சூழும் சுடர்க்கு நடுவே...

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்-70

‘‘வேலை நிலம் ஏழும்’’

கர்ம பூமி என் வட சொல்லை வேலை நிலம் என்று தமிழில் கூறியுள்ளார். ஆன்மா அனுபவத்தைப் பெறுவதற்காக செயல்படும் இடமே உடலாகும். இதையே வேலை நிலம் என்று கூறுகின்றார். [வேல் என்பதற்கு அறிவு என்பது பொருள் ஐ - என்பதற்கு இறைவன் என்பது பொருள். நிலம் - நிலைத்திருக்கின்ற பண்பு]. ஆன்மாக்களுக்கு அறிவைத் தந்து ஆனந்தத்தில் அழுத்த இறைவனானவன் தங்கியிருக்கின்ற இடம் சூக்கும தேகம். இது நுண்ணுடல் என்று தமிழில் கூறப்படுகிறது. யோக சாத்திரம் ஏழுவகை சக்கரத்தைக் குறிப்பிடுகிறது.

உடலானது கண்டு, கேட்டு, உற்று, உணர்ந்து, நுகர்ந்து கொள்வதற்கு உதவும். ஏழாவது அறிவு என்பது ஆன்மா உடலினின்று நீங்கி பிரித்தரிகின்ற அறிவு இந்த ஏழையும் ‘‘வேலை நிலம் ஏழும்’’ என்கிறார்.ஆன்மாவானது அறிவித்தால் அறியும் தன்மையுடையது அறிவித்தாலன்றி அதனால் அறிதல் இயலாது அப்படி அறிவிப்பவன் இறைவன், அறிபவன் ஆன்மா, அறிபொருள் அனுபவம், அறிய உதவும் சாதனம் மெய், வாய், கண், மூக்கு, செவி, மனம், அறிவு, ஆன்மா அறிந்து கொள்ள உதவும் உடலை குறிக்கின்றார். இதை வித்யாதேகம் (அறிவுடல் - ஞானமய கோசம்) என்று குறிப்பிடுகின்றார். இதையே ‘‘வேலை நிலம் ஏழும்’’ என்கிறார்.

‘‘பருவரை எட்டும் எட்டாமல்’’

ஆன்மாவின் செயல்களான காணுதல், கேட்டல், முகர்தல், உண்ணல், தீண்டல், நினைத்தல், அறிதல், இருத்தல் [சுவாசித்தல்] என்ற செயல்களை செய்கின்ற இடம் எட்டு. அதனால் அது பெறுகின்ற அனுபவம் நான்கு அவை - சுகம், துக்கம், சமம், சாவதானம் [கவனிக்காது இருத்தல்] இந்த நான்கு வகை அனுபவத்தை ஆன்மா அடைவதற்கு கொடுக்கப்பட்டதுதான் இந்த உடல் வரையறுக்க முடியாது. பெரு -  எல்லையிலாத (அளவிலாத) நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா இவற்றை பரு என்ற சொல்லாலும். வரையறுக்கப்பட்ட சிறு எல்லையைக் கொண்ட நிலத்தின் அம்சமான மூக்கு, நீரின் அம்சமான நாக்கு நெருப்பின் அம்சமான மெய், காற்றின் அம்சமான காது, ஆகாசத்தின் அம்சமான கண், சூரியனின் அம்சமான அறிவு, சந்திரனின் அம்சமான மனம், ஆன்மாவின் அம்சமான இருப்பு இவற்றை ‘‘வரை’’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார். எல்லைக்குட்படாததை (ஆகாசம்) பரு என்றும் எல்லைக்கு உட்பட்டதை (உடல்) வரை என்று குறிப்பிடுகின்றார்.

இவ்விரண்டையும் இணைத்து ஆன்மாவானது அறிவனுபவம் பெற உதவும் வரையறுக்கப்பட்ட உடலை ‘‘பருவரை எட்டும்’’ என்கிறார். பாரும், புனலும், வெங்காலும் படர் விசும்பும் ஊரும் முருகு சுவை ஒளி ஊறொலி ஒன்றுபடச் சேரும் தலைவி - 68 என்பதிலிருந்து அறியலாம். இந்த உடலின் உதவியினால் பெறப்பட்ட அறிவைக் கொண்டு ஆன்மாவை அறிய இயலாது என்பதையே ‘‘எட்டாமல்’’ என்கிறார். ‘‘பருவரை எட்டும் எட்டாமல்’’ என்ற வரியால் ஆன்மாவை பற்றிய உண்மையை உடல் சார்ந்து பெற்ற அறிவு மற்றும் அனுபவத்தைக் கொண்டு அறிய இயலாது.

‘இரவு’’ இந்த உலகத்தில் தனது வாழ்வை நீத்தபோது (உடலை உயிர் விட்ட பிறகு) ஆன்மா இரண்டு வழியில் செல்கிறது. அது இந்த பூ உலகத்தில் செய்த பாவ, புண்ணியத்தை கொண்டு ஒளி பொருந்திய பாதை, இருட்டாகிய பாதை என்று இரண்டில் ஒன்றை அடைகிறது. நல்ல வழிகளை விட்டு பிறருக்கு துன்பம் இழைத்து தீயவழியில் பல சுகத்தை பெற்று, இப்பூவுலக வாழ்க்கையை அனுபவித்தவர்கள் இருளாகிய ஒளியற்ற பாதையில் நரகக் குழியை நோக்கி அழைத்து செல்லப்படுவார்கள். அங்கே துன்பப்படுத்தப்படுவார்கள்.

‘‘பகல்’’ பூவுலகில் வாழும்போது அடியாரை வணங்குதல், ஆண்டவனை வணங்குதல், அறத்துடன் வாழ்தல் போன்ற நற்செயல்களை செய்து வாழ்ந்ததுடன், இப்பூவுடலை நீத்தபோது ஒளிபொருந்திய பகல் என்ற வழியிலே திவ்ய சரீரம் (ஒளியுடல்) பெற்று அழைத்து செல்லப்படுவார்கள். அங்கே நினைத்ததை அளிக்கும் கற்பக மரத்தின் கீழ் வசிக்கச் செய்வதன் மூலம் தான் விரும்பியதையெல்லாம் பெற்று மகிழ்வர்.

‘‘பாவையர் ஆடவும் பாடவும் பொற் தமனியக்காவினில் தங்குவரே - 74’’ இவை அனைத்தையும் பகல் என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றார். ‘‘சூழும் சுடர்க்கு நடுவே’’ இப்பூவுலகத்தில் சில புண்ணியங்களையும் செய்து நன்றையும் தீதையும் - 95 சரிவர அறியாமல் ெபண் ஆசை, பொன் ஆசை, மண் ஆசை கொண்டு இறை அன்பு இல்லாமல், அறியாமல் ஆசை மேலிட்டு இப்பூ உலகத்தில் சில புண்ணியங்களையும், சில பாவங்களையும், செய்ததால் புண்ணியத்தை அடைய முடியாமல் பாவத்திற்கான நரகத்திற்குச் செல்லாமல் இடைப்பட்ட நிலையில் நின்று அசரீரம் பெற்று வசிக்கின்ற இடம் பித்ருலோகம், இதை வெண்பகடூறும் பதம் - 91 என்று குறிப்பிடுவார்கள்.  இந்த நிலையையே ‘‘சூழம் சுடர்க்கு  நடுவே’’ என்கிறார்.

இதையே பதிகத்தில்,

வாசமலர் மருவளக பாரமும்

தண்கிரண

மதிமுகமும் அயில் விழிகளும்

வள்ளம் நிகர் முலையும் மான் நடையும் நகை மொழிகளும்

 வளமுடன் கண்டு மின்னார்

 பாச பந்தத்திடை மனங் கலங்கித்  தினம்

 பல வழியும் எண்ணி யெண்ணிப்

 பழிபாவம் இன்னதென்று அறியாமல் மாயப்ர

  பஞ்ச வாழ்வு உண்மை  என்றே

 ஆசை மேலிட்டு வீணாக நாய் போல் திரிந்து

அலைவதல்லாமல்  - என்கிறார்.

‘‘கிடந்து’’  இப்பூவுலகில் பூத சரீரம் பெற்று இவ்வுலக நன்மையாகிய தனம் தரும், கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும் நல்லன எல்லாம் தரும் - 69’’ போன்ற யாவற்றையும் பெற்றோர் அல்லது - ஆசை கடலுள் அகப்பட்டு -  ஆன்ம அறிவும் இல்லாமல், இவ்வுடலை நீத்தால் சொர்க்கம், நரகம், பித்ருலோகம், இங்கெல்லாம் செல்லாமல் இப்பூவுலகில் மீண்டும் பிறவி எடுத்தலையே  ‘‘கிடந்து ’’ என்கிறார். இதையே இங்கு இனிப்பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே’’ -  என்பதனால் அறியலாம்.

‘‘சுடர்கிறதே’’ என்ற சொல்லானது ‘‘வேலை நிலம் ஏழு’’ என்று சொல்லக் கூடியதில் அறிவு வடிவாகவும், அதாவது மெய், வாய், கண், மூக்கு , செவி, மனம், புத்தி இவை அனைத்தையும் இயக்கும் அடிப்படையான அறிவாக இருந்து விளங்கச் செய்கின்றாள். அந்த விளங்கச் செய்கின்ற பண்பையே சுடர்கிறதே என்கிறார்.

‘‘பருவரை எட்டும்’’ என்பதனால் அஸ்தி, சுக்லம், இரத்தம், மாம்சம், மஜ்ஜை, கேசம் சருமம், பிராணன் என்பன உடம்பின்  8 அடிப்படை பொருளாக உமையம்மையே திகழ்கின்றாள். இவற்றின் தன்மை மாறாமல் வளர்கின்ற ஆற்றல் மிகுந்த பண்பாய் உமையம்மையே திகழ்கின்றாள் அந்த பண்பையே ‘‘சுடர்கின்றதே’’ என்கிறார். இதை ஸஹஸ்ரநாமம், மஜ்ஜா ஸம்ஸ்தா, அஸ்தி ஸம்ஸ்திதா, ருதிர ஸம்ஸ்திதா என்கிறது.

வாழும் படி ஒன்று  என்பது     -   

பொன்னுலக வாழ்கையும்

வீழம்படி அன்று என்பது  -   

நரகத்தையும்

வில்லும் படி அன்று என்பது    -    

பித்ரு லோக வாழ்க்கையையும்

மனத்தே ஒருவர் என்பது  -    

மண்ணுலக வாழ்க்கையையும்

கண்டு கொண்டேன் என்பது    -    

முக்தியையும்

-என்று குறிப்பிடுவதன் மூலம்

ஆன்மாக்கள் பெறும் உடலையும்

அதனால் அது அடையும் பயனையும்

விளக்கி முத்தியே முடிந்த முடிவு. இவை அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பது உமையம்மையின் ‘‘அருளே அதனால் அதை பெற நம்மை வலியுறுத்துகிறாள். இந்தப் பாடல் முழுவதும் ‘‘ஆத்ம ஞான’’ விளக்கமே.

(தொடரும்)

தொகுப்பு: முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

Related Stories: