கும்பகோணம் சக்கரபாணி கோயிலில் 97 ஆண்டுகளுக்கு பிறகு சுழலும் சூரியபிரபையில் சுவாமி வீதியுலா

கும்பகோணம்: கும்பகோணம் சக்கரபாணி கோயிலில் 97 ஆண்டுகளுக்கு பிறகு சுழலும் சூரிய பிரபையில் சக்கரபாணி சுவாமி வீதியுலா நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் சூரியன் தெற்கு நோக்கிய தனது தட்சிணாயன பயணத்தை முடித்து கொண்டு வடக்கு நோக்கி உத்தராயண பயணத்தை தை மாதம் சுக்லபட்ச வளர்பிறையில் தொடங்கும் நாளே ரத சப்தமி ஆகும். இது சூரிய பகவானுக்கு உகந்த  பல்வேறு மகத்துவங்கள் கொண்ட திரு நாளாகும். இந்த  நாளில் சூரியனால் நிர்மாணிக்கப்பட்டு, சூரியன் அனுதினமும் வழிபாடு செய்ய ஏதுவாக தட்சணாயனம், உத்தராயணம் என இரண்டு வாசல்களை கொண்டிருப்பதும், சூரியனின் திருப்பெயராலாயே பாஸ்கர ஷேத்திரம் என சிறப்பு பெயரால் அழைக்கப்படுவதுமான கும்பகோணம்  சக்கரபாணி சுவாமி கோயில் உள்ளது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ரதசப்தமி வீதியுலா நடைபெறுவது வழக்கம். அப்போது வீதிவுலாவின் போது சக்கரபாணி சுவாமியை பட்டறையில் வைத்து வீதியுலா செல்வது வழக்கம். ஆனால் கடந்த 96 ஆண்டுகளுக்கு முன் சக்கரபாணி சுவாமி சுழலும் சூரிய பிரபையில் வீதியுலா வந்துள்ளார். அதன்பிறகு அந்த சுழலும் சூரிய பிரபை சிதிலமடைந்ததால், வீதியுலா நடைபெறாமல் இருந்தது. இதையடுத்து கோயில் தேர்கட்டுமான ஸ்தபதி செல்வம் கொத்தனார் தலைமையில் சுழலும் சூரிய பிரபை நடப்பாண்டு சீர்செய்யப்பட்டது. அதன்படி ரதசப்தமி தினமான நேற்று காலை  97 ஆண்டுகளுக்கு பின்பு காலை 7 மணிக்கு சுழலும் சூரிய பிரபையில் சக்கரபாணி சுவாமி வீதி உலா சிறப்பாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சக்கரபாணி சுவாமியை வழிபட்டனர்.

Related Stories: