இயற்கை ஏன் சீறுகிறது?

ஆழிப் பேரலை, வெள்ளப் பிரளயம், நிலநடுக்கம், புயல், கரோனா வைரஸ் போன்ற இயற்கைச் சீற்றங்களும் கொள்ளை நோய்களும் ஏன் தோன்றுகின்றன என்பதற்கு ஆளுக்கு ஆள் பல காரணங்கள் சொல்கிறார்கள்.

 

 சுற்றுச்சூழல் பாதிப்பு தொடங்கி மாதவிடாய் வரை அந்தக் காரணங்கள் நீளுகின்றன. வேதங்களின் அடிப்படையில் கொஞ்சம் ஆய்வு செய்து பார்த்தால் இயற்கை சீறுவதற்கு நான்கு முதன்மையான காரணங்கள் காணப்படுகின்றன:

 

 1. இறைமறுப்பு - மறுமை மறுப்பு

 2. இணைவைப்பு

 3. மனித உரிமை மீறல்கள்

 4. இறைவரம்புகளை மீறுதல்

 

 இந்த நான்கும் எங்கு தலைவிரித்தாடுகின்றனவோ அங்கே இயற்கையும் கடுமையாக சீறும். அவ்வாறு சீறும்போது எந்த நாட்டினர், எந்த மதத்தினர், எந்த மொழியினர், எந்த இனத்தினர், ஆணா, பெண்ணா குழந்தையா, அன்றாடங் காய்ச்சியா, அரசகுமாரியா என்பதையெல்லாம் இயற்கை பார்ப்பதில்லை.

 

 திருமறைக் குர்ஆன் கூறுகிறது:

 

“நிச்சயமாக நிகழ்ந்தே தீரவேண்டிய விஷயம்..! நிச்சயமாக நிகழ்ந்தேதீரவேண்டிய அந்த விஷயம் என்ன? நிச்சயமாக நிகழ்ந்தே தீரவேண்டிய அந்த விஷயம் என்னவென்று உமக்குத் தெரியுமா?

 

 “ஸமூது மற்றும் ஆது சமூகத்தினர் திடீரென நிகழவிருக்கும் அந்த ஆபத்தைப் பொய்யென வாதிட்டனர். எனவே, ஸமூத் சமுதாயத்தினர் ஒரு கடுமையானவிபத்தினால் அழிக்கப்பட்டார்கள்.

 

 “ஆது சமூகத்தினர் மிகப்பெரிய கடும் சூறாவளிக் காற்றினால் அழிக்கப்பட்டார்கள். இறைவன் அந்தக் காற்றை அவர்கள் மீது ஏழு இரவுகளும் எட்டு பகல்களும் தொடர்ந்து ஏவினான்.

 

 “(நீங்கள் அங்கு இருந்திருந்தால்) இற்றுப்போன ஈச்சமரத் தண்டுகளைப்போன்று அவர்கள் அங்கு முகங் குப்புற வீழ்ந்து கிடந்ததைப் பார்த்திருப்பீர்கள். இப்போது அவர்களில் எவரேனும் எஞ்சியிருப்பது உமக்குத் தெரிய வருகிறதா என்ன?

 

 “பிர்அவ்னும் அவனுக்கு முன்பிருந்த மக்களும் தலைகீழாகப் புரட்டப்பட்ட ஊர்வாசிகளும் இதே பெருந்தவறைச் செய்தனர். அவர்கள் அனைவரும் தங்களின் இறைத்தூதர்களின் பேச்சைக் கேட்கவில்லை. எனவே அவன் அவர்களை மிகக் கடுமையாகப் பிடித்தான்.” (குர்ஆன் 69:1-10)

 

 இயற்கை காரணமின்றி சீறுவதில்லை.

இறைவனை வணங்கி வாழ்வோம். மனிதர்களுடன் இணங்கி வாழ்வோம். திடீரென வரும் ஆபத்துகளிலிருந்து இறைவனிடமே பாதுகாப்புக் கோருவோம்.

 

 - சிராஜுல்ஹஸன்

Related Stories: