கோதைக்கு விழி தந்த கோல விழியாள்

புன்னைநல்லூர், தஞ்சாவூர்

சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சாவூரை, சரபோஜி மன்னர் பரம்பரையைச் சேர்ந்த வெங்கோஜி ஆண்டு வந்தார். அவர் அவ்வப்போது தீர்த்த யாத்திரை செல்வது வழக்கம். அந்த வகையில் கண்ணபுரம் என வழங்கும் சமயபுரத்தில் அருளும் மாரியம்மனை தரிசிக்கச் சென்றார்.அன்னையை வணங்கி வழிபட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் வெங்கோஜி. அப்போது அவர் கனவினில் தோன்றிய மாரியம்மன் தஞ்சை நகருக்குக் கிழக்கே புன்னை வனக்காட்டில் புற்றுருவாய் தான் குடி கொண்டிருப்பதாகவும், அங்கேயே தன்னை தரிசிக்கலாம் எனவும் திருவாய் மலர்ந்தருளினாள். திடுக்கிட்டு விழித்த மன்னர் புன்னைக்காட்டினை அடைந்தார். அங்கே திறந்த வெளியில் புற்றுருவாய் அமர்ந்திருந்த அம்பிகையைக் கண்டார். உலகையே ரட்சிக்கும் அன்னை இப்படி வெட்ட வெளியில் இருப்பது கண்டு மனம் நொந்தார். உடனே மேற்கூரை அமைத்து அனைவரும் வந்து வழிபட வகை செய்தார்.

சிறிது காலம் சென்ற பின் வெங்கோஜி மன்னனின் மகனான  துளஜராஜா ஆட்சிக்கு வந்தார். இவருடைய மகளுக்குக் கடும் அம்மை நோய் கண்டது. அதனால் அவளது பார்வை பறிபோயிற்று. மகளுடைய இந்த நிலையைக் கண்டு மன்னர் ஆழ்ந்த வருத்தம் கொண்டார். அவருடைய கனவில் ஒரு சிறுமி தோன்றினாள். ‘‘உன் தந்தை எனக்கு வெயிலிலிருந்தும், மழையிலிருந்தும் பாதுகாப்புத் தர மேற்கூரை வேய்ந்தார். அவருடைய மகனான உனக்கு நான் உன் மகளைக் காக்க மாட்டேனா?’’ என்று புன்முறுவலுடன் சொன்னாள். அந்தச் சிறுமி புன்னைநல்லூர் மாரியம்மன்தான் என்பதைப் புரிந்து கொண்டார் துளஜராஜா. மறுநாள் துயிலெழுந்ததும் முதல் வேலையாக தன் மகளுடன் புன்னைநல்லூர் வந்தார். மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளுடன் அபிஷேகங்களும், அர்ச்சனையும் புரிந்து வணங்கினார். அன்னையின் சந்நதியில் நெய்தீபங்களை ஏற்றினார். அந்த தீபங்களின் ஒளி நேராக துளஜராஜாவின் மகளை நோக்கிச் சென்றது. உடனே அவளுக்குப் பார்வை மீண்டும் வந்தது.

அன்னையின் மகத்தான சக்தியை மனப்பூர்வமாக உணர்ந்த மன்னன், திருச்சுற்றுச் சுவர்களைக் கட்டி, இறைவிக்கு அழகிய கோயிலை உருவாக்கி அதை பக்தர்களுக்குக் காணிக்கையாக்கினார். அந்த மன்னனின் திருவுருவச் சிலை இன்றும் இறைவியின் சக்திக்கு சாட்சியாக ஆலயத்தில் காட்சி தருகிறது. சக்திக்கே சக்தி தரும் வகையில் மகான் சதாசிவப்பிரம்மேந்திரர் அம்பிகையின் சந்நதியில் புற்றுமண்ணைக் கொண்டே அம்மனை வடிவமைத்து சக்ரத்தையும் நிறுவினார். அதனால் மூலவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. உற்சவ அம்மனுக்குத்தான் அபிஷேகம். வரப்ரசாதியாகக் திகழும் இந்த அம்பிகைக்கு பக்தர்கள் பால் குடமெடுத்தும், மாவிளக்கும் போட்டும் தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுகின்றனர். பேச்சியம்மை, லலாட சந்நியாசி, மதுரைவீரன், கருப்பன், பாடகச்சேரி சுவாமிகள், சதாசிவ பிரம்மேந்திரர் ஆகியோரின்சுதை உருவங்கள் உடன் திகழ, அன்னை அருளாட்சி புரிகிறாள்.

கடுமையான கோடைக் காலத்தில் அம்மனின் திருமுகத்தில் முத்து முத்தாக வியர்வை பெருகி வரும். இது பலநூறு ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் அற்புதம். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஒரு வெள்ளைக்கார அதிகாரி, இவ்வாறு வியர்வை அரும்புவதை கேலி செய்ததோடு அது தற்செயலாக வேறு ஏதாவது நீர் பட்டு அவ்வாறு தோன்றியிருக்கும் என்று சொல்லி, அந்த நீரைத் துடைக்குமாறு கட்டளை இட்டான். அவன் ஆணையை மீற முடியாத கோயில் அர்ச்சகர் நடுங்கும் கரங்களுடன் அவ்வாறே செய்ய, முத்துகளாய் அரும்பியிருந்த அந்த வியர்வைத் துளிகள் அதிகாரியின் உடலில் அம்மை முத்துகளாகப் பொங்கி, அவனை அதிர வைத்தன.

அதிர்ச்சிக்குள்ளான அந்த அதிகாரி, அந்தப் பகுதி பக்தர்களின் நம்பிக்கையைக் கேவலப்படுத்திய தன் தவறை உணர்ந்து வருந்தி, கண்களில் நீர் பெருக்கினான். நாளடைவில் அம்மனின் அருளால் அவன் அதிகத் துன்பமின்றி, நோய் வந்த வடுவும் எதுவும் இன்றி பூரண நலம் பெற்றான். சிறந்த பிரார்த்தனைத் தலமாக விளங்கும் புன்னை நல்லூர் மாரியம்மன் ஆலய திருக்குளத்தில் வெல்லம் கரைப்பதாக வேண்டிக் கொண்டால் உடலில் தோன்றும் கட்டிகள், மருக்கள் போன்றவை விரைவில் மறைவதாக பக்தர்கள் நம்புகின்றனர். தஞ்சாவூர் - திருவாரூர் சாலையில் தஞ்சாவூரிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது புன்னைநல்லூர்.

Related Stories: