ஆவியின் கனி - 4 துயரத்தில் பொறுமையாய் இருங்கள்

உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள் (ரோமர் 12 :12)ஒரு சிறுவன் தன் வீட்டில் பட்டுப்புழு ஒன்றை வளர்த்து வந்தான். அது தன்னைச் சுற்றிலும் பட்டு நூலால் கடினமான கூட்டைக்கட்டி உள்ளே வசித்து வந்தது. சில நாட்களுக்குப் பின் அது பட்டுப்பூச்சியாக மாறி வெளியேவர முயற்சித்தது. கூட்டிலிருந்து வெளியில் வருவது பட்டாம் பூச்சிக்கு எளிதான ஒன்று அல்ல. பலமணி நேரங்கள் பொறுமையோடு போராடி தான் வெளியேவர வேண்டும். ஆனால், அந்த சிறுவனுக்கோ பொறுமையில்லை. பட்டாம் பூச்சி படும் கஷ்டத்தையும் அவனால் தாங்க  முடியவில்லை. ஆகவே, ஒரு கூரிய கத்தியால் மெதுவாக கூட்டை வெட்டி, பட்டுப்பூச்சியை சுலபமாக வெளியே எடுத்துவிட்டான். ஆனால், அந்தப் பட்டுப்பூச்சியினால்  பறக்க முடியவில்லை. அதனுடைய சரீரம் பெரிதாக இருந்தபடியால் கீழே விழுந்துவிட்டது. முடிவில் அதை எறும்புகள் இழுத்துச் சென்றன.

அச்சிறுவனின் தகப்பனார் சொன்னார், மகனே அந்தப் பூச்சி கூட்டிலிருந்து வெளியில் வருவதற்காக பொறுமையோடு எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அதன் தசை நார்களையும், நரம்புகளையும் பெலப்படுத்தும். பல மணி நேரங்கள் அது வெளி வர பாடுபடுவதால் அதன் உடல் வற்றி எடை குறைந்து, பறந்து செல்ல வசதியாக இருக்கும். இதுபோன்ற சகல முயற்சிகளையும் அது தானாகவே செய்து வெளியே வந்திருந்தால் பரிபூரண வளர்ச்சி அடைந்திருக்கும். ஆனால், நீ பொறுமையை இழந்து, அவசரப்பட்டதால் பட்டாம்பூச்சியின் முழுமையான உருவத்தை நீ காண முடியாமல் போனதே என்றார்.

நாமும், நமது வாழ்வில் துன்பங்கள் வரும்போது, அவற்றை பொறுமையோடு சகித்து வாழ்ந்தால் அற்புதமான பலனை அடையலாம். திருமறையின் யோபு என்ற ஒரு இறை பக்தரைக் குறித்து வாசிக்கிறோம். அவர் தனது வாழ்வில் பல்வேறு துன்பங்களை அனுபவித்தார். இழப்புக்களை சந்தித்தார். எனினும், அத்துன்பங்களை நீடிய பொறுமையுடன்  சகித்துக் கொண்டார். நான் போகும் வழியை அவர் அறிவார். அவர் என்னை சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன் (யோபு 23 :10) என்று நம்பிக்கையோடு கூறினார். அவரது நீடிய பொறுமைக்கு வெகுமதியாக இழந்து போன அனைத்தையும் இரட்டிப்பாக கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

     யோசேப்பு என்ற இறை பக்தரும் தனது வாழ்வில் பல்வேறு துன்பங்களைக் கடந்து சென்றார். தனது சகோதரர்களாலே அடித்துக் காயப்படுத்தப் பட்டார். அவர்கள் யோசேப்பை ஒரு குழிக்குள் போட்டனர். பின்பு எகிப்து நாட்டு வியாபாரிகளிடம் அவரை விற்று விட்டனர். அங்கிருந்து போத்திபார் என்னும் பெயர் கொண்ட ஒருவருடைய இல்லத்தில் பணி செய்த அவர், பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு, சிறைத் தண்டனையை அனுபவித்தார். இவ்வாறு தன்னுடைய வாழ்வில் பல்வேறு உபத்திரவங்கள் வந்தபோதும் யோசேப்பு பொறுமையோடு அவற்றைச் சகித்தார். அவரது பொறுமையும், கடவுள் அவருக்குத் தந்த கிருபையும் எகிப்து நாட்டின் அதிபராகும் பாக்கியத்தை அவருக்குத் தந்தது.

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் மனுக்குலத்தின் மீட்புக்காக பல்வேறுபாடுகளை பொறுமையோடு சகித்துக் கொண்டார். அவர் நெருக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் இருந்தார். ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை (ஏசாயா 53:7) என்று திருமறை கூறுவதற்கேற்ப நமக்காக காயப்பட்டு, நொறுக்கப்பட்ட போதும் தமது நீடிய பொறுமையினால் நமக்கு நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.

அன்புக்குரியவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவையும், இறைபக்தர்களையும் முன்மாதிரியாகக் கொண்டு நாமும், நமது துன்பங்களின் மத்தியில் பொறுமையோடு வாழக் கற்றுக்கொள்வோமாக !நமது தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்விலும், சமுதாய வாழ்விலும் நீடிய பொறுமையுடன் வாழ்ந்து கடவுள் அருளும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வோமாக! நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள். கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே

(யாக்கோபு 5 : 8)

Related Stories: