மாப்பிள்ளை சுவாமி எனும்திருவீழிநாதர்

1. ஒரே கோயில்  நான்கு புராணங்கள். திருவீழிமிழலை கோயிலுக்குதான் இந்த சிறப்பு.

2. தன் சக்கரத்துக்கு அதன் மூல வலிமையை மீட்டுத் தர, மஹாவிஷ்ணு, பரமசிவனை வழிபட்டு, தன் விழித் தாமரையையே அவருக்கு அர்ப்பணித்த தலம்.

3. இத்தலத்தில் நேத்ரார்ப்பணேஸ்வரரை அதாவது திருவீழிநாதரை வழிபடுவோருக்கு கண்கோளாறு, பார்வைக் குறை எது இருந்தாலும் நீங்கிவிடும் என்பது ஆதாரபூர்வமான நம்பிக்கை.

4. கார்த்யாயினி, ஈசனையே தன் மணாளனாக வரித்து அவரை மணக்க தவமிருந்த தலம். அவ்வாறே திருமணமும் ஆனதற்கு சாட்சியாக மூலவர் லிங்கக் கருவறையில் ஐயனும் அம்மையும் திருமணக் கோலத்தில் காட்சி தரும் சுதைச் சிற்பத்தைக் காணலாம்.

5. கருவறை வாயிலில் உள்ள அரசாணிக் கால் என்ற தூணும், வெளியே மகா மண்டபத்தில் உள்ள பந்தக்கால் தூணும் இந்த இறைத் திருமணத்திற்கு இன்னும் பிற இரு சாட்சிகள்.

6. இந்த கல்யாணசுந்தரரை மனமுருகி வழிபடுவோருக்குத் திருமணம், திருமணத்துக்குப் பிறகான அமைதியான இல்லறம், மகப்பேறு, வாரிசு வளம் ஆகிய நன்மைகளையும் இறைவன் வாரி வழங்குகிறார்.

7. ஸ்வேதகேது என்ற அரசன் சிறந்த சிவபக்தன். இத்தலத்தில் அவன் உயிரைப் பறிக்க வந்த யமனைக் காலால் உதைத்து விரட்டிவிட்டார் ஈசன். அதனாலேயே இந்த நாதன் காலசம்ஹாரமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார்.

8. கடும் பஞ்சம் இப்பகுதியில் நிலவியபோது, திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் மக்கள் துயர் துடைக்க இந்தப் பரமேஸ்வரனை மனமுருக துதித்தனர். அவர்களுக்கு தினமும் ஆளுக்கு ஒரு பொற்காசு அளித்த ஈசன், எங்கிருந்தாவது உணவு பெற்று மக்களின் பஞ்சத்தைப் போக்க வைத்தார்.

9. இந்தத் தலைவனை வணங்குவோருக்கு பசி, பஞ்சம், பட்டினி என்று எந்தத் தொல்லையும் இருக்காது என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.

10. கோயிலின் இரண்டாவது கோபுரத்தைக் கடந்தபின் வெளிப் பிராகாரத்தில் கிழக்குப் பகுதியில் ஒரு பலிபீடத்தைக் காணலாம். இதில்தான் ஒவ்வொரு நாளும் ஈசன், பொற்காசு வைத்தான்.

11. மேற்கு பிராகாரத்தில் படிக்காசு விநாயகர் சந்நதியில், இறைவனிடம் தங்கக் காசு பெற்றதை விளக்கும் வகையில், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இருவருக்கும் சிலைகள் உள்ளன.

12. இது மாடக்கோயில் வகையைச் சேர்ந்த ஆலயம். அதாவது யானை ஏற முடியாத படிக்கட்டுகள் கொண்ட கருவறை உள்ள கோயில்.

13. வீழிநாதர் சந்நதிக்கு தெற்குப் பகுதியில் 12 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இவை, 12 மாதங்களையும், 12 ராசிகளையும் குறிப்பதாகச் சொல்வார்கள்.

14. தெற்குப் பகுதியில் 7 படிகளைக் கடந்தும் இறைவனை தரிசிக்கலாம். இந்த 7 படிகள் வாரத்தின் 7 நாட்களைக் குறிக்கின்றன.

15. கருவறையின் வடக்குப் பகுதியில் 9 படிகள் உள்ளன. இவை 9 கிரகங்களை அடையாளப்படுத்துகின்றன.

16. நான்கு யுகம் கண்ட கோயில் இது. கிருத யுகத்தில் விழிசெடி என்ற மூலிகைச் செடி; திரேத யுகத்தில் சந்தன மரம்; துவாபர யுகத்தில் செண்பக மலர்ச் செடி; கலியுகத்தில் பலாமரம் என்று நால்வகை தல விருட்சங்களைக் கொண்ட ஆலயம். இப்போதைய பலாமரம் வருடம் பூராவும் காய்த்துக் கொண்டிருக்கிறது.

17. இத்தல இறைவி சுந்தர குஜாம்பிகை, கார்த்யாயினி என்று அழைக்கப்படுகிறாள்.

18. ராஜகோபுரத்தைக் கடந்தால் வடக்கே மகா மண்டபம் உள்ளது. இது வவ்வால் மண்டபம் என்றழைக்கப்படுகிறது. வவ்வாலில் நெற்றி

போல அமைந்துள்ள இந்த மண்டபத்துக்கு தூண்களே இல்லாதது தனிச் சிறப்பு.

19. மூலவர் வீழிநாதரின் கருவறை விமானம் விண்ணிழி விமானம் எனப்படுகிறது. மஹாவிஷ்ணு விண்ணிலிருந்து வரவழைத்த விமானம் இது. 16 சிங்கங்கள் தாங்குவது போன்ற அமைப்பு கொண்டது.

20. திருவாரூர்  மயிலாடுதுறை வழியில் பூந்தோட்டம் என்னும் ஊரிலிருந்து மேற்கே 10 கி.மீ. தொலைவில் திருவீழிமிழலை உள்ளது.

Related Stories: