ஸ்ரீ மஹாவிஷ்ணு அனந்த சயனமூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் தல்பகிரி பெருமாள் கோவில்

வைணவ ஆலயங்களில் ஸ்ரீமஹாவிஷ்ணு நின்ற, இருந்த, கிடந்த எனும் ஏதாவது ஒரு கோலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். தமிழ்நாட்டில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில், 24 தலங்களில் சயனத் திருக்கோலத்தில் பெருமாள் அவ்வாறு காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. பொதுவாக அனைத்து சயனத் திருக்கோலங்களிலும் பெருமாள் தன்னை வணங்கும் பக்தர்களின் இடப்புறம் தலைவைத்து, வலப்புறம் திருப்பாதங்களை நீட்டியிருப்பார். ஆனால், பக்தர்களின் வலப்புறம் சிரசை வைத்து இடப்புறம் திருப்பாதங்களை நீட்டி சயனித்திருக்கும் கோலம் கொண்ட ஆலயங்கள் ஒரு சிலவே. இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதப் பெருமாள் ஆலயம் ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், தல்பகிரி என்ற தலத்தில் உள்ளது. இங்கு ஆதிசேஷனே பகவானுக்கு தல்பமாக ஒரு சிறிய குன்று உருவத்தில் இருப்பதால் இத்தலம் தல்பகிரி என்று அழைக்கப்படுகிறது.

கச்யப முனிவர் பௌண்ட்ரீக யாகம் செய்தபோது, யாக முடிவில் ஸ்ரீமஹாவிஷ்ணு அனந்த சயன மூர்த்தியாக அவருக்குக் காட்சி தந்தபோது, முனிவர் அதே கோலத்தில் பகவான் அங்கு கோயில் கொள்ளுமாறு வேண்டிக் கொண்டாராம். அதன்படி இத்தலத்தில் ஸ்ரீமஹாவிஷ்ணு அனந்த சயனமூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஸ்ரீரங்கநாயகப் பெருமாள் எழுந்தருளியிருப்பதால் ஆலயம் இருக்கும் பகுதி ரங்கநாயகலுப் பேட்டா என்று அழைக்கப்படுகிறது. தல்பகிரி ஸ்ரீரங்கநாதஸ்வாமி ஆலயத்தின் நுழைவாயிலில் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது, 100 அடி உயரம், ஏழு கலசங்கள், ஏழு நிலைகள் கொண்ட காற்று வீசும் கோபுரம்.

ராஜகோபுரத்தை அடுத்து, பலிபீடம், கொடிமரம். உள்ளே பிரமாண்ட மஹாமண்டபம். இந்த மண்டப சுவர்களில் சீதாராமர், ருக்மிணி கிருஷ்ணர் போன்ற பல மூர்த்திகளின் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. அடுத்து அர்த்தமண்டபம், அந்தராளம். கருவறை நுழைவாயிலில் இருபுறங்களிலும் ஜய விஜய துவாரபாலர்கள் காணப்படுகின்றனர். மூன்று நிலை, ஐந்து கலசங்களுடன் கூடிய விமானத்தைக் கொண்ட கருவறையில் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் பென்னா ஆற்றைப் பார்த்தவாறு மேற்கு திசை நோக்கி சயனக் கோலத்தில் அருள்பாலிக்கிறார். பென்னா நதியில் மிதந்து வந்த ஸ்ரீரங்கநாதர் விக்கிரகத்தை கச்யப முனிவர் பிரதிஷ்டை செய்துள்ளதாக ஐதீகம் உள்ளது. எனவே கிழக்கு கோபுரத்தின் வழியாக உள்ளே நுழையும் பக்தர்கள் கருவறையின் பின்புறத்தை தரிசிக்க முடிகிறது.

அக்காலத்தில் ஸ்ரீரங்கநாதப் பெருமான் கிழக்கு நோக்கியே இருந்தார் என்றும் இவ்வுலகத்தில் நடைபெறும் அதர்மங்களைக் கண்டு கோபமுற்று மேற்கு நோக்கி சயனம் கொண்டு விட்டதாகவும் சொல்கிறார்கள்! ஸ்ரீவைகுண்டப் பெருமாள், சயன நாராயணர் என்றும் இவர் போற்றப்படுகிறார். கருவறையில் ஐந்து தலை ஆதிசேஷன் குடை பிடிக்க, இடது கரத்தை மடித்து தலையின் கீழ் வைத்துக் கொண்டு, வலது கரத்தை வலது தொடை மீது நீட்டி வைத்துள்ளார். நாபிக் கமலத்தில் பிரம்மா. திருவடிக்கருகில் ஸ்ரீதேவி-பூதேவி. பெருமாள் நமக்கு வலப்புறம் சிரம் வைத்துக் காட்சி தருவதால் அர்ச்சகர் ஆரத்தி காட்டும்போது பெருமாளின் திருமுகத்தை நன்கு தரிசிக்க முடிகிறது. கருவறையின் வெளிச் சுவரில் விஷ்ணு ஸஹஸ்ரநாமாவளி எழுதப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்த நாமாவளிகளை பாராயணம் செய்தவாறே கருவறையை வலம் வருகின்றனர்.

ஆலய திருச்சுற்றில் ஸ்ரீரங்கநாயகித் தாயார், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீவேங்கடேசப் பெருமாள், ஸ்ரீஅனந்த பத்மநாபர், ஆழ்வார்கள், மணவாள மாமுனி ஆகியோருக்குத் தனித்தனி சந்நதிகள் உள்ளன. ஆழ்வார்களின் பஞ்சலோக உற்சவ மூர்த்திகள் மிக அழகு வாய்ந்தவை. முப்பிலால சின்ன நரசிம்மாச்சாரி என்பவர் 1928ம் ஆண்டு அர்த்த மண்டபத்தில் ஸ்ரீராமானுஜருக்குத் தனிச் சந்நதி எழுப்பியிருக்கிறார். இந்த மண்டபத்தில் ஸ்ரீராமானுஜருக்கு திருமஞ்சன உற்சவம் சிறப்பாக நடத்தப்படுகிறது. பாஞ்சராத்ர ஆகமப்படி பூஜைகள், வழிபாடுகள், உற்சவங்கள் நடைபெறுகின்ற தல்பகிரி ஸ்ரீரங்கநாயகஸ்வாமி ஆலயத்தில் திருவரங்கம் போன்றே பங்குனி பௌர்ணமியையொட்டி பிரம்மோற்சவமும் நடைபெறுகிறது. மார்கழி மாதம், திருவத்யயன உற்சவம், வைகுண்ட ஏகாதசி, பிரம்மோற்சவம், பவித்ரோற்சவம் போன்ற முக்கியமான உற்சவங்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. புரட்டாசி சனிக்கிழமைகளிலும், பீஷ்ம ஏகாதசி அன்றும் நடைபெறும் கருட சேவைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுகின்றனர்.

மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவைப் பாசுரங்கள் பயபக்தியோடு இசைக்கப்படுகின்றன. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ரங்கநாயகுலுப்பேட்டை தல்பகிரியில் உள்ள இந்த ஆலயம் தல்பகிரி ரயில் நிலையத்திலிருந்து நடைதூரத்திலேயே உள்ளது. நெல்லூரிலிருந்து 8 கி.மீ. காலை 6 முதல் 11 மணி வரையிலும், மாலை 5 முதல் இரவு 8,30 மணி வரையிலும் ஆலயம் திறந்து வைக்கப்படுகிறது. உத்தர ஸ்ரீரங்கம் என்று ஆந்திர மக்களால் போற்றப்படும் இத்தலத்து ஸ்ரீரங்கநாயகப் பெருமானை தரிசித்தால், திருவரங்கம் ஸ்ரீரங்கநாதரைத் தரிசித்த பலன் கிட்டும், வாழ்வில் அனைத்துத் தடைகளும் சிதறி அகலும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

- விஜயலட்சுமி சுப்பிரமணியம்

Related Stories: