நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு அம்பாளுக்கு அன்னபூரணி அலங்காரம்

ராமேஸ்வரம்:  ராமேஸ்வரம் கோயிலில் நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு அம்பாள் ஸ்ரீசக்கரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றதுடன் அம்பாள் அன்னபூரணி அலங்காரத்தில் கொலுவில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு நேற்று அம்பாள் சன்னதியில் ஸ்ரீசக்கரத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி அம்பாள் சன்னதியில் பர்வதவர்த்தனி அம்பாள் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளியதை தொடர்ந்து ஸ்ரீசக்கரத்திற்கு பால், மஞ்சள், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு அம்பாள் சன்னதியில் அலங்கரிக்கப்பட்ட பந்தலில், பசிபிணி நீக்கும் அன்னபூரணி அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளி கொலுவில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோயில் இணை கமிஷனர் மங்கையர்கரசி, உதவி கோட்டப்பொறியாளர் மயில்வாகணன் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நவராத்திரி உற்சவத்தையொட்டி அம்பாள் சன்னதி பிரகாரத்தில் புராணக் கதைகள், காப்பியங்கள், வரலாறுகள் குறித்த பல்வேறு சிற்பங்களினால் கொலு வைக்கப்பட்டிருந்தது. பெண்களும், சிறுவர்களும் இதனை பார்த்து ரசித்தனர்.

Related Stories: