சோதனைகளை சாதனைகளாக்கும் சாஸ்தா

மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் அம்பிகையை நோக்கி தவமிருந்தார்கள். அவர்களது தவத்தால் மகிழ்ந்த அம்பிகை,  அம்மூவருக்கும் தன் விஸ்வரூபத்தை காட்டி தோன்றினாள். இப்பிரபஞ்சம் முழுவதுமே அம்பிகையின் பிரதி பிம்பம்போல் தோன்றுவதைக் கண்டு  பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் பிரமித்து நின்றார்கள். அம்பிகையின் ரூபம் கண்டு பேரானந்தம் கொண்ட மும்மூர்த்திகளும் ‘‘ஜகத் ஜனனீ! உன்  தரிசனமே எங்களை பாக்கியவான்களாக ஆக்கியது. ஆயின் நீ உன் இருதய கமலத்துள் ஒரு சக்தியை வைத்திருக்கிறாயே? அது என்ன? அந்த சக்தி ஏனோ எங்களை ஈர்க்கிறது. என்றதும், அம்பிகையின்  முன்பு ஒரு லட்சம் கோடி இதழ் கொண்ட ஒரு தாமரை தோன்ற, தேவியின் ஹ்ருதயாரவிந்தவாசி ஒரு அற்புத ஜோதி வடிவில் அங்கே  எழுந்தருளியது. ‘‘என்னுள் நான் வைத்திருக்கும் என் ஆத்ம சக்தியான அதற்கு ஹ்ருதயாரவிந்தவாசி என்றே பெயர். அவனே என் ஆத்ம சொரூபன்.  அவனே என் பிரிய குமாரன்.  அவனது கட்டளைப்படியே அண்ட வெளியும் அதற்கு அப்பாலும் உள்ள அனைத்தும் இயங்குகிறது.

அனைத்தையும் தன் கட்டளைப்படி இயக்கும் அந்த ஹ்ருதயார விந்தவாசியை மகாசாஸ்தா என்பார்கள்.’’ என்று மொழிந்தருளினாள். ‘‘இப்பேர்ப்பட்ட  பராக்கிரம சக்தி, எனக்கு பிள்ளையாக வர மாட்டானா?’’ என்ற ஏக்கம் விஷ்ணுவுக்கும் பரமசிவனுக்கும் ஏக காலத்தில் மனத்தில் தோன்றியது.  அவர்களின் மன ஓட்டத்தை அறிந்த அம்பிகை, ‘‘நீங்கள் இருவரும் ஆசைப்பட்டது உரிய காலத்தில் நடக்கும். சரியான தருணத்தில் உங்கள் இருவரது  எண்ணமும் பூர்த்தியாகும் என்றாள். இதுவே ஹரிஹரபுத்ரனாக அவதரித்த சாஸ்தாவின் அவதார ரகசியம். மனித குலத்தின் முதல்வர்களாக மனுவும், சத்ரூபையும் தோன்றினர். அவர்களுக்கு மகனாக பிறந்த காச்யப முனிவருக்கு திதி, அதிதி என இரு  பத்தினிகள். அதிதிக்கு தேவர்களும், திதிக்கு அசுரர்களும் மக்களாய் பிறந்தனர். பிறப்பால் தேவர்களும், அசுரர்களும் சகோதரர்களே என்றாலும்,  குணத்தால் வேறுபட்டு, பகைமை உணர்வுடன் எப்போதும் ஒருவரையொருவர் எதிர்த்து வந்தனர். மும்மூர்த்திகள் உதவியுடன் அமராவதியை  கைப்பற்றிய தேவர்கள் அதை ஆண்டு வந்தனர்.  தலைவனாக இந்திரன் திகழ்ந்தான்.

துர்வாச மஹரிஷி இந்திரனைக்காண வருகிறார். வரும் போது பராசக்தியின் பிரஸாதமான மலர்மாலை ஒன்றை கொண்டு வருகிறார். அந்த  மாலையை தன்னை வரவேற்ற இந்திரனிடம் அளித்தார். அவன் அந்த மாலையை பொருட்படுத்தாமல் தனது வெள்ளை யானையான ஐராவதத்தின்  மத்தகத்தில் சூட்டினார். மாலையில் இருந்து வீசிய நறுமணத்தால் வண்டுகள் யானையின் தலையின் மேலே ரீங்காரமிட, கோபமடைந்த ஐராவதம்,  அந்த மாலையை கீழே போட்டு காலால் மிதித்தது. அதைக்கண்டு துர்வாசர் கொதித்தெழுந்தார். “இந்திரா நான் கொடுத்த மாலையை நீ மதிக்க தவறிவிட்டாய், தேவர்கள் தங்கள் திவ்ய சக்திகளை இழந்து நரை, திரை, மூப்புக்கு உள்ளாவீர்கள்.  ஐராவதமும் காட்டானை ஆகட்டும். ” என்று சபித்தார். ஐராவதம் காட்டானையாகி மதம் கொண்டு திரிய துவங்கியது. தேவர்கள் அழகு இழந்து, நரை  விழுந்து, முதுமை கொண்டனர். இதுதான் தக்க தருணம் என்று மலகன் எனும் அரக்க மன்னன் தலைமையில் அசுரர்கள், தேவர்களை எதிர்த்து  போரிட்டனர். சக்தியிழந்த தேவர்கள் தோற்றோட, அசுரர்கள் அமராவதியை கைப்பற்றினர்.

இதையடுத்து தேவர்கள் மும்மூர்த்திகளை பணிந்தனர். தேவர்களிடம், நீங்கள் இழந்த சுபிட்சத்தை அடைய, பல அற்புத மூலிகைகளை பாற்கடலில்  இட்டு கடையுங்கள். திருப்பாற்கடலை கடைந்தால் அம்ருதம் கிட்டும். அதை அருந்தினால் உங்களுக்கு நிகரற்ற வலிமையும், மரணமற்ற வாழ்வும்  திவ்யத்துவத்தையும் நிலை பெறச்செய்யும் என்று வழி கூறினார் வாசுதேவன். ஏற்கனவே சக்தியனைத்தையும் இழந்து முதுமை பெற்றிருக்கும்  தேவர்களால் அது எப்படி முடியும். அதனால் தயக்கம் காட்டினர். பரந்தாமன் அதற்கும் வழி கூறினார். “மந்தர மலையை மத்தாகவும், வாசுகி பாம்பை கயிறாகவும் கொண்டு, அசுரர்கள் துணையுடன் பாற்கடலை கடையுங்கள்” என்றார். பாற்கடலை  கடைந்தபோது இறுதியாக பகவான் கிருஷ்ணன் தன்வந்தரி வடிவத்தில் கைகளில் அம்ருத கலசத்தினை ஏந்தி தோன்றினார். அசுரர்கள் அம்ருதத்தை  அவரிடமிருந்து பலவந்தமாக அபகரித்துக் கொண்டனர். இருவர் செய்த உழைப்பின் கூலியை ஒருவர் மட்டுமே எடுப்பதை, அதுவும் பலவந்தமாக  அபகரித்ததை பகவானால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அம்ருதத்தில் ஒரு துளி கூட அசுரர்கள் இனி அருந்த கூடாது என்றெண்ணி, பரமேஸ்வரியை நினைத்து தியானித்தார். பின்னர் அற்புதமான பேரழகுடன்  மோஹினி வடிவெடுத்து தோன்றினார். அசுரர்கள் முன் நின்றார். அப்போது அம்ருதத்திற்காக அசுரர்களும், தேவர்களும் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டிருந்தனர். மோஹி-னி பேசினாள் “எதற்கு சண்டை, வரிசையில் அமருங்கள் நானே பங்கிட்டு தருகிறேன்.” என்று கூறி அம்ருதத்தை  தேவர்களுக்கு முதலில் வழங்கினார். அதை உண்ட தேவர்கள் இழந்த இளமையையும், சுயரூபத்தையும் கொண்டதோடு தேக வலிமையும்,  மரணமில்லா வாழ்க்கையையும் பெற்றனர். அம்ருதம் உண்ட தேவர்கள், அசுரர்களை வென்று மீண்டும் தேவேந்திரன் மூவுலகையும் ஆட்சி புரியலானான். அசுரர்கள் பாதாள உலகில் வாழலாயினர்.  நடந்தவைகளை நாரதர், பரமேஸ்வரனிடம் கூறினார். அடுத்து ஈசன் உமா தேவியுடன் பரந்தாமனை காண பாற்கடல் வந்தார். அகிலத்தையே மயக்கிய  மோஹினி அவதாரத்தை எனக்கு காட்ட வேண்டும் என்றார்.

அடுத்திருந்து நந்தவனத்தில் ஈசனிடம், பரந்தாமன் தான் எடுத்த மோஹினி அவதாரத்தை காட்டினார். மோஹினியை கண்ட ஈசன், அவளிடம் நெருங்க, அரியும், அரனும் சங்கமமாகினர். அரிஹர சக்தியும் ஒருங்கே பெற்று மஹா சாஸ்தா  அவதரித்தார். சாஸ்தா எனும் நாமத்துக்கு ஏற்ப அனைத்துலகங்களையும் காத்து ரக்ஷிக்கும் பொறுப்பை அளித்தார் ஈசன். உலகங்களை ஆட்சிபுரியும்படி புவனேஸ்வரனாக பட்டம் சூட்டினார். தன் தந்தையின் கட்டளைப்படி அகில உலகங்களுக்கும் அதிபதியாகி அருளாட்சி நடத்தலானார் சாஸ்தா. நேபாள தேசத்தை ஆண்டு வந்த மன்னன் பளிஞ வர்மன். மாகாளியின் பக்தனாவார். அதன் காரணமாக காளிக்கு உயிர்களை பலியிட தொடங்கினான்.  இதனைக் கண்டு மனம் வெறுப்புற்ற மன்னனின் மனைவி சாந்தை, சிவனிடம் மனமுருகி வேண்டினாள். அன்றிரவு அரசியின் கனவில் தோன்றிய  சிவபெருமான். மகளே மனம் கலங்காதே, உன் மணாளனை மனம் திருத்த, என் மைந்தனே வருவான். உனக்கு பிறக்கப் போகும் மகளை மணமுடித்து,  உன் கணவனை நல்வழிப்படுத்துவான். என்று கூறினார். அதுபோலவே பெண் குழந்தை பிறந்தது.

மன்னன் பளிஞன். மகளுக்கு ஸ்ரீ புஷ்கலை என்று பெயரிட்டு ஸ்ரீ புஷ்கலா என அழைத்து வந்தான். புஷ்கலா பருவ வயதை அடைந்தாள். மன்னன்  தனது தலையில் முடி நரைத்ததை கண்டு வருந்தினான். தான் மாறா இளமையுடன் இருக்க காண்போரிடத்தி லெல்லாம் ஆலோசனை கேட்டான்.  அதில் ஒருவன் கூறினான். ஸர்வ லட்சணங்கள் கொண்ட மணமுடிக்காத மங்கையர்கள் நூற்றி எட்டு பேரை, மாகாளிக்கு பலியிட்டால், மாறாத  இளமையை வரமாக பெற்று விடலாம். என்றான். உடனே நூற்றி எட்டு கன்னியரை சிறை பிடிக்க உத்தரவிட்டான். நூற்றி எட்டு பேரையும் கோயிலுக்கு கொண்டு வந்தனர் காவலாளிகள். முதல்  பெண்ணை பலி கொடுக்க தயாராகினர். காளியின் முன் நிறுத்தப்பட்டிருந்த அந்த பெண், சங்கு அறுபட முன் சங்கரனை வேண்டினாள். சினம் கொண்ட  சிவன், சாஸ்தாவை அனுப்பி வைத்தார். சாஸ்தா வந்தார். கன்னியர்களை விடுவித்து காத்தருளினார். பளிஞன், சாஸ்தாவோடு சண்டையிட்டான்.  சாஸ்தா தனது சுயரூபத்தை காட்டினார். மனத்தெளிவு பெற்ற மன்னன், மண்டியிட்டு வணங்கினான். நான் தங்களுக்கு ஆண்டு தோறும் விருந்தோம்பல் செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் என்  மகளை மணமுடிக்க வேண்டும் என்று கூறினார். அதன்படியே ஆகட்டும் என்று அய்யன் சாஸ்தா அருளினார்.

பார்வதி பரமேஸ்வரரும், திருமகளும்  திருமாலும் கூடி முடிவு செய்து, பிரம்மதேவனால் முகூர்த்த ஓலை எழுதப்பட்டது. உலகில் எங்குமே நடந்திடாத வண்ணம் கோலாகலமாக திருமணம்  நடந்தது. ஸ்ரீபுஷ்கலையை சாஸ்தா மணம் முடித்தார். வஞ்சி தேசத்தை ஆண்டு வந்த மன்னன் பிஞ்சக வர்மன். இவர் சிந்து தேசத்தின் மன்னன் மகள் மனோஞை என்பவரை மணமுடித்தார். இவர்களுக்கு  மஹாலட்சுமியின் அம்சமாக பெண் குழந்தை பிறந்தது. அவளுக்கு ஸ்ரீ பூர்ணா என்று பெயர் சூட்டினர். அவள் இளம் வயது முதலே சாஸ்தாவின் புகழை  கேட்டு வளர்ந்த பூரணை தன் மனதில் அவரையே மணாளனாக எண்ணி பூஜித்து வரலானாள். இந்த நிலையில் மன்னன் பிஞ்சகன், மகள்  மணப்பருவத்தை எட்டியதும், அவளுக்கேற்ற மணவாளனை தேடும் பணியில் தீவிரமானார். இதை அறிந்த பூரணை, தன் தந்தையிடம் தனது விருப்பத்தை கூறினாள். மனித குலத்தில் பிறந்தவர் மஹா சாஸ்தாவை மணப்பது எப்படி  சாத்தியமாகும். என்று எண்ணி மன்னன் மிகுந்த துயரத்தில் இருந்தார். சாஸ்தா மன்னனிடம் “ மன்னா, நீ முற்பிறவியில் செய்த தவத்தின் பயனாகவே  பூரணை உனக்கு மகளாக தோன்றியிருக்கிறாள். மஹாலட்சுமியின் ரூபமான அவளை மணம் செய்து ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறினார். அதன் படி  மும்மூர்த்திகள் ஆசியுடன் ஸ்ரீ பூர்ணாவை சாஸ்தா திருமணம் செய்து கொண்டார்.

சு.இளம் கலைமாறன்

Related Stories: