கூட்டுத் தொழில் கிரக அமைப்புகள்

ஒரு ஜாதகத்தில் தொழில், ஜீவனத்தைக் குறிப்பது பத்தாம் இடம். பாவத்திற்கு பாவம்  (bhavam) என்ற அடிப்படையில் பத்தாம் இடத்திற்கு பத்தாம்  இடமான ஏழாம் இடம் வலுவாக இருக்க வேண்டும். இங்கு ஏழாமிடம் என்கிறது லக்னத்துக்கு நேர்எதிரே உள்ளது. நேர் எதிரில் உள்ளவர், எதிரியாகவும் ஆகிவிடலாம்; நண்பராகவும் ஆகிவிடலாம் என்பது லக்னாதிபதிக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு குறித்தது.

வாடிக்கையாளர்களை குறிக்கும் ஏழாம் பாவம்

ஏழாம் இடம் என்பது முக்கியமான விஷயங்களைக் குறிக்கிறது. ஒருவருடைய வாழ்நாள் முழுக்கத் துணையாக இருக்கக்கூடிய வாழ்க்கைத் துணையையும், உயிர் காக்கக்கூடிய நண்பர்களையும் சந்திக்கக்கூடிய வாடிக்கையாளர்களையும் குறிக்கும் பாவம் இந்த ஏழாம் பாவம். இந்த ஏழாம் பாவத்தில் கர்ம பாவம் லக்னத்தின் நாலாம் பாவமாக அமையும். இது லக்னத்தின் உடைய சுக ஸ்தானம். ஒருவன் சுகம் நிம்மதி, மனைவி நன்றாக அமைவதன் மூலமாகவும் நண்பர்கள் நன்றாக அமைவதன் மூலமாகவும், கூட்டுத் தொழில் நன்றாக அமைவதன் மூலமாகவும் கிடைக்கும் என்று சொல்லலாம்.

கேந்திரங்கள் வலு

பத்தாம் இடத்தின் இரண்டாம் இடமான 11ஆம் இடம் லாப ஸ்தானம் ஆகும். இது லக்னாதிபதியின் லாபத்தைக் குறிக்கிறது. ஏழாம் இடத்தின் பூர்வ புண்ணியத்தைக் குறிக்கிறது. இந்த நான்கு இடங்களும் அதாவது லக்னம், நான்காம் இடம், ஏழாமிடம், பத்தாமிடம் கேந்திரங்கள் என்று ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்படுகின்றன. இந்த கேந்திரங்கள் வலுப்பெற்று விட்டால் அந்த ஜாதகர் யோகவானாகத்  திகழ்வார். அப்படி இல்லாமல் இவைகள் தீமை தரும் அமைப்பில் அமைந்துவிட்டால் கூட்டுத் தொழிலிலும், வாழ்க்கையிலும் பல சிக்கல்களைத்  தந்துவிடும்.

பங்குதாரர் கைதான் ஓங்கியிருக்கும்

லக்னாதிபதியும் ஏழாம் அதிபதியும் சமபலத்தோடு இருப்பது என்பது ஒருவகை. லக்னாதிபதி வலுவோடு இருப்பது என்பது ஒருவகை. ஏழாம் அதிபதி லக்னாதிபதியை விட வலுப்பெறுவது என்பது ஒரு வகை. இதில் லக்னாதிபதியை விட 7ம் அதிபதி வலுப்பெற்று விட்டால், பங்குதாரர்தான் முடிவு எடுப்பார். அவர் கைதான் ஓங்கியிருக்கும். மொத்த வியாபாரமும் அவர் கட்டுப்பாட்டில் போய்விடக்கூடும்.

கூட்டு நிலைக்குமா?

ஏழுக்கு உரியவன் பன்னிரண்டில் மறைந்தால் அந்தக் கூட்டு நிலைக்காது. ஆறாமிடத்தில் ஏழுக்குரியவன் மறைந்தால், பங்குதாரர் தன் இஷ்டத்துக்குச் செலவு செய்து, கடனை வைத்து விட்டுச் சென்று விடுவார். அந்தக் கடனை இருவரும் பிரித்துக் கொள்ள வேண்டியிருக்கும். ஏழாம் வீட்டு அதிபதி பதினொன்றாம் வீட்டு அதிபதியோடு சம்பந்தம் இருப்பதும், இரண்டாம் வீட்டு அதிபதியுடன் சம்பந்தம் இருப்பதும் ஒருவருடைய பணவரவு மற்றும் பண நிலைப்பு குறித்த நிலைமையைக்  காண்பிக்கும்.

ஏழாம் வீட்டுக்கு பதினோராம் வீடு என்பது ஏழாம் வீட்டுக்கு திரிகோணம் ஆகும். அது லக்னாதிபதிக்கு லாப பாவமாகவும் இருப்பது என்பது சிறப்பு. பழைய ஜோதிட நூல்கள் ஏழாம் வீட்டை பெரும்பாலும் களத்திர பாவமாகவே கருதுகின்றன. மிகப் பழைய ஜோதிட நூல்களிலும் ஏழாம் வீடு கூட்டுத் தொழிலுக்கான இடம் என்று பெரிய அளவில் சொல்லப்படவில்லை. அதில் களத்திரம்  மட்டுமே பேசப்படுகிறது.

பங்குதாரர் அமைவதும் இறைவன் கொடுத்த வரம்

களத்திரம் என்பதும் லக்னாதிபதிக்கு எதிர்பாவமாக நின்று, வாழ்நாள் முழுக்க நன்மையோ, தீமையோ, இரண்டும் இல்லாத சமநிலையோ ஏற்படுத்துவதால் அதை இப்போது வாடிக்கையாளர், கூட்டாளி என சம்பந்தப்படுத்தி பார்க்கிறோம். 10க்கு 10 என்பதால் தொழில் பாவமாகவும் பார்க்கிறோம். மனைவி அமைவதெல்லாம் எப்படி இறைவன் கொடுத்த வரமோ, அப்படி நண்பர்களும் பங்குதாரர்களும் அமைவதும் இறைவன் கொடுத்த வரம்தானே. ஒரு ஆணின் ஜாதகத்தில் 7, 10க்கு அதிபதிகள் இணைந்து சுக்கிரனும் வலுவாக அமைந்தால், மனைவியுடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்யக்கூடிய அமைப்பு உண்டாகும்.

கூட்டுத் தொழிலில் பலம் தீர்மானம்

 

ஒருவருடைய தசாநாதனை வைத்துத்தான், அந்த நேரத்தில் அவருடைய கூட்டுத் தொழிலில் பலம் இருக்கின்றதா இல்லையா என்பதைத் தீர்மானம் செய்ய முடியும். ஜாதகத்தில் ஒரு குறிப்பிட்ட காலம்வரை கூட்டுத் தொழில் நன்றாக நடக்கும். அப்புறம் பிய்த்துக் கொண்டு போய்விடும். காரணம், என்னவென்று சொன்னால், நடந்த வரை சாதகமான தசை நடந்தது. பிறகு சாதகமில்லாத தசை நடக்கிறது என்பதுதான் காரணம்.

மன உளைச்சல், நஷ்டம்

ஒருவருடைய தசாநாதன் 3, 2க்கு பெரியவர் ஆகி 6ல் அமர்ந்து விட்டால் கூட்டுத் தொழிலில் பாதிப்பு ஏற்படும். அதைப்போலவே லக்னாதிபதி 7ல் இருப்பதும், அவர் 6, 8, 12ஆம் பாவாதிகளின் சாரம் அல்லது பார்வையைப் பெற்றிருப்பதும், சேர்ந்து இருப்பதும், தொழில் முதலீடுகளில் நன்மையைத் தராது. நஷ்டத்தையும் சிக்கலையும் ஏற்படுத்தும்.ஏழாம் பாவம் 8 ,12ஆம் பாவத்தோடு தொடர்பு கொண்டால் அவர்களால் தொழில் செய்ய முடியாது. இழப்பும் அவமானமும், விவகாரங்களும், கோர்ட்டு கேஸ் என்று அலைச்சலும் ஏற்படும். ஏழாம் பாவம் 6, 8 ஆம் பாவங்களோடு தொடர்பு கொள்ளும்பொழுது, தீராத மன உளைச்சல் ஏற்படும். ஏழாம் பாவம் எட்டாம் பாவத்தை தொடர்பு கொள்ள லக்னாதிபதி பணத்தை ஏமாந்து விடுவார். கூட்டாளி ஏமாற்றிவிட்டு போய்விடுவார். அல்லது துரோகம் செய்யும் வாய்ப்பு அதிகம்.

தர்ம கர்மாதிபதி யோகம்

ஒருவருடைய ஜாதகத்தில் பலம் மிக்க 7ஆம் வீடு வெற்றிகரமான வியாபாரத்தை கூட்டுத் தொழில் மூலமாகத் தந்து விடும். 5 ஆம் வீடு, போட்டி பந்தயங்கள், பங்குச் சந்தை நிலவரங்கள் மற்றும் முதலீடுகளையும், அதிக உழைப்பின்றி முதலீடின்றி வரும் வருவாயையும்  குறிப்பது .பாக்கிய வீடான 9ஆம் பாவம் அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது. 9 மற்றும் 10ஆம் பாவங்களின் அல்லது பாவாதிபதிகளின் நல்ல தொடர்பு வெற்றியை நிச்சயிக்கிறது. (தர்ம கர்மாதிபதி யோகம்) இது சுப பலத்தோடு இருக்க வேண்டும்.

ஒருவரின் ஜென்ம லக்னத்திற்கு 10ம் இடம் தொழில் ஸ்தானமாகும். 10க்கு, 10ம் இடமான 7ம் பாவம் கூட்டுத்தொழில் ஸ்தானமாகும். ஒருவரின் ஜாதகத்தில் 7ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று அமைகின்றபோது, கூட்டுத் தொழில் மூலமாக அனுகூலங்களை அடைய நேரிடுகிறது. 7ம் அதிபதி 10ம்  அதிபதி சேர்க்கை பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் பலம் பெற்று அமைந்தாலும், 10ம் அதிபதி 7ல் அமையப் பெற்றாலும் 7,10 க்கு அதிபதிகள் பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும் கூட்டுத் தொழில் செய்து  சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். 10ம் வீட்டை விட, 7ம் வீடு பலம் பெறுமேயானால் கூட்டுத்தொழில் யோகமானது சிறப்பாக அமையும்.

எதிர்பாராத அதிர்ஷ்டம் ஜாதகருக்கு 12ஆம் பாவத் தொடர்பு வர்த்தக வெற்றிகளைத் தீர்மானிக்கிறது. 12ஆம் வீடு சூட்சுமமானதாகவும், தெரியாதவர்களையும் குறிக்கும். ஜாதகத்தில் 12ஆம் இடம் சுப பலம்பெற, தனிப்பட்ட முறையில்  நமக்குத் தெரியாதவர்கள் மூலமாக நல்ல ஆதாயம் கிடைக்கும். இது திட்டமிடலில் வராது. பெரிய உழைப்பிலும் வராது. எதிர்பாராத அதிர்ஷ்டம் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். சூரியன் முதல் ராகு - கேதுக்கள் வரையிலான ஒன்பது கிரகங்களும் என்னென்ன தொழில்களுக்கு காரகத்துவம் பெற்று விளங்குகின்றன; அத்தகைய கிரகங்கள் நம்முடைய ஜாதகத்தில் எப்படி ஆட்சி, உச்சம் பெற்று இருக்கின்றன என்பதற்கு ஏற்ப தேர்வு செய்து பணியாற்றினால், அதில் நிச்சயம் வெற்றி பெறலாம்.

சூரிய நமஸ்காரம்

தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதுடன், ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்ய வேண்டும் அல்லது கேட்க வேண்டும். சொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரத்தை, தினமும் 108 முறை பாராயணம் செய்தால், தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும்.

யாருடன் கூட்டு?

எந்த பாவம் அல்லது கிரகம் பலம் பெற்று அமைந்திருக்கின்றதோ, அந்த பாவம் மற்றும் கிரகத்தின் காரகத்துவம் பெற்ற நபரை கூட்டாகச் சேர்த்து தொழில் செய்யும்போது நல்ல லாபத்தையும் முன்னேற்றத்தையும் அடைய முடியும். மிதுனம், கன்னி, தனுசு, மீனம் போன்ற உபய லக்னங்களின் பிறந்தவர்களுக்கு 7ம் இடம் பாதக ஸ்தானம் என்பதால் கூட்டுத் தொழில் செய்வதை நன்கு ஆராய்ந்து பிறகுதான் செய்ய வேண்டும். அவசரம் கூடாது. அதிகப்படியான கவனம் வேண்டும். இவற்றையெல்லாம் நிதானமாக பரிசீலித்து, தகுந்த ஜோதிடரிடம் காட்டி, அதற்கு பிறகு ஒரு முடிவுக்கு வர வேண்டும். இது அந்தந்த திசை காலங்களில் கோசார பலத்திற்கு ஏற்ப நடக்கும்.

- எஸ்.கோகுலாச்சாரி

Related Stories: