நாடி நாடி நங்கவள்ளி நரசிங்கா…

நலம் தரும் நரசிம்மர் தரிசனம்-22

தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் நங்கவள்ளி என்னும் ஊரில் அமைந்துள்ள இக்கோவில் சுமார் ஆயிரம் வருடம் பழமையானது.இங்குள்ள வைணவ தலங்களில் மிகவும் புகழ்பெற்றது.

 நரசிம்மர் சுயம்புவாக இங்கு காட்சியளிகின்றார்.இங்கு சிவன் சிலைகளும் உண்டு, சைவ, வைணவ ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டான ஒரு தலம். 75 அடி ராஜ கோபுரத்தோடு காட்சி அளிக்கும் இக்கோவிலில் பல கடவுளர்களுக்கு தனித் தனியே சந்நதிகள் அமைக்கப்பட்டுள்ளன. தீராத நோய்கள், தோல் சமந்தமான நோய்கள், கடன் பிரச்னை, குழந்தை பாக்கியம் முதலான அனைத்து வேண்டுதல்களுக்கும் இங்கு வந்து வழிபட்டால் தீரும் என்று நம்பப்படுகிறது. இக்கோயில் சோமேஸ்வரர் கோவில் என்றும் அழைக்கப் படுகிறது . இங்கு சிவனும், பெருமாளும் ஒரு சேர இருப்பதால் இப்பெயர் வந்தது.

ஏறக்குறைய ஆயிரம் வருடம் முன்பு ஆந்திரம் பகுதியில் இருந்து சேலம் பகுதிகளில் குடியேறிய தொட்டிய நாயக்கர்கள் அதிகமாக பசுமாடுகளை வளர்த்து வந்தனர். இவர்களில் தொட்டிய நங்கை என்ற பெண் ஒரு குடையுடன் மாடு மேய்க்க செல்கையில் கூடை கனத்தது. கூடையினுள் பார்க்க ஒரு சாளக்ராம வடிவக் கல்லினைக் கண்டாள். அக்கல் எப்படி வந்தது என்று தெரியாமல் அதனை தூக்கி எறிந்து விட்டாள். சற்று நேரத்தில் மறுபடியும் கூடை கனக்க அதில் திரும்பவும் அக்கல் இருந்ததைக் கண்டாள் பயந்து போன அவள் மறுபடியும் அக்கல்லினை ஒரு குளத்தில் போட்டு சென்றுவிட்டாள்.

பிறகு ஊருக்கு திரும்பிய அவள் அன்றாட வேலைகளை செய்துகொண்டு இருக்க அவ்வூரில் ஒரு பெண்ணுக்கு அருள் வந்து, தான் லட்சுமி என்றும் உங்களுடன் பெல்லாரி என்னும் பகுதியில் இருந்தே உங்களுடனே வந்துவிட்டேன் என்றும் உன்னோடு கல்வடிவில் வந்தது தான் தான் என்றும், எனக்கு உங்கள் ஊரில் கோயில் அமைத்து வழிபட்டால் உங்களை என்றும் குறைவில்லாமல் காப்பேன் என்றும் கூறியது.

அதன் பிறகு அக்கல்லினை ஒரு புற்றில் ஊர்மக்கள் கண்டு எடுத்தனர். கூரையினால் சிறிய அளவில் கோயிலமைத்து வழிபட்டு வந்தனர். இக்கோயில் பிறகு கம்பளத்து பாளைய கட்டுப்பாட்டில் வந்ததும் இக்கோயில் நல்ல வளர்ச்சி அடைந்து கோபுரங்கள் அமைக்கப்பட்டன . இங்கு லட்சுமி மற்றும் பெருமாள் சிலைகள் அமைக்கப்பட்டு லட்சுமி நரசிம்மர் என்று பெயர் வழங்கினர்.

கோயிலில் 75 அடி உயரத்தில் ஐந்து நிலை ராஜகோபுரம் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. திருக்கோயில் ராஜகோபுரத்தின் மரக்கதவுகளின் சிற்ப வேலைப்பாடே அழகாக செதுக்கப்பட்டிருப்பது சிறப்பான ஒன்றாகும். ராஜகோபுர வாயிலில் நுழைந்து சென்றால் இருபக்கமும் பெரியதிருவடி, சிறிய திருவடிகளான கருடாழ்வார், அனுமன் நம்மை வரவேற்க முழுமுதற்கடவுளான வன்னிமர வினாயகரும், அரசமர விநாயகரும் ஒன்றாய் அமர்ந்து நமக்கு அருள்புரிகின்றனர்.

கோயிலுக்கு முன் கொடிமரம் வணங்கி அருகே துளசிமாடம் மற்றும் அஷ்டலட்சுமி மாடத்தில் 8 லட்சுமிகள் அருள்தர வணங்கி உட் பிராகாரத்தில் விஷ்வக்சேனர் சந்நதி.கருடாழ்வாரை  தரிசித்து உள்ளே மூலவரான லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்து வந்தால் திருமணத்தடை, நல்வாழ்வு, நன்மக்கள் பேறு கிடைக்கும் என்பது திண்ணம்.

இப்பகுதியில் வாழும் ராஜகம்பளம், பலிஜா போன்ற நாயக்கர்மக்களுக்கும், ரெட்டியார், வன்னியர், தேவாங்கர் போயர் போன்ற இனத்து மக்களுக்கும் குலதெய்வமாக இக்கோயிலில் உள்ள பெருமாள் மற்றும் லட்சுமி திகழ்கிறார் . சபாமண்டபத்தின் வெளியே மேல் பகுதியில் லட்சுமி நரசிம்மர், பிரகலாதன், சிவன், பிரம்மா, விஷ்ணு, முனிவர்களின் சுதைச் சிற்பங்களும் சபாமண்டபத்தின் உட்புறம் மேல் பகுதிகளில் சத்யநாராயணர், ஸ்ரீநிவாச கல்யாணம், ராதா  கிருஷ்ணன் ருக்மணி, மகாவிஷ்ணு, நாரதர், அனந்தசயனம், பரதன் பாதுகை பெறுதல், ராமர் பட்டாபிஷேகம், அஷ்டலட்சுமி மற்றும் சிவன், பிரம்மா, விநாயகர், விஸ்வாமித்திரர் போன்ற முனிவர்கள் உட்பட பல சுதைச்சிற்பங்கள் காட்சி மேடை உள்ளது.

16 கால் (கல்தூண்) நவராத்திரி மண்டப கல்தூண்களில், தச அவதாரமும், நாகர், விநாயகர், கருடர், ஆஞ்சநேயர், சுப்ரமண்யர், சிவலிங்கம், ஆழ்வார்கள், ஆமை, மான், சிங்கம், அன்னம், கிளி, குதிரை, வேடன், கண்ணப்பர் சிவலிங்கத்திற்கு கண்களைத் தருதல், காளிங்கப்பாம்பின் மீது கண்ணன் நடனம் ஆடுதல், அனுமன் மரத்திலும் கீழே சீதையும், பூமாதேவி தாங்குதல், கருடாழ்வார். சங்கு, சக்கரம், நாமம், துவார பாலகர்கள், கூனி உட்பட பல சிற்பங்கள்அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன.

தீராத நோய்கள், திருமணத்தடை, அனைத்து வித பிரச்னைகளும் தீர இறைவனிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.தொழில் வேலை வாய்ப்பு. நிலம், வீடு, வாகனம் வாங்க போன்ற காரியங்கள் ஈடேற இங்கு ராம வாக்கு (துளசி வாக்கு) கேட்டு அதன்படி செய்தால் காரியங்கள் வெற்றி அடைகின்றன என்று நம்பப்படுகிறது. புதிய வாகனங்களை இங்கு பூஜை செய்து எடுத்துச் செல்வதும் வழக்கம்.

மூலஸ்தானத்தில் உள்ள மூலவர் சிலைக்கு அக்காலத்தில் பால் அபிஷேகம் செய்து கற்பூர தீபம் காட்டி, அடுத்து தயிர் அபிஷேகம் செய்வதற்குள் ஒரு அடி உயரத்திற்கு சாமி சிலைகளை புற்று மண் மூடி இருக்குமாம் ! புற்று மண்ணை அகற்றி விட்டு மீண்டும் அடுத்த அபிஷேகம் செய்வார்களாம். அதற்குள் சிலைகளைச் சுற்றி புற்றுமண் மூடிக்கொண்டே வருமாம்.

புற்றில் எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் புற்று நிரம்புவதில்லை. தற்போது, மூலஸ்தானத்தில் சாமிக்குப் பக்கத்தில் உள்ள பாம்புப் புற்று, தட்டு வைத்து மூடிவைக்கப்பட்டு இருக்கிறது. அமாவாசை, பௌர்ணமி காலங்களில் புற்றின் மேல் உள்ள தட்டு கீழே தள்ளப்பட்டுக் கிடக்கும். இந்தச் சமயங்களில் கோயிலுக்கு பாம்பு வந்து செல்கின்றது என்கிறார்கள். இப்புற்று மண்ணினை தோல் நோய்கள் உள்ளோர் எடுத்து பூசினால் உடனே சரியாகிவிடும் என்று நம்பப்படுகிறது.

பவுர்ணமி பூஜை, ராகு பூஜை, தெலுங்கு வருட பிறப்பு, உகாதி, பங்குனி உத்திரம், கோகுலாஷ்டமி போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இப் பூஜைகளில் ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து வழிபடுகின்றனர். பௌர்ணமி தோறும் சத்ய நாராயண பூஜையும், செவ்வாய், வெள்ளி, ஞாயிறு நாட்களில் ராகு காலத்தில் துர்க்கை பூஜையும், செவ்வாய் வெள்ளி நாட்களில் மாலை நேரத்தில் அஷ்டலட்சுமி (துளமி மடம்) பூஜையும், கருடாழ்வார், ஆண்டாள், விஷ்வக் சேனர் மற்றும் அரச மரத்து விநாயகருக்கு அபிஷேக வழிபாடும், திருவிளக்கு பூஜையும் 1008 சங்கு பூஜையும் (அபிஷேகம்) ஸஹஸ்ரநாம அர்ச்சனையும் நடைபெறுகின்றன. மார்கழி மாதம் முழுவதும் அதிகாலைப் பூஜையும் நடைபெறுகிறது. அனுமத் ஜெயந்தி, நரசிம்ம ஜெயந்தி நாட்களில் சிறப்பு பூஜையும் உண்டு. பங்குனியில் தேர்த் திருவிழாவும் உண்டு.அருள்மிகு லட்சுமி நரசிம்மர் ஆலயம் சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் சுமார் 20 கி.மீட்டர் தொலைவில் வனவாசி அருகில் நங்கவள்ளி என்னும் ஊரில் அமைந்த ஓர் பழங்கால

திருக்கோயிலாகும்.

(தரிசனம் தொடரும்)

ந.பரணிகுமார்

Related Stories: