கடவுளை கண்ட அவதார புருஷர்

ஜெயந்தி - 25.02.2020

19ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த ஆன்மிகவாதிகளுள் ஒருவர். இவர் விவேகானந்தரின் குருவாவார். மேற்கு வங்காளத்திலுள்ள காமார்புகூர் எனும் கிராமத்தில் க்ஷூதிராம் - சந்திரமணிதேவி தம்பதியினருக்கு நான்காவது குழந்தையாக பிறந்தார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் கதாதர், சிறு வயதிலேயே ஆன்மிக விஷயங்களில் ஆழ்ந்த ஞானம் உடையவராயிருந்தார். கதாதரர் குழந்தையாக இருந்த போது அவரது தந்தை காலமாகி விட்டதால் தாய் சந்திரமணி, அண்ணன் ராம்குமார் ஆகியோரின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். கதாதரை விட ராம்குமார் ஏறக்குறைய முப்பத்தொரு வயது மூத்தவர்.

ராம்குமாரின் மனைவி அழகிய ஆண்மகவு ஒன்றை ஈன்றாள். மறுகணமே உயிர் நீத்தாள். மனைவியின் நினைவுகளில் இருந்து விடுபடவும், பொருளீட்டவும் குடும்பப் பொறுப்பை இரண்டாவது சகோதரர் ராமேசுவரரிடம் ஒப்படைத்துவிட்டு கல்கத்தா சென்றார். மறு ஆண்டு குடும்பத்தினரை பார்க்க வந்த ராம்குமார், தம்பியையும் அழைத்துச் சென்றார். ஸ்ரீ ராமகிருஷ்ணர் என்ற தாதரர், பதினேழு வயதில் கல்கத்தா சென்றார். 1852 முதல் மூன்று ஆண்டுகளைக் கழித்தார். அச்சமயம் மீனவக் குடும்பத்தில் பிறந்த ராணி ராசமணி கட்டிய தட்சிணேசுவரம் காளி கோயிலில் ராம்குமார் அர்ச்சகராகப் பொறுப்பேற்றார்.

ராணியின் மருமகனான மதுர்பாபு, கதாதரரிடம் பூஜைப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டினார். அதன்படி பூஜைப் பணியை ஏற்றுக்கொண்ட கதாதரர்.

தட்சிணேசுவரம் காளி கோயில் பவதாரிணி காளிக்கு தினந்தோறும் பூஜை செய்து வந்த ஸ்ரீராமகிருஷ்ணர், தனக்கு காட்சி அளிக்குமாறு காளியிடம் மனமுருக பிரார்த்தனை செய்தார். தினமும், இரவு நேரங்களில் கோயிலின் அருகில் இருந்த பஞ்சவடி என்ற காட்டுப்பகுதியில் காளியை நினைத்து தியானம் செய்தார். ஒரு நாள் பொறுமையை இழந்த அவர், காளி சிலையின் கைகளில் இருந்த வாளினால் தற்கொலை செய்ய முயற்சித்தார். உடனே அவர் சுயநினைவு இழந்ததாகவும், ஒரு பேரானந்த ஒளி அவரை ஆட்கொண்டதாகவும் அவர் பின்னர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த காட்சிக்குப் பிறகு ஸ்ரீராமகிருஷ்ணரின் நடவடிக்கைகள் அசாதாரணமாக இருந்தது. இதைக்கண்ட அவர் தாயார் அவருக்கு பித்தம் பிடித்து விட்டது என்றெண்ணி, அவருக்கு திருமணம் செய்து வைத்தார். ஸ்ரீராமகிருஷ்ணரின் சாதனைகள் பற்றி கேள்விப்பட்டு அப்போது கல்கத்தாவில் இருந்த பலர் அவரைப் பார்க்க வந்தனர். இவர்களுள் நரேந்திரநாத் தத்தா எனப்பட்ட சுவாமி விவேகானந்தர் குறிப்பிடத்தக்கவர். அவரை வந்து அடிக்கடி சந்தித்த மகேந்திரநாத் குப்தா, தினமும் அவர் கூறுபவற்றையும், அவர் புரிந்த விவாதங்களைப் பற்றியும் The Gospel of Sri Ramakrishna என்ற பெயரில் தொகுத்து புத்தகமாக வெளியிட்டார்.

இது தமிழில் ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள் என்ற பெயரில் மூன்று பாகங்களாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஸ்ரீராமகிருஷ்ணரின் கடைசி நாட்களில் தொண்டைப் புற்றுநோய் அவரைத் தாக்கியது. அவருடைய சீடர்கள் அவரை கல்கத்தாவின் அருகில் உள்ள காசிப்பூர் என்ற இடத்தில் தோட்டவீட்டில் வைத்து வைத்தியம், சேவை செய்தனர். ஸ்ரீராமகிருஷ்ணரின் 1886ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் நாளன்று மகா சமாதி அடைந்தார்.

தொகுப்பு: ச. சுடலைகுமார்

Related Stories: