அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள்

259. விஷ்ணவே நமஹ (Vishnave namaha)

வைணவ குருமார்களுள் ஒருவரான பிள்ளை லோகாசாரியர், தமது சீடர்களுக்கு இறைவனின் மேன்மைகளைக் கூறிக் கொண்டிருக்கையில், “ஒரு தாய் எப்படித் தன் குழந்தை வாய் திறந்து கேட்காவிட்டாலும், அந்தக் குழந்தைக்குத் தேவையானதைச் செய்து விடுவாளோ, அவ்வாறே இறைவனும் அவரது குழந்தைகளான நாம் கேட்காவிட்டாலும் கூட நமக்கு அனைத்து நன்மைகளையும் செய்வதாவும், அதற்காகவே பாட்டு கேட்கும் இடம், கூப்பீடு கேட்கும் இடம், குதித்த இடம், வளைத்த இடம், ஊட்டும் இடம் ஆகிய ஐந்து இடங்களில் திருமால்திகழ்வதாகவும் கூறினார்.

அப்போது அவரது சீடர்கள் அந்த ஐந்து இடங்களைச் சற்றே விரித்துரைக்குமாறு பிரார்த்திக்க, பிள்ளை லோகாசாரியரும் விளக்கினார். “வைகுண்டத்தில் எழுந்தருளியிருக்கும் திருமால், அங்கிருக்கும் முக்தி அடைந்த ஜீவாத்மாக்கள் பாடுகின்ற சாம வேத கானத்தையும், திருவாய்மொழிப் பாசுரங்களின் இசையையும் கேட்டு மகிழ்ந்து கொண்டிருப்பதால்,வைகுண்டம் ‘பாட்டு கேட்கும் இடம்’எனப்படுகிறது.

தேவர்களால் வைகுண்டம் வரை சென்று இறைவனைத் தரிசிக்க இயலாது. முக்தி பெற்றவர்கள் மட்டுமே அங்கு செல்ல இயலும். எனவே, அசுரர்களால் தங்களுக்கு ஆபத்து நேரும் போது, தேவர்கள் வந்து சரணடைவதற்கு வசதியாகத் திருப்பாற்கடலில் வந்து திருமால் பள்ளி கொண்டார். அங்கிருந்த படி, தேவர்களின் கூக்குரலைக் கேட்டு அவர்களுக்கு அருள்புரிவதால், ‘கூப்பீடு கேட்கும் இடம்’ என்று பாற்கடல் அழைக்கப்படுகின்றது.

தேவர்களை மட்டும் காத்தால் போதுமா? உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் காக்க வேண்டுமே! அதற்காகத்தான் அவ்வப்போது பூமியில் இறைவன் அவதரிக்கிறார். வைகுண்டத்திலிருந்து புறப்படும் இறைவன், ராமனாக அயோத்தியிலும், கண்ணனாக மதுரையிலும் வந்து குதிப்பதால், அவ்வாறு இறைவன் அவதரிக்கும் திருத்தலங்கள் ‘குதித்த இடம்’என்றழைக்கப்படுகின்றன.

இறைவனின் அவதாரங்களைத் தரிசிக்கும் பாக்கியம் அனைவருக்கும் கிட்டுவதில்லை. அவர் அவதரித்த காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே அது கிட்டிற்று. காலத்தாலும், தேசத்தாலும், ஞானத்தாலும், பக்தியாலும் பிற்பட்டவர்களான நமக்கும் காட்சி கொடுக்க விழைந்த இறைவன், கோயில்களிலும் நம் இல்லங்களிலும் விக்கிரக வடிவமேற்று அர்ச்சாவதாரப் பெருமாளாகக் குடிகொள்கிறார். அனைத்து உலகங்களுக்கும் அதிபதியாகத் திகழும் இறைவன், தனது பக்தர்களுடன் கலந்து உறவாடுவதற்காகவும், அவர்களுக்கு அருள் புரிவதற்காகவும், தனது மேன்மைகளை எல்லாம் குறைத்துக் கொண்டு, அடியார்களின் விருப்பத்திற்கேற்பத் தன்னை வளைத்துக் கொண்டு அர்ச்சாவதாரத்தில் திகழ்வதால், ‘வளைத்த இடம்’ - இறைவன் நாம் வளைத்த படி வளைந்து கொடுத்து இருக்கும் இடம் என்று அது அழைக்கப்படுகிறது.

ஆனால் அந்த அர்ச்சாவதார இறைவனையும் வணங்காமல் பல பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார் இறைவன். அதனால் தான் அந்தர்யாமியாக அனைவருக்குள்ளும் ஒளிந்துகொண்டிருக்கிறார். அவ்வாறு ஒவ்வொரு வருக்குள்ளேயும் ஒளிந்திருக்கும் இறைவன், அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தையும் கூர்ந்து கவனித்துக் கொண்டு, அவ்வப்போது அவர்கள் மேல் கருணை மழையைப் பொழிந்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து நன்மைகளையும் உள்ளிருந்தபடி ஊட்டுவதால், அந்தர்யாமியாக இருக்கும் நிலை ‘ஊட்டும் இடம்’ என்றழைக்கப்படுகிறது!” என்று பாட்டு கேட்கும் இடம், கூப்பீடு கேட்கும் இடம், குதித்த இடம், வளைத்த இடம், ஊட்டும் இடம் ஆகிய இறைவனின் ஐந்து நிலைகளையும் விளக்கினார் பிள்ளை லோகாசாரியர்.

‘விஸ்’ என்றால் உள்ளே நுழைதல் என்று பொருள். அனைவருக்குள்ளேயும் அந்தர்யாமியாக நுழைந்திருந்து, அவர்கள் மேல் கருணை மழையைப் பொழிந்து நன்மையை ஊட்டுவதால், திருமால் ‘விஷ்ணு:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 259-வது திருநாமம். (ஸஹஸ்ரநாமத்தின் 2-வது திருநாமமான ‘விஷ்ணு:’-க்கு எங்கும் நிறைந்தவர் என்றும், 259-வது திருநாமமான ‘விஷ்ணு:’-க்கு எல்லோருக்கும் உள்ளே இருந்தபடி கருணை மழையைப் பொழிபவர் என்றும் வேறுபடுத்திப் பொருளுரைத்துள்ளார் உரையாசிரியரான பராசர பட்டர்.) “விஷ்ணவே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு அனைத்து நன்மைகளையும் திருமால் ஊட்டி அருள்வார்.

 

260. வ்ருஷபர்வணே நமஹ (Vrushaparvane namaha)

கும்பகோணத்தில் உள்ள பொற்றாமரைக் குளக்கரையில் தவம் புரிந்து வந்த ஹேம ரிஷிக்கு, அப்பொற்றாமரைக் குளத்தின் நடுவே ஒரு தங்கத் தாமரையில் மகாலட்சுமி காட்சியளித்தாள். அவளுக்குக் ‘கோமளவல்லி’ என்று பெயரிட்ட ஹேமரிஷி, தனது மகளாகவே அவளை வளர்த்து வந்தார்.

கோமளவல்லி திருமண வயதை எய்திய போது, வைகுண்டத்திலிருந்து புறப்பட்ட திருமால், சார்ங்கபாணி என்னும் பெயருடன், ஒரு திவ்யமான தேரில் கும்பகோணத்தை வந்தடைந்து, அவளை மணம்புரிந்து கொண்டார். அப்போது கோமளவல்லியின் தந்தையான ஹேமரிஷி திருமாலிடம், “இறைவா! உனக்கு மாமனாராகும் பேற்றினை அடியேனுக்கு அருளியதற்குத் தலையல்லால் கைம்மாறிலேன்! ஆனால் நீ மட்டும் வைகுண்டத்திலிருந்து கீழே இறங்கி வந்தால் போதுமா? இந்தப் பூமியில் வாழும் ஜீவாத்மாக்கள் எல்லோரும் முன்னேறி, மேலே உயர்ந்து வைகுண்டத்தை அடைவதற்கான வழியை நீ காட்ட வேண்டாமா?” என்று பிரார்த்தித்தார்.

“ஹேமரிஷியே! என் இருப்பிடமாகிய வைகுண்டத்தை அடைவதற்கு ஒன்பது படிகள் உள்ளன. அந்த ஒன்பது படிகளை ஏறினால் என்னை வந்து அடையலாம்!” என்றார் திருமால். “அந்த ஒன்பது படிகள் யாவை?” என்று ஹேமரிஷி கேட்க,

“விவேக(1) நிர்வேத(2) விரக்தி(3) பீதய:(4)

ப்ரஸாதஹேது(5) உத்க்ரமண(6) அர்ச்சிராதய:(7) | ப்ரக்ருதி அதிக்ராந்த பத அதிரோஹணம் (8) பராப்தி:(9) இதி அத்ர து பர்வணாம் க்ரம: எனச் சொல்லப்படும் ஒன்பது தர்மங்களாகிய படிகளை விளக்கினார் திருமால்.

1. விவேகம் - இவ்வுலகின் நிலையற்ற தன்மை, அழிவற்ற ஜீவாத்மாக்களின் தன்மை, நமக்கெல்லாம் அதிபதியான இறைவனின் தன்மை ஆகியவற்றை உள்ளபடி அறிதல்

2. நிர்வேதம் - இதுவரை இறைவனை வணங்காமல் பொழுது வீணாகி விட்டதே என்று துக்கம் கொள்ளுதல்

3. விரக்தி - உலகியல் சுகங்களில் ஆசையை விடுதல்

4. பீதி - பிறவிச் சுழற்சியைக் கண்டு பயம் கொள்ளுதல்

5. ப்ரஸாதஹேது - இறையருளை வேண்டிச் சரணாகதி செய்தல்

6. உத்க்ரமணம் - தனக்கு விதிக்கப்பட்ட ஆயுட்காலத்தின் முடிவில், ஜீவாத்மா

இவ்வுடலை நீத்தல்

7. அர்ச்சிராதி - வைகுண்டத்தை அடையும் மார்க்கமாகிய அர்ச்சிராதி மார்க்கத்தில் ஜீவாத்மா பயணித்தல்

8. ப்ரக்ருதி-அதிக்ராந்த-பத-அதிரோஹணம் :- பிரகிருதி மண்டலத்தைக் கடந்து அதற்கு அப்பாற்பட்ட வைகுண்ட லோகத்தை அடைதல்

9. பராப்தி (பர+ஆப்தி) - தெய்வீக உடலைப் பெறும் ஜீவாத்மா, இறைவனை அனுபவித்துக் கொண்டு ஆனந்தமாக இருத்தல்

“இவற்றுள் முதல் ஐந்து படிகளாக இருக்கும் விவேகம், நிர்வேதம், விரக்தி, பீதி, ப்ரஸாத ஹேது ஆகிய தர்மங்களை ஒருவன் பின்பற்றினால், மேற்கொண்டு உள்ள நான்கு படிகளில் நானே அவனை ஏற்றிச் சென்று என்னை அடைய வைப்பேன்!” என்றும் திருமால் கூறினார்.

ஹேமரிஷிக்குத் தான் சொன்ன இந்த விளக்கத்தை நாம் அனைவரும் அறிவதற்காக ஒன்பது படிகள் கொண்ட கருவறையில் குடந்தையில் சார்ங்கபாணிப் பெருமாள் கோவில் கொண்டுள்ளார். கருவறைக்கு உத்தராயண வாசல், தக்ஷிணாயன வாசல் என இரண்டு வாசல்கள் உண்டு. இரண்டு வாசல்களிலுமே சரியாக ஒன்பது படிகள் இருக்கும். அந்த ஒன்பது படிகளும் விவேகம், நிர்வேதம், விரக்தி, பீதி, ப்ரஸாத ஹேது, உத்க்ரமணம், அர்ச்சிராதி, ப்ரக்ருதி அதிக்ராந்த பத அதிரோஹணம், பராப்தி ஆகிய ஒன்பது தர்மங்களைக் குறிக்கின்றன. அந்த ஒன்பது படிகளைக் கடந்தால், சார்ங்கபாணியாகிய இறைவனை அடையலாம் என்பதை அவை உணர்த்துகின்றன.

‘பர்வ’ என்றால் படி என்று பொருள். தர்மத்துக்கு ‘வ்ருஷ’ என்று பெயர். தர்மங்களாகிய படிகளை ஏறி அடையத்தக்கவராகத் திருமால் இருப்பதால், அல்லது, தர்மங்களையே தன்னை அடைவிக்கும் படிகளாகத் திருமால் கொண்டிருப்பதால், ‘வ்ருஷபர்வா’ என்று திருமால் அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 260-வது திருநாமம்.“வ்ருஷபர்வணே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் முன்னேறி உயர்ந்த நிலைகளை அடையத் திருமால் அருள்புரிவார்.

 

261. வ்ருஷோதராய நமஹ (Vrushodharaaya namaha)

திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய இரு பிரபந்தங்களை ஆண்டாள் பாடியுள்ளாள். அந்த இரண்டு பிரபந்தங்களிலும் அளவில்லா ஈடுபாடு கொண்டிருந்தார் ராமாநுஜர். தினசரி பிக்ஷைக்குச் செல்லும் போதெல்லாம் திருப்பாவை ஓதிக் கொண்டே சென்றபடியால், ‘திருப்பாவை ஜீயர்’ என்றே அனைவராலும் அழைக்கப்பட்டார் ராமாநுஜர்.இந்நிலையில், ஒருமுறை தமது சீடர்களுக்கு ஆண்டாளின் நாச்சியார் திருமொழி பாசுரங்களை விளக்கிக் கொண்டிருந்தார் ராமாநுஜர். அதில் ஒரு பாடல்,

“நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்

நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன் நூறு தடாநிறைந்த அக்கார அடிசில் சொன்னேன் ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளுங்கொலோ?”

“வாசனை வீசுகின்ற சோலைகள் நிறைந்த திருமாலிருஞ்சோலை எனப்படும் அழகர்மலையில் கோவில் கொண்டிருக்கும் கள்ளழகருக்கு, நான் நூறு அண்டா நிறைய வெண்ணெயும், நூறு அண்டா நிறைய அக்கார அடிசிலும், வாயாரச் சமர்ப்பிக்கிறேன். இவற்றை எல்லாம் அந்தப் பெருமாள் ஏற்றருள்வாரோ?” என்று இப்பாசுரத்தில் ஆண்டாள் தெரிவிக்கிறாள்.

இந்தப் பாசுரத்தை விளக்கிக் கொண்டிருக்கையில், திடீரென ராமாநுஜருக்கு ஒரு சிந்தனை உண்டானது. “அடடா! கள்ளழகருக்கு நூறு அண்டா வெண்ணெயும், நூறு அண்டா அக்கார அடிசிலும் சமர்ப்பிக்க வேண்டுமென்று கோதைப் பிராட்டி விழைந்திருக்கிறாள். ஆனால் அந்த விழைவானது, வெறும் வார்த்தையளவில் நின்று விட்டதே ஒழிய, அவளால் நேரில் சென்று கள்ளழகருக்கு இவற்றைச் சமர்ப்பிக்க முடியவில்லையே!” என்று வருந்தினார் ராமாநுஜர்.

மேலும், ஆண்டாள் செய்ய விரும்பிய இந்தக் கைங்கரியத்தைத் தாமே செய்து நிறைவேற்றி ஆண்டாளின் உள்ளத்தை மகிழ்விக்க வேண்டுமென்றும் முடிவு செய்தார் ராமாநுஜர். அதனால் திருமாலிருஞ்சோலைக்குச் சென்று இந்தக் கைங்கரியத்துக்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

அக்கார அடிசில் தயாரிப்பது என்பது கடினமான காரியம். பாலிலேயே முதலில் சாதம் வடிக்க வேண்டும். அத்துடன் வெல்லக் கரைசலும் அதிக அளவில் பாலும் கலக்க வேண்டும். அதைத் தீயில் கிளறக் கிளற மேலும் மேலும் பால் சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு பிடி அரிசிக்கும் ஒரு முந்திரி பருப்பு, ஒரு பாதாம், இரண்டு கற்கண்டு, இரண்டு பிஸ்தா, இரண்டு திராட்சை எனச் சேர்க்கலாம். அதில் துளி அளவு உப்பு சேர்க்க வேண்டுமென்பது சாஸ்திரம். குங்குமப்பூ, ஏலக்காய், பச்சைக் கற்பூரம் உள்ளிட்டவற்றை வாசனைக்குச் சேர்க்கலாம். “மூடநெய் பெய்து முழங்கை வழிவார” என்று ஆண்டாள் பாடிய படி அதிக அளவில் நெய் சேர்க்க வேண்டும். இந்தச் செய்முறையின் படி நூறு அண்டாக்களில் அக்கார அடிசிலும், நூறு அண்டாக்களில் வெண்ணெயும் தயாராயின.

இந்த ஏற்பாடுகளை எல்லாம் கண்ட ஒரு பக்தர் ராமாநுஜரிடம், “சுவாமி! தாங்கள் வேதாந்தங்களை நன்கு அறிந்தவர். அவாப்த ஸமஸ்த காமன் - அனைத்து ஆசைகளும் ஈடேறப்பெற்றவன் - என்றழைக்கப்படும் இறைவனுக்கு இத்தனை உணவுப் பொருட்களைச் சமர்ப்பிக்க வேண்டுமா? அதை இறைவன்எதிர்பார்க்கிறாரா?” என்று கேட்டார்.

அதற்கு ராமாநுஜர், “இறைவன் எப்போதும் நிறைவோடும் திருப்தியோடும் இருக்கிறார் என்பதில் ஐயமில்லை. ஆனாலும் தனது பக்தர்கள் ஆசையோடு எதைச் சமர்ப்பித்தாலும் அதை மனதார ஏற்று வயிறார உண்டு மகிழ்கிறார். அதுவே இறைவனது கருணை!” என்றார்.

திருமாலிருஞ்சோலை அழகருக்கு நூறு அண்டாக்களில் வெண்ணெயும் அக்கார அடிசிலும் சமர்ப்பித்து விட்டு, ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்ற ராமாநுஜர், அங்கே கோவில் கொண்டிருக்கும் ஆண்டாளைப் பார்த்து, “திருப்தியா?” என்று கேட்டார். தனது தங்கைக்காக அண்ணன் சீர் செய்வது போல்,  ஆண்டாளுக்காக ராமாநுஜர் செய்த இத்தொண்டைக் கண்டு வியந்து, “அண்ணா! எனக்கு முழு திருப்தி!” என்று கூறினாள் ஆண்டாள். அதனால் தான் காலத்தால் பிற்பட்டவரான போதும், ஆண்டாளுக்கு அண்ணனாகவே ராமாநுஜரைக் கூறும் வழக்கம் உள்ளது. ‘கோவில் அண்ணன்’ என்ற பெயரும் இதனாலேயே ராமாநுஜருக்கு ஏற்பட்டது.

ராமாநுஜர் கூறிய படி, தன் அடியார்கள் ஆசையோடு எதைச் சமர்ப்பித்தாலும் அதை வயிறார உண்டு மகிழ்ந்து அருள்புரிபவராகத் திருமால் திகழ்வதால், அவர் ‘வ்ருஷோதர:’ (வ்ருஷ + உதர: = வ்ருஷோதர:) என்றழைக்கப்படுகிறார். ‘வ்ருஷ’ என்பது தர்மத்துக்கு உட்பட்டு அடியார்கள் நிவேதனம் செய்யும் பொருட்களைக் குறிக்கும். ‘உதரம்’ என்றால் வயிறு என்று பொருள். அடியார்கள் நிவேதனம் செய்யும் பொருட்களால் நிறைந்த வயிற்றை உடையவர் ‘வ்ருஷோதர:’. அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 261-வது திருநாமம்.“வ்ருஷோதராய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் சமர்ப்பிக்கும் காணிக்கைகளைத் திருமால் ஆனந்தமாக ஏற்றருள்வார்.

 

262. வர்தனாய நமஹ (Vardhanaaya namaha)

ராமாநுஜரின் சீடரான கூரத்தாழ்வான், காஞ்சீபுரத்துக்கு அருகிலுள்ள கூரம் என்னும் ஊரில் பெரும் செல்வந்தராக வாழ்ந்து வந்தார். ஆனால் அந்தச் செல்வங்களை எல்லாம் ஏழை எளியோர்க்குத் தானம் செய்து விட்டு, ராமாநுஜரின் திருவடித் தாமரைகளையே மிக உயர்ந்த செல்வமாகக் கருதி, தமது மனைவியான ஆண்டாளுடன் திருவரங்கத்தை அடைந்து, அங்கே ராமாநுஜருக்குத் தொண்டு செய்தபடித் தம் வாழ்க்கையை நடத்தி வந்தார். உலகியல் இன்பங்களில் ஆசையில்லாத அவரும் அவரது மனைவியும், இறைத் தொண்டிலேயே தங்களை முழுவதுமாக அர்ப்பணித்து வாழ்ந்தனர்.

திருவரங்கத்தில் வாழ்ந்த காலம் முழுவதும் உஞ்சவிருத்தி செய்து (பிக்ஷை எடுத்து) தமது ஜீவனத்தை மேற்கொண்டார் கூரத்தாழ்வான். அவ்வாறு தமக்குக் கிடைக்கும் உணவுப் பொருட்கள் எதையும் அவர் மறுநாளைக்கென்று மிச்சப் படுத்தி வைக்கமாட்டார். ஒருநாள் விடாப் பெருமழை பொழிந்ததால், அவரால் உஞ்சவிருத்திக்குச் செல்ல முடியவில்லை. “இன்றைக்கு ஆழ்வார் பாசுரங்களையே எனது உணவாகக் கருதுகிறேன்!” என்று சொல்லிவிட்டு, தமிழ்மறையாகிய நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களை ஓதிக் கொண்டிருந்தார் கூரத்தாழ்வான்.

அன்றிரவு திருவரங்கம் கோவிலில் பெருமாளுக்கு நிவேதனம் நடப்பதற்கு அடையாளமாக மணி ஓசை கேட்டது. அவ்வொலியைக் கேட்ட ஆண்டாள், “அரங்கா! உனது பக்தர் இங்கே பசியோடு வாடிக் கொண்டிருக்கிறார். ஆனால் நீயோ ஆனந்தமாகப் பிரசாதம் அமுதுசெய்கிறாயா?” என்று கேட்டாள்.

தன் பக்தையின் வருத்தத்தை உணர்ந்து கொண்ட அரங்கன், உடனே தமது கோவில் நிர்வாகியான உத்தமநம்பியை அழைத்து, அப்போது நிவேதனம் செய்யப்பட்ட அக்கார அடிசிலைக் கூரத்தாழ்வான் இல்லத்துக்கு அனுப்பி வைக்கச் சொன்னார். தம் இல்லத்துக்குப் பெருமாளின் பிரசாதம் வந்ததும், அரங்கனின் கருணையை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்த கூரத்தாழ்வானும் ஆண்டாளும் அந்தப்பிரசாதத்தை மகிழ்ச்சியுடன் உண்டனர்.

தசரதனின் புத்ரகாமேஷ்டி யாகத்தில் வந்த பாயசத்தை உண்ட அவனது மனைவியருக்கு ராம, லக்ஷ்மணாதிகள் மகன்களாகப் பிறந்தது போல், அரங்கனின் பிரசாதத்தை உண்ட ஆண்டாளுக்கு, அரங்கனின் அருளால் இரண்டு மகன்கள் பிறந்தார்கள். வியாசரின் தந்தையான பராசர ரிஷி மற்றும் வேத வியாச ரிஷி ஆகியோரின் நினைவாக அவ்விரு குழந்தைகளுக்கும் பராசர பட்டர் என்றும் வேத வியாச பட்டர் என்றும் ராமாநுஜரே பெயரிட்டார்.

அவர்களுள் பராசர பட்டரைத் தன் கருவறைக்கு எதிரிலுள்ள திருமணத் தூண்களுக்கு அருகே தொட்டிலிடுமாறு திருவரங்கநாதனே ஆணையிட்டார். திருவரங்கநாதனும் ரங்கநாயகித் தாயாரும் தங்களுடைய பிள்ளையாகவே பராசர பட்டரைக் கருதி அவரைப் பாலூட்டிச் சீராட்டி வளர்த்தார்கள். ஒருமுறை பெருமாளுக்கு நிவேதனம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த அக்கார அடிசிலைக் குழந்தையாயிருந்த பராசர பட்டர், தன் கைகளால் எடுத்து அளைந்து துழாவ,“அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்”

என்ற குறளுக்கேற்ப, பட்டரின் கையால் அளாவப்பட்ட அந்தப் பிரசாதத்தை மேலும் மகிழ்ச்சியோடு பெருமாள் நிவேதனம் கண்டருளியதாக வரலாறு உண்டு.பின்நாளில் பெரும் பண்டிதராகவும் பக்தராகவும் விளங்கிய பராசர பட்டர், விஷ்ணு ஸஹஸ்ரநாம உரை, கைசிக புராண உரை, ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம், ஸ்ரீ குண ரத்னகோசம், ரங்கநாத ஸ்தோத்திரம், அஷ்ட ஸ்லோகீ, திருமஞ்சனக் கட்டியம் உள்ளிட்ட எண்ணற்ற நூல்களை இயற்றினார். கர்நாடகத்தில் வாழ்ந்த வேதாந்தியை வாதில் வென்று தமக்குச் சீடராக்கினார். நம்பெருமாள் குமாரர் என்று அனைவராலும் போற்றப்பட்டார். ஆழ்வார் பாசுரங்களுக்கு மிகச்சிறந்த முறையில் விளக்கங்களும்எடுத்துக்காட்டுகளும் கூறினார்.

பட்டரின் இத்தகைய பெருமைகளைக் கண்டு வியந்த ஊரார் அனைவரும் கூரத்தாழ்வானிடம் வந்து, “நம் சம்பிரதாயத்தின் வளர்ச்சிக்காக நீங்கள் மிகச்சிறந்த ஒரு பிள்ளையைப் பெற்றுத் தந்துள்ளீர்கள்!” என்று பாராட்டினார்கள். அப்போது கூரத்தாழ்வான், “அடியேன் எதுவுமே செய்யவில்லை. அரங்கனின் பிரசாத மகிமையால் பட்டர் பிறந்தார். அவருக்கு ஞானப்பால் ஊட்டி வளர்த்தவர்கள் பெரிய பெருமாளும் பெரிய பிராட்டியாரும் ஆவர். எனவே எல்லாப் புகழும் அரங்கனுக்கே!” என்று விடையளித்தார்.

இவ்வாறு ஒரு தாய் தன் குழந்தையைப் பாலூட்டி வளர்ப்பது போல், பராசர பட்டர் போன்ற அடியார்களுக்குத் திருமால் ஞானப்பால் ஊட்டி, ஆளோடு அறிவும் வளரும்படி அருள்புரிந்து, அவர்களை மிகச்சிறந்த பண்டிதர்களாக ஆக்குவதால், திருமால் ‘வர்தன:’ என்றழைக்கப்படுகிறார். ‘வர்தன:’ என்றால் ஊட்டி வளர்ப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 262-வது திருநாமம்.“வர்தனாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அடியார்கள் அனைவருக்கும் நல்ல ஞானத்தைத் திருமால் ஊட்டியருள்வார்.

 

263. வர்தமானாய நமஹ (Vardhamaanaaya namaha)

ராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைக்க வேண்டுமென்று தசரதச் சக்கரவர்த்தி தீர்மானித்தார். மிகச்சிறந்த ஞானியான வசிஷ்டர் அதற்கு நாள் குறித்தார். மந்திரிகளுள் தலை சிறந்தவரான சுமந்திரன் அதற்கு நாள் குறித்தார். பொது மக்கள் அனைவரும் ராமனின் பட்டாபிஷேகத்துக்குத் தங்கள் முழு ஆதரவையும் தெரிவித்தார்கள். பட்டாபிஷேகத்துக்கு முந்தைய நாள் ராமபிரானும் சீதையும், அயோத்தியில் கோவில் கொண்டிருந்த ஸ்ரீரங்கநாதனிடம் பட்டாபிஷேகம் தடங்கலின்றி நடைபெற வேண்டுமென்று பிரார்த்தித்துக் கொண்டார்கள்.

இப்படி எத்தனையோ சாதகமான அம்சங்கள் ராம பட்டாபிஷேகத்துக்கு அமைந்திருந்த போதும், கூனி என்ற ஒருத்தியின் சதியால் அது நின்று போனது. அதன்பின் வனவாசம் சென்ற ராமன், பதினான்கு வருடங்களுக்குப்பின் பட்டாபிஷேகம் செய்து கொண்டான் என்பது நாம் அறிந்ததே. பட்டாபிஷேகம் நிறைவடைந்த பின், அயோத்தியில் வாழ்ந்த சில பண்டிதர்கள் வசிஷ்டரிடம் சென்று, “பதினான்கு வருடங்களுக்கு முன் தசரதச் சக்கரவர்த்தி ஏற்பாடு செய்த பட்டாபிஷேகம் ஏன் நின்று போனது?” என்று கேட்டார்கள். அதற்கு வசிஷ்டர், “அப்போது ‘ராம பட்டாபிஷேகம்’ என்ற பெயரில் ஏற்பாடு செய்தார்கள். அதனால் நின்று போனது.

இப்போது ‘சீதா ராம பட்டாபிஷேகம்’ என்று பெயரிட்டு நடத்தியபடியால், வெகு சிறப்பாக நடந்தேறி விட்டது. வெறும் பெருமாளை விடப் பிராட்டியோடு கூடிய பெருமாளுக்கே ஏற்றம் என்பதை இதன்மூலம் புரிந்து கொள்ளுங்கள்!” என்றார். வசிஷ்டரின் இந்த விளக்கத்தின் ஒரு பகுதியை அந்தப் பண்டிதர்கள் ஏற்றபோதும், அவர்கள் மனத்தில் மற்றோர் ஐயம் இருந்தது. அதை வசிஷ்டரிடமே அவர்கள் கேட்டார்கள். “மாமுனியே! எங்களது ஐயம் இன்னும் தீரவில்லை. இளவரசுப் பட்டத்துக்கு ராமனைக் காட்டிலும் தகுதிவாய்ந்த வேறொரு நபர் இருக்க வாய்ப்பே இல்லை. தீர்மானித்த தசரதனை மிஞ்சிய சக்கரவர்த்தி எவருமில்லை. நாள்குறித்த உங்களை மிஞ்சிய ஒரு முனிவரோ ஞானியோ இல்லை. ஏற்பாடுகளைச் செய்த சுமந்திரனைப் போன்ற கூர்மதி கொண்ட மந்திரி எவருமில்லை. பொதுமக்களின் ஆதரவுக்கும் குறையில்லை.

பட்டாபிஷேகம் நன்கு நடைபெற வேண்டி ராமனும் சீதையும் பிரார்த்தனை செய்த ரங்கநாதனை மிஞ்சிய தெய்வமில்லை. ராமன், தசரதன், நீங்கள்(வசிஷ்டர்), சுமந்திரன், பொதுமக்கள், அரங்கன் என இத்தனை பேர் கொண்ட கூட்டணியைக் கூனி என்ற ஒரு பெண்ணின் சூழ்ச்சியால் எப்படி முறியடித்துப் பட்டாபிஷேகத்தை நிறுத்த முடிந்தது? அதற்கு விடை கூறுங்கள்!” என்று பிரார்த்தித்தார்கள்.

நம்மில் பலரின் மனங்களில் ஓடிக் கொண்டிருக்கும் இக்கேள்விக்கு வசிஷ்டர் அருமையான ஒரு விளக்கத்தை அளித்தார். “பண்டிதர்களே! பட்டாபிஷேக விஷயத்தில் பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பதைவிட இறைவனாகிய ராமன் என்ன நினைக்கிறான் என்பதே முக்கியம். பட்டாபிஷேகம் நடைபெற வேண்டுமென்று தசரதனும், நானும், சுமந்திரனும், பொதுமக்களும் நினைத்தோம். பட்டாபிஷேகம் நடைபெறக் கூடாது என்று கூனியும் கைகேயியும் நினைத்தார்கள். ஆனால் ராமன் என்ன நினைத்தான் தெரியுமா? பதினான்கு ஆண்டுகளுக்குப் பின் பட்டாபிஷேகம் நடைபெறட்டும் என்று நினைத்தான்!” என்றார் வசிஷ்டர். “அவ்வாறு நினைக்க என்ன காரணம்?” என்று பண்டிதர்கள் கேட்டனர்.

அதற்கு வசிஷ்டர், “ராமன் தான் ஒருவன் மட்டும் வளர்வதை விரும்ப மட்டான். தன்னைச் சார்ந்த அனைவரும் தன்னுடன் வளரவேண்டும் என்று கருதுவான். அதனால் முதலில் தன் நண்பர்களுக்கும், தன்னை வந்த அண்டுவோர்க்கும் பட்டம் கட்டிவிட்டு அதன்பின் தான் பட்டாபிஷேகம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தான் ராமன். அதனால் தான் தனது பட்டாபிஷேகத்தைப் பதினான்கு ஆண்டுகள் தள்ளி வைத்து விட்டு, தனது திருவடிகளுக்குத் தொண்டு செய்துவந்த பாதுகைக்கு முதலில் பட்டாபிஷேகம் நடக்கும்படிச் செய்தான். அடுத்தபடியாகத் தன் நண்பனான குகனுக்கு வேடுவர் தலைவனாகப் பட்டாபிஷேகம் செய்துவைத்தான்.

அடுத்து, தனக்கு நண்பனாக வந்த சுக்ரீவனுக்குக் கிஷ்கிந்தையின் அரசனாகப் பட்டாபிஷேகம் செய்து வைத்தான். அதன்பின் தன்னைச் சரணடைந்த விபீஷணனைக் கடற்கரையிலேயே வைத்து இலங்கையின் மன்னன் என்று சொல்லி, அவனுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்தான். இப்படித் தன்னைச் சார்ந்தவர்களான பாதுகை, குகன், சுக்ரீவன், விபீஷணன் போன்றோர்க்கெல்லாம் முடிசூட்டி விடு, நிறைவாக ராமன் முடிசூடிக் கொண்டான்!” என்றார்.

‘வர்தமான:’ என்றால் தான் வளர்வதோடு மட்டுமின்றித் தன்னைச் சார்ந்தவர்களையும் வளர்ப்பவர் என்று பொருள். திருமால் தன்னைச் சார்ந்தவர்கள் அனைவரையும் தன்னோடு சேர்ந்து வளரச் செய்வதால் ‘வர்தமான:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 263-வது திருநாமம்.

“வர்தமானாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் மேன்மேலும் வளர்ச்சிகளை அடையும்படித் திருமால் அருள்புரிவார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

தொகுப்பு: திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Related Stories: