கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா

ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோவில் குண்டம் விழா நேற்று நடைபெற்றது. இதில் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி, அம்மனை வழிபட்டு சென்றனர். ஈரோடு கருங்கல்பாளையத்தில் பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோயில்களின் குண்டம் தேர்த்திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 29ம் தேதி பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோயில்களில் கம்பம் நடப்பட்டது. இதனைத்தொடர்ந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்து கம்பத்திற்கு ஊற்றி, அம்மனை வழிபட்டு சென்றனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய விறகுகள் அடுக்கி வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீ பற்ற வைக்கப்பட்டது. நேற்று அதிகாலையில் கோயிலின் தலைமை பூசாரி குண்டத்துக்கு சிறப்பு பூஜைகளை செய்து தீ மிதித்தார். இதையடுத்து வரிசையில் காத்திருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி, அம்மனை வழிபட்டனர்.

குண்டம் விழாவினை தொடர்ந்து அம்மன் தேரோட்டம் துவங்கியது. இதில் பக்தர்கள் பலர் தேரினை வடம்பிடித்து இழுத்தனா். முக்கிய வீதி வழியாக தேர் சென்று பின்னர் கோயில் வளாகத்தில் நிலை வந்தடைந்தது. நாளை(11ம் தேதி) காலையில் கோவில் வளாகத்தில் பொங்கல் வைக்கும் விழா மற்றும் மாவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளது. 12ம் தேதி இரவு கம்பம் பிடுங்குதலும், 13ம் தேதி மஞ்சள் நீராட்டும், அம்மன் வீதி உலாவும் நடக்கிறது.

Related Stories: