இறந்து நூறு ஆண்டுகளுக்குப் பின்...

இஸ்லாமிய வாழ்வியல்

சின்னாபின்னமாய்ச் சிதிலம் அடைந்து கிடந்தது ஓர் ஊர். வீட்டின் முகடுகள் எல்லாம் வீழ்ந்து கிடந்தன. வாழ்ந்திருந்த மக்கள் அனைவரும் செத்துப் போய்விட்டார்கள். “அடியோடு பாழடைந்த ஊர்” என்றுதான் அதைச் சொல்ல வேண்டும்.கழுதை மீதேறி பயணம் செய்து வந்த ஒரு மனிதர் அந்த ஊரைக் கடந்து செல்கிறார். போதிய அளவு உணவும், பானமும் அவரிடம் இருந்தன. ஊரின் பரிதாப நிலையை நின்று நிதானமாகப் பார்க்கிறார். அவருக்குள் பலவிதமான எண்ணங்ககள். திடீரென்று மறுமைச் சிந்தனை மனத்தில் நிழலாடுகிறது.“இந்த ஊர் மக்களை இறைவன் எப்படி உயிர்ப்பிக்கப் போகிறானோ?” என்று நினைத்தவர் அது குறித்து இறைவனிடம் கேட்கவும் செய்தார். “மறுமையில் நீ உயிர்களை மீண்டும் எப்படி உயிர்த்தெழச் செய்கிறாய் என்பதை எனக்குக் காட்டுவாயாக” என்று இறைத்தூதர் இப்ராஹீம்(அலை) அவர்கள் இறைவனிடம் கேட்டாரே அதுபோல.

இப்ராஹீம் நபிக்குப் பறவைகள் மூலமாக மீண்டும் உயிர்த்தெழுதலை இறைவன் காண்பித்துத் தந்தான். ஆனால் இந்த மனிதர் விஷயத்தில் அவரையே எடுத்துக்காட்டு ஆக்கினான்.

ஆம்..! இப்படிக் கேள்வி கேட்ட மறுவினாடி அதே இடத்தில் அந்த மனிதரின் உயிரை இறைவன் கைப்பற்றினான். இப்படியே நூறு ஆண்டுகள் கடந்தன. நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் இறைவன் அவரை மீண்டும் உயிர்ப்பித்தான். அவர் பயணித்து வந்த வாகனமான கழுதை இறந்து கிடந்தது. எலும்புகள்கூட மக்கிப் போய்க் கிடந்தன. ஆனால் அவருடைய உணவும் பானமும் கெடாமல் அப்படியே புத்தம் புதிதாய் இருந்தன.நூறு ஆண்டுகளுக்குப் பிறகு உயிர் பெற்று எழுந்த மனிதனிடம், “எத்தனை காலம் இவ்வாறு கிடந்தாய்?” என்று கேட்டான் இறைவன்.

“ஒரு நாள் அல்லது சிலமணி நேரங்கள்” என்றான் அந்த மனிதன்.“இல்லை. நூறு ஆண்டுகள் இப்படிக் கிடந்தாய். உன் கழுதையைப் பார். எலும்புகள்கூட மக்கிப்போய் விட்டன. உன் உணவையும் பானத்தையும் பார். கெடாமல் இருக்கின்றன” என்று  கூறிய இறைவன் செத்துக் கிடந்த கழுதையையும் உயிர்ப்பித்துக் காட்டி, “இப்படித்தான் மறுமையைக் கொண்டு வருவோம்” என்று விளக்கினான். குர்ஆனிலுள்ள அந்த வசனம் வருமாறு:

  “முகடுகள் இடிந்து வீழ்ந்துகிடந்த ஓர் ஊரைக் கடந்து சென்ற ஒரு மனிதரின் உதாரணத்தை நீர் கவனிக்கவில்லையா? அவர்,“(முற்றிலும்) அழிந்துபோய்விட்ட இந்த ஊர்மக்களை இறைவன் எப்படி மீண்டும் உயிர்ப்பிக்கப்போகிறான்?” என வினவினார். அதற்கு இறைவன் அவருடைய உயிரைக் கைப்பற்றி நூறாண்டுகள் அவரை உயிரற்றவராகக் கிடக்கச் செய்தான். பின்னர் அவரை உயிர்த்தெழச் செய்து வினவினான்: “நீர் எவ்வளவு காலம் இவ்வாறு கிடந்தீர்?” அதற்கு அவர் “ஒரு நாள் அல்லது சில மணிநேரங்கள் நான் இப்படிக் கிடந்திருப்பேன்” என்று கூறினார். இறைவன் கூறினான்: “இல்லை. நீர் (இந்த நிலையிலேயே) நூறாண்டுகள் கிடந்தீர். உம்முடைய உணவையும் பானத்தையும் சற்றுப் பாரும். அவை சிறிதும் கெட்டுப் போகவில்லை. உம்முடைய கழுதையைப் பாரும். (அதன் எலும்புகள்கூட மக்கிப்போய்விட்டன) உம்மை மக்களுக்கொரு சான்றாக விளங்கச் செய்வதற்காகவே நாம் இவ்வாறு செய்தோம். அந்த எலும்புகளை நாம் எவ்வாறு ஒன்றுசேர்த்துப் பின்னர் சதையால் போர்த்துகிறோம் என்பதைப் பாரும்.”“இப்படி உண்மை அவருக்குத் தெளிவானபோது, “நிச்சயமாக இறைவன் எல்லாப் பொருள்களின் மீதும் பேராற்றலுடையவன் என்பதை நான் அறிகிறேன்” என்று கூறினார். (குர்ஆன் 2:259)இந்த உலக வாழ்வும் மரணமும் எப்படி உண்மையோ அப்படியே மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்வும் உண்மையே. இந்த உலக வாழ்வு மிகமிகக் குறுகியது. ஆனால் மறுமை வாழ்வோ நிலையானது.. நீடித்திருக்கக் கூடியது. மறுமையை முன்வைத்து உலகில் இறைவனுக்கு அடிபணிந்து வாழ்வோம்.

- சிராஜுல்ஹஸன்

இந்த வார சிந்தனை

“இறைவன்தான் படைப்புகளை முதன்முறையாகப் படைக்கின்றான். பின்னர் அவற்றை மறுமுறையும் அவனே படைக்கின்றான்.” (குர்ஆன் 10:34)

Related Stories: