கண்ணனைக் காணாத கண்ணும் கண்ணா?

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன் - 13

‘குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே’ என்றும் ‘குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று’ என்றும் நாம் கூறி வருகின்றோம். மழலையின் கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளத்திலும், அதன் தேன் மழலையிலும் நாம் தெய்வீகத்தைத் தரிசிக்கின்றோம். இது ஒருபுறம் இருக்க இறைவனே குழந்தை வடிவில் வந்தால் குதூகலம் அனைவர்க்குமே அதிகரிக்கும் அல்லவா! அப்படி வந்த அவதாரங்கள்தான் கண்ணனும், கந்தனும்! கண்ண பெருமான் வைணவக் குழந்தை, கருப்புக் குழந்தை. கந்தப் பெருமான் சைவக்குழந்தை சிவப்புக் குழந்தை. சிவப்புக் குழந்தை முருகவேளை உச்சி முகர்ந்து மெச்ச வந்த அருணகிரிநாதரே கருப்புக் குழந்தை மேல் காதலாகிக் கவிதை பாடியிருக்கிறார் என்றால் கண்ணனின் கவர்ச்சி அளவிடற்கரியது அல்லவா!

‘கண்ணா! கருமைநிறக் கண்ணா!

உன்னைக்

 காணாத கண்ணும் ஒரு கண்ணா?’

என்று கவிநயமாக வினா விடுக்கிறார் கவியரசர் கண்ணதாசன். பன்னிரண்டு ஆழ்வார்கள் பாடிச் சிறப்பித்த அந்த கிருஷ்ணரை நண்பனாய், காதலனாய், ஆசானாய், அன்னையாய், தந்தையாய் பன்னிரண்டு கோணங்களில் பாரதியார் பாடி பரவசப்பட்டிருக்கின்றார். ஆண்டாள் பெருமாட்டி,

‘கண்ணன் என்னும் கருந்தெய்வம்

    காட்சி பழகிக் கிடப்பேனை’

என்று பாடுகிறாள். விஷ்ணு என்றால் விரிந்தவர் என்று பொருள்! பரந்து விரிந்த ஆகாயமும், கடலும் நீல நிறமாக விளங்குவது போல் கண்ணபெருமானும் நீல வண்ணனாகவே கோலம் பெறுகின்றார்.

‘நீலவண்ணக் கண்ணா வாடா! நீ ஒரு முத்தம் தாடா’ என்றும்,

‘காக்கைச் சிறகினிலே நந்தலாலா - நின்றன்

கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா!’ என்றும்

பச்சை மா மலை போல் மேனி!

- என்றும் கண்ணன் மேனி நிறத்தை கருப்பு, நீலம், பச்சை என வர்ணிப்பதில் அடியவர்கள் ஆனந்தமும் மனநிறைவும் அடைகின்றனர். கண்ணபெருமானைக் குழந்தையாகப் பெற்ற பெரும் பாக்கியத்தை தேவகியும் வசுதேவரும் அடைந்தார்கள் என்றாலும் அதை விட அதிகமான புண்ணியப் பேற்றினைப் பெற்றவர்கள் யசோதையும் நந்தகோபரும் என்றே சொல்ல வேண்டும்.

ஏனென்றால் குறும்புக்காரக் கண்ணனின் பால்ய லீலைகளையும், குழலூதி அவன் ஆயர்பாடியில் மாடுகளை மேய்ப்பவனாக, வெண்ணெய் திருடி உண்பவனாக, கம்சனால் அனுப்பப்பட்ட கொடியவர்களின் உயிரைக் குடித்தவனாகப் பலவிதமாகப் பரிணமித்ததை வளர்த்த யசோதையும், நந்தகோபரும் தானே அனுபவித்து அகமகிழ்ந்தார்கள்! அதனால்தான் ‘என்ன தவம் செய்தனை... தேவகி’ என்று நாம் பாடுவதில்லை. ‘என்ன தவம் செய்தனை... யசோதா’ என்று உள்ளம் உருகி, உணர்வு மயங்கி நாம் பாடி மகிழ்கின்றோம்.

என்ன தவம் செய்தனை! யசோதா

எங்கும் நிறை பரப்ரம்மம்

அம்மா என்று அழைக்க

என்ன தவம் யசோதனை!

ஈரேழு புவனங்கள் படைத்தவனை

கையில் ஏந்தி சீராட்டி, பாலூட்டி, தாலாட்ட

நீ என்ன தவம் செய்தனை!

பிரம்மனும், இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள

உரலில் கட்டி, வாய் பொத்திக் கெஞ்ச வைத்தாய் கண்ணனை

தாயே! என்ன தவம் செய்தனை

சனகாதியர் தவ யோகம் செய்து

வருந்திச் சாதித்ததை புனித மாதே

எளிதில் பெற என்ன தவம் செய்தனை...

கண்ணனின் குழலிசை போலவே அனைவரையும் மயங்க வைக்கிறது. இசை அரங்குகளில் எல்லாம் இந்த இனிமையான கானம். ஆழ்வார்கள் கண்ணனை அனுபவித்த விதமே அலாதியாக நம் அன்னைத் தமிழில் ஒளிர்கின்றது. பெற்ற தேவகியை விட வளர்த்த யசோதை கண்ணனால் ஆனந்தம் மிகவும் பெற்றாள் என்று நாம் அறிவோம். ஆனால், அவளை விட இன்பம் அனுபவித்தவர்கள் ஆழ்வார் பெருமக்கள் தான். குழந்தைக் கண்ணன் எப்படிப்பட்ட தொட்டிலில் கண் வளர்கின்றான் தெரியுமா? பெருமிதம் பொங்க பெரியாழ்வார் பாடுகின்றார்.

‘மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி

ஆணிப் பொன்னாற் செய்த வண்ணம் சிறுதொட்டில்

பேணி உனக்குப் பிரமன் விடு தந்தான்!

மாணிக் குறளனே! தாலேலோ!

வையம் அளந்தானே! தாலேலோ!’

பெரியாழ்வார் மேலும் பேசுகின்றார்.

தோழர்களுடன் சேர்ந்து கொண்டு ஆயர்பாடியில் திருட்டுத்தனமாக கோபிகைகளின் இல்லம் புகுந்து வெண்ணெய்க் கலயத்தை கபளீகரம் செய்வது மட்டும் அல்ல, வெண்ணெய் தீர்ந்தவுடன் அந்த வெறும் கலத்தைத் தரையில் வீசி எறிந்து அதனால் எழும் சப்தத்தைக் கேட்டு சந்தோஷம் அடைவானாம் குறும்புக்கார கண்ணன்.

‘வெண்ணெய் விழுங்கி வெறுங்கலத்தை

வெற்பிடை இட்டு அதன் ஓசை கேட்கும்

கண்ணபிரான் கற்ற கல்வி.’

இப்படியெல்லாம் விஷமத்தனமாக விளையாடல் புரிவதுவே ‘அவன் கற்றகல்வி’ என்று பெரியாழ்வாரும் இப்பாசுரத்தில் சற்று வேடிக்கையாகவே விவரிக்கின்றார். திருமாலின் கல்யாணகுணக் கடலில் ஆழ்பவர்கள்தான் ஆழ்வார்கள். கண்ணபெருமானை - அவன் கள்ளத்தனமாக வெண்ணெய்க் கலயத்தை எடுத்து அதை வாரி வாயில் போட்டுக் கொண்ட நேர்த்தியை - அவனை அதட்டி அடிக்கச் சென்ற யசோதையின் செய்கையை கண்ணனின் விஷமம் கலந்த அழுகையை - அவனின் அஞ்சுதலை - அடிக்காதே அம்மா!’ என்ற கெஞ்சுதலை எல்லாம் தன் பாசுரத்தில் படம் பிடிக்கிறார் தத்ரூபமாக! யார் தெரியுமா? கொல்லி காவலர் - கூடல் நாயகர் குலசேகர ஆழ்வார். அவரின் பாடல் அமுதத்தைப் பருகலாமா?

‘முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும்

    முகிழ் இளம் சிறு தாமரைக் கையும்

எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு

    என்கு நிலையும், வெண் தயிர் தோய்ந்த செவ்வாயும்

அழுகையும், அஞ்சி நோக்கும் அந்நோக்கும்

    அணிகொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்

தொழுகையும் இவை கண்ட யசோதை

    கொல்லை இன்பத்து இறுதி கண்டாளே!’

ஓவியர்கள் தங்கள் தூரிகையால் கூட இப்படி ஒரு காட்சியைத் தீட்ட முடியுமா என்று ஆச்சர்யப்படும் வண்ணம் அற்புதமாக சொற்சித்திரம் புனைந்துள்ளார் குலசேகர ஆழ்வார். ‘கவிதை ரசிகர்கள் படித்து படித்து மகிழ வேண்டியதும், ஓவியம் தீட்டும் கலைஞர்கள் வரைந்து, வரைந்து இன்புறத்தக்கதும் மேற்கண்ட குலசேகர ஆழ்வாரின் கொஞ்சு தமிழ்க் கவிதை’ என்று கூறுகிறார் அண்மையில் அமரர் ஆன கவிதைச் சுவைஞர் ‘பாரதி சுராஜ்’ அவர்கள்.

‘மழைக்குக் குடை! பசி நேரத்து உணவு!

    வாழ்வினுக்கு எங்கள் கண்ணன்’

என்று பாடுகிறார் மகாகவி பாரதியார்.

‘உண்ணும் சோறு! பருகும் நீர்!

    தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணனே!’

என்று பாடுகிறார் நம்மாழ்வார். தீயவர்களுக்கு மட்டுமே தெய்வம் தீயாக விளங்கும்! அருள் நிறைந்த அன்பர்களைத் தென்றலாக அரவணைக்கும்!

இன்றைய கவிஞர் கண்ணன் பற்றி பண் இசைக்கின்றார். கண்ணனின் லீலைகள்! அவை

கவிதைக்குச் சோலைகள்!

அந்த

அரும்பின் குறும்புகள்

ஆயிரம்! ஆயிரம்!

ஆவணியில், ரோகிணியில்,

அஷ்டமியில், நள்ளிரவில்

கண் மலர்ந்தது

அந்த கருப்புக் குழந்தை!

தீய கம்சனுக்கோ

அது நெருப்புக் குழந்தை!

தூய மனத்தவர்க்கோ

அது விருப்புக் குழந்தை!

சிரிப்புக் குழந்தை.

- திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

(இனிக்கும்)

Related Stories: