தட்சிணாயனப் புண்ணிய காலம்

நல்ல காலத்தில் இரு வகை உண்டு - ஒன்று சுபகாலம், மற்றொன்று புண்ணிய காலம். ஒரு நல்ல காரியம் செய்வதற்காக, நாம் பஞ்சாங்கம் பார்த்து, நாள், நட்சத்திரம், திதி, நேரம் உள்ளிட்டவற்றைத் தேர்ந்தெடுத்தால், அதற்கு சுப காலம் என்று பெயர். திருமணம் மற்றும் சுப காரியப் பத்திரிகைகளில் ‘சுபயோக சுப தினத்தில்’ என்ற வாக்கியம் இடம் பெறுவதைக் காணலாம். ஏனெனில் சுபகாலம் என்பது நாம் பார்த்துத் தேர்ந்தெடுப்பது.

நாமாகத் தேர்வு செய்யாமல், சில கிரக அமைப்புகளின் அடிப்படையில் இயற்கையாக வரும் நல்ல காலத்துக்குப் புண்ணிய காலம் என்று பெயர். சந்திர கிரகணம், சூரிய கிரகணம் போன்ற நிகழ்வுகள் நாம் தேர்ந்தெடுத்து வருவதில்லை. கிரக அமைப்புகளால் இயற்கையாக நேருகின்றன. எனவே தான் கிரகணப் புண்ணிய காலம் என்று அப்பொழுதுகள் அழைக்கப்படுகின்றன.

அவ்வாறே, சூரியனுடைய நகர்வின் அடிப்படையில் (சூரியனைச் சுற்றிய பூமியின் சுழற்சியின் அடிப்படையில்) இயற்கையாக அமையும் புண்ணிய காலங்கள் உத்தராயண புண்ணிய காலமும் தட்சிணாயன புண்ணிய காலமும் ஆகும்.

உத்தரம் என்றால் வடக்கு என்று பொருள். அயனம் என்றால் பயணம். சூரியன் வடக்குத் திசையை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கும் நாள் (தை மாதம் முதல் நாள்) உத்தராயண புண்ணிய காலத்தின் தொடக்க நாள் ஆகும். தை முதல் நாள் அன்று தொடங்கும் உத்தராயணம் தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய ஆறு மாதங்கள் நீடிக்கிறது. அதாவது, இந்த ஆறு மாதக் காலத்துக்குச் சூரியன் வடக்கு நோக்கிப் பயணிக்கிறார்.

வட திசை நோக்கிய பயணத்தை நிறைவு செய்து விட்டு, ஆடி மாதம் முதல் நாள் சூரியன் தென்திசை நோக்கிய பயணத்தைத் தொடங்குகிறார். தட்சிணம் என்றால் தெற்கு, அயனம் என்றால் பயணம். ஆடிமாதம் முதல் நாள் தெற்கு நோக்கிப் பயணிக்கத் தொடங்கும் சூரியன், ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய ஆறு மாதங்களுக்குத் தென்திசையில்

பயணிக்கிறார். எனவே இது தட்சிணாயன காலமாகும்.

உத்தராயணம், தட்சிணாயனம் ஆகிய இரண்டு காலங்கள் கூடிய ஓர் ஆண்டு தேவர்களுக்கு ஒரு வருடமாகக் கருதப் படுகிறது. அவற்றுள் உத்தராயணம் என்பது தேவர்களின் பகல் பொழுதாகவும், தட்சிணாயனம் என்பது தேவர்களின் இரவுப் பொழுதாகவும் கூறப்படுகிறது.இதற்கு அறிவியல் ரீதியாகவும் ஓர் அடிப்படை சொல்லப்படுகிறது. தேவலோகம் என்பது பூமியின் வடதுருவத்துக்கு மேல் உள்ள மேரு மலை என்னும் பகுதியில் இருப்பதாக சாத்திரங்கள் கூறுகின்றன. உத்தராயண காலமாகிய ஆறு மாதங்களுக்குப் பூமியின் வடதுருவம் சூரியனை நோக்கி இருப்பதால், அந்த துருவப் பகுதியில் அந்த ஆறு மாதக் காலமும் பகலாக இருக்கும். (பூமி சுழலும் போது கூட அந்த ஆறு மாதங்களுக்கு வட துருவப் பகுதி

சூரியனைப் பார்த்தபடியே தான் இருக்கும்.)

தட்சிணாயன காலமாகிய ஆறு மாதங்களுக்குப் பூமியின் தென் துருவம் சூரியனை நோக்கி இருக்கும். அச்சமயம் வட துருவப் பகுதிக்கு இரவாக இருக்கும். இந்த அறிவியல் துணுக்கின் அடிப்படையில் பார்த்தால், வடதுருவத்தின் மேலிருக்கும் தேவ லோகத்துக்கு உத்தராயணப் பொழுது பகலாகவும், தட்சிணயானப் பொழுது இரவாகவும் இருப்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.மாதப் பிறப்பாகவும், தட்சிணாயனக் காலத்தின் தொடக்க நாளாகவும் ஆடி முதல் நாள் இருப்பதை ஒட்டி அந்நாளில் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வார்கள்.

உத்தராயண காலத்தில் பகல் பொழுது நீளமாகவும், இரவுப் பொழுது சற்றே குறைவாகவும் இருக்கும். வெப்பமான காலமாக உத்தராயணம் கருதப்படுவதால்,

தை முதல் நாள் பொங்கல் வைத்துச் சூரியனை வழிபட்டு உத்தராயணத்தைத் தொடங்குகிறோம்.தட்சிணாயன காலத்தில் பகலை விட இரவுப் பொழுது கொஞ்சம் அதிகமாக இருக்கும். குளிர்ச்சியான காலமாகவும் தட்சிணாயனம் கருதப்படுகிறது.

எனவே அதன் தொடக்க நாளான ஆடி மாதம் முதல் நாளன்று வீடுகளில் தேங்காய்ப்பால் செய்து இறைவனுக்கு நிவேதனம் செய்வது வழக்கம். ஆடி மாதம் முதல் நாளில் புதுமணத் தம்பதியரை மாமனார் இல்லத்துக்கு அழைத்து, அவர்களுக்கு வெள்ளிப் பாத்திரத்தில் தேங்காய்ப்பால் வழங்கும் வழக்கமும் உண்டு.பொதுவாக, காலைப் பொழுதை விட மாலைப் பொழுது விழாக் கொண்டாட்டங்களுக்கு ஏற்றதாக இருக்கும். அவ்வாறே, தேவர்களின் மாலைப் பொழுது தட்சிணாயன காலத்தில் வருவதால், பெரும்பாலான பண்டிகைகள் தட்சிணாயன காலத்தில் இருப்பதைக் காணலாம்.

ஆடி மாதத்திலே ஆடிப் பூரம், ஆடிப் பெருக்கு, ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய், வரலட்சுமி விரதம் ஆகியவை எல்லாம் மிகவும் விசேஷமானவையாகும். குறிப்பாக அம்பிகை, மகாலட்சுமி,

ஆண்டாள் போன்ற பெண் தெய்வங்களுக்குரிய மாதமாக ஆடி மாதம் போற்றப்படுகிறது.அதைத் தொடர்ந்து ஆவணி மாதத்தில், விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜயந்தி, புரட்டாசி மாதத்தில் நவராத்திரி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி, ஐப்பசி மாதத்தில் தீபாவளி, கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபத் திருவிழா, கந்த சஷ்டி, மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் என இப்படிப் பலப்பல முக்கியமான பண்டிகைகள் யாவும் தட்சிணாயனக் காலத்துக்குள் வருவதைக் காணலாம்.

வேதம் பயிலத் தொடங்குதலாகிய உபாகர்மாவும், காயத்ரி ஜபமும் தட்சிணாயன காலத்தில் ஆவணி அவிட்டத்தை ஒட்டி அனுஷ்டிக்கப்படுகின்றன.பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வதற்கு உகந்த காலமான மகாளய பட்சமும் தட்சிணாயன காலத்தில் புரட்டாசி மாதத்தில் வருவதைக் காண்கிறோம். புரட்டாசி சனிக்கிழமைகள் திருமலையப்பனுக்கு மிகவும் உகந்த நாட்களாக இருப்பதையும் காண்கிறோம்.

தேவர்களின் இரவுப் பொழுதான தட்சிணாயனத்தின் கடைசி மாதமான மார்கழி தேவர்களின் பகலுக்கு முந்தைய காலமான பிரம்ம முகூர்த்த காலம் (பின்மாலைப் பொழுது) ஆகும். பிரம்ம முகூர்த்தம் இறைவழிபாட்டுக்கு உகந்த காலமாக இருப்பதால், மார்கழி மாதம் முழுக்க முழுக்க இறைவழிபாட்டுக்கு என்றே

அர்ப்பணிக்கப்படுகிறது.

உத்தராயண, தட்சிணாயன காலங்களுக்கு அதிபதிகளான தேவர்கள் உண்டு. அந்த தேவர்களுக்கென்று தனி உலகங்களும் இருப்பதாகச் சாத்திரங்கள் சொல்கின்றன. பகவத் கீதை எட்டாம் அத்தியாயம் இருபத்து நான்காவது ஸ்லோகத்தில்,

“அக்னிர்ஜ்யோதிர: அஹச்சுக்ல:

ஷண்மாஸா உத்தராயணம்

தத்ர ப்ரயாதா கச்சந்தி

ப்ரஹ்ம ப்ரஹ்மவிதோ ஜனா:”

என்று கண்ணன் குறிப்பிடுகிறான்.

ஒளியின் லோகம், பகல் தேவதையின் லோகம், வளர்பிறை தேவதையின் லோகம்,

உத்தராயண தேவதையின் லோகம் ஆகியவற்றைக் கடந்து செல்லும்

பிரம்ம ஞானிகள் பரப்பிரம்மத்தை அடைகிறார்கள்.

அவர்கள் மீண்டும் வந்து பூமியில்

பிறப்பதில்லை. அடுத்து இருபத்தைந்தாம் ஸ்லோகத்தில்,

“தூமோ ராத்ரி: ததா க்ருஷ்ண:

ஷண்மாஸா தக்ஷிணாயனம்

தத்ர சாந்த்ரமஸம் ஜ்யோதி:

யோகீ ப்ராப்ய நிவர்ததே”

என்கிறான் கண்ணன். அதாவது,

புண்ணியம் செய்த நல்லோர்கள்

புகையின் லோகம், இரவு தேவதையின் லோகம், தேய்பிறை தேவதையின் லோகம், தட்சிணாயன தேவதையின் லோகம் ஆகியவற்றைக் கடந்து சென்று சந்திர சம்பந்தமான ஒளியை அடைந்து, மீண்டும் பூமியில் வந்து பிறக்கிறார்கள்.இப்படி மீட்சியில்லா வைகுண்டத்தை அடைபவர் உத்தராயண தேவதையின் உலகம் வாயிலாகவும், புண்ணியம் செய்து நல்லுலகம் சென்று மீள்பவர்கள் தட்சிணாயன தேவதையின் உலகம் வாயிலாகவும் பயணிப்பதை இந்த கீதை ஸ்லோகங்கள் மூலம் அறிய முடிகிறது.

சில வைணவத் திருத்தலங்களில் பெருமாளின் கருவறைக்கு உத்தராயண வாசல், தட்சிணாயன வாசல் என இரு வாசல்கள் இருப்பது வழக்கம். உத்தராயண காலத்தில் உத்தராயண வாசலும் தட்சிணாயன காலத்தில் தட்சிணாயன வாசலும் திறந்திருக்கும்.அதில் மிகவும் பிரசித்தமான உத்தராயண தட்சிணாயன வாசல்களைக் கொண்ட திருத்தலம் திருக்குடந்தை என்னும் கும்பகோணம். கும்பகோணத்துக்கு ‘பாஸ்கர க்ஷேத்திரம்’ (சூரியன் வழிபடும் க்ஷேத்திரம்) என்று பெயர். குடந்தையில் கோவில் கொண்டுள்ள சார்ங்கபாணிப் பெருமாளையும் சக்கரபாணிப் பெருமாளையும் சூரியன் தினந்தோறும் வழிபடுகிறார்.

அவர் வந்து வழிபாடு செய்து விட்டுச் செல்வதற்கு ஏதுவாக, உத்தராயண காலத்தில் சார்ங்கபாணி, சக்கரபாணி சுவாமி திருக்கோவில்களில் கருவறைகளின் உத்தராயண வாசல் திறந்திருக்கும். சூரியன் வடக்கு நோக்கிப் பயணிக்கும் அக்காலத்தில் வடக்கு வாசலான உத்தராயண வாசல் வழியே வந்து வழிபாடு நடத்தி விட்டுச் செல்வார்.அவ்வாறே தட்சிணாயன காலத்தில் தெற்கு நோக்கிப் பயணிக்கும் சூரியன், தெற்கு வாசலான தட்சிணாயன வாசல் வழியே வந்து வழிபாடு நடத்தி விட்டுச் செல்வார்.

இன்றும் இந்த இரண்டு திருக்கோவில்களிலும் உத்தராயண புண்ணிய காலம் தொடங்கும் நாளில் உத்தராயண வாசல் திறக்கும் நிகழ்வும், தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்கும் நாளில் தட்சிணாயன வாசல் திறக்கும் நிகழ்வும் வெகு விமரிசையாக நடப்பதைக் காணலாம்.

Related Stories: