சங்கடங்கள் போக்குவாள் சாமளம்மன்

நகரி

விண்ணை முட்டும் ராஜகோபுரம் இல்லை, பிராகாரமும் இல்லை. நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கவும் தேவையில்லை. அர்ச்சனை டிக்கெட், உண்டியலில் காசு, அர்ச்சகருக்கு தட்சணை என்று எந்தச் செலவும் இல்லை.

அப்படி ஒரு தெய்வத் திருத்தலம், திருத்தணி அருகேயுள்ள நகரியில் அமைந்துள்ளது. இங்கே அருள் புரியும் அன்னை, சாமளம்மா தேவி. பலா மரத்தடியில் அமைதியே உருவாய் சுமார் மூன்றடி உயரத்தில் சங்கு, அங்குசம், வரத அபயக்கரங்களுடன் ஆதிசக்தி பொலிந்து பேரருளுடன் தரிசனம் தருகிறாள். அம்பிகை இடது காலை மடித்துக்கொண்டு, தொங்கவிட்ட வலது காலை தாமரை மலர் மேல் பதித்தபடி அமர்ந்திருக்கும் அருட்கோலம் காண கண்கோடி வேண்டும். இயற்கை எழில் கொஞ்சும் திறந்தவெளியில், ஆனந்தமயமாய் தானும் திகழ்ந்து, தன்னை வழிபடும் அன்பர்களுக்கும் ஆனந்தத்தை அள்ளி அள்ளி வழங்குகிறாள் இந்தத் தாய்.

பல நூறு வருடங்களுக்கு முன், புதர்கள் அடர்ந்த பகுதியாய் இருந்த இந்த இடத்தில் தீய சக்திகளின் நடமாட்டம் அதிகம் இருந்தது. அவற்றால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள், தங்களுடைய சோகம் தீர்ப்பார் யார் என்று ஆதங்கத்துடன் காத்திருந்தார்கள். அன்புத் தாயான இந்த தேவி யாரும் கோராமலேயே அவர்களுடைய துக்கத்தை துடைக்க தீர்மானித்தாள். உடனே தன் சக்திகளை சில அம்சங்களாக வெளிப்படுத்தினாள். தேசம்மன், கங்கம்மா, ஒககுண்டலம்மா ஆகிய தேவிகளை படைத்தாள். தேசம்மாவை திருமலராஜு கண்டிகை என்ற பகுதியிலும், ஒககுண்டலம்மாவை ஒககுண்டாபுரத்திலும் நிலை கொள்ள செய்து மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டாள்.

வருடம் முழுதும் கிராமத்தை சுற்றிவந்து தீய சக்திகளை விரட்டிட கங்கம்மாவை பணித்த தேவி, தான் நகரியில் நிலை கொண்டாள். அன்னையின் ஆணைக்குட்பட்டு, வருடம் முழுதும் ஊரைக்  காக்கும் கங்கம்மாவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்திக்கு அடுத்த வாரம் வெகு விமரிசையாக விழா எடுக்கப்படுகிறது. அதை ஜாத்ரா என அழைக்கின்றனர்.இந்தத் திருவிழாவிற்கு முதல் வாரம் சாட்டு எனும் வழிபாடு ஆதிசக்தியான சாமளம்மாவிற்கு செய்யப் படுகிறது. ஒரு செவ்வாய்க்கிழமையன்று இரவு கொழுக்கட்டை, அசைவ உணவுகள், புதுச் சட்டியில் சாதம் போன்றவற்றை சாமளம்மாவுக்கு படைத்து ஆடு பலி கொடுக்கிறார்கள். இது அனுமதி கேட்கும் ஒரு நடைமுறை. எதற்காக அனுமதி? ‘கங்கம்மாவிற்கு திருவிழா நடத்தப் போகிறோம். ஆண்டு முழுதும் எங்களை காக்கும் அவளுக்கு பூஜை செய்து, படையலிட்டு அவள் மனத்தை குளிரச் செய்து அவளை திருப்பியனுப்புகிறோம். அதுவரை அவளை நீ அழைத்துக் கொள்ளாதே. சென்ற வருடம் எங்களை பாதுகாத்தது போல வரும் வருடமும் காக்குமாறு நீதான் அவளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கேட்டுக்கொள்ளும் நடைமுறை அது.

கங்கம்மா ஊர் பூஜையை ஏற்றுக் கொள்ள சம்மதிக்கும் உத்தரவு கிடைத்ததை சாமளம்மா குறிப்பால் உணர்த்துவாளாம். அதை ஊருக்குள் தண்டோரா போட்டு அறிவிக்கின்றனர். அடுத்த வாரம் ஞாயிறு, திங்கள், செவ்வாய் மூன்று தினங்களிலும் கங்கம்மாவை அழகாக அலங்கரித்த கரகத்தில் எழுந்தருளச் செய்து, கிராம தெருக்களில் உலாவரச் செய்து, ஒவ்வொரு வீட்டிலும் பூஜையை ஏற்கச் செய்து புதன் கிழமை அன்று கும்பம் எனும் நிகழ்ச்சியை வெகு விமரிசையாக நடத்துகின்றனர். அப்போது விதவிதமான நிவேதனங்களையும், பலி சோறு எனப்படும் பிரசாதத்தையும் ஏற்று கங்கம்மா அகமகிழ்கிறாள்.

பலி சோற்றை ஏற்றருளும் கங்கம்மா, ‘உங்கள் வழிபாட்டில் மனம் மகிழ்ந்தேன். இந்த வருடமும் இந்த ஊரைக் காக்கிறேன். ஊருக்குள்ளேயே இருக்கிறேன்’ எனக் கூறுவாளாம். ஆனால், ஒவ்வொரு நாளும் கும்பம் போட முடியாத காரணத்தால், கங்கம்மாவிடம் ஊருக்கு வெளியே போய் பேசுவோம் என்று கூறி ஊருக்கு வெளியே ஊர்வலமாய் அழைத்துச் சென்று அவமரியாதை செய்வார்களாம். அதனால் மனவரு த்தமடையும் கங்கம்மா நான் திரும்பவும் ஊரைச் சுற்றியே காவல் புரிகிறேன் என மருளாடி மூலம் கூறி மலையேறி விடுவாளாம். பிறகு, கரகத்தில் ஆவாஹனம் செய்த கங்கம்மாவின் பிரதிமையை அவ்வூர் ஆற்றில் கரைத்து விடுவார்களாம். மறுபடியும் அடுத்த வருடம் கங்கம்மாவை பூஜையை ஏற்கச் சொல்லி, சாம ளம்மாவின் சிபாரிசை நாடுவார்களாம். பலி சோற்றை பிரசாதமாக வாங்கி வயல் வெளிகளில் இறைத்தால் பயிர் பச்சைகள் செழிப்பதாக பக்தர்கள் நன்றியோடு கூறுகின்றனர்.

சாமளம்மா தேவி பாதத்தில் ஆதியில் வழிபடப்பட்ட தேசம்மா, கங்கம்மா, ஒககுண்டலம்மா தேவிகள் கருங்கல் வடிவில் தரிசனமளிக்கின்றனர். தேவிக்கு முன்னால், அவள் திருவடிகள் பதிக்கப் பெற்ற கல்லும், திரிசூலமும் காணப்படுகின்றன. இத் தலத்தின் பின்னால் காணப்படும் குட்டை, சாமளகுட்டை என அழைக்கப்படுகிறது. பௌர்ணமி தினங்களில் சித்தர்கள் மற்றும் தேவியின் நடமாட்டம் இங்கு இருப்பதாக நம்பப்படுகிறது. சித்தர்கள் விபூதி, குங்குமம், மஞ்சள் போன்றவற்றால் இறைவியை பூஜிப்பதை இக்குட்டையில் காணப்படும் வெண்மை, சிவப்பு, மஞ்சள் நிற மணல்கள் உணர்த்துகின்றன. நாகம் ஒன்று அடிக்கடி அம்பிகையை வலம் வந்த தடமும் காணப்படுமாம். ராகு-கேது, நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டோர் இங்கு பரிகார தேவியாய் அருளும் நாகம்மாவை வணங்க, தோஷங்கள் நீங்குவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

Related Stories: