வலதுகை செய்வது இடதுகைக்குத் தெரியாது இருக்கட்டும்!

ஒரு வீட்டின் கதவில் இயேசுநாதர் கதவைத் தட்டுவது போன்ற ஒரு படம் பதிக்கப்பட்டிருந்தது. ஒரு சிறு குழந்தை தன் தந்தையைப் பார்த்து, ‘‘அப்பா! ரொம்ப நேரமாக இயேசு கதவைத் தட்டிக்கொண்டு நிற்கிறாரே! ஆனால், கதவைத் திறக்காமல் உள்ளே இருக்கிற அந்தக் கடினமான இதயமுள்ள கல் நெஞ்சன் யார் அப்பா? இவ்வளவு அன்புள்ள இரட்சகருக்கு தன் இதயக் கதவைத் திறக்க மாட்டேன் என்று பூட்டி வைத்திருக்கிற அந்தப் பொல்லாத மனிதர் யார் அப்பா? என்று கேட்டது. இந்த வார்த்தைகள் தந்தையின் இதயத்தை நொறுக்கியது. அவர் அதுவரைக்கும் உள்ளத்தில் இயேசுவிற்கு இடம் கொடுக்கவில்லை. பெயரளவில் கிறிஸ்தவனாக இருந்தவருக்கு இரட்சிப்பு அருளப்படவில்லை. அந்தக்கல் நெஞ்சன் யார் அப்பா? என்று அந்தக் குழந்தை தன் மழலைக்குரலில் கேட்ட வார்த்தைகள் அவருடைய இதயத்தை நொறுக்கி விட்டன.

அன்று இரவு படுக்கை அறையில் தன் பாவங்களை அறிக்கையிட்டு இயேசு கிறிஸ்துவை இதயத்தில்  ஏற்றுக்கொண்டார்; இரட்சிக்கப்பட்டார். ஆம்! நாமும் நம்முடைய உள்ளக்கதவை இயேசு கிறிஸ்துவுக்குத் திறந்து கொடுப்போம். ஒரு கப்பல் முழுக்க முழுக்கத் தண்ணீரிலே இருந்தாலும் ஒரு சொட்டு தண்ணீர்கூட உள்ளே வர அது அனுமதிப்பதில்லை. அப்படி அனுமதித்தால் கப்பல் அமிழ்ந்து போய்விடக்கூடும். நாம் இவ்வுலகத்தில் வாழ்ந்தாலும் இறைவனுக்கென்று பரிசுத்தமாய் வாழத் தீர்மானிப்போம். தண்ணீரிலே வாழுகிற தாமரை, தண்ணீர் அதன் இலைகளில் ஒட்ட விடாமல் தன்னைப் பாதுகாத்துக்கொள்கிறது. உப்புத் தண்ணீரிலே வாழுகின்ற மீன் உப்பு அதற்குள் ஏறாதபடி தன்னைக் காத்துக் கொள்கிறது. உலக இச்சைகள் ஒரு போதும் நமக்குள் நுழைய அனுமதியாதிருப்போம்.

‘‘மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச்செயல்களைச் செய்யாதீர்கள்.

இதைக்குறித்து நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைமாறு கிடைக்காது. நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப் பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர் மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக் கூடங்களிலும், சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். அவர்கள் தங்களுக்குரிய கைமாறு பெற்று விட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் தர்மம் செய்யும்போது உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும். அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாய் இருக்கும். மறைவாய் உள்ளத்தைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைமாறு அறிவிப்பார். நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளி வேடக்காரரைப் போல் இருக்க வேண்டாம்.

அவர்கள் தொழுகைக் கூடங்களிலும், வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறை வேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைமாறு பெற்று விட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் நீங்கள் இறைவனிடம்  ‘‘வேண்டும்பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று கதவை அடைத்துக்கொண்டு மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவில் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைமாறு அழிப்பார். மேலும் நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிதற்ற வேண்டாம். மிகுதியான சொற்களை அடுக்கிக்கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம். ஏனெனில் ‘‘நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்.  (மத்தேயு 6: 18)

‘‘மணவைப்பிரியன்’’ஜெயதாஸ் பெர்னாண்டோ

Related Stories: