திருச்செந்தூர் கோயில் மாசி திருவிழா : நாளை குடவருவாயில் தீபாராதனை

திருச்செந்தூர்: திருச்செந்தூர் மாசித்திருவிழா 3ம் திருவிழாவான நேற்று சுவாமி தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்னவாகனத்திலும் வீதிவலம் வந்தனர். நாளை குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது.  அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாசி திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. 3ம் திருவிழாவான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பகலில் 3ம் திருவிழா மண்டகப்படியில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் பலவகையான அபிஷேகங்கள் நடந்தது.

மாலையில் சிவகொழுந்தீஸ்வரர் கோயிலில் இருந்து தங்கமுத்துக்கிடா வாகனத்தில் சுவாமி குமரவிடங்க பெருமானும், தெய்வானை அம்பாள் வெள்ளி அன்னவாகனத்திலும் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வந்து சிவன் கோயிலை சேர்ந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  நாளை 14ம் தேதி இரவு 7.30 மணிக்கு சிவன் கோயிலில் குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது. சுவாமியும், அம்பாளும் தனித்தனி தங்கமயில் வாகனங்களில் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வந்து சிவன் கோயில் சேர்தல் நடக்கிறது.

Related Stories: