அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

321. ப்ரதிதாய நமஹ (Prathithaaya namaha)

அறவழி தவறிய மன்னர்கள் அதிக அளவில் பூமியை ஆண்டு வந்த நிலையில், அவர்களை அழித்து நல்லறம் செழிக்கும்படிச் செய்ய வேண்டும் என்று விரும்பினார் திருமால். அதனால், ஜமதக்னியின் மகனான பரசுராமருக்குள் தனது சக்தியைச் செலுத்தினார். பரசுராமர் மூலமாகப் பல தீய மன்னர்களை அழித்தார்.

எனவே தான் பரசுராம அவதாரத்தை ஆவேச அவதாரம் என்று சொல்வார்கள். அதாவது, ராமன், கண்ணன் போன்ற அவதாரங்களில் வைகுண்டத்திலிருந்து நேரே இறைவன் பூமிக்கு இறங்கி வருவது போன்றதல்ல பரசுராம அவதாரம். திருமால் ஒரு ஜீவாத்மாவைத் தேர்ந்தெடுத்து அவர்மீது தனது சக்தியைச் செலுத்தியதே பரசுராம அவதாரம் ஆகும்.

அந்தப் பரசுராமர், தீய சக்திகளை அழிப்பதற்காகத் தனக்கு ஒரு சிறப்பான ஆயுதம் வேண்டும் என்று கருதினார். சிவபெருமானிடம் இருந்தே ஒரு நல்ல ஆயுதத்தை நாம் பெற்றுக் கொள்வோம் என்று எண்ணிய பரசுராமர், சிவனைக் குறித்துக் கடுந்தவம் புரிந்தார். மழை, வெயில், பனி, காற்று என எதையுமே பொருட்படுத்தாமல், பல ஆண்டுகள் உணவு, உறக்கம் இன்றித் தவம் புரிந்த பரசுராமரின் உறுதியைக் கண்டு வியந்தார் சிவபெருமான்.அப்போது பார்வதி தேவி சிவனிடம், “மிகச்சிறந்த ஆயுதத்தை வேண்டியே பரசுராமன் தவம் புரிந்து வருகிறான். நாம் இருவரும் மழு கோடாரி எனும் ஆயுதம் ஏந்தி இருக்கிறோமே! அதைப் போலவே ஒரு மழுவை இவனுக்கும் தந்து விடலாமே!” என்றாள். அதை ஏற்ற சிவபெருமான், பரசுராமருக்குக் காட்சி தந்து, மழு எனும் ஆயுதத்தை அவரது தவத்துக்குப் பரிசாக அளித்தார்.

வடமொழியில் மழுவுக்குப் பரசு என்று பெயர். பரசுவைக் கையில் ஏந்தியிருப்பதால், அவர் பரசுராமர் என்ற பெயரைப் பெற்றார்.சிவபெருமானே பரசுராமருக்குக் குருவாக இருந்து அந்த மழுவைப் பயன்படுத்துவது எப்படி என்பதை உபதேசித்தார். அதன்பின், பரசுராமர் சிவபெருமானைப் பார்த்து, “குருவே! தாங்களே கருணை கூர்ந்து எனக்கு இந்த ஆயுதப்பயிற்சி வழங்கியமைக்குத் தலையல்லால் கைம்மாறிலேன். தாங்கள் எனக்கு மற்றொரு அருளும் புரிய வேண்டும்!” என்றார். என்னவென்று சிவன் கேட்க, “என் வலிமையையும் திறமையையும் சோதித்துப் பார்க்கும் விதமாகத் தாங்களே என்னுடன் போரிட வேண்டும்!” என்று கோரினார் பரசுராமர். சிவனும் அதை ஏற்றார்.

அதைத் தொடர்ந்து பரசுராமருக்கும் சிவனுக்கும் நடந்த போரிலே, பரசுராமர் சிறப்பாகப் போர் புரிந்தார். தனது மழுவால் சிவனின் நெற்றியிலே தாக்கி விட்டார். ஆனால் அதற்காகக் கோபம் கொள்ளாமல், தனது சீடன் சிறப்பாகப் போர் புரிந்ததை எண்ணிப் பூரித்தார் சிவன். அப்போது வானில் தோன்றிய திருமால், “பரசுராமா! உன்னை யாராலும் வெல்ல முடியாது! சிவபெருமானே உனக்குப் பயிற்சி அளித்திருப்பதால் உன்னை வெல்ல யாருமில்லை!” என்று பரசுராமரை வாழ்த்தினார். பரசுராமரும் கையில் மழுவேந்தித் தீயசக்திகளான மன்னர்களை அழித்தார்.

பல நூறாண்டுகள் கழித்து, ராமனாக அவதரித்த  திருமால், சீதையை மணம் புரிந்து கொண்டு மிதிலையில் இருந்து அயோத்தி நோக்கித் திரும்புகையில், அவரை வழிமறித்த பரசுராமர், தனது வில்லைக் காட்டி, அதில் ராமனால் நாண் ஏற்ற முடியுமா என்று சவால் விட்டார். ஆனால் அனாயாசமாக அந்த வில்லை வாங்கிய ராமன், அதில் நாண் ஏற்றிக் காட்டிப் பரசுராமரை வீழ்த்தி விட்டான்.

ராமன் திருமாலின் அவதாரமே என அப்போது உணர்ந்துகொண்ட பரசுராமர், “திருமாலே! முன்பு சிவனை நான் போரில் வென்ற போது என்னை யாராலும் வெல்ல முடியாது என்றீர்கள்! இப்போது நீங்கள் என்னை வென்றுவிட்டீர்களே!” என்று கேட்டார். அப்போது அருகிலிருந்த வசிஷ்டர், “பரசுராமரே! நீங்கள் திருமாலின் ஆவேச அவதாரம். ராமபிரான் திருமாலின் முழு அவதாரம். முழு அவதாரத்தின் எதிரே ஆவேச அவதாரம் எடுபடாது. உங்களை உள்ளிருந்து இயக்குபவனையே நீங்கள் வெல்ல வேண்டும் என்றால், அது சாத்தியமில்லை. அது உங்களை நீங்களே வீழ்த்திக்கொள்வதற்குச் சமம். மற்றபடி உலகில் உள்ள யாராலும் உங்களை வெல்லவே முடியாது என்பது உண்மையே.

திருமால் ஏற்கனவே சொன்னபடி, வெல்ல முடியாதவர் என்ற புகழோடு தான் நீங்கள் திகழ்வீர்கள்!” என்றார்.‘ப்ரதித:’ என்றால் புகழ்பெற்றவர் என்று பொருள். இதற்கு முந்தைய திருநாமமான அச்யுத: (320) என்பதற்குத் தன்நிலையில் இருந்து வீழாதவர் என்று பொருள். அச்யுதன் (வீழாதவர்) என்று உலகெங்கிலும் புகழ்பெற்றவராகப் பரசுராமர் திகழ்வதால் (இன்றளவும் பரசுராமர் சிரஞ்சீவியாக இருந்து வருகிறார்) அவர் ‘ப்ரதித:’

என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 321-வது திருநாமம். ‘அச்யுத:’ (320-வீழாதவர்) ப்ரதித: (321-புகழ்பெற்றவர்) என அடுத்தடுத்துத் திருநாமங்கள் வருவதாலே, அவற்றை இணைத்து வீழாதவர் எனப் புகழ்பெற்றவர் என்று உரையாசிரியர்கள் விளக்கியுள்ளார்கள்.

“ப்ரதிதாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் திக்கு நிறை புகழாளர்

களாகத் திகழும்படித் திருமால் அருள்புரிவார்.

322. ப்ராணாய நமஹ: (Praanaaya namaha)

(திருநாமங்கள் 315 முதல் 322 வரை - பரசுராமரின் பெருமைகள்)நாம் கடந்த சில திருநாமங்களின் விளக்கத்தில் பார்த்து வந்தது போல், அறநெறி தவறி ஆட்சிபுரிந்து வந்த மன்னர்களை அழிப்பதற்காகத் தோன்றிய பரசுராமர், இருபத்தொரு தலைமுறை மன்னர்களை அழித்தார். அதன்பின், கச்யபர் உள்ளிட்ட முனிவர்களை வரவழைத்துப் பெரும் வேள்வியைச் செய்த பரசுராமர், மன்னர்களை வீழ்த்தித் தான் பெற்ற அனைத்து நிலங்களையும் அந்த முனிவர்களுக்குத் தானமாகக் கொடுத்துவிட்டார்.

“இனி நீங்கள் எங்கே செல்வீர்கள்?” என்று முனிவர்கள் கேட்க, “நான் எனக்கென்று புதிய நிலத்தை உருவாக்கப் போகிறேன்!” என்று சொன்னார் பரசுராமர். பாரத தேசத்தின் மேற்குக் கடற்கரைப் பகுதிக்குச் சென்ற பரசுராமர், தன் கையில் ஏந்திய மழு எனும் ஆயுதத்தைக் கடலின் மீது வீசினார். உடனே, கடல் பல மைல் தூரம் பின்வாங்கிக் கொண்டு பெரும் நிலத்தைப் பரசுராமருக்கு வழங்கியது.

கடல் பின்வாங்கித் தனக்குச் சமர்ப்பித்த அப்பகுதியைப் பரசுராம க்ஷேத்திரம் என்று நிர்மாணித்தார் பரசுராமர். இன்றைய பாரத தேசத்தின் மேற்குக் கடற்கரை ஓரத்தில் உள்ள கோவா மாநிலத்திலிருந்து கேரள மாநிலம் வரை பரசுராமரின் க்ஷேத்திரம் என்று சொல்லப்படுகிறது.“கலியுகத்தின் முடிவில் திருமால் கல்கியாக அவதாரம் எடுத்து வந்து தீய சக்திகளை அழிப்பார்! அவர் அவதரித்து வரும் வரை நான் காத்திருந்து, அவரது செயல்பாடுகளில் அவருக்கு உறுதுணையாக இருப்பேன்!” என்று முனிவர்களிடம் சொல்லி விட்டு அந்தப் பரசுராம க்ஷேத்திரத்தில் தங்கினார் பரசுராமர்.

தினமும் பொழுது விடியும் போது அங்கிருந்து புறப்பட்டு இமயமலைக்குச் செல்வார் பரசுராமர். பகல் முழுதும் இமயமலையில் தவம்புரிந்துவிட்டு, சூரியன் அஸ்தமிக்கும் முன் மீண்டும் பரசுராம க்ஷேத்திரத்தை வந்து அடைவார். இவ்வாறு பரசுராமர் அங்கே எழுந்தருளியிருந்த நிலையில், ஒரு சமயம் மேற்குக் கடலில் ஆழிப் பேரலையும் புயலும் உண்டானது. பரசுராம க்ஷேத்திரத்தில் வாழும் மக்கள் எல்லோரும் கடல் சீற்றத்தால் அழிந்துபோகும் அபாயம் ஏற்பட்டது.

இந்நிலையில் மக்கள் அனைவரும் பரசுராமரை அடி பணிந்து, கடல் சீற்றத்திலிருந்து தங்களைக் காத்தருளுமாறு பிரார்த்தித்தார்கள். “என்னையே நம்பி என் பகுதியில் வாழும் உங்களை வாழ வைக்க வேண்டியது என் கடமை! நீங்கள் அஞ்சாமல் சென்று வாருங்கள்!” என்று சொல்லி அவர்களை அனுப்பிவைத்தார் பரசுராமர்.கடல் அலைகள் பொங்கி நிலத்தை ஆக்கிரமித்த நிலையில், தனது மழுவைக் கடல்மீது ஏவினார் பரசுராமர். அந்த மழுவுக்குக் கட்டுப்பட்டுக் கடல் மீண்டும் தனது பழைய எல்லைக்குள் சென்று அடங்கியது. ஆனால் உப்பு கலந்த கடல்நீர்

ஊருக்குள் வந்தபடியால், அந்த நிலத்தில் பயிர்கள் ஏதும் விளையவில்லை.

மீண்டும் பரசுராமரின் உதவியை மக்கள் நாடினார்கள். நிலத்தில் உள்ள உப்பை நீக்கி விட்டால், விளைச்சல் நன்றாக ஏற்படும் என்று கூறிய பரசுராமர், நாக லோகத்தில் வாழும் பாம்புகளை அழைத்தார். பரசுராம க்ஷேத்திரம் முழுவதும் உள்ள உப்பினை நீக்குமாறு அப்பாம்புகளை ஏவினார். பாம்புகள் தங்கள் விஷத்தினாலே நிலத்திலுள்ள உப்பைச் சராசரி அளவுக்குச் சமன் செய்தன. அதன்பின் அந்த மண்ணில் நல்ல விளைச்சலும் உண்டானது.

பரசுராம க்ஷேத்திரத்தின் மக்கள் பரசுராமருக்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்தார்கள். “கடல் சீற்றத்திலிருந்தும் எங்களைக் காத்து, இங்கே பயிர்விளைச்சல் ஏற்படுவதற்கும் உதவிய உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. எங்களுக்கு வாழ்வு அளித்தவரே நீங்கள்தான்!” என்று பரசுராமரைத் துதித்தார்கள்.

அப்போது பரசுராமர், “எனது பகுதியில் என்னை நம்பி வாழும் ஒவ்வொருவரையும் காக்க வேண்டியது என் கடமை! நீங்கள் என்றுமே அஞ்ச வேண்டாம்!” என்று அவர்களுக்கு அபயம் தந்து அனுப்பி வைத்தார்.‘ப்ராணன்’ என்று உயிர்வாயுவுக்குப் (oxygen) பெயர். உயிர்வாயு எப்படி நம் சுவாசத்துக்குப் பயன்பட்டு நம்மை வாழ வைக்கிறதோ, அதுபோல் தன்னை அண்டி வரும் மக்கள் அனைவரையும் வாழ்விப்பவராகப் பரசுராமர் திகழ்வதால், அவர் ‘ப்ராண:’ என்றழைக்கப்படுகிறார். ‘ப்ராண:’ என்றால் மூச்சுக்காற்று போல் இருந்து வாழ்விப்பவர் என்று பொருள். அதுவே  ஸஹஸ்ரநாமத்தின் 322-வது திருநாமம்.

சுவாசம், மூச்சுக்குழாய் தொடர்பான உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் மருந்து உட்கொள்ளும் வேளையில் “ப்ராணாய நமஹ:” என்று இத்திருநாமத்தைச் சொல்லி வந்தால், மருந்து விரைவில் வேலை செய்து, நோய் குணமடைவதற்குத் திருமால் அருள்புரிவார்.

323. ப்ராணதாய நமஹ: (Praanaadhaaya namaha)

(திருநாமங்கள் 323 முதல் 333 வரை - ஆமை வடிவத்துடன் திருமால் எடுத்த கூர்ம அவதாரத்தின் பெருமைகள்)

சாந்தோக்கிய உபநிடதத்தின் முதல் அத்தியாயத்தில் ஒரு கதை வருகிறது. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே பெரும் போர் நடந்தபோது, அசுரர்களின் கை ஓங்கத் தொடங்கியது. தாங்கள் வெற்றிபெற நல்வழி காட்டுமாறு தேவர்கள் தங்கள் குருவான பிருகஸ்பதியிடம் வேண்டினார்கள். “ஓம்காரம் தான் நீங்கள் வெற்றி பெறுவதற்கான ஆயுதம். ஓம்காரமாகிய பிரணவத்தை உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு அங்கமாக எண்ணித் தியானம் செய்யுங்கள்!” என்று கூறினார் பிருகஸ்பதி.

முதலில் தேவர்கள் தங்கள் மூக்கையே ஓம்காரமாக எண்ணித் தியானித்தார்கள். அசுரர்கள் பாபத்தையே ஆயுதமாகப் பயன்படுத்தி மூக்கைத் தாக்கி விட்டார்கள். அதன் விளைவாகவே இன்றளவும் நமது மூக்கு நல்ல வாசனை, துர்நாற்றம் ஆகிய இரண்டையுமே நுகர்ந்துவருகிறது.அதன்பின் தங்கள் நாவை ஓம்காரமாக எண்ணித் தியானித்தார்கள் தேவர்கள். அதையும் பாபத்தால் அசுரர்கள் தாக்கவே, நம் நாவானது இன்றளவும் உண்மை, பொய் இரண்டையும் பேசிவருகிறது.

அதைத் தொடர்ந்து தங்கள் காதை ஓம்காரமாக எண்ணித் தேவர்கள் தியானித்தார்கள். அதையும் பாபத்தால் அசுரர்கள் தாக்கவே, அதன் விளைவாக நம் காது இன்றளவும் நல்ல செய்தி, தீயசெய்தி இரண்டையுமே கேட்டுவருகிறது.அதன்பின் கண்ணை ஓம்காரமாக எண்ணித் தேவர்கள் தியானித்தார்கள். அதையும் அசுரர்கள் பாபத்தைக் கொண்டு தாக்கினார்கள். எனவே நமது கண்கள் இன்றளவும் காணத் தக்கவை, காணத் தகாதவை ஆகிய இரண்டையும் கண்டுவருகின்றன.

தங்கள் மனத்தையே ஓம்காரமாக எண்ணி தேவர்கள் தியானம் செய்தார்கள். அந்த மனத்தையும் அசுரர்கள் பாபத்தால் தாக்கி விட்டார்கள். அதனால் தான் நல்ல எண்ணம், தீய எண்ணம் இரண்டுமே மனத்தில் உருவாகின்றன.இறுதியாகத் தங்கள் மூச்சுக் காற்றாகிய பிராணனையே பிரணவமாக எண்ணித் தேவர்கள் தியானித்தார்கள். அந்த மூச்சுக் காற்றை அசுரர்கள் தாக்க முற்பட்ட போது, அத்தனை அசுரர்களும் பாறைமேல் எறியப்பட்ட களிமண் போல் தூள் தூளாகி அழிந்து போனார்கள்.

வெற்றி பெற்ற தேவர்கள் தங்கள் குருவான பிருகஸ்பதிக்கு நன்றி தெரிவித்து விட்டு, “குருவே! மூக்கு, நாக்கு, காது, கண், மனம் போன்ற அங்கங்களாக ஓம்காரத்தைத் தியானித்த போது, அசுரர்கள் எங்களைத் தாக்கி விட்டார்கள். ஆனால் மூச்சுக் காற்றை ஓம்காரமாக எண்ணித் தியானித்த போது அவர்கள் அழிந்து போனார்களே! என்ன காரணம்?” என்று வினவினார்கள்.

அப்போது பிருகஸ்பதி, “தேவர்களே! மூச்சுக் காற்று என்பது வெறும் பிராண வாயு மட்டுமல்ல. உயிர் அளிக்கும் இறைவனான திருமால் மூச்சுக் காற்றைத் தனக்கு உடலாகக் கொண்டு அதை உள்ளிருந்து இயக்கி நம்மைச் சுவாசிக்க வைக்கிறார். திருமால்தான் அந்த உயிர்மூச்சின் வாயிலாக ஒவ்வொருவருக்கும் சுவாசத்தையும், உடல் வலிமையையும், சக்தியையும் கொடுத்து வருகிறார். இறைவன் தந்ததும், இறைவனுக்கு உடலாக இருப்பதுமான அந்த மூச்சுக் காற்றைத் தாக்கியவர்கள் அழிவைச் சந்திப்பதில் வியப்பில்லையே!” என்று பதில் அளித்தார்.

மேலும், “தேவர்களே! முன்பு நீங்கள் பாற்கடலைக் கடைந்தீர்களே! அதற்கான சக்தி உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? துர்வாசரின் சாபத்தால் சக்தி இழந்து நின்ற உங்களுக்குச் சக்தி கொடுத்தவர் திருமால். பாற்கடல் கடைகையில் மந்தர மலையைத் தன் முதுகில் சுமந்த படி கூர்ம மூர்த்தியாக (ஆமை வடிவில்) தோன்றிய திருமால், உங்களுக்கு நல்ல மூச்சுக் காற்றையும், உடல் வலிமையையும் சக்தியையும் தந்து நீங்கள் பாற்கடல் கடைவதற்கு அருள்புரிந்தார். அதனால் தான் அந்தக் கூர்ம மூர்த்தியைக் குறித்த மந்திரத்தில் ‘அனந்த பல சக்தயே’ (எல்லை இல்லாத வலிமையும் சக்தியும் கொண்டவர்) என்று சொல்லி அப்பெருமானை வணங்குகிறார்கள்!” என்று விளக்கினார் பிருகஸ்பதி.

இவ்வாறு கூர்மாவதாரத்தில், தேவர்

களுக்கு மூச்சுக்காற்றும், வலிமையும்,

சக்தியும் தந்து அருள்புரிந்தபடியால், கூர்ம மூர்த்திக்கு ‘ப்ராணத:’

என்று திருநாமம். ‘ப்ராண:’ என்றால் மூச்சுக் காற்று. ‘த’

என்றால் கொடுப்பவர். ‘ப்ராணத:’

என்றால் மூச்சுக்காற்றைக் கொடுப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 323-வது திருநாமம்.

காற்று மாசுபட்டு அசுத்தமாகி வரும் இச்சூழலில், சுவாசம் தொடர்பான நோய்களும் அதிகரித்து வரும் நிலையில், நாம் அனைவரும் இணைந்து “ப்ராணதாய நமஹ:” என்று சொல்லிக் கூர்ம மூர்த்தியை வழிபட்டால், நம் சுவாசத்துக்கு ஏற்ற நல்ல மூச்சுக் காற்றும், அதனடியாக நல்ல ஆரோக்கியமும் சக்தியும் நமக்குக் கிட்டும்படி அப்பெருமான் அருள்புரிவார்.

324. வாஸவாநுஜாய நமஹ: (Vaasavaanujaaya namaha)

(திருநாமங்கள் 323 முதல் 333 வரை - ஆமை வடிவத்துடன் திருமால் எடுத்த கூர்ம அவதாரத்தின் பெருமைகள்)ஒருமுறை துர்வாச முனிவர் மகாலட்சுமியின் பிரசாதமான ஒரு மாலையை இந்திரனுக்குப் பரிசாக வழங்கினார். ஆனால் அந்த மாலையின் பெருமையை அறியாத இந்திரன், அதைத் தனது யானையான ஐராவதத்தின் தலையில் வைத்தான். அந்த யானை செய்வதறியாது, அம்மாலையைத் துதிக்கையால் எடுத்துக் காலடியில் போட்டு மிதித்து விட்டது. இதனால் கோபம் அடைந்து துர்வாசர், “தேவேந்திரா! நீ உனது அனைத்துச் செல்வங்களையும் இழப்பாய்!” என்று சாபம் கொடுத்துவிட்டார்.

இந்தச் சாபத்தின் விளைவாக, அடுத்து நடந்த தேவ-அசுரப் போரில் தேவர்கள் அசுரர்களிடம் தோல்வி அடைந்தார்கள். மீண்டும் அசுரர்களை வீழ்த்தி, இழந்த தேவலோக சாம்ராஜ்ஜியத்தைப் பெற என்ன வழி என்று அறியாமல் தவித்த தேவர்கள், பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் திருமாலைச் சரண் அடைந்து அவரது உதவியை நாடினார்கள்.

திருமால் தேவர்களைப் பார்த்து, “நீங்கள் அசுரர்களை வெல்ல வேண்டும் என்றால் உங்களுக்கு முதலில் நல்ல வலிமை வேண்டும். எனவே பாற்கடலைக் கடைந்து அதிலிருந்து அமுதத்தை எடுத்து நீங்கள் பருகினால், நல்ல உடல் வலிமையும் நீண்ட ஆயுளும் பெறலாம். அதன்பின் நீங்கள் அசுரர்களை எதிர்த்துப் போர்புரிந்தால் வெற்றி உங்களுக்கே!” என்று கூறினார்.“வலிமை இழந்து நிற்கும் எங்களால் எப்படிப் பாற்கடலைக் கடையமுடியும்?” என்று தேவர்கள் வினவியபோது, “நீங்கள் அசுரர்களுக்கும் அமுதத்தில் பங்கு தருவ தாகச் சொல்லி அவர்களையும் கூட்டுச் சேர்த்துக்கொள்ளுங்கள்.

முடிவில் அமுதம் அவர்களுக்குக் கிடைக்காதபடி நான் பார்த்துக் கொள்கிறேன்!” என்று ராஜ தந்திர ரீதியில் ஆலோசனை வழங்கினார் திருமால்.

அதன்படி தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடையத் தயாரானார்கள். அவ்வளவு பெரிய கடலைக் கடைவதற்குப் பெரிய மத்து வேண்டுமே என்று அனைவரும் சிந்தித்த நேரத்தில், கருட வாகனத்தில் மந்தரமலை எனும் மலையையே மத்தாகக் கொண்டு வந்து தந்தார் திருமால். அதில் கயிறாகச் சுற்ற வாசுகி என்னும் பாம்பைப் பயன்படுத்துமாறு திருமால் ஆலோசனை வழங்கினார்.

மந்திரத்தை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையத் தொடங்கினார்கள். ஆனால் மந்தரமலை பாற்கடலுக்குள் அழுந்தத் தொடங்கியது. அதை யாராவது நிலைநிறுத்தினால்தான் மேற்கொண்டு கடைய இயலும். என்ன செய்வதென்று தெரியாமல், இந்திரன் தேவகுருவான பிருகஸ்பதியின் உதவியை நாடினான்.

“இந்த மலையைத் தூக்கி நிறுத்த வேண்டும் என்றால், பாற்கடலுக்கு அடியில் யாரேனும் ஒருவர் சென்று இந்த மலையைத் தாங்க வேண்டும். அது நம் போன்றவர்களுக்கு இயலாத காரியம். திருமால் ஒருவரால்தான் அதைச் செய்ய முடியும்!” என்றார் பிருகஸ்பதி. “ஏற்கனவே பற்பல உதவிகளை அவர் செய்துவரும் நிலையில், மலையைத் தாங்க வேண்டும் என்றும் அவரிடமே போய்க் கேட்பது முறையா?” என்று இந்திரன் கேட்டான்.

அதற்குப் பிருகஸ்பதி, “திருமாலிடம் ஒரு பண்பு உண்டு. நீயே கதி என்று அவரது திருவடிகளை ஒருவன் பிடித்துக் கொண்டு விட்டால், அந்த பக்தனுக்காக எதையும் செய்வார் திருமால். அவரைச் சரண் அடை! அவர் காப்பார்!” என்றார் பிருகஸ்பதி. இந்திரனும் திருமாலைச் சரண் அடையவே, ஆமை வடிவில் கூர்மாவதாரம் செய்தார் திருமால்.

ஆமை வடிவில் வந்த திருமால் இந்திரனைப் பார்த்து, “இந்திரா! நீ மேலே இருந்து பாற்கடலைக் கடைவாயாக! நான் உனது தம்பியின் ஸ்தானத்தில், பாற்கடலின் அடிக்குச் சென்று என் ஓட்டில் மலையைத் தாங்கிக் கொள்கிறேன்!” என்று சொல்லி விட்டுப் பாற்கடலின் அடியாழத்துக்குச் சென்று, தன் முதுகில் மந்தரமலையைத் தாங்கிப் பிடித்தார். பாற்கடல் கடைந்து முடிக்கும் வரையில் மலையைத் தாங்கிக் கொண்டே இருந்தார். பின் அமுதைப் பெற்று தேவர்களும் அசுரர்களை வீழ்த்தினார்கள் என்பது வரலாறு.

இந்த வரலாற்றை உற்றுநோக்குகையில், இந்திரன் தன்னிடம் அடைக்கலம் புகுந்தான் என்ற ஒரே காரணத்துக்காக, அவனைத் தனக்கு அண்ணனாக ஆக்கி, தான் அவனுக்குப் பின் பிறந்த தம்பி என்று தன்னைச் சொல்லிக்கொண்டு, ஆமை வடிவுடன் பாற்கடலின் அடிக்கே சென்று, கடைந்து முடிக்கும் வரை மலையைத் தாங்கி இவ்வளவு உதவிகளைத் திருமால் செய்திருக்கிறார் என்பதை உணரமுடிகிறதல்லவா?

இந்த குணத்தை விளக்குவது தான் ‘வாஸவாநுஜ:’ என்ற ஸஹஸ்ரநாமத்தின் 324-வது திருநாமம். ‘வாஸவ:’ என்று இந்திரனுக்குப் பெயர். ‘அநுஜ:’ என்றால் தம்பி. தன்னைச் சரணடைந்த இந்திரனைக் காப்பதற்காக அவனுக்குத் தம்பியாக, கூர்ம மூர்த்தியாகத் திருமால் அவதரித்த படியால், அவர் ‘வாஸவாநுஜ:’ (வாஸவ: + அநுஜ:) என்றழைக்கப்படுகிறார். ‘வாஸவாநுஜ:’ என்றால் இந்திரனின் தம்பி என்று பொருள்.

“வாஸவாநுஜாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் நேரும் அனைத்துத் தடங்கல்களையும் திருமால் போக்கி, அவர்களுக்கு வேண்டியதை அருளிக் காப்பார்.

திருக்குடந்தை

டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Related Stories: