காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்: அத்ரி - அனசூயை

முனிவர்கள்! முனிதலை முழுமையாக நீக்கியவர்கள்; அதாவது கோபத்தை நீக்கியவர்கள். ஆனால் அப்படிப்பட்ட வர்களின் கோபத்தைத் தூண்டும்படியாக, எல்லைமீறி அந்த முனிவர்களிடம் விளையாடினால், அவர்களால் விநாடி நேரம்கூடக் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாது. உலக நன்மைக்காகச் சாபம் கொடுத்து விடுவார்கள்.

 

குணம் என்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது

(குறள் - 29)

என ‘நீத்தார் பெருமை’ அதிகாரத்தில் திருவள்ளுவர் இக்கருத்தைக் கூறுகிறார். அது மட்டுமல்ல; அப்படிப்பட்ட உத்தம முனிவர்களுக்குக் கோபம் வந்தால், அதை நம்மால் ஒரு விநாடிகூடத் தாங்க முடியாது; கடுமையாகப் பாதிக்கும். பாதிப்பை உண்டாக்கக்கூடிய அந்த முனிவர்களே, அருள்மழை பொழிவதிலும் எல்லையற்றவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட முனிவரான அத்ரி முனிவரையும் அவர் மனைவியான அனசூயா தேவியையும் பற்றிய வரலாறே இது.

சீதாதேவி, ராமர், லட்சுமணர் ஆகிய மூவரும் வன வாசம் வந்தபோது, அத்ரி முனிவர் - அனுசூயா தேவி தம்பதியரை தரிசித்தார்கள். அப்போது நிகழ்ந்த தகவல்களே இவை. ராமர் முதலானோர் வனவாசம் வந்த பிறகு, சத்ருக்னனுடன் அயோத்தி வந்த பரதன், அயோத்தியில் நடந்தவற்றையெல்லாம் அறிந்தார்; தாளவில்லை; ‘‘என் அண்ணாவான ராமன் முதலானோரைக் காட்டிலிருந்து திருப்பிக் கொணர்வேன். என் தாயாரால் எனக்குக் கிடைத்த இந்த அரச பதவியை ஏற்க மாட்டேன்’’ என்ற பரதன் ராமரைத் தேடிப் போனார்; அனைவரும் பரதனைத் தொடர்ந்தார்கள்.

காட்டிற்குப்போன பரதன் ராமரைத் தரிசித்து, எவ்வளவோ வேண்டுகோள் விடுத்தும், ராமர் ஏற்கவில்லை; ”அன்புத்தம்பி பரதா! தந்தையின் வாக்கை, சத்தியத்தை மீறக் கூடாது. நீ போய் ராஜ்ஜியத்தை ஆட்சி செய்’’ எனப் பல விதங்களிலும் தர்ம உபதேசம் செய்து அனுப்பினார். பரதனும் ராமருடைய பாதுகைகளைப் பெற்றுத் திரும்பி, பாதுகா பட்டாபிஷேகம் செய்து, துறவியாகவே அரசாங்கத்தை நிர்வாகம் செய்தார்.

 பரதன் முதலானோர் திரும்பியதும், ராமர் தம் இருப்பிடத்தை மாற்றத் தீர்மானித்தார்.ஏன்?அதை ராமர் வாயிலாகவே கேட்கலாம்; ‘‘இங்கே பரதன் என்னால் பார்க்கப் பட்டான். நகர மக்களும் தாயார்களும்(கௌசல்யா, சுமித்திரை, கைகேயி) பார்க்கப்பட்டார்கள். அவர்களைகுறித்து எப்போதும் வருத்தப்படும் எனக்கு, அந்த நினைவுகளும் தொடர்கின்றன.

 ‘‘ஆகையால் நாம் இங்கு இருக்கக்கூடாது. வேறு இடம் நோக்கிச் செல்ல வேண்டும்’’ என்ற ராமர் அங்கிருந்து புறப்பட்டார்; சீதையும் லட்சுமணனும் பின் தொடர்ந்தார்கள். மிகவும் சுருக்கமாகப் பார்த்த இத்தகவல்கள், ஓரளவாவது நமக்குத் தெரியும். ஆனால் இதில் புதைந்துள்ள மன ரீதியான தகவல்?பரதன் முதலானோர் வந்து சந்தித்த அந்த இடத்திலிருந்து, ராமர் ஏன் வேறிடத்தைத் தேடிப்போக வேண்டும்?

 எந்த இடத்தில் நமக்குப் பாதிப்பு ஏற்படுகிறதோ, அங்கேயே இருந்தால் பாதிப்புகளின் நினைவுகள் அடிக்கடி வந்து குழப்பிவிடும்; நினைவுகள் பாதிப்பையே நினைத்துக் கொண்டிருக்கும்; சரிவரச் செயல்பட முடியாது; பிறகு? அவ்வளவு தான். நிகழ்ச்சிகளை விட, நினைவுகளே நம்மைப் பாதிக்கும். தப்ப வேண்டுமானால், அந்த இடத்தில் இருந்து வேறோர் இடத்திற்குப் போய் விட வேண்டும். இன்றைய உள இயல் சொல்லும் தகவல் இது. இதை, தன் வாழ்விலேயே செய்து காட்டி, நமக்கு உணர்த்தியவர் ராமர். இதன் காரணமாகவே பரதன் முதலானோர் வந்துசென்ற அந்த இடத்தை விட்டு வேறிடம் நோக்கிப் புறப்பட்டார் ராமர். பழைய நினைவுகளிலிருந்து மீண்டு, அமைதி தேடி, நிம்மதி தேடிச்செல்லும் இடம் எப்படி இருக்க வேண்டும்?

நமக்கு ஆறுதல் சொல்லும் இடமாக இருக்க வேண்டும். கடன் தொல்லை தாங்காமல் நண்பரிடம்போய் உதவி கேட்டு நிற்கிறோம். அவர், ”எனக்கே உன்னவிடக் கடன் அதிகமா இருக்கு. வா! ரெண்டுபேர் கடனையும் தீத்துக்கலாம். இந்தக் கடன் பத்தரத்துல கையெழுத்தப் போடு! ரெண்டு பேர் கடனையும் சேத்துத் தீத்துக்கலாம்\” என்று பேசி, நம்மை அடகு வைத்துத் தன் சுமையையும் நம் மீது ஏற்றினால்?

அப்படி இருக்கக் கூடாதல்லவா?

பழைய நினைவுகளின் துயரிலிருந்து மீள்வதற்காக இடம்மாறிய ராமர் போய்ச் சேர்ந்த இடம் அத்ரி முனிவர் - அனசூயா தேவி ஆசிரமம்! ஆம்! அங்குதான்சென்றார் ராமர். அனைவரையும் கெடுக்கும் ‘திரி’குணங்களான- மூன்று குணங்களான, காமம், வெகுளி, மயக்கம் எனும் மூன்றையும் விலக்கியவர் ‘அத்ரி’ முனிவர்; அவர் மனைவியான அனசூயா தேவியோ ‘அசூயை’ இல்லாதவர்; அதாவது பொறாமை என்பது சிறிதளவுகூட இல்லாதவர். இப்படிப்பட்ட தம்பதியர் இருக்கும் இடத்தில், குறை ஏது?

அதனால்தான் அத்ரி முனிவர் ஆசிரமத்தை நாடி வந்தார் ராமர்.தன் இருப்பிடம் தேடி வந்த ராமர் முதலான மூவரையும் அன்போடு வரவேற்று, முறைப்படி உபசரித்தார் அத்ரி முனிவர். உபசரித்த முனிவருக்கு நமஸ்காரம்செய்தார் ராமர். ஆசிகூறிய முனிவர், ‘‘சீதையே! நீ அனசூயையை வணங்கு! அவள் பெருந்தவம் செய்தவள்; பாக்கியசாலி; தர்மங்களைக் கடைபிடிப்பவள். அவளுக்கு நீநமஸ்காரம் செய்! அனைவராலும் வணங்கப்பட வேண்டியவள் அவள்.

பெரும்புகழும் எப்போதும் சாந்தமும் கொண்ட முதியவளான அனசூயை உனக்கு நலம் புரிவாள் என்றார், அத்ரி முனிவர். ராமரும், ‘‘அப்படியே செய்!’’ என்று சொல்ல, சீதாதேவி அனசூயையை வலம்வந்து வணங்கினாள். இந்த இடத்தில் வால்மீகி முனிவர், அனசூயா தேவியின் தோற்றத்தை விவரிக்கும் வார்த்தைகள்; ‘‘வாடிய உடம்பு, முதுமை பருவத்தால் தள்ளாடும் உடம்பு, வெள்ளைவெளேர் என்று வெளுத்த தலை, பெருங்காற்று வீசினால் அப்படியும் இப்படியுமாக ‘கிடுகிடு’வென நடுங்கும் வாழை மரத்தைப் போன்ற நிலையோடு விளங்கிய கற்புக்கரசியான அனசூயா தேவிக்கு சீதை தன் பெயரைச்சொல்லி நமஸ்காரம் செய்தாள்’’.

உடல் தோற்றத்தை வைத்து யாரையும் எடைபோடக் கூடாது; குணங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்; முதியவர்களுக்கு மரியாதை அளிக்கத் தவறக் கூடாது என்பவைகளை விளக்கும் பகுதி இது. இதனால் விளையக்கூடிய நன்மை என்ன என்பதை விவரிக்கும் பகுதி, மேலே தொடர்கிறது.வணங்கிய சீதைக்குப் பலவாறாக ஆசி கூறினார் அனசூயை: ‘‘சீதே! உறவினர்களைத் துறந்தாய்; அரச போகத்தைத் துரும்பைப்போல எண்ணி, அதையும் நீக்கினாய்; காட்டுக்கு ஓட்டப்பட்ட கணவரை, இந்நிலையிலும் பின் தொடரும் உன்பாக்கியத்தை என்ன சொல்வது?

‘‘சீதையே! கலைஞானம் எல்லாம் கற்றவள் நான். அவற்றையெல்லாம் ஆராய்ச்சி செய்து பார்த்தால், கணவரை விடமேலானது எதுவுமே இல்லை என்று சொல்லி விடலாம்’’ என்ற அனசூயாதேவி சீதையை மனமாற வாழ்த்தி, சீதையின் தலையை உச்சி முகர்ந்தார். சீதைக்கு மெய் சிலிர்த்தது. அனசூயாதேவி தொடர்ந்தார்; ”சீதே! நோன்புகள் பலவற்றை முறைப்படி செய்ததாலும் எனக்குண்டான கடமைகளைத் தவறாமல் செய்ததாலும் என்னிடம் ஏராளமான தவப்பலன்கள் உள்ளன. உனக்கு என்ன வேண்டும் சொல்! உன் விருப்பத்தை உடனே நிறைவேற்றுவேன் நான்” என்றாள். சீதை நெகிழ்ந்தாள்; ‘‘அம்மா! நீங்கள் என்னிடம் பேசிய பேச்சு, உங்கள் உபதேசங்களே  போதும் எனக்கு. வேண்டிய எல்லாவற்றையும் பெற்று விட்டதாகவே நினைக்கிறேன்’’ எனப் பதில் சொன்னாள்.

சீதையின் இந்த வார்த்தைகளைக் கேட்டு, அனசூயாதேவி மேலும் மகிழ்ந்தார்; ‘‘அம்மா! அம்மா! சீதாதேவி! உன் வார்த்தைகள் என்னை மகிழ்வடையச் செய்கின்றன. உன்னையும் நான் மகிழ்வடையச் செய்ய வேண்டுமல்லவா? இந்தா! திவ்யமான மலர்மாலை, ஆடை, ஆபரணங்கள், குங்குமம், சந்தனம், நறுமணம் மிக்க தைலம் எனும் இவற்றை யெல்லாம் தருகிறேன். பெற்றுக்கொள்! இவை உன்னை வாடாமல் காப்பாற்றும்; தீமைகளைத் தடுக்கும்” என்றெல்லாம் சொல்லித் தந்து வாழ்த்தினாள்.

அனசூயாதேவி தந்தவற்றை அன்போடும் பணிவோடும் பெற்றுக் கொண்டாள் சீதை; கூடவே கைகளைக் கூப்பிநமஸ்காரமும் செய்தாள்.அனசூயாதேவி தொடர்ந்தாள்; ‘‘சீதே! சுயம்வரத்தில் ராமன் உன்னைத் திருமணம் செய்து கொண்டான் என்பதைக் கேள்விப்பட்டேன். உன் திருமணம் எப்படி நடந்தது என்று விரிவாகச் சொல்லேன்; உள்ளதை உள்ளபடி, கூட்டிக் குறைத்துச் சொல்லாமல், அப்படியே நீ சொல்!” என்றாள் அனசூயாதேவி.

அதைக்கேட்ட சீதாதேவி, தன் பிறப்பில் இருந்து வில்லை வளைத்து ராமர் தன்னைத் திருமணம் செய்து கொண்டதுவரை, விரிவாகச் சொன்னாள். அதைக் கேட்டுக் கொண்டிருந்த அனசூயாதேவி, சீதையை மறுபடியும் உச்சி முகர்ந்து, அப்படியே கட்டியணைத்துக் கொண்டாள்; ‘‘சீதே! கேட்பவர்களைத் தன் வசப்படுத்தும் உன் கல்யாணத்தைப் பற்றிய வார்த்தைகள் என்னை, சந்தோஷப்படுத்துகின்றன’’ என்றாள். அப்போது இரவு நெருங்கியது. உணவிற்காகப் போயிருந்த பறவைகள் எல்லாம் தங்கள் கூடுகளுக்குத் திரும்பின.

அவற்றையெல்லாம் சீதைக்குச் சுட்டிக் காட்டிய அனசூயாதேவி, ‘‘அதோ பார்! மாலை நேரமானதும் கூடுகளுக்குத் திரும்பிய பறவைகள் மென்மையாகக் கத்துவதைக்கேள்’’ என்றார். அது, தாய் தன் குழந்தைக்கு இயற்கை காட்சிகளைச் சுட்டிக்காட்டி வர்ணித்து விவரிப்பதைப்போல் இருந்தது. அதற்குமேல் நடந்த நிகழ்வுகளையும் சுட்டிக் காட்டிச் சொல்லத் தொடங்கினாள், அனசூயாதேவி.

* ‘‘அங்கு பார் சீதே! முனிவர்கள் எல்லாம் நீராடி முடித்து, மரவுரி உடுத்தி, வழிபாடு செய்ய நீர் நிலைகளில் இருந்து கைகளில் நீர்ப் பாத்திரங்களோடு, வருகிறார்கள் பார்! ஆசிரமங்களில் செய்யப்படும் ஹோமங்களால் ஓங்கியெழும் செம்புகை, புறாவின் கழுத்து போல சற்றுச்சிவந்து, காற்றானது வீச அப்படியே அந்தப்புகை பரவுவதைப் பார்!

*தெரியவில்லை” என்றார்.இவ்வாறு இனிமையான காட்சிகளைக் காட்டி, சொல்லிக் கொண்டு வந்த அனசூயாதேவி, மேலும் சில காட்சிகளையும் விவரிக்கத் தொடங்கினார்.

* ‘‘அம்மா! ராட்சசர்களும் பிசாசங்களும் அலைந்து திரிவதைப் பார்! நம் தபோவனத்தில் உள்ள விலங்குகள் எல்லாம், வேதம் ஓதும் திண்ணைகளில் - மேடைகளில்படுத்து உறங்குவதைப் பார்!

* ‘‘பெண் ஒருத்தி கைகளில் விளக்கைத் தாங்கி வருவதைப் போல, இதோ! சந்திரன் வருவதைப்பார்! என்ன அழகு!

என்ன அழகு! சரி சீதே! நீ செல்!

ராமனுக்கு உதவியாக இரு! உன்னால் நான் சந்தோஷப்பட்டேன். ராமன் உன்னைத் தேடுவான். நீ போ! போய் அவனுக்கு உதவியாக இரு!

* ‘‘சீதே! அம்மா! அதற்கு முன்னால் என் கண் எதிரிலேயே நீ அலங்காரம் செய்து கொள்! இந்த ஆடை- ஆபரணங்களை அணிந்து கொள்! நான் சந்தோஷப்படுவேன்; ராமனும் சந்தோஷப்படுவான்” என்றாள்.

அதை அப்படியே ஏற்ற சீதை,அனசூயாதேவி தந்த ஆடைகளை அணிந்து, மலர்களைச்சூடி, ஆபரணங்களை அணிந்து கொண்டாள்; அனசூயாதேவிக்கு நமஸ்காரம் செய்து அங்கிருந்து ராமர் இருக்குமிடம் நாடிச் சென்றாள்; அனசூயாதேவி சொன்னவைகளைச் சொல்லி தந்தவற்றைத்தான் அணிந்து கொண்டிருப்பதையும் காட்டினாள்.

ராம - லட்சுமணர்கள் மகிழ்ந்தார்கள். (அனசூயாதேவி தந்த ஆபரணங்களைத்தான் சீதாதேவி, ராவணன் கவர்ந்து கொண்டு போனபோது, கழற்றி வீசினாள்; அவற்றைக் கண்ட வானரங்கள் சுக்ரீவனிடம் சேர்க்க, சுக்ரீவன் ராமரிடம் சேர்த்தான்; சீதை மீட்கப்பட்டாள்).

முனிவர்கள் என்பவர்கள் தவம் செய்து, இறையருளால் செல்வங்களை அடைவார்கள். ஆனால் அச்செல்வங்களைத் தாமே வைத்துக்கொள்ளாமல், அடுத்தவர்களுக்கு அளிப்பார்கள். அதன் மூலம் அடுத்தவர்களுக்கு வரக்கூடிய துயரங்களில் இருந்து அவர்கள் விடுபடுவார்கள் என்பதை விளக்கும் அத்ரி முனிவர் அனசூயாதேவியரின் கதை இது. அதேசமயம், நல்லவர்களின் தொடர்பும் அவர்களின் ஆசிகளும், நம்மைத் துயரங்களில் இருந்து காப்பாற்றும் என்பதையும் விளக்கக்கூடிய கதை இது.

(தொடரும்)

Related Stories: