ஆனந்தம் முதல் பேரானந்தம் வரை!

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம் - 30

உமையம்மையை சரணடைந்து, அவள் அடியவரைத் தொழுது, வாழ்வியல் பயனான செல்வத்தைப் பெற்று அந்த செல்வத்தின் வழியாக வேதம் முதலானவற்றில் கூறிய வழி அறத்தை செய்து அறத்தினால் கிடைத்த குருவருளும், திருவருளும் பெற்று கவலையற்று, துன்பமற்று, இறையடியில் இன்பமுற்று என்றென்றும் மரணமற்று, உமையம்மையின் அருளால் இணைந்திருக்கும் ‘அன்பர் கூட்டத்தை ‘வில்ளேன்’ விலகேன் என்ற வார்த்தையால் அன்பர் கூட்டத்தின் உயர்வும், உமையம்மையின் அருளும், உபாசகன் பெறும் பயனையும், மறைமுகமாக சிறப்பித்து வலியுறுத்துகின்றார் ‘விள்ளேன்’ என்ற வார்த்தையால். 

‘பரசமயம் விரும்பேன்’:

கடவுளை வணங்குகிறவர்கள் ஐந்து விதமாக பிரிக்கப்படுகிறார்கள். அதில் தேவைக்கு வணங்குகிறவர்கள், ஆசைக்கு வணங்குகிறவர்கள், துன்ப நீக்கத்திற்கு வணங்குகிறவர்கள் முக்திக்காக வணங்குகிறவர்கள். இறையன்பிற்காக வணங்குகிறவர்கள். இவர்கள் ஒருவரைவிட ஒருவர் உயர்வானவர்கள். அதில் எல்லோரையும்விட உயர்ந்தவர் இறையன்பிற்காக வணங்குகின்றவர்கள். தேவைக்காக வணங்குகிறவர்கள் தன் தேவையை அந்த தேவதை அளிக்கவில்லை என்றால், பிற தேவதையை வணங்குவர். ஆசைக்காக வணங்குகின்றவர்களும், துன்ப நீக்கத்திற்காக வணங்குகின்றவர்களும், அப்படியே என உணர்க.

இதில் முக்திக்காக வணங்குகின்றவர்கள், உண்மை கருதி மாறுபடுவர். இவர்கள் நால்வரும் பயன் அல்லது அறம் கருதி, உண்மை கருதி, ஆசை கருதி, உண்மைத் தன்மையை உணர்ந்து பிறசமயத்தை தழுவும் நெறி உடையவர்கள். அன்பிற்காக மட்டும் இறைவனை வணங்குகிறவர்கள், எந்தச் சூழ்நிலையிலும் தான் வணங்குகின்ற இறைவனைத் தவிர வேறு எந்த தெய்வத்தையும் வணங்க மாட்டார்கள், அந்த வகையில் அபிராமியை அன்பிற்காகவே வணங்கும் உயர்வர உயர்ந்த வகையைச் சார்ந்தவர். அதனால்தான் ‘பரசமயம் விரும்பேன்’ என்று குறிப்பிடுகின்றார். விருப்பத்தை நிறைவேற்றும்,

‘வீணே பலிகவர் தெய்வங்கள் பாற்

சென்று மிக்க அன்பு-பூணேன்’ (பாடல் எண் - 64)

‘நன்றே வருகினும் தீதே விளைகினும்’ (பாடல் எண் - 95) என்ற வார்த்தைகளால் நன்கு உணரலாம். வடமொழியில் தேவைக்கு வணங்குவோரை ஆர்த்தி எனவும், ஆசைக்கு வணங்குபவரை காமி என்றும், துன்ப நீக்கத்திற்கு வணங்குபவரை சரணி எனவும், முக்திக்கு வணங்குபவரை ஞானி எனவும், அன்பிற்கு வணங்குபவரை பக்தர் எனவும் வேறு படுத்தி குறிப்பிடுவதிலிருந்து இறையன்பின் வகையை நன்கு அறியலாம். இவை அனைத்துமே சிறந்தவைதான்.  இறையருளை பெற்றுத் தருபவைதான். இவை ஒன்றிற்கு ஒன்று அடிப்படையானது. ஒன்றைவிட ஒன்று உயர்வானது. அந்த உயர்ந்த அன்பை சாதனமாக இறையருளைப் பெற முதன்மை சாதனமாக எதிர்மறையில் கூறவே ‘பரசமயம்

விரும்பேன்’ என்றார்.

‘வியன் மூவுலகிற்கு உள்ளே’:

சாக்த தந்திரங்களை பொறுத்தவரை மூன்று உலகங்கள் உள்ளதாகக் குறிப்பிடுகின்றார்கள். புற உலகம், அக உலகம், அனுபவ உலகம் (அகப்புறம் உலகம்) அக உலகம் என்பது மனிதர்களின் மனம் சார்ந்த பகுதி, புற உலகம் என்பது மனிதர்கள் வாழும் புறம் சார்ந்த நிலப்பகுதி (குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை) போன்றவை போல, அகப்புற உலகம் என்பது மனம் சார்ந்த பகுதியும், புறம் சார்ந்த நிலப்பகுதியும் இணைந்தது தான் அகப்புற உலகம். இந்த மூன்றையுமே ‘வியன் மூவுலகிற்கு’ என்று குறிப்பிடுகின்றார்.‘உள்ளே’ என்ற வார்த்தையால் ஒவ்வொரு மனிதனும் தன் மனம் சார்ந்தும், தான் வாழும் பகுதி சார்ந்தும், அந்த பகுதியின் தொடர்பால் ஏற்படும் அனுபவம் சார்ந்தும் பெறும் உணர்வையே தன் உணர்வாகக் கருதுவார்கள்.

அந்த உணர்வுக்கு காரணமானவள் உமையம்மை என்பதை சூட்டவே ‘வியன் மூவுலகிற்கு உள்ளே’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றார்.‘வியன்’ என்ற வார்த்தையானது ‘வியத்’ என்று ஆகாசத்தை குறித்தது. வியத் என்பது மூன்று வகைகளாகப் பிரிக்கப்படும். சாத்திரங்களைப் பொறுத்தவரை சித்தாகாசம் - அறிவு வெளிதகராகாசம் - உணர்வு வெளிகடாகாசம் - செயல் வெளி இந்த மூன்று ஆகாயத்தையுமே ‘வியன் மூவுலகு’ என்று குறிப்பிட்டார்.

‘உலகுக்கு உள்ளே’ என்ற வார்த்தையால் அறிவையும், உணர்வையும், செயலையும் இவை மூன்றையுமே குறித்தார். அபிராமி பட்டர் மூன்று நிலைகளிலிருந்தும் பேசுகிறார். ஆசைக் கடலில் அகப்பட்டு - 32 உணர்வு சார்ந்தும், எண்ணில் ஒன்றும் இல்லா வெளியே - 16 செயல் சார்ந்தும், என் அறிவாய் - 11 அறிவு சார்ந்தும் பேசுவதையே மூன்று உலகத்தின் உள்ளேயிருந்து பேசுகின்றார். அந்த மூன்றுமாகவும் உள்ளேயிருப்பது உமையம்மையே என்பதை ‘வியன் மூவுலகிற்கு’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றார். இதையே லலிதாஸஹஸ்ர நாமம் இச்சா, ஞான, கிரியா சக்தி ஸ்வரூபிண்யை நமஹ என்று விழைவு. அறிவு, செயல் வடிவானவளே என்று குறிப்பிடுவதிலிருந்து அறியலாம்.

‘அனைத்தினுக்கும் புறம்பே’:

உமையம்மையைப் பற்றி சாத்திரங்கள் மூன்று விதமான இயல்புகளைக் குறிப்பிடுகின்றது. எளிமையாக அடைய கூடியவை (சௌலப்யம்), அடைதற்கு அரியவள் (காம்பீர்யம்), உண்மையான அன்பு கொண்டவர்க்கு அடைதற்கு எளியவளாகவும், அஃது இல்லார்க்கு அரிதற்கு அரியவளாகவும் விளங்குவாள். இதனை வடமொழி ‘உபயம்’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றது. பாரில் உன்னை சந்திப்பவர்க்கு எளிதாம் - 14 என்று சௌலப்பியத்தையும் எண்ணில் ஒன்றுமில்லா வெளியே - 16 என்று காம்பீர்யத்தையும் இப்பொருள் அறிவார் அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே - 56 என்று உபயத் தன்மையை குறிப்பிடுகின்றார்.

இப்பாடலைப் பொறுத்தவரை இந்த சொல்லானது அடைதற்கரிய கம்பீரமான சுபாவத்தையே ‘அனைத்தினுக்கும் புறம்பே’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றார். ‘அனைத்தினிற்கும் புறம்பே’ என்பது ஆகம சாஸ்திரங்களைப் பொறுத்தவரை உமையம்மையை மந்திரங்களாலும், யந்திரங்களாலும், தந்திரம் என்று சொல்லக்கூடிய ஒருவிதமான வழிபாட்டு நெறிமுறைகளாலும், கிரியை என்று சொல்லக்கூடிய புலனடக்கத்தாலும், பாவனா என்று சாத்திரங்களில் சொல்லப்பட்ட குறிப்பிட்ட சில உணர்வுகளால் வேதங்கள், ஆகமங்கள் இவைகள் கூறும் இறைவனைப் பற்றிய கருத்துக்களாகும். இறையருள் அனுபவத்தை அடைந்து அனுபவிக்கலாம் என்கிறது.

இப்படி அனுபவிக்க இறையருள் அனுபவமானது உமையம்மையின் கருணையினாலேயன்றி ஆன்மாக்களின் அறிவினாலும், முயற்சியினாலும் அடைய முடியாதவள். இதுதான் அவளது உண்மையான இலக்கணமாகும். இருந்தாலும் சாத்திரங்கள் சொல்கிற பொதுவும் (சாமான்யம்) சிறப்புத் (விசேஷம்) தன்மையாக விளங்குவது சிறப்புத் தன்மையேயாகும். வேறு எந்தப் பொருளிடத்தும் இல்லாது உமையம்மையிடத்து மட்டும் இருக்கும் அளவிடதற்கரிய, அறியதாகயிருக்கும் பண்பே ‘அனைத்திற்கும் புறம்பே’ என்று குறிப்பிடுகின்றார்.

‘உள்ளத்தே விளைந்த கள்ளே’:

உள்ளம் என்பது புலன்களின் வழி பெறப்பட்ட தகவல்கள் சார்ந்த சுக, துக்க, அனுபவப் பதிவுகளின் தொகுப்பேயாகும். அந்தத் தொகுப்பையே சாத்திரம் வாசனாமலம் என்கிறது. வாசனாமலம் என்கின்ற வார்த்தையையே ‘உள்ளத்தே விளைந்த கள்ளே’ என்று குறிப்பிடுகின்றார். ‘மனமே மனிதர்களின் பிறவி துன்பத்துக்கும் வீடுபேற்று இன்பத்துக்கும் காரணமாக அமைகின்றது’ என்கிறது.

‘மனயேவ மனுஷ்யாநாம் காரணம்

பந்த மோக்ஷயாம்’

- உபநிஷத் அந்த வகையில் மனதின் வழி நாம் செல்வோமேயானால் வீடு பேற்றிற்கும், நித்தியமான ஆனந்தத்திற்கும் காரணமாக அமையும். தற்கால நோக்கில் மனது மிகவும் மோசமான முதலாளி அருமையான தொழிலாளியாக ஆன்மாவிற்கு விளங்குகிறது. அது மோசமான முதலாளியாக விளங்குகின்றபோது ‘உள்ளத்தே விளைந்தகள்ளே’ என்று நம்மை ஆளுகின்ற மனமாக உருவகப்படுத்துகிறார். உபாசனை நெறியில் உமையம்மையின் அனுகிரகத்தை பெற்று விட்டால் மனதானது அருமையான தொழிலாளியாகி மனதில் கள்ளுண்டவன்போல உமையம்மையை தவிர வேறு எதையும் நினைக்காத தன்மையை பெற்று விடுகிறது.

அந்தத் தன்மையை அடைந்தால் முக்தி நிச்சயம். அந்தத் தன்மையை அருள்பவளாக நம்முள்ளேயிருக்கும் சக்தியையே ‘உள்ளத்தே விளைந்த கள்ளே’ என்று குறிப்பிடுகின்றார். இதையே ‘‘ஆசைக் கடலுள் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைபாசத்தில் அல்லற்பட இருந்தெனை’’ (பாடல் - 32) என்பதனாலும், ‘‘பார்க்கும் திசைதோறும் பாசாங்குசமும் பனிச்சிறை வண்டு ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும், என் அல்லல் எல்லாம் தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும் வார்க்கும் குங்கும முலையும் முலை மேல் முத்து மாலையுமே’’ (பாடல் - 85) என்பதனாலும், ‘உள்ளத்தே விளைந்த கள்ளே’ என்ற சொல்லால் மனிதன் ஆளுமை தன்மையையும், அடிமை தன்மையையும் விளக்கி கூறுகின்றார்.

‘களிக்கும் களியே’:

ஆனந்தம் என்பது ஐந்து விதமாக சாத்திரங்களால் கூறப்படுகின்றது. செவிக்கு இனிய இசை, மூக்கிற்கு நல்ல வாசம், நாவிற்கு அறுசுவை உணவு, மெய்யிற்கு சூடு, குளிர்ச்சி, மென்மை, வன்மை, கண்ணிற்கு இனிய காட்சி, இவை ஐந்தும் இணையும்போது உள்ளத்தில் தோன்றும் உணர்வே ‘களி’ எனப்படுகின்றது.

‘‘ஊரும் முருகு சுவைஒளி ஊறொலி

ஒன்றுபடச் சேரும் தலைவி சிவகாம

சுந்தரி’’(பாடல் - 68)

என்பதனால் அறியலாம். ஆனால், இப்பாடலில் ‘களிக்கும் களியே’ என்கிறார். மகிழ்ச்சிக்கெல்லாம் மேலான மகிழ்ச்சி. பிற ஆனந்தங்களை சிறுமை படுத்துகின்ற மகிழ்ச்சி. அதையே இங்கு ‘களிக்கும் களியே’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றார். இதையே லலிதாஸஹஸ்ர நாமம் ‘பிற ஆனந்தங்களை சிறுமைபடுத்தும் பேரானந்த வடிவினளே’ என்பதை ‘‘ஆனந்த லவி பூத பிரம்மா தியானந்த சந்தத்யை’’ என்று குறிப்பிடுவதிலிருந்து அறியலாம்.  மோட்சத்தில் ஏற்படுகின்ற ஆனந்தமானது புறப்பொருள்களில் இருந்து பெறப்படாததாகவும், ஆனந்தத்தை அனுபவிக்கிறவனின் வடிவமாகவே நிலைத்து நிற்பதாகவும், தொடர்ந்து அனுபவிப்பதால் சலிப்பில்லாததாகவும், அதை விட்டு விலகுவதால் துன்பமில்லாததாகவும் இருப்பதையே ‘களிக்கும் களி’ என்கின்றார்.

நாக்கு மகிழ ருசியான உணவு வேண்டும். இந்தப் புறப்பொருளாக இருக்கிற உணவுதான் நாக்கிற்கு மகிழ்ச்சி புறப்பொருளான உணவால் அமைகின்றது. ஒரே உணவை உண்பதால் சலிப்பு ஏற்படுகின்றது. அது சலிப்பை தருகின்றபோது அது ஆனந்தத்தை தராததாக ஆகி விடுகிறது. நல்ல உணவை உண்ண முடியாத நிலை சர்க்கரை நோய் உடையவனுக்கு இனிப்பைப்போல் முன் இனித்து பின் துன்பம் தருவதாக இருக்கும். நல்ல வசதிகளை அனுபவித்த ஒருவர் வீடு, பதவி போன்றவற்றை அனுபவிக்கும் போது சுகமும், விலகும் போது துன்பமும் ஏற்படும். இத்தகைய இன்பத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதையே ‘களிக்கும் களியே’ என்று குறிப்பிடுகின்றார்.

‘அளிய என் கண்மணியே’ என்ற வார்த்தையால் அபிராமிபட்டர் ஞானத்தையே ‘கண்’ என்று குறிப்பிடுகின்றார். அந்தக் கண்ணின் பார்வையாக இருப்பவளே உமையம்மை இதை அறிவுறுத்தவே ‘அளிய  என் கண்மணியே’ என்கிறார். வைதிக சடங்கில் பூணூல் அணிவதை ‘உபநயனம்’, ‘துணை கண்’ என்று குறிப்பிடுகின்றார்கள். இந்தச் சடங்கானது ஆன்மாவை அனுபவத்தில் அறிவதற்காக (உடல் உணர்வு நீக்கி) செய்யப்படுவதாகும். உமையம்மையை விளக்கிக் கூறும் ஆன்ம விளக்க நூல்களான சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம்,

பூர்வமீமாம்சா, உத்தரமீமாம்சா என்ற இறைவனை அளவையின் வழி அளந்து எப்படி அறிய வேண்டும் என்பதை அறிவிக்கும் இந்த ஆறு நூலிற்கும் அறிவிப்பது, காட்டுவது, விளக்குவது, நோக்குவது, பார்ப்பது என்று பொருள்படும். தரிசனம் என்ற வார்த்தையை பயன்படுத்துவதிலிருந்து கண் எனும் சொல்லை அறிவு என்ற பொருளில் பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த நோக்கத்திலேயே இறைவியையும் தன்னை தான் அறியும் ஞானத்தையும், இவ்வுலகத்தை அறியும் ஞானத்தை அறிவிப்பது கண்ணேயாகும். அதை மனதில் கொண்டே ‘அறிய என் கண்மணியே’ என்று வேத, ஆகம, இதிகாச, புராண, தர்ஷணி, சாஸ்திரத்தையே உமையம்மை என்றும்,

அந்த சாத்திரத்தின் வழி ஏற்படும் அனுபவத்தையே உமையம்மை என்றும், ‘அறிய என் கண்மணியே’  என்கிறார். ‘என் கண்மணியே’ என்ற வார்த்தையால் ஒவ்வொருவருக்கும் தனக்கு மட்டும் ஏற்படும் தன் அனுபவத்தையே ‘என் என்ற’ வார்த்தையை பயன்படுத்தி ‘அறிய என் கண்மணியே’ என்று குறிப்பிடுகின்றார். காண்பது, காட்டுவது, காட்சியாவது மூன்றும் உமையம்மையே என்பதையே ஆன்ம இறையனுபவமானது ஒவ்வொருவருக்கும் வேறுபடும் என்பதனால் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ‘அறிய என் கண்மணியே’  என்று கூறுகிறார்.

- முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

(தொடரும்)

Related Stories: