சந்திர தோஷம் போக்கும் திருவோண விரதம்!!

மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தில் மேற்கொள்ளப்படும் விரதம், திருவோண விரதம். இது, ஆவணி மாதத்தில் ஓணம் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. தீவிர வைணவர்கள், மாதந்தோறும் திருவோண விரதத்தை மேற்கொள்வது வழக்கம். இன்று, திருவோண விரத நாள். சரி, திருவோண விரதம் என்றால் என்ன? அதன் சிறப்புகள் என்னவென்பதைக் காண்போம்.

திருவோண நட்சத்திரம் பெருமாளுக்குரியது. வாமன அவதாரம் எடுத்தபோது, திருமால் திருவோண நட்சத்திரத்தில்தான் அவதரித்தார். மேலும், மார்க்கண்டேய மகரிஷியின் மகளாக அவதரித்த பூமிப்பிராட்டியை ஒப்பிலியப்பர் பெண் கேட்டு வந்தது, பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தன்றுதான். பிராட்டியை ஒப்பிலியப்பன்   மணந்துகொண்டதும், ஐப்பசி மாத திருவோண நட்சத்திர தினத்தில்தான். எனவே, ஒப்பிலியப்பர் கோயிலிலும் இந்த திருவோண விழா மாதாமாதம் சிறப்பாக நடைபெறுகிறது.

திருவோண தினத்தில் விரதம் மேற்கொள்பவர்கள், எல்லா வளங்களும் பெற்று, பிறப்பிலா பேறுடன் வைகுந்தப் பதவியை அடைவார்கள் என்று ஆன்மிக நூல்கள் கூறுகின்றன. முக்கியமாக, குழந்தைப்பேறு இல்லாதவர்கள்  குழந்தை வரம் பெறுவார்கள். இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள், முதல் நாள் இரவே உணவு உட்கொள்ளக்கூடாது. அதிகாலை நீராடி, பெருமாள் ஆலயத்துக்குச் சென்று துளசி மாலை சாத்த வேண்டும். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே எடுத்துக்கொண்டு, பெருமாளைக்குறித்த பாடல்களைப் பாராயணம் செய்தல் வேண்டும். மதிய உணவில் உப்பே சேர்க்காமல் சாப்பிட வேண்டும்.

மாலையில், சந்திர தரிசனம் காண வேண்டும். இதனால், சந்திரதோஷம் இருந்தால் விலகிவிடும். ஒருமுறை திருவோண விரதம் இருந்தால்கூட போதும், சந்திரனின் அருள்பெற்று அவரால் உண்டாகும் தோஷங்கள் விலகி, இனிமையான வாழ்வு கிட்டும் என ஆன்மிகப் பெரியோர்கள் கூறுகிறார்கள். திருப்பங்களை நல்கும் திருவோண விரதத்தை இன்று மேற்கொண்டு, வளங்கள் பெற வாழ்த்துகிறோம்.

Related Stories: