ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தெப்பத்திருவிழா : வெள்ளி கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதியுலா

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தெப்போற்சவம் விழா கடந்த 8ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. தினமும் உற்சவர் நம்பெருமாளுக்கு காலை, மாலை இருவேளை புறப்பாடுகளும், மண்டகப்படிகளும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்ற முன்தினம் நம்பெருமாள் தங்க கற்பக விருட்ச வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.  உற்சவத்தின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றான வெள்ளிகருட சேவை நேற்று மாலை நடந்தது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுக்கு 4 முறை கருட சேவை நடக்கிறது. இதில் 3 கருட சேவைகளில் நம்பெருமாள் தங்க கருட வாகனத்தில் வீதியுலா வலம் வருவார். மாசி மாதத்தில் நடக்கும் தெப்போற்சவத்திலன் 4ம் நாளில் மட்டும் வெள்ளி கருட வாகனத்தில் விதியுலா வருவார்.

ஸ்ரீரங்கம் கோயில் வாகனங்களுக்கு தனிமகத்துவம் உள்ளது. அந்த வகையில் வெள்ளி கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதியுலா வந்தபின், கருடனுக்கு கொழுக்கட்டை அமுது படைக்கப்படும். அப்போது மாசி கருடனை தரிசனம் செய்வதால் காசிக்கு சென்ற பலன் தரும் என்பது பக்தர்களின் கூற்று.

இந்தளவிற்கு பெருமை வாய்ந்த வெள்ளிகருட சேவை நேற்று மாலை நடந்தது. மாலை 6 மணிக்கு ஸ்ரீரங்கம் மேலூர் ரோடு தோப்பிலிருந்து துவங்கிய வீதியுலா மூலத்தோப்பு, மல்லிகைப்பூ அக்ராஹாரம், ராஜகோபுரம், தெற்குவாசல் வழிய உத்தரவீதிகளில் வலம் வந்து இரவு 8.30 மணிக்கு வெள்ளி கருடனுடன் பெருமாள் கோயிலை வந்தடைந்தார். இந்த வீதியுலாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். உற்சவத்தின் முக்கிய நிகழச்சியாக தெப்போற்சவம் வரும் 15ம் தேதி இரவு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ஜெயராமன் தலைமையில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: