கலசபாக்கம் செய்யாற்றில் அண்ணாமலையார், திருமாமுடீஸ்வரர் தீர்த்தவாரி

கலசபாக்கம்: கலசபாக்கம் செய்யாற்றில் நேற்று அண்ணாமலையார், திருமாமுடீஸ்வரருக்கு தீர்த்தவாரி நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் செய்யாற்றில் ரதசப்தமி விழாவையொட்டி தீர்த்தவாரி நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடந்தது. இதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இருந்து சந்திரசேகரர் நேற்று காலை சிறப்பு அலங்காரத்துடன் புறப்பட்டார். வழியில், துரிஞ்சாபுரம் ஒன்றியம் தனகோட்டிபுரத்தில் அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை சந்திரசேகரர் பார்வையிடும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கலசபாக்கம் தென்பள்ளிப்பட்டு அருகே வந்தபோது அவருக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கலசபாக்கம் செய்யாற்றுக்கு சந்திரசேகரர் வந்தார்.

அதேபோல், தீர்த்தவாரியில் பங்கேற்க கலசபாக்கத்தில் உள்ள திரிபுரசுந்தரி உடனாய திருமாமுடீஸ்வரரும் சிறப்பு அலங்காரத்தில் செய்யாற்றுக்கு வந்தார். அப்போது ஆற்றில் சந்திரசேகரரும், திருமாமுடீஸ்வரரும் சந்தித்துக்கொண்டனர். இந்த சந்திப்பின்போது கலசபாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரண்டு வந்த ஏராளமான பக்தர்கள் ‘அரோகரா’ என பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதனை தொடர்ந்து செய்யாற்றில் இருந்து புனிதநீர் எடுத்து சுவாமிகளுக்கு தீர்த்தவாரியும் தீபாராதனையும் நடந்தது. தற்போது செய்யாற்றில் தண்ணீர் இல்லாததால் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் எடுத்து தண்ணீரை நிரப்பி தீர்த்தவாரி நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் தீர்த்தவாரியின்போது அண்ணாமலையார் கோயில் யானை ருக்கு பங்கேற்கும். ஆனால் அது இறந்துவிட்டதால் யானையை எதிர்பார்த்து பக்தர்கள், சிறுவர்கள் ஏமாற்றமடைந்தனர். சுவாமி தீர்த்தவாரிக்கு வந்த வழி நெடுகிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தீர்த்தவாரிக்கு பின் நேற்று இரவு முழுவதும் செய்யாற்றில் இருக்கும் சந்திரசேகரர் இன்று காலை அண்ணாமலையார் கோயிலுக்கு புறப்பட்டு செல்வார்.

Related Stories: