கடன்களை தீர்த்து வறுமையை விரட்டும் மகாலட்சுமி தலங்கள்

திருக்கண்ணமங்கை

நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றாகும். திருவாரூருக்கு அருகேயுள்ளது. மூலவருக்கு பக்தவச்சலப் பெருமாள் எனும் திருநாமம். இத்தலத்தில் திருமாலுக்கும் திருமகளான மகாலட்சுமிக்கும் நடந்த திருமணத்தைக் காண தேவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டேயிருந்தார்கள். மேலும், தேனீக்களின் வடிவில் கூடு கட்டி பெருமாளை தரிசித்தபடி இருந்தனர். பாற்கடலிலிருந்து வெளிப்பட்ட மகாலட்சுமி முதலில் பெருமாளின் அழகிய திருமுகத்தை கண்டாள். அதை உள்ளத்தில் நிறுத்தி இத்தல நாயகனையே திருமணம் செய்ய வேண்டுமென்று இங்கு வந்து தவமியற்றினாள். பெருமாளே தன் பாற்கடலை விட்டு இங்கு வந்து மகாலட்சுமியை மணம் புரிந்ததால் பெரும்புறக் கடல் என்கிற திருநாமமும் பெருமாளுக்கு உண்டு. மேலும், இந்த க்ஷேத்ரத்திற்கே லட்சுமி வனம் எனும் திருப்பெயர் உண்டு. பஞ்ச கிருஷ்ண தலங்களில் இதுவும் ஒன்று.

திருநின்றவூர்

மகாவிஷ்ணுவிடம் கோபித்துக் கொண்டு வைகுண்டத்தை விட்டு திரு என்கிற மகாலட்சுமி இங்கு வந்து நின்றதால் இத்தலம் திருநின்றவூர் என்றானது. சமுத்திர ராஜனே சமாதானமாக என்னைப் பெற்ற தாயே என்று இறைஞ்சி வேண்டிக்கொண்டதாலேயே இவளுக்கு இத்தலத்தில் என்னைப் பெற்ற தாயே எனும் திருப்பெயர். குபேரன் தன் நிதியை இழந்து இத்தலத்திற்கு வந்து வேண்டிக் கொண்டதாலேயே மீண்டும் பெரும் நிதியை அடைந்தான். நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்றாகும். சென்னை & திருவள்ளூருக்கு அருகே இத்தலம் அமைந்துள்ளது.

கூடலூர்

இக்கோயிலை கூடல் அழகிய பெருமாள் கோயில் என்பர். தல விருட்சமாக புளிய மரம் அமைந்துள்ளது. தாயாரின் திருநாமம் மகாலட்சுமி என்பதேயாகும். கூடலழகர் அஷ்டாங்க விமானத்தின் கீழ்எழுந்தருளியிருக்கிறார். கோயில் முன் மண்டபத்தில் மகாலட்சுமி, கையில் வெண்ணெயுடன் நவநீத கிருஷ்ணர் போன்றோர் உள்ளனர். கோயிலின் முன் மண்டப மேற்சுவரில் ராசி சக்கரமும் இதன் மத்தியில் மகாலட்சுமியும் காட்சி தருகிறாள். கருவறையில் கூடல் அழகிய பெருமாள் நின்ற கோலத்தில் தாயார்களோடு சேவை சாதிக்கிறார். இத்தலம் தேனிக்கு அருகே உள்ளது.

திருவாலி

மகாலட்சுமியோடு பெருமாள் நரசிம்ம கோலத்தில் வீற்றிருப்பதால் இத்தலத்திற்கு லட்சுமி நரசிம்ம க்ஷேத்ரம் என்றே பெயர். திருமங்கையாழ்வாருக்கு அருள்பாலிக்க வேண்டுமென்று லட்சுமி தேவி பெருமாளை இடைவிடாது வேண்டினாள். லட்சுமியும் திருவாலியில் தவமியற்றும் பூர்ண மகரிஷிக்கு மகளாக அவதரித்தாள். பெருமாளை லட்சுமி தேவியார் மணம் புரிந்து வரும்போது திருமங்கை மன்னன் வழிப்பறி செய்ய அவரது காதில் பெருமாள் அஷ்டாட்சர மந்திரத்தை கூறி ஆட்கொண்டார். மூலவராக இருக்கும் நரசிம்மர் லட்சுமியாகிய திருவை ஆலிங்கனம் செய்து கொண்டிருப்பதால் திரு ஆலிங்கன ஊர் என்பது திருவாலி என்று மருவியது. நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான இத்தலம் சீர்காழிக்கு அருகேயுள்ளது.

திருத்தங்கல்

ஸ்ரீதேவி எனும் மகாலட்சுமி வைகுண்டத்தை விட்டு புறப்பட்டு ‘தானே மற்ற தேவியரை காட்டிலும் சிறந்தவள்’ என்று நிரூபிக்க தங்காலமலை எனும் திருத்தங்கலுக்கு வந்து தவமியற்றினாள். செங்கமல நாச்சியார் எனும் திருநாமத்தோடு இத்தலத்தில் திருமகள் தங்கியதால் திருத்தங்கல் என்றாயிற்று. பெருமாளும் திருமகளின் தவத்திற்கு மெச்சி ஏற்றுக்கொண்டார். நின்ற கோலத்தில் நாராயணன் அருளும் தலம் இது. திருத்தங்காலப்பன் எனும்

திருப்பெயரும் பெருமாளுக்கு உண்டு. இத்தல தாயாருக்கோ செங்கமலத்தாயார், கமல மகாலட்சுமி, அன்னநாயகி, ஆனந்த நாயகி, அமிர்த நாயகி என்று பல்வேறு திருப்பெயர்கள்! நூற்றியெட்டு திவ்யதேசங்களில் இத்தலமும் ஒன்று. விருதுநகருக்கு அருகே இத்தலம் அமைந்துள்ளது.

அரசர்கோயில்

செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள அரசர்கோயில் எனும் இடத்தில் ஆலயம் கொண்டுள்ள சுந்தரமகாலட்சுமியின் வலது பாதத்தில் ஆறு விரல்கள் இருப்பது குறிப்பிடத்தக்க அதிசயம். ஒரு முறை ஜனக மகாராஜாவும், பெருமாளும் இத்தலத்தில் சேர்ந்திருக்க நேரிட்டதால் இத்தலம் அரசர்கோயில் என்றானதாம். கற்பூர ஆரத்தி காட்டி, தாயாரின் வலது பாதத்தை தரிசிக்கும் வாய்ப்பை வழங்குகிறார் பட்டர். இடது கரத்துக்குக் கீழே பத்மாசனமாக மடித்து வைத்த நிலையில் இருக்கிறது வலது பாதம். அதில் சுண்டு விரலை அடுத்து அழகான ஆறாவது விரல். இந்த ஆறுவிரல்கள் உள்ள பாதத்தை தரிசிப்பவர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி அள்ளித் தருகிறாள் மகாலட்சுமி என்பது ஐதீகம். அன்னைக்குப் பலாச் சுளைகளால் அபிஷேகம் செய்து பின் அவற்றை பக்தர்களுக்குப் பிரசாதமாக தருகிறார்கள். செங்கல்பட்டு-மதுராந்தகம் பாதையில் படாளம் கூட்டு ரோட்டிலிருந்து இடது பக்கம் செல்லும் சாலையில் 6 கி.மீ தொலைவில் உள்ளது அரசர்கோயில்.

மங்களகிரி

பெருமாளின் திருமார்பில் உறையும் லட்சுமிக்கு யோகலட்சுமி என்று பெயர். இருபக்கமும் உள்ள தாயாருக்கு போகலட்சுமி, வீரலட்சுமி என்றும் பெயர்.

ஸ்ரீலட்சுமி என்று போற்றப்பட்டும் மகாலட்சுமி ஆந்திர மாநிலத்திலுள்ள மங்களகிரி எனும் தலத்தில் எளிமையான தவக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள். காசியின் மகாலட்சுமி பீடம் காசியில் மரித்தால் முக்தி கிட்டும் என்பது விஸ்வநாதரின் வேதவாக்கு. அதனாலேயே இன்று வயதானவர்கள் காசியிலேயே வாழ்ந்து முக்தியை அடைவர். இதே காசியில்தான் மகாலட்சுமி பீடமும் உள்ளது. இங்குள்ள சித்தலட்சுமி ஆலயம் தாமரை வடிவில் இருந்ததாக காசி காண்டம் கூறுகிறது. அருகேயே லட்சுமி குண்டம் அமைந்துள்ளது. வாரணாசியில் மகாலட்சுமியால் பூஜிக்கப்பட்ட லிங்கம் மகாலட்சுமீஸ்வரர் எனும் திருப்பெயரோடு இன்றும் விளங்குகிறது. தீபாவளியன்று காசிக் கங்கையில் ஸ்நானம் என்பதே விசேஷமாகும். அதிலும், மகாலட்சுமீஸ்வரரை தரிசிப்பதென்பது இன்னும் அதிவிசேஷமாகும்.

கொற்கை

சிவபெருமான் மீது மலர்க்கணை தொடுத்தான் மன்மதன். ஈசனின் நெற்றிக் கண்ணால் எரிக்கப்பட்ட மன்மதனை உயிர்ப்பித்துத் தரவேண்டி ரதிதேவி மகாலட்சுமியை வேண்டினாள். எனவே, மகாலட்சுமியும் இத்தல ஈசனுக்கு வழிபாடுகள் செய்தார். மன்மதனை உயிர்ப்பித்தார்.

மகாலட்சுமி இவ்வாறு வழிபாடு செய்த லிங்கம் லட்சுமீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது. நீண்ட ஆயுளும், செல்வமும் வேண்டுவோர் இத்தல ஈசனை வழிபட்டு பயனடைகின்றனர்.

திருப்பத்தூர்

சிவபெருமான் எத்தனையோ அடியார்களுக்காக தனது திருத்தாண்டவத்தினை காட்டியருளினார். அப்படியொருமுறை திருமகளின் வேண்டுகோளுக்கு இணங்கி இத்தலத்தில் திருத்தாண்டவம் புரிந்தார். இந்த தாண்டவத்திற்கு லட்சுமி தாண்டவம் என்று பெயர். இந்த அரும்பெருங் காட்சியை கண்ட திருமகள் இத்தல ஈசனைப் போற்றி வணங்கி பூஜித்தாள். எனவே, இங்குள்ள தீர்த்தத்திற்கு ஸ்ரீதீர்த்தம் என்று பெயர்.  

சென்னை - மயிலாப்பூர்

சென்னை மயிலாப்பூரிலுள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் தனிச் சந்நதியில் மயூரவல்லித் தாயார் கோயில் கொண்டிருக்கிறார். மயூரபுரி என்றும் மயிலாப்பூருக்கு வேறொரு திருநாமம் உண்டு. எனவே, இங்கு எழுந்தருளியிருக்கும் மகாலட்சுமிக்கு வில்வ தளங்களைக் கொண்டு அர்ச்சித்தால் மகாலட்சுமியின் பூரண அருள் கிட்டும். மயூரவல்லித் தாயார் மேலிரு கரங்களில் தாமரை மலர்களைத் தாங்கி கீழிரு கரங்கள் அபய&வரத ஹஸ்தம் காட்டி அருள்கிறாள்.  வெள்ளிக்கிழமை அன்று மயூரவல்லித்தாயார் சந்நிதிக்கு வந்து சந்நதியின் கதவில் மணிக்கட்டி பிரார்த்தனை செய்து கொண்டு, வில்வார்ச்சனை செய்து வழிபட, வேண்டும் வரம் தருகிறாள்.

 

பேளூர் கரடிப்பட்டி

கரடிப்பட்டியில் லட்சுமி நாராயணப் பெருமாளின் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் அஷ்ட லட்சுமிகளின் பளிங்குச் சிலைகள் கண்களையும் மனதையும் கவர்கின்றன. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலிருந்து கொண்டு வரப்பட்டவை இச்சிலைகள். செவ்வக வடிவிலான மகா மண்டபத்தைச் சுற்றிலும் தனித்தனி சந்நதிகளில் இவை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு லட்சுமியும் அவரவர்க்குரிய திக்கு நோக்கி அருள்பாலிக்கின்றார்கள். மூலவர் லட்சுமி நாராயணர், தனது மடியில் மகாலட்சுமியை அமர வைத்திருக்கும் கோலம் கொள்ளை அழகு! எந்த திக்கிலிருந்தும் துயரம் தீண்டிவிடாதபடி அஷ்டலட்சுமிகள் பக்தர்களைக் காக்கிறார்கள். சேலம் மாவட்டம், வாழப்பாடியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

திருச்சி - ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கத்திலேயே காட்டழகிய சிங்கர் திருக்கோயில் அமைந்துள்ளது. பெருமாள் கோயிலில் பிரதோஷ பூஜை என்பது இத்தலத்தின் சிறப்பாகும். கருவறையில் சுமார் 8 அடி உயரத்தில் லட்சுமி நரசிம்மர் மகாலட்சுமியை தனது இடது திருத்தொடையில் அமர வைத்து ஆலிங்கன நிலையில் அருள்பாலிக்கிறார். வலது கையால் அபய ஹஸ்தம் காட்டி அருள்கிறார்.

திருநின்றியூர்

திருமாலின் திருமார்பினில் நீங்காதிருக்கும் வரம் வேண்டி அலைமகளாம் லட்சுமிதேவி இங்கு ஈசனைப் பூஜித்து பேறு பெற்றதாக தல புராணம் கூறுகிறது. கருவறைக்குள் கருணையோடு மகாலட்சுமீஸ்வரர் என்கிற திருப்பெயரோடு, ருத்ராட்சப் பந்தலின் கீழ் அருள்பாலிக்கிறார். தேவாதி தேவர்கள் நித்தமும் வந்து இந்த பெருமானைத் தொழுகிறார்கள். வழக்கமான தேவகோஷ்ட மூர்த்தங்களோடு மகாவிஷ்ணுவும், கஜலட்சுமியும் தனி அழகோடு காட்சியளிக்கின்றனர். நீலி மலர்ப் பொய்கை லட்சுமி தீர்த்தமாகவும், விளா மரம் தல விருட்சமாகவும் விளங்குகின்றன. அனுஷ நட்சத்திரக்காரர்கள் வழிபட உகந்த தலம் இது. ஏனெனில், அனுஷத்திற்கு அதிதேவதையே மகாலட்சுமிதான். செல்வச் செழிப்பு உண்டாக லட்சுமி ஹோமம் நடத்தப்படுகின்றது. தாமரை இதழில் தேனூற்றி ஹோம அக்னியில் இட்டு யாகங்கள் செய்யப்படுகின்றன. மயிலாடுதுறை வட்டத்தில், சீர்காழி-மயிலாடுதுறை பேருந்து சாலையில் மயிலாடுதுறையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.

திருச்சானூர்

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான ஸ்ரீ வெங்கடாஜலபதி திருமலையிலும், கிழ் திருப்பதியில் பத்மாவதி தாயாரும் பேரருள் பெருக்கி அமர்ந்திருக்கின்றனர். வைகுண்டத்தில் நாராயணன் திருமார்பில் உறையும் மகாலட்சுமியே திருச்சானூரில் பத்மாவதி தேவியாய் அருள்கிறாள். தன் மார்பை எட்டி உதைத்த பிருகு முனிவரை மன்னித்த திருமால் மீது கோபம்கொண்ட திருமகள் அவரை விட்டு நீங்கி பூவுலகம் வர, அவளை சமாதானப்படுத்தி அழைத்து வர நாராயணனும் புறப்பட்டு வந்தார். மகாலட்சுமி சந்திர வம்சத்தைச் சேர்ந்த ஆகாசராஜன் எனும் மன்னன் செய்த புத்திரகாமேஷ்டி யாகத்தில் பெண் மகவாகத் தோன்றி, பத்மாவதி எனும் பெயருடன் வளர்ந்தாள்.

தக்க பருவத்தில் பத்மாவதி&ஸ்ரீனிவாசன் திருமணமும் ஏற்பாடானது. பொருள் இல்லாததால் திருமணச் செலவிற்கு குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் ராமநிஷ்காம பொற்காசுகளைக் கடனாகப் பெற்று கலியுகம் முடியும் வரை கடனுக்கு வட்டி செலுத்துவதாக வாக்களித்தார் ஸ்ரீனிவாசன். திருமணம் சிறப்பாக நடந்தேறியது. மகாலட்சுமி, திருமலையில் திருவேங்கடனின் திருமார்பில் குடியேறவும் தனது அம்சமான பத்மாவதி கீழ்த் திருப்பதியில், திருச்சானூரில் எழுந்தருளுமாறு வரம் பெற்றதாகவும் புராணம் தெரிவிக்கிறது. மகாலட்சுமியான பத்மாவதியைத் தரிசிப்பவர்களுக்கு சகல செல்வங்களும் அளிக்குமாறு வேங்கடவன் ஆணையிட்டுள்ளார்.

தாளக்கரை

நின்ற கோலத்தில் லட்சுமி அருள்பாலிக்கும் தலம். மகாலட்சுமியோடு பாற்கடலிலிருந்து வெளிப்பட்டவன்தான் சந்திரன். இத்தலத்தில் சகோதர முறை கொண்ட சந்திரனே சுவாமிக்கு விமானமாக இருப்பதை எத்தலத்திலும் காணமுடியாது. எனவே, சந்திர விமானம் என்றே பெயர் பெற்றிருக்கிறது. கருவறையில் மூலவராக நரசிம்மர் கையில் சங்கு, சக்ரத்துடன் சாந்த மூர்த்தியாகவும், மகாலட்சுமியும் சேர்ந்தே நின்ற கோலத்தில் தனியே இருப்பதை வேறெங்கும் தரிசிக்க முடியாது. நரசிம்மர் பீடத்தில் ஸ்ரீசக்ரம் உள்ளது.

திண்டிவனம்

இத்தலத்தில் நரசிம்மரின் உக்கிரம் தணிய வேண்டி தாயாராகிய லட்சுமி அவரை வணங்கிய நிலையில் நிற்கிறார். நரசிம்மரையும், மகாலட்சுமியையும் இந்த கோலத்தில் காண்பது என்பது மிகவும் அரிதாகும். மூலவராக லட்சுமி நரசிங்கப் பெருமாள் எனும் திருநாமத்தோடு அருள்பாலிக்கிறார். இங்குள்ள அனுமன் சங்கு சக்ரங்களோடு நான்கு திருக்கரங்களோடு அருள்பாலிக்கிறார். ஏனெனில், நான்கு அரக்கர்களை வதம் செய்வதற்காக பெருமாளே அனுமனை அனுப்பினாராம். சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேல்மருவத்தூருக்கு அருகே திண்டிவனம் அமைந்துள்ளது.

Related Stories: