ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஜெயந்தி

25 - 02 - 2020

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் தன் இறைத் தேடலையும் தான் கண்ட விதம்விதமான தரிசனங்களையும்பற்றி சீடர்களிடம் அவ்வப்போது கூறுவார். அவற்றை குறித்து பார்ப்போம் வாருங்கள்.  நான் பஞ்சவடியில் தரையில் விழுந்து புரண்டு அன்னையிடம், ‘அம்மா, கர்மவாதிகள் கர்மம் செய்து எதைப் பெற்றார்களோ, யோகிகள் யோகத்தின் வாயிலாக எதைக் கண்டார்களோ, ஞானிகள் ஆராய்ச்சியின் மூலம் எதை அறிந்தார்களோ அதையெல்லாம் எனக்குக் காட்டி அருள்வாய்’ என்று கேட்டேன். இன்னும் என்னென்னவோ நேர்ந்துள்ளன!  அவற்றையெல்லாம் எப்படிச் சொல்வேன்!

இந்தப் பஞ்சவடியில்தான் உட்கார்ந்திருப்பேன். சில நாட்களுக்குப் பிறகு பித்தனானேன். அந்த நிலையும் மறைந்தது.தட்சிணேசுவரத்தில் முதன்முறையாக எனக்கு இப்படிப்பட்ட நிலை ஏற்பட்ட சில நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பிராமணப் பெண் ஒருத்தி இங்கு வந்தாள். நல்ல அழகானவள். கழுத்தில் மாலை இட்டு, தூபம் போட்ட அளவிலேயே அவள் சமாதியில் ஆழ்ந்துவிட்டாள். சிறிது நேரத்திற்குப் பிறகு அவள் ஆனந்த வசப்பட்டாள். கண்ணீர் பொங்கி வழிந்தது. நான் அவளை வணங்கி, ‘அம்மா, எனக்கு இந்த நீலை கைகூடுமா?’ என்று கேட்டேன். அதற்கு அவள், ‘ஆமாம்’ என்றாள்.

எனக்குப் பத்து பதினொரு வயதிருக்கும்போது விசாலாட்சியை தரிசிக்கச் சென்றேன். வயல்வெளியில் பரவச நிலை ஏற்பட்டது. ஆகா! எப்பேர்ப்பட்ட காட்சி! புறவுணர்வு அடியோடு மறைந்தது!இருபத்திரண்டு இருபத்து மூன்று வயது நடந்துகொண்டிருந்தபோது தட்சிணேசுவரக் காளி கோயிலில் தேவி என்னிடம், ‘நீ அக்ஷயனாக விரும்புகிறாயா?’ என்று கேட்டாள். அக்ஷயன் என்றால் என்ன என்று எனக்குத் தெரியாது. ஹலதாரியைக் கேட்டேன். அதற்கு அவர், ‘க்ஷயன் என்றால் ஜீவன், அக்ஷயன் என்றால் பரமாத்மா’ என்று கூறினார்.

மண்டபக் கூரையின் சுற்றுச்சுவரிலுள்ள தியான நிலை பைரவரின் திருவுருவத்தைச் சுட்டிக்காட்டி நான் என் மனத்திடம், ‘மனமே, நீயும் இந்த பைரவரைப்போல் எவ்விதச் சலனமுமின்றி அன்னையின் திருவடித் தாமரைகளை தியானிக்க வேண்டும்’ என்று சொல்லிக்கொள்வேன். தியானிக்க அமர்ந்த உடனே என் கால்களில் தொடங்கி மேலே உள்ள உடம்பின் மூட்டுகள் அனைத்தையும் யாரோ ஒன்றன்பின் ஒன்றாகச் சாவி போட்டு பூட்டுவதுபோலிருக்கும். சாவியைத் திருப்புவது போன்ற கட்கட் ஒலிகூட எனக்குத் தெளிவாகக் கேட்கும்.

அதன்பின்னர் நான் விரும்பினால்கூட உடம்பை அங்கும் இங்கும் அசைக்க முடியாது. அமர்ந்திருக்கின்ற நிலையையும் மாற்ற இயலாது. விரும்பிய வேளையில் தியானத்திலிருந்து எழுந்திருக்கவும் முடியாது. மீண்டும் அந்த கட்கட் ஒலியுடன் தலையிலிருந்து கால் வரையுள்ள பூட்டப்பட்ட மூட்டுக்கள் அனைத்தும் திறக்கும் வரை என்னால் தியானத்திலிருந்து எழ முடியாது.

தியான வேளைகளில் நான் கண்ட காட்சிகள்தாம் எத்தனை எத்தனை. தியானிக்கும்போது ஆயிரமாயிரம் மின்மினிப் பூச்சிகள் சேர்ந்து பறப்பதுபோன்ற ஒளிக்கூட்டம் என் முன்தோன்றும். சில வேளைகளில் வெண் பனிப்படலம் போன்ற ஒளிவெள்ளம் என்னைச்சுற்றி நாற்புறமும் பரந்து படர்ந்திருப்பதைக் காண்பேன். வேறு சில வேளைகளில் அனைத்துப் பொருட்களிலும் வெள்ளியை உருக்கிவிட்டாற்போல் ஒளி பிரகாசிப்பதைப் பார்ப்பேன். பொதுவாக இத்தகைய காட்சிகள் நான் கண்களை மூடிக்கொண்டிருந்தபோது மட்டும்தான் தோன்றும்; சில வேளைகளில் கண்களைத் திறந்து வைத்திருந்தபோதும் நான் கண்டதுண்டு. நான் கண்ட காட்சிகள் என்னவென்றும் நான் கண்டதுண்டு.

நான் கண்ட காட்சிகள் என்னவென்றும் எனக்குத் தெரியவில்லை. இத்தகைய காட்சிகளைக் காண்பது நன்மையா தீமையா என்பதும் புரியவில்லை. குழம்பிய நான் அன்னை காளியிடம், ‘அம்மா, எனக்கு என்ன நேர்ந்து கொண்டிருக்கிறது? எதுவும் புரியவில்லை. உன்னை அழைப்பதற்கான மந்திரங்களோ தந்திரங்களோ எனக்குத் தெரியாது. அம்மா, உன்னை நான் எப்படி வந்தடைவேன் என்பதை எனக்குக் கற்பித்து அருள்வாய். நீ கற்பிக்காவிட்டால் எனக்கு வேறு யார் கற்றுத் தருவார்கள்? அம்மா, உன்னைத்தவிர எனக்கு வேறு யார் அடைக்கலம்?’ என்று மனமுருகிப் பிரார்த்திப்பேன். ஒருமித்த மனத்துடன் என் இதய வேட்கையைச் சொல்லிப் பரிதாபமாக அழுவேன்.

சாதனைக் காலங்களில் தியான வேளையில் நான் இன்னும் எவ்வளவோ கண்டிருக்கிறேன். ஒருமுறை வில்வ மரத்தடியில் தியானம் செய்துகொண்டிருந்தபோது  பாவ புருஷன் என்முன் வந்து எத்தனை விதமான ஆசைகளைக் காட்டினான் தெரியுமா? ஓர் ஆங்கிலேய போர்வீரனைப் போல் வந்தான். பணம், காசு, பெயர், புகழ்,  உடலின்பம், பலவித சித்திகள் என்று இவற்றையெல்லாம் தர விரும்பினான். நான் உடனே தேவியைப் பிரார்த்திக்கலானேன்.

பரம ரகசியம் இது, அன்னை என்முன் தோன்றினாள். நான் அவளிடம், ‘அம்மா, அவனை வெட்டி வீழ்த்து’ என்று கூறினேன். அன்னையின் அந்த அற்புதமான உருவம், உலகை மயக்கும் அந்த உருவம் என் மனக்கண் முன் இப்பொழுதும் தெரிகிறது. (பலராம் போஸின் இளைய மகள்) கிருஷ்ணமயியின் உருவத்தில் அவள் வந்தாள். அவளுடைய கடைக்கண் பார்வையில் உலகமே அசைந்தாடுதுபோல் தோன்றியது.

சந்தியாவந்தனம், பூஜை போன்றவற்றைச் செய்யும் நேரங்களில், சாஸ்திரத்தில் கூறியுள்ளபடி, என்னுள் இருக்கும் பாவபுருஷன் எரிந்து விட்டதாக நான் நினைப்பதுண்டு. ஆனால் உண்மையிலேயே அப்படி ஒரு பாவபுருஷன் இருக்கிறான், அவனை எரித்து அழிக்க முடியும் என்பதையெல்லாம் யார் அறிந்தார்கள்! சாதனையின் ஆரம்ப காலத்திலிருந்து உடலில் ஓர் எரிச்சல் இருந்து கொண்டிருந்தது. இது என்ன நோய் என்று நான் குழம்பினேன். எரிச்சல் படிப்படியாக அதிகரித்துத் தாங்க முடியாததாகி விட்டது.

வைத்தியர்கள் கூறிய எத்தனையோ தைலங்களைப் பூசியும் கட்டுப்படவில்லை.ஒரு நாள் நான் பஞ்சவடியில் அமர்ந்திருந்தேன். அப்போது (தம் உடலைக் காட்டி) இதிலிருந்து, சிவந்த கண்களுடன், அச்சமூட்டக்கூடிய விகாரமான தோற்றம் கொண்ட கன்னங்கரேலென்ற மனிதன் ஒருவன் வெளியே வந்து, மது அருந்தியவன் போலத் தள்ளாடித் தள்ளாடி நடக்க ஆரம்பித்தான். மறுகணமே (தன் உடலைக் காட்டி) இதிலிருந்து காவியுடை அணிந்து, திரிசூலம் தாங்கிய கம்பீரமான ஒருவர் வெளி வந்தார். இவர் முன்னவனை உக்கிரமாகத் தாக்கிக் கொன்று விட்டார். அதன் பின் என் உடலின் எரிச்சல் குறைந்து விட்டது. அதற்கு முன் ஆறு மாதங்கள் நான் இந்த எரிச்சலால் அவதிப்பட்டேன்.

அந்த நாட்களில் (சாதனை நாட்களில்) நான் தியானம் செய்யும்போது, ஒருவர் கையில் சூலத்தை ஏந்தி என் அருகில் உட்கார்ந்திருப்பதைக் கண்டேன். ‘இறைவனின் பாத கமலங்களில் மனதைச் செலுத்தாவிட்டால் சூலத்தினாலேயே உன்னைக் குத்துவேன், மனம் ஒருமுகப்படாவிட்டால் உன் மார்பைப் பிளந்து விடுவேன்’ என்று அவர் என்னை அச்சுறுத்துவார்.

தியான வேளையில் எவ்வளவு காட்சிகளைக் கண்டிருக்கிறேன்! ஒரு குவியல் பணம், சால்வை, தட்டு நிறைய இனிப்பு, மூக்குத்தி அணிந்த இரண்டு பெண்கள் எல்லாம் என் கண்முன் வரும். நான் என் மனத்திடம், ‘மனமே, நீ எதை விரும்புகிறாய்? சிறிது போகம் வேண்டுமா?’ என்று கேட்டேன். அதற்கு என் மனம், ‘வேண்டாம். இறைவனுடைய பாத கமலங்களைத் தவிர வேறு எதுவும் வேண்டாம்’ என்று கூறிவிட்டது.

தாமே எல்லாமாக ஆகியிருப்பதை என் அன்னை ஆதிபராசக்தி எனக்குக் காளி கோயிலில் காட்டி அருளினாள். எல்லாமே உணர்வு

மயம் என்பதைக் காட்டியருளினாள். சிலை உணர்வு மயம்! பீடம் உணர்வு மயம்! பூஜா பாத்திரங்கள் உணர்வு மயம்! கதவு உணர்வு மயம்! சலவைக்கல் தரை உணர்வு மயம்! இப்படி எல்லாமே உணர்வு மயம்! அறையினுள் பார்த்தேன் - எல்லாம் ரசத்தில், சச்சிதானந்த ரசத்தில் மூழ்கியிருப்பது போல் தோன்றியது. காளி கோயிலின் அருகில் ஒரு துஷ்டனைக் கண்டேன். அவனுள்ளும் தேவியின் சக்தி சுடர் விடுவதைக் கண்டேன்.

அதனால் தானே தேவிக்குப் படைக்க வேண்டிய பூரியை பூனைக்கும் கொடுத்தேன்! தேவியே பூனை வரை எல்லாமாக ஆகியிருப்பதை அப்போது கண்டேன். ‘நைவேத்திய பூரியை பட்டாச்சாரியார் பூனைக்குக் கொடுக்கிறார்’ என்று குற்றம்சாட்டி கோயில் அதிகாரி மதுர்பாபுவிற்குக் கடிதம் எழுதி விட்டார். மதுர்பாபு என் நிலையைப் புரிந்து கொண்டவர். ஆகவே, ‘அவர் விருப்பம் போல் செய்யட்டும். நீ அவரிடம் ஒன்றும் சொல்லாதே’ என்று பதில் எழுதினார்.

இறைக்காட்சிக்குப் பிறகு கிரியைகள் நழுவி விடுகின்றன. அப்படித்தான் என்னிடமிருந்து பூஜை நின்று போயிற்று. காளி கோயிலில் பூஜை செய்து வந்தேன். ஒரு நாள், கோயிலில் உள்ள பூஜைப் பாத்திரங்கள், பீடம், கதவு என்று எல்லாமே உணர்வுமயமாக இருப்பதாகக் காட்டப்பட்டது. மனிதர்கள், மற்ற உயிரினங்கள் எல்லாமே உணர்வு மயம்! உடனே ஒரு பைத்தியக்காரனைப் போல் நாலா பக்கமும் மலர்களை வாரி வாரி வீசினேன். கண்ணில் பட்ட ஒவ்வொன்றையும் வழிபட ஆரம்பித்தேன்.

ஒருநாள் சிவபெருமானின் தலையில் வில்வ இலையை சமர்பிக்கப் போனேன். அப்போது இந்தப் பிரபஞ்சமே சிவபெருமான் என்று தரிசனம் எனக்கு கிடைத்தது. அன்று முதல் சிவபெருமானை உருவத்தில் வழிபடுவது நின்று விட்டது. ஒருநாள் பூப்பறித்து கொண்டிருந்தேன். திடீரென்று பூச்செடிகள் ஒவ்வொன்றும் ஒரு பூங்கொத்தாக இருக்கின்ற தரிசனம் கிடைத்தது.

இல்லையப்பா, படைப்பை ரசித்து மகிழ்வது பற்றி நான் சொல்லவில்லை; இது தரிசனம், மின்னல் வேகத்தில் எனக்குக் காட்டப்பட்டது. ஒவ்வொரு பூச்செடியும் ஒரு பூங்கொத்தாக பிரபஞ்சக் கடவுளை அலங்கரிப்பதாகக் கண்டேன். அன்று முதல் பூப்பறிப்பது நின்று விட்டது.

முதலில் எனக்கு இந்த நிலை ஏற்பட்டபொழுது அன்னை காளிக்கு பூஜை செய்யவோ, நிவேதனம் படைக்கவோ என்னால் இயலவில்லை.

‘பட்டாச்சாரியர் நைவேத்தியம் படைக்காவிட்டால், வேறு என்ன கிழிக்கப் போகிறார் இங்கே?’ என்று கோயில் நிர்வாகி கூறுவதாக ஹலதாரியும், ஹிருதயனும் கூறினார்கள். அவன் என்னை எசினான் என்பதைக் கேட்டு நான் சிரித்தேன். எனக்குக் கொஞ்சம்கூட கோபம் வரவில்லை.

எனக்கு இந்த நிலை ஏற்பட்ட பிறகு, இறைவனைப் பற்றிய பேச்சை மட்டுமே கேட்க வேண்டும் என்று என் மனம் ஏங்கியது.

எங்கே பாகவதம் கேட்கலாம், எங்கே அத்யாத்ம ராமாயணம் கேட்கலாம், எங்கே மகாபாரதம் கேட்கலாம் என்று தேடியலைந்தேன். அத்யாத்ம ராமாயணம் கேட்பதற்காக ஏடேதாவிலுள்ள கிருஷ்ணகிஷோரிடம் பலமுறை சென்றதுண்டு. அந்த நிலையில் இறைவனைப் பற்றிய பேச்சைத் தவிர வேறு எதுவுமே எனக்குச் சுவைக்கவில்லை. உலகியல் விஷயங்கள் காதில் விழுந்தால் உட்கார்ந்து அழுவேன்.

நான் பஞ்சவடிக்கு அருகில் கங்கைக்கரையில், ‘பணம்-மண், பணமே மண், மண்ணே பணம்’ என்று ஆராய்ச்சி செய்து, பணத்தை கங்கையில் எறிந்தபோது சிறிது பயம் ஏற்பட்டது. நான் மகாலட்சுமியை விட்டு விட்டேனோ? அவள் என் சாப்பாட்டை முடக்கி விட்டால் என்ன செய்வது? உடனே ஹாஸ்ராவைப் போல் நானும் ஒரு தந்திரம் கண்டுபிடித்தேன்; ‘அம்மா, நீ என் இதயத்தில் தங்கு!’ என்று கூறிவிட்டேன்.

எனக்கு அந்த நிலை வந்தபிறகு என்னால் பூஜை முதலியவற்றைச் செய்ய முடியாமல் போயிற்று.

அப்போது நான் தேவியிடம், ‘அம்மா! என்னை யார் கவனித்துக் கொள்வார்கள்? என்னை நானே கவனித்துக் கொள்வதற்கான சக்தி என்னிடம் இல்லையே! உன் பேச்சைக் கேட்க விரும்புகிறேன்; பக்தர்களுக்கு உணவளிக்க விரும்புகிறேன்; என் முன்னால் யாராவது எதிர்ப்பட்டால் அவருக்கு ஏதாவது கொடுக்க விரும்புகிறேன். அம்மா, இதெல்லாம் எப்படி நடக்கும்! ஒரு பெரிய மனிதரை எனக்குத் தா’ என்று கேட்டேன். அதனால் அல்லவா மதுர்பாபு இவ்வளவு சேவை செய்தார்!

Related Stories: