பிடிகாசு வழங்கி பிணிகள் போக்கும் நாமகிரிப்பேட்டை சண்டிகருப்பசாமி

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்த அரியகவுண்டம்பட்டியில் இருக்கிறது ஸ்ரீசண்டி கருப்பசாமி கோயில். கருப்பசாமி தமிழக கிராமத்து மக்களின் காவல் தெய்வம். கருப்பசாமி வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். 1008 கருப்பசாமிகள் உள்ளதாக நாட்டார் தெய்வங்களை வழிபடும் மக்கள் நம்புகின்றனர். அனைவருக்கும் மூத்தவர் கொல்லிமலையில் குடிகொண்டிருக்கும் பெரியசாமி. இடத்திற்கு ஏற்றவாறு பல பெயர்களிலும் கருப்பசாமி அழைக்கப்படுகிறார். அந்தவகையில் நாமகிரிப் பேட்டை சுற்றுப்புற கிராம மக்களை காத்து நிற்கும் ஒப்பற்ற தெய்வமாக விளங்குகிறார் ஸ்ரீசண்டி கருப்பசாமி.

தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில், 33 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் சண்டி கருப்பசாமி, பிரமாண்டத்தின் பிம்பமாக இருப்பது வியப்பு. மலையாளிகளைப் போல ஒருபக்கம் சாய்ந்த கொண்டை, தலையில் பெரிய தலைப்பாகை (உருமால்), நெற்றியில் திருமண், மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை, ஓங்கிய கையில் வீச்சரிவாள், மறு கையில் கதை, சங்கு, முழங்காலுக்கும் கீழே வருமளவில் இடுப்பில் கச்சை ஆகியவற்றோடு காட்சி யளிக்கும் கருப்பசாமியை கண்டு வியக்காத விழிகளே இல்லை.

ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் சண்டி கருப்பசாமிக்கு திருவிழா நடத்தப்படுகிறது. முதல் நாள், பவானி அம்மாபேட்டை காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ சொக்கலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, அடுத்தநாள் கணபதி ஹோமம், சண்டிஹோமம், சுதர்சன ஹோமம் நடத்தப்பட்டு, தெய்வங்களுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. அப்போது சண்டிகருப்பசாமி, நாககன்னி, மகிஷாசுரவர்த்தினி, விநாயகர், முருகர், திருவேர்காடு கருமாரியம்மன், சப்தகன்னிமார்கள் என்று அனைத்து தெய்வங்களும் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பது கண்கொள்ளாக்காட்சி. அன்றைய தினம் காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்கப்படுவதும் சிறப்பம்சமாகும்.

சண்டி கருப்பசாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை தினத்தில் நடக்கும் பக்தர்களுக்கு பிடிகாசு வழங்கும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழாவில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட வரும் பக்தர்களுக்கு கருப்பசாமியின் அருள்வந்து ஆடும் பூசாரிகள் பிடிகாசு கொடுப்பார்கள். இதை கருப்பசாமியே தங்களுக்கு வழங்குவதாக கூறி பக்தர்கள் மெய்சிலிர்க்கின்றனர். இப்படி கருப்பசாமியிடம் பிடிகாசு வாங்கிச் சென்றால் பிணிகள் நீங்கி, செல்வங்கள் பெருகும் என்பது ஐதீகம்.

திருமணத் தடை நீங்கவும், மாங்கல்ய வரம் வேண்டியும், குழந்தை வரம் வேண்டியும், அரசு வேலை வேண்டியும், கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டியும், கடன் தொல்லை தீரவும், பூர்வ ஜென்ம பாவ விமோசனம் வேண்டியும், பிரிந்த தம்பதியரை சேர்த்து வைக்க வேண்டியும், செய்யும் தொழில் செழிக்க வேண்டியும், புதிய தொழில் துவங்க வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், மழை பொழிய வேண்டியும், வழக்குகளில் வெற்றி பெறவும் இங்கு நடக்கும் மஹா சண்டியாகத்திற்கும் பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.

வாகனம் ஓட்டும்போது விபத்துக்கள் நேராமல் இருக்கவும், நல்ல முறையில் வாகனம் ஓட்டவும், உயிர் பாதுகாப்பு வேண்டியும் ஸ்ரீ மாருதி (ஆஞ்சநேயர்) யாகம் நடத்தப்படுகிறது. குரு பலனை முழுமையாக பெறுவதற்கு குரு பெயர்ச்சி யாகம் நடத்தப்படுகிறது. எதிரிகளை அழிக்கவும், கடன் தொல்லையில் இருந்து விடுபடவும் சுதர்சன யாகம் நடத்தப்படுகிறது. இப்படி பக்தர்களின் நன்மைக்காக பல்வேறு யாகங்கள் நடத்தும் தலமாகவும் சண்டி கருப்பசாமி கோயில் இருப்பதால் நாளுக்கு நாள், இங்கு திரளும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: