வளம் தரும் ஸ்ரீவாஞ்சியம்

6 - 12 - 2019, ஸ்ரீவாஞ்சியம் பானுவார உற்சவ ஆரம்பம்

திருவாஞ்சியம் திருத்தலத்தில் உள்ள குப்த கங்கையில் கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை நீராடுவது மிகச் சிறப்பானது. ஏனென்றால் கங்கையே குப்தகங்கை என்ற பெயரில் தீர்த்தமாக உருவாகியிருக்கிறாள் என்பது ஐதீகம். இங்கு எமதர்மனுக்கு தனிச்சந்நதி உள்ளது. எமதர்மன், சிவபெருமானுக்கு வாகனமாகக் காட்சிதரும் திருத்தலம் இது. மரணம் தவிர்க்கப்பட முடியாததாகவே இருந்தாலும், அச்சமயத்திலும் அந்த உண்மையைப் புரிந்துகொண்டு, திடமான மனதுடன் அதை எதிர்நோக்கும் பக்குவத்தை, இத்தலம் உருவாக்கும் என்கிறார்கள்.

கார்த்திகை பரணி தீபத்திருநாளில் இங்கு அருள்புரியும் ஈசனாம் வாஞ்சிநாதரையும், அம்பாள் மங்காளாம்பிகையையும் சுமந்துகொண்டு ஊர்வலமாக வருகிறான் எமதர்மன். இங்கு பல தீர்த்தங்கள் இருந்தபோதிலும், கோயிலுக்கு அருகில் உள்ள குப்த கங்கையில் நீராடி, தனிச் சந்நதியில் அருள்புரியும் எமதர்மராஜனை முதலில் வழிபட்ட பிறகுதான் இறைவனையும், இறைவியையும் வழிபட வேண்டும் என்பது இக்கோயிலில் வழிபாட்டு நடைமுறை.

முக்தி தரும் தலங்களில் திருவாஞ்சியமும் ஒன்று. திருவாஞ்சியம் இறைவனை எமன் வழிபட்டு பேறுகள் பெற்றார். கோயிலின் வடபுறத்தில் குப்தகங்கை எனும் தீர்த்தக்குளம் உள்ளது. கார்த்திகை மாத ஞாயிற்று; கிழமைகளில் இத்திருக்குளத்தில் நீராடினால் கங்கை நதியில் நீராடிய பலன் கிட்டும் என்பார்கள்.

ஒருசமயம் மகாவிஷ்ணுவிற்கும் லட்சுமிக்குமிடையே மனத்தாங்கல் ஏற்பட்டபோது, சிவபெருமான், பார்வதியுடன் காட்சியளித்து இருவரையும் ஒன்று சேர்த்து வைத்தார். மகாலட்சுமியை விஷ்ணு, வாஞ்சையால் விரும்பி சேர்ந்த இடமாதலால் இந்த இடம் ஸ்ரீவாஞ்சியம் என்று பெயர் பெற்றது. எனவே, தம்பதிக்குள் மனவேற்றுமையிருந்தால் அவர்கள் இங்கு வந்து வழிபட்டால் மனக்குறை தீர்ந்து, மகிழ்வுடனும் ஒற்றுமையுடனும் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.

இத்தலத்தில் கங்கை எழுந்தருளியதற்கு புராணம் கூறும் தகவல்கள் சுவாரஸ்யமானது. கலியுகம் பிறந்ததும் பாவம் செய்பவர்கள் அதிகமானார்கள். அவர்களில் பலர் காசிக்குச் சென்று கங்கையில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொண்டார்கள். அந்த பாவச் சுமைகள் கங்கையை வருத்தியது. அவள் சிவபெருமானிடம் தன் வேதனையைச் சொல்லி, பரிகாரம் கேட்டாள். உடனே, சிவபெருமான் தமிழகத்தில் திருவாஞ்சியம் திருத்தலத்தில் நான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்பாலித்துக் கொண்டிருக்கிறேன். நீ, உனது ஆயிரம் கலையில் ஒருகலையை மட்டும் காசியில் விட்டுவிட்டு மீதியுள்ள 999 கலைகளுடன் குப்தகங்கையாக இங்கு வந்துவிடு’’ என்று அருளினார்.

அதன்படி கங்காதேவி, திருவாஞ்சியத்தில் புண்ணிய தீர்த்தமாக அமர்ந்தாள்.உலகில் வாழும் உயிர்களின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அவர்களுக்கு சொர்க்கத்தையும், நரகத்தையும் அளிக்கும் எமனுக்கு கலியுகம் பிறந்ததும் பயம் வந்துவிட்டது. அதிகமாக உயிர்களைப் பறிக்கும் பணியை மேற்கொள்ளவேண்டியிருக்கிறதே என்று வருத்தப்பட்டான். இதனை அறிந்த சிவபெருமான், அந்தப் பணியை அவனிடமிருந்து பறித்து அவனைத் தனிமைப்படுத்தினார். எந்தப் பொறுப்பையும் நிறைவேற்ற முடியாத தன் இயலாமை வருத்த, பல திருத்தலங்களுக்குச் சென்று சிவபெருமானை வழிபட்டான், எமன். அந்த வகையில் திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு வந்த எமன், சிவபெருமானை வேண்டிக்கொண்டதில், அங்கு ருண லிங்கேஸ்வரருக்கு சண்டிகேஸ்வரராகத் தனிச் சந்நதியில் அமரவேண்டியிருந்தது. தன் தனித்தன்மை தன்னைவிட்டு விலகிவிடுமோ என்று அவன் அச்சமடைந்தபோது, ‘திருவாஞ்சியம் சென்று வழிபடுக’ என்று அசரீரி ஒலித்தது. அதன்படி திருவாஞ்சியம் வந்து தனது பெயரில் தீர்த்தம் உருவாக்கி அதில் நீராடி பல ஆண்டுகள் தவம் செய்தான் எமன். அவன் தவத்தைப் போற்றிய இறைவன், மாசிமாதம் பரணி நட்சத்திரத்தன்று எமனுக்குக் காட்சிகொடுத்து அருளினார்.

 மேலும், திருவாஞ்சியம் தலத்திற்கு வரும் பக்தர்கள் முதலில் குப்தகங்கையில் நீராடியபின் உன்னை வணங்கிய பிறகு, விநாயகரை வழிபட்டு என்னை வணங்குவார்கள் என்று எமனுக்கு முதல் மரியாதை கிடைக்கும்படி வரம் கொடுத்தார். அதன்படி அமர்ந்த கோலத்தில் தெற்கு நோக்கிய தனிச்சந்நதியில் அனுக்கிரக மூர்த்தியாக, க்ஷேத்திரபாலகராக எமதர்மன் இத்தலத்தில் அருட்பாலிக்கிறார். தட்சன் இயற்றிய யாகத்தில் பங்கு கொண்டவர்களில் சூரியனும் ஒருவன். ஈசன் ஆணைப்படி வீரபத்திரர் அவனை தண்டிக்க, தன் பிரகாசத்தை இழந்த ஆதவன், ஓடிப்போய் சிவபெருமான் பாதங்களில் விழுந்தான். அவன் ஸ்ரீவாஞ்சியத்தில் குப்தகங்கையில் நீராடி கார்த்திகை மாதம் முழுவதும் வழிபட்டால் சில துரோகப் பாவம் நீங்கும் என்று இறைவன் அருளினார். அவ்வாறே செய்த சூரியன் தன் ஒளியை மீண்டும் பெற்றான். இதனால் சூரியனுக்கு உகந்த கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு குப்த கங்கையில் நீராடினால் பஞ்சமா பாவங்களும் மன்னிக்கப்படும் என்பது ஐதீகம்.

மோகினி அவதாரத்தின்போது மகாவிஷ்ணுவால் வெட்டப்பட்ட அசுரன் ராகுவாகவும், கேதுவாகவும் உருமாறினான். பொதுவாக பிற கோயில்களில் தனித்தனி மூர்த்தியாக இவர்கள் காட்சியளிக்கிறார்கள். திருவாஞ்சியத்தில் மட்டும், அபூர்வமான ஒரே மூர்த்தியாக இணைந்து அருள்புரிகிறார்கள். இந்த அமைப்பு ‘சண்டராகு’ என்று சொல்லப்படுகிறது.இத்தலத்தில் துர்க்கை அஷ்ட புஜங்களுடன் மகிஷாசுரமர்த்தினியாகக் காட்சி தருகிறாள். இத்துர்க்கையை 108 தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு அனைத்து நலன்களும் பெறலாம் என்பது நம்பிக்கை. தலவிருட்சம் - சந்தனமரம். கோயில் முதல் சுற்றில் வெண்ணெய்ப் பிள்ளையார், விநாயகர், சுப்பிரமணியன், பஞ்சபூத லிங்கங்கள், ஜேஷ்டாதேவி, சனிபகவான், மகிஷாசுரமர்த்தினி ஆகிய சந்நதிகள் உள்ளன. காசிக்கு சமமாக அகோரேஸ்வரர், பஞ்சநாதேஸ்வரர், மயூரநாதேஸ்வரர், மகாலிங்கேஸ்வரர் சந்நதிகளும் உள்ளன. இத்தலத்தில் யோகபைரவரும் அருள்புரிகிறார். இவரை வழிபட யோகங்கள் கிட்டும் என்பார்கள். திருவாரூர் - மயிலாடுதுறை வழியில் திருவாரூரிலிருந்து 16 கி.மீ. தூரத்தில் உள்ளது திருவாஞ்சியம்.

 - தி.ரா.பரிமளரங்கன்

Related Stories: