144 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கிறது : தாமிரபரணி மகா புஷ்கர விழா துவங்கியது

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி மஹாபுஷ்கர விழா 144 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பு பூஜைகளுடன் இன்று கோலாகலமாக துவங்கியது. நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் வற்றாத ஜீவநதியாக பாய்ந்தோடும் தாமிரபரணி ஆற்றில் 144 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் மஹாபுஷ்கர விழா இன்று (11ம்தேதி) துவங்கியது. வரும் 23ம்தேதி வரை விழா கோலாகலமாக நடக்கிறது. தாமிரபரணி நதிக்கரையில் 64 தீர்த்தக்கட்டங்களும், 143 படித்துறைகளும் உள்ளன. புஷ்கர விழாவையொட்டி இவற்றில் நீராட நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

மஹாபுஷ்கர விழாவையொட்டி இன்று அதிகாலை 4.30 மணிக்கு பாபநாசம் கோயில் படித்துறையில் துவங்கிய தீர்த்தமாடுதல் பெருவிழாவில் ஜீயர்கள், சைவ ஆதீனங்கள், மடாதிபதிகள், சாதுக்கள், துறவிகள் மற்றும் பக்தர்கள் 12 புண்ணிய நதி கலச தீர்த்தங்களை தாமிரபரணி நதியில் விஜர்சனம் செய்து தீர்த்தமாடினர். தொடர்ந்து காலை 10.30 மணிக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், புனித நீராடினார். பின்னர் நடந்த விழாவில் தாமிரபரணி மஹா புஷ்கர விழா மலரை கவர்னர் வெளியிட்டு பேசினார்.

விழாவில் அகில பாரத துறவிகள் சங்க பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், இமாசல பிரதேச முன்னாள் கவர்னர் விஷ்ணு ஸதாசிவ் கோக்ஜே உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு நெல்லை ஜடாயு தீர்த்தத்தில் நடக்கும் புஷ்கர விழாவிலும் கவர்னர் பங்கேற்கிறார். அதைத் தொடர்ந்து இரவு 7.15 மணிக்கு திருப்புடைமருதூரில் நடக்கும் புஷ்கர விழா நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். கவர்னர் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றங்கரையோர பகுதிகளில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி இரு மாவட்டங்களிலும் சுமார் 7 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நெல்லை அருகே உள்ள அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோயிலில் யாக சாலை மண்டபத்தில் இன்று காலை 8 மணிக்கு 2வது நாளாக 54 ஹோமகுண்டங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

Related Stories: