திருமண யோகம் தரும் திருக்காமேஸ்வரர்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பனப்பாக்கம் கிராமத்தில் திருக்காமேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு சிலைகளிலேயே மிக பெரிதான துவார பாலகர்களின் சிலை உள்ளது சிறப்பானது. கருவறை முகப்பில் வாயிற் காவலர்களாக நிற்கும் இந்த இரு சிலைகளின் கலை நுணுக்கங்கள் பிரமிப்பு ஏற்படுத்துபவை. 6அடி உயரம் உள்ள திடமான கருங்கல்லினால் படைக்கப்பட்ட இந்த 2 சிலைகளும் சோழர் காலத்தைச் சேர்ந்தவை. அடுத்து நம் மனதை கவர்வது கோயிலின் பிரதான வாயிலில் உட்புறத்தில் இருமருங்கிலும் காட்சியளிக்கும் துர்கை அம்மனும், பிச்சாடணர் சிலைகளும் ஆகும். சுமார் 4 அடி உயரமுள்ள இச்சிலைகளின் கரங்களும் படையெடுப்பின்போது தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது.

எருமை தலைமீது கம்பிரமாக நின்று கொண்டிருக்கும். இந்த துர்க்கை அம்மன் நான்கு கரங்களை கொண்டு அருள்பாலிக்கிறாள். இரு கரங்கள் முறையே சங்கு சக்கரத்தை பிடித்தபடியும், கீழ் இடது கை தொடை மீது படிந்தும், கீழ் வலது கை உடைந்தும் உள்ளது. சோழர் கலைகளுக்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. பழங்கால சிலைகள்: வடதிசை சுவரில் உள்ள பிச்சாடணர் மேல் வலது கையில் உடுக்கையும் இடது கையில் தண்டத்தை தோள் மீது சுமந்தும் கீழ் இடகரம் (திருவோடு ஏந்திய கை) உடைந்தும், வலது கரம் கீழ் நிற்கும். மானை தொட்ட படியும் வடிக்கப்பட்டிருக்கிறது. சோழர் கலைகளுக்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இச்சிலைகள் கி.பி 10ம் நூற்றாண்டை சேர்ந்தவை ஆகும்.

இக்கோயிலின் கருவறை சிவலிங்கம் (மூலவர்), அம்மன் (மூலவர்) பைரவர் ஆகிய சிலைகள் உயர்ந்த ரக கருப்பு நிற கல்லினால் வடிக்கப்பட்டவையாகும். தவிர தனியாக ஒரு அம்மன் சிலையும் காணப்படுகிறது. இவைகள் சுமார் 2 அடி உயரம் உள்ளவை. கோயில் திருச்சுற்றில் அமைந்துள்ள வேணுகோபாலர் சிலை 13ம் நூற்றாண்டின் இறுதிகாலத்தை சேர்ந்ததாக கருதப்படுவன. குழல் ஊதும் பாவனையில் அமர்ந்து ராதா ருக்மணியோடு காணப்படும் இவைகள் சிறந்த படைப்பாகும். தவிர அனுமார், சுப்பிரமணியர் ஆறுமுகத்தோடு 12 கரங்களோடு மயில் மீது அமர்ந்த கோலம், விநாயகர் ஆகிய அனைத்தும் அதே காலத்தை சேர்ந்தவைகளாகும். இது போன்ற சிலைகள் பாடல் பெற்ற தலமான திருவதிகையில் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கோயிலின் முனபு அமைந்த மகா மண்டபத்தின் மேல்புறத்தில் நூறு வருடங்களுக்கு முற்பட்ட தானக்கல் முழுமையாக இல்லாமல் பதிக்கப்பட்டிருக்கிறது.

அதில் இவ்வூரை மேல்பனைப்பாக்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கீழ் பனைப்பாக்கம் என்ற பகுதியும் இருந்திருக்க வேண்டும். இன்று இந்த ஊர் பனப்பாக்கம் என்று வழங்கப்படுகிறது. துவாரபாலகர் சிலைகள்: துவார பாலர்களின் சிலை தமிழ்நாட்டில் இரண்டு இடத்தில் மட்டுமே உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்திலும், இந்த கோயிலிலும் மட்டுமே உள்ளதாக ஆன்மிக பெரியவர்கள் தெரிவிக்கின்றனர். சிவன் சன்னதியில் பெருமாள் கோயில் இருப்பது சிதம்பரத்தில். அதேபோல் இக்கோயிலில் ராதா ருக்மணி சமேத வேணுகோபால் சுவாமி குழல் ஊதும் பாவனையில் அருள்பாலிக்கிறார். சிவராத்திரி, பிரதோஷம், சோமவார வழிபாடு, பவுர்ணமி பூஜை உள்ளிட்ட வழிபாடுகள் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இக்கோயில் உள்ளது.செல்லும் வழி: பண்ருட்டியில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் பனப்பாக்கம் கிராமம் உள்ளது. மினி பஸ் வசதி உண்டு.                        

கடன்தொல்லை நீக்கும் சொர்ண பைரவர்

அனைத்து கோயில்களிலும் கால பைரவர் சிலை இருக்கும். இக்கோயிலில் சொர்ண பைரவர் சிலை காணப்படுகிறது. இக்கோயிலில் சொர்ண பைரவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும். மேலும் சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும். அம்பாள் கோகிலாம்பாளை பெண்கள் வழிபட்டால் அவர்களுக்கு வளமான வாழ்வு, சிறப்பான திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Related Stories: