சேரன்மகாதேவி வெங்கடாசலபதி கோயிலில் ரத சப்தமி தீர்த்தவாரி

வீரவநல்லூர்:  சேரன்மகாதேவி அப்பன் வெங்கடாசலபதி கோயிலில் ரத சப்தமியை முன்னிட்டு தீர்த்தவாரி விழா நடந்தது. சேரன்மகாதேவி தாமிரபரணி நதிக்கரையில் அப்பன் வெங்கடாஜலபதி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் ரத சப்தமியை முன்னிட்டு பெருமாள் தீர்த்தவாரி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான ரத சப்தமி தீர்த்தவாரி விழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து 10 மணிக்கு திருமஞ்சன அபிஷேகமும், 11.30 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் பெருமாள் தீர்த்தவாரி வைபவமும் நடந்தது.

தீர்த்தவாரியின்போது பக்தர்கள் தலை மற்றும் தோள்பட்டை போன்ற இடங்களில் எருக்கன் செடி இலையை வைத்து புனித நீராடினர். பெருமாள் தீர்த்தவாரியின் போது எருக்கன்செடி இலையில் மஞ்சள் மற்றும் அட்சதையை வைத்து புனித நீராடும் போது ஆரோக்கியம் மற்றும் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகமாகும்.

மதியம் 1 மணிக்கு சாற்றுமுறை தீர்த்தம் முடிந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7 மணியளவில் பெருமாள் திருவீதி உலா நடந்தது.

இதில் பக்தர்கள் திரளானோர் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அப்பன் வெங்கடாசலபதி பக்த கைங்கர்ய சபா நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories: