ராகு பகவான் கடகத்தில் இருந்து மிதுனத்திற்கு இடம் பெயர்ந்தார்

திருவிடைமருதூர்: ராகுபெயர்ச்சியையொட்டி திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றுவருகிறது. ராகு தோஷம் உள்ள ராசிக்காரர்கள், பக்தர்கள் பரிகாரம் செய்ய குவிந்து வருகின்றனர். ராகு பகவான் ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி நகர்வார். இந்நிகழ்வு தான் ராகு பெயர்ச்சியாகும். அந்த வகையில் ராகு பெயர்ச்சி இன்று நடைபெற்றது. ராகுபகவான் கடக ராசியிலிருந்து மிதுன ராசிக்கு மதியம் 1.24 மணிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி ராகு ஸ்தலமான தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரத்தில் நவக்கிரக தலமான நாகநாதசுவாமி கோயிலில் ராகு பெயர்ச்சி விழா நடைபெற்று வருகிறது.   

ராகுபெயர்ச்சியை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு முதற்கால யாக பூஜையுடன் ராகுபெயர்ச்சி விழா துவங்கியது. தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு இரண்டாம் காலமும், மாலை 3ம் கால பூஜைகளும் நடந்தது.  இன்று காலை 8 மணிக்கு யாகசாலை பூஜை ஆரம்பித்து 12மணிக்கு மேல் நான்காம் கால யாகசாலை பூஜை நடந்தது. அப்போது மஹாபூர்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது. இதையொட்டி ராகு பகவானுக்கு திரவியபொடி, மாபொடி, தேன், இளநீர், மஞ்சள், தயிர் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு மிக்க பால் அபிஷேகம்  நடைபெற்றது. தொடர்ந்து சந்தன அபிஷேகம் நடந்து  மேளதாளங்கள் முழங்க கடம்புறப்பாடு நடைபெற்று ராகுபகவானுக்கு மகாஅபிஷேகம் நடந்தது.

பின்னர் சிறப்பு மலர் அலங்காரம் செய்விக்கப்பட்டது. சரியாக மதியம் 1.24 மணிக்கு தங்ககவசம் சாத்தப்பட்டு  ராகுபகவான் கடக ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடையும் நேரமான மதியம் 1.24மணிக்கு மகாதீபாராதனை நடைபெற்றது.  இதில் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளில் இருந்து பல ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு நீண்டவரிசையில் காத்திருந்து ராகுபகவானை தரிசித்து வருகின்றனர். ராகுவின் மேனியில் பாலாபிஷேகம் செய்யும் போது பால் நீலநிறமாக மாறுவது இக்கோயிலில் தனிச்சிறப்பாகும்.

Related Stories: