ஆண்டவரிடம் மன்றாடுவோம்

இந்த உலகம் நமக்களித்துள்ள குடும்ப பெருமை, செல்வம், புகழ், அதிகாரம், அறிவு, அழகு, சமூகப் பெருமை இவைகளைத்தான் நாம் பெரிய அந்தஸ்தாக மதிப்பிட்டு வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இத்தனை அங்கீகாரங்களைக் காட்டிலும் புதிய  ஜீவனை நமது ஆவியில் பெற்றுள்ள ஆவிக்குரிய அந்தஸ்தே மிக உயர்வான அந்தஸ்தாகும்.ஆவிக்குரிய வாழ்க்கையில் வாழ்பவர்களுக்குக் கிடைக்கும் புதிய அந்தஸ்தின் அடையாளங்கள் தெய்வீகமானவை.  நாம் விடுதலை பெற்ற தூய ஆவியின்  ஒளியில் வாழ கால் பதித்துள்ளோம்.

இதை தான் (1 பேதுரு 2:9) ‘‘ஆனால், நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழி மரபினர், அரசு குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர், அவரது உரிமை சொத்தான மக்கள். எனவே உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது உங்கள் பணி’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நாம் இப்போது தெரிந்துக் கொள்ளப்பட்டவர்கள். கிறிஸ்துவின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். பலி செலுத்தும் தகுதி பெற்றவர்கள். பரிசுத்த மக்களாய் ஆண்டவருக்கே சொந்தமானவர்கள்.

‘‘தம் குற்றப்பழிகளை மூடிமறைப்பவரின் வாழ்க்கை வளம் பெறாது. அவற்றை ஒப்புக் கொண்டு விட்டுவிடுகிறவர் கடவுளின் இரக்கம் பெறுவார்’’ (நீதி.மெழிகள் 28:13). ஆம், முன்பு நாமும் பாவம் செய்தோம். முன்பு ஆண்டவருக்கு தூரமாக இருந்த நாம் இப்போது கடவுளுக்கு வெகு சமீபத்தில் வந்துள்ளோம். கிறிஸ்துவ சபையில் மிக முக்கிய அங்கத்தினர்களானோம். அவரே நம் தாயின் கருவில் இருக்கும் முன்னரே நம்மை அறிந்த தேவன். ஞானஸ்தானத்தின் வழியாக நம்மை பெயர் சொல்லி அழைத்த தேவன்.

பரிசுத்த ஆவியானவர் நம்முடன் மிகுந்த நெருக்கமாகவும் நம் மீது வைராக்கிய வாஞ்சையாகவும் இருக்கின்றார். அன்று பாபிலோனிய அடிமைத்தனத்திலும் எரேமியா, தானியேல், எஸ்றா, நெகேமியா போன்றோர் தங்களது தெய்வீக அந்தஸ்து நிலையைத் தக்க வைத்திருந்தனர். ஆனால் நாமோ இன்று உணர்வுச் சிக்கல்கள், மனக்குழப்பங்கள், இழிவான சுயபார்வை, குற்ற உணர்வு அறிக்கையிடாத பாவங்கள், சரி செய்யப்படாத மனப்போராட்டங்கள், ஆறாத உள்காயங்கள் என பலவித பிரச்னைக்குள்ளாகி தங்களையும் தங்களின் மங்கின தரிசனத்தையும் சிதைத்து புதைத்துக் கொண்டிருக்கின்றோம். எனவே பரிசுத்து ஆவியானவரை ரசித்து சுவைத்த நாம் அவரை அறியாத மக்களினத்தாருக்கும் எடுத்துரைப்போம். இவ்வுலகில் வாழும் அனைவருமே தங்களது பரலோக குடியுரிமையின் அங்கீகாரங்களை பெற வேண்டி ஆண்டவரிடத்திலே மன்றாடுவோம்.

-ஜெரால்டின் ஜெனிபர்

Related Stories: