வாங்கி முதலீடு செய்யலாம் போன்ற விவரங்களைச் சொல்லித் தருவார். சேமிப்புத் திட்டங்கள் இவருக்கு அத்துபடி. சீட்டுப் பிடிப்பது, சீட்டு சேர்வது என்று மாத சேமிப்புத் திட்டங்களும் இவருக்கு கை வந்த கலை ஆகும். இவரை கணவனாக மனைவியாகப் பெற்றவர்களும் பணியாளராகப் பெற்ற முதலாளியும் புண்ணியம் செய்தோர் எனலாம். அவர்கள் இவரை நம்பி எத்தனை லட்சமும் கோடியும் கொடுக்கலாம்.

சரியாக செலவு செய்து மிச்சம் காட்டுவார். முதலாளியையும் அனாவசிய செலவு செய்ய விட மாட்டார். சிறிது  தொலைவு  பயணித்தால் ஒரு பொருள் குறைந்த விலைக்குக் கிடைக்கும் என்றால் தான்போய் வாங்கி வருவதாகச் சொல்லி வண்டியில் போய் கம்பெனிக்காக வாங்கி வருவார். வேலை பார்க்க அலுக்க மாட்டார். சோம்பி உட்கார மாட்டார். இவருக்கு மனக் கஷ்டம் இருந்தால் ஒழிய இவரைச் சோம்பேறியாக வேலை செய்யாமல் ஏமாற்றுபவராக பார்க்க முடியாது. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்.  

நிறுவனமும் குடும்பமும்

கடக ராசிக்காரர் தான் பணியாற்றும் நிறுவனத்தில் ஆண்டு விழா, நிறுவனர் விழா, ஆயுத பூஜை என எது நடந்தாலும் குடும்பத்தோடு வந்து கலந்து கொள்வார். குறிப்பாக தன் வயதான தாயாரை அழைத்து வருவார். அம்மா இல்லாமல் இவரை எங்கும் பார்க்க இயலாது. அம்மாவைப்  போன்ற வயதான பெண்களிடம் மிகவும் மரியாதையாக பாசமாக இருப்பார். அவர்களையும் தனது சொந்த அம்மாவைப் போல நடத்துவார்.

குடும்பம் அவருக்குக் கோயில் போன்றது அதுபோலத்தான் தான் பணியாற்றும் நிறுவனத்தையும் மதிப்பார்.  பெரும்பாலும் கடக ராசிக்காரர்கள் தங்களின் குடும்பத் தொழிலைச் செய்வதை விரும்புவர். அல்லது சொந்தக்காரர்களின் நிறுவனத்தில் வேலை செய்வர். அல்லது தனது ஊர்க்காரர் உறவினர் நடத்தும் நிறுவனங்களில் வேலை செய்வதால் அவருக்கு பணி புரியும் இடமும்  வீடும் ஒன்றுதான். அங்கும் உறவினர்கள் இங்கும் உறவினர்கள்.

ஏற்ற பணிகள்

 

கடக ராசிக்காரர் மியுசியம் கண்காட்சி, வரலாற்றுச் சிறப்பு மிக்க தலங்களில் வழிகாட்டி. சுற்றுலாத் துறை அதிகாரி, உலா அலங்கார நிபுணர், கைவினை தொழில், படம்இயக்குனர், ஒளிப்பதிவாளர், வசன கர்த்தா, பாடலாசிரியர், சவுன்ட் இன்ஜினியர், விரிவுரையாளர், பள்ளி  ஆசிரியர், மத போதகர், சமயப் பிரச்சாரம் செய்பவர்.  பிரசங்கம்  செய்பவர், நேர்மையான அரசியல்வாதி, மூத்த ஆலோசகர், மேலாளர், கண்காணிப்பாளர், வங்கிப்பணியாளர், குழந்தைக் காப்பகம், முதியோர் இல்லம், அனாதைகள் இல்லம் போன்றவற்றின் பொறுப்பாளர், சீட்டுக் கம்பெனி நடத்துவோர், பள்ளித் தாளாளர், தலைமை ஆசிரியர், விடுதி பொறுப்பாளர் போன்ற பணிகளைத் திறம்படச் செய்வர். இத்தகைய பணிகளைத் தான் இவர்கள் விரும்பி ஏற்றுக்கொள்வர்.  

(தொடரும்)

Related Stories: