உங்கள் சந்ததிகள் வாழ்வு சிறக்க, வளமை பெருக ஏகாதசி விரதம் இருங்கள்!!

நமது தமிழ் மாதங்கள் சந்திரனின் வளர்பிறை, தேய்பிறை அமைப்பை கொண்டு தினங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த தினங்களை திதிகள் என்றும் கூறுவர். சந்திரனின் வளர்பிறை காலம் 15 தினங்கள், தேய்பிறை காலம் 15 தினங்கள் என 30,31 தினங்கள் ஒரு மாதத்தில் வருகிறது. இதில் அனைத்து மாதங்களிலும் வளர்பிறை, தேய்பிறை காலங்களில் 11 ஆவது தினமாக வருவது ஏகாதசி தினம் ஆகும். பெருமாள் வழிபாட்டிற்குரிய இந்த ஏகாதசி தினத்தில் விரதம் மேற்கொள்வதால் கிடைக்கும் பலன்கள் என்னே என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மாதந்தோறும் வரும் வளர்பிறை ஏகாதசி மற்றும் தேய்பிறை ஏகாதசி தினங்களில் வளர்பிறை ஏகாதசி தினத்தில் விரதம் மேற்கொள்வது சிறந்தது. உடல்நிலை நன்றாக இருந்து, நேரம் அதிகம் இருப்பவர்கள் வளர்பிறை, தேய்பிறை ஏகாதசி விரதங்கள் மேற்கொள்ளலாம். தசமி தினத்தில் வீட்டை கழுவி சுத்தம் செய்வது நல்லது. அந்த தசமி தினத்தன்று ஒரு வேளை உணவு மட்டும் அருந்திவிட்டு ஏகாதசி விரதம் இருக்க தொடங்க வேண்டும். மறுநாள் ஏகாதசி தினத்தில் அதிகாலை வேளையான 3 முதல் 4 மணிக்குள்ளான பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து முடித்து விட்டு, அருகிலுள்ள பெருமாள் கோயிளுக்கு சென்று வழிபட வேண்டும்.

பின்பு வீட்டிற்கு திரும்பியதும் அந்நாள் முழுவதும் உணவேதும் உண்ணாமல் ஏகாதசி விரதம் இருக்க வேண்டும். துளசி இலைகள் ஊறவைக்கப்பட்ட நீரை தீர்த்தமாக அவ்வப்போது அருந்தலாம். முதியோர்கள், உடல் பலவீனமானவர்கள் பெருமாளுக்கு நிவேதித்த பால் மற்றும் பழங்களை சாப்பிடலாம். இந்நாள் முழுவதும் பெருமாளின் சிந்தனை மற்றும் தியானத்தில் இருந்து மௌன விரதமும் கடைபிடித்தால் ஏகாதசி விரதத்தின் பலன் பன்மடங்கு அதிகரிக்கும்.

ஏகாதசி தினத்தன்று இரவில் தூங்காமல் விஷ்ணு சஹஸ்ரநாமம், பெருமாள் மந்திரங்கள், பாகவதம் படித்தல் போன்ற ஆன்மீக செயல்களில் ஈடுபடுவது சிறப்பானதாகும். இந்த ஏகாதசி தினத்தில் கண் விழித்து விரதம் இருப்பதால் உடலுக்கும், மனதிற்கும் மிகுதியான ஆன்மீக ஆற்றல் கிடைக்கும். ஏகாதசி தினத்தின் மறுநாளான துவாதசி தினத்தில் வைணவ சம்பிரதாய நாள்காட்டியில் குறிப்பிட்டிருக்கும் நேரத்தில் துளசி தீர்த்தம் அருந்தி ஏகாதசி விரதத்தை முடிக்க வேண்டும்.

மறுநாளில் நீங்கள் செய்யும் உணவை வீட்டின் பூஜையறையில் பெருமாள் படத்திற்கு நைவேத்தியம் வைத்த பின்பு வழக்கமான உணவுகளை சாப்பிடலாம். இப்படி மாதந்தோறும் வரும் பெருமாளுக்குரிய ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு வாழ்வில் இருக்கிற வறுமை நிலை மாரி வளமை அதிகரிக்கும். உடலாரோக்கியம் மேம்படும். நோய்கள் நீங்கும். நீங்கள் விரும்பிய காரியங்கள் நிறைவேறும் யோகம் உண்டாகும். இந்த விரதம் மேற்கொள்பவர்களின் வருங்கால சந்ததியினர் சீரும் சிறப்புமான வாழ்வை பெறுவார்கள்.

Related Stories: