ராகு - கேது பெயர்ச்சியை முன்னிட்டு இன்று கோயில்களில் சிறப்பு வழிபாடு

ராகு மற்றும் கேது ஆகியோர் ஒரு ராசியில் சுமார் ஒன்றரை வருடங்கள் அதாவது 18 மாதங்கள் இருப்பார்கள். குறிப்பாக, மற்ற கிரகங்கள் முன்னோக்கிச் செல்லும் போது, ராகுவும் கேதுவும் பின்னோக்கிச் செல்வார்கள். ஜோதிட சாஸ்திரம். நவக்கிரகங்களில் ராகுவும், கேதுவும் சர்ப்ப கிரகங்கள். நவகிரகங்களில் சூரியன் முதல் சனி வரை உள்ள ஏழு கிரகங்களுக்கு ராசிக் கட்டத்தில் ஆட்சி வீடு எனப்படும் சொந்த வீடு உள்ளது. ஆனால், ராகுவுக்கும் கேதுவுக்கும் சொந்த வீடு இல்லை. ஒருவரின் ஜனன ஜாதகத்தில் ராகுவும் கேதுவும் எந்த ராசியில் இருக்கிறார்களோ அந்த ராசிக்கு உரியக்கிரகத்தின் பலன்களைத் தருவார்கள். கோசாரத்தின்படி பார்த்தால், ராகு சனியைப் போன்றும் கேது செவ்வாயைப் போன்றும் பலன் தருவார்கள்.

நிழல் கிரகங்களான இந்தக் கிரகங்கள் பின்னோக்கிச் சென்று பெரும்பலனை நமக்கு அள்ளித் தருவதால் தான், மனிதர்கள் வாழ்வில் முன்னோக்கிச் செல்கின்றனர். ராகுவும் கேதுவும் செல்வத்தையும் செல்வாக்கையும் அள்ளித்தந்து ராஜயோக வாழ்வை வாழ வைப்பார்கள். ஒருவரது முன்ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை ராகு, கேது வழங்குகிறார்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஒருவரது கர்ம வினைக்கு ஏற்பவே ஜாதகக் கட்டத்தில் ராகு,கேது இடம்பெறும். திடீர் அதிர்ஷ்டத்தை அள்ளித்தருபவை இந்த கிரகங்கள்தான்.

தற்போது மகரத்தில் இருக்கும் கேது தனுசு ராசிக்கும் கடகத்தில் இருக்கும் ராகு மிதுன ராசிக்கும் இன்று பிற்பகல் 2.04 மணிக்குப் பெயர்ச்சி அடைகிறார்கள். இன்று முதல் 31.8.2020 வரை அந்த ராசிகளிலேயே இருந்து பலன்களைத் தரவிருக்கிறார்கள். அதை முன்னிட்டு ராகு, கேது பரிகாரத் தலங்களான திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் மற்றும் பல சிவ தலங்களில் ராகு, கேது பரிகார பூஜைகளும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற இருக்கின்றன. ராகுவின் அருள் பரிபூரணமாக கிடைக்க துர்க்கை அம்மன், கருமாரி அம்மன் ஆகிய தெய்வங்களை வழிபடலாம். வாயு ஸ்தலமான காளஹஸ்தியில் ராகுவுக்கு சிறப்பான வழிபாடுகள் நடைபெற இருக்கின்றன.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதிகளில் தொலைவில்லி மங்கலம் பரிகார ஸ்தலமாகும். ஒருவரின் ராசிக்கு ராகு 3, 6, 10, 11 ஆகிய இடங்களிலும் கேது 3, 6, 11 ஆகிய இடங்களிலும் கோசாரத்தில் வரும்போது நற்பலன்களைத் தருவார்கள். இதன் அடிப்படையில் ஒவ்வொரு ராசிக்காரரும் கோயில்களில் நடைபெறும் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டு கெடுபலன்கள் குறைந்து நன்மைகள் பெறலாம்.

Related Stories: