கோயில்களில் நவராத்திரி விழா : 9 நாட்கள் கொண்டாட்டம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நவராத்திரி விழா நேற்று துவங்கியது. பகல் 1.15க்கு ஸ்ரீ ரங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் திருமஞ்சனம் கண்டருளினார். மாலை 6.15க்கு ரங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு நவராத்திரி கொலுமண்டபத்தை வந்தடைந்தார். அங்கு நவராத்திரி கொலு 7.45மணிக்கு துவங்கி 8.45மணி வரை நடை பெற்றது. அதன் பின் அங்கிருந்து புறப்பட்டு மூலஸ்தானத்தை அடைந்தார். 7ம் நாளான அக்டோபர் 16ம் தேதி ஸ்ரீரங்கநாச்சியார் திருவடி சேவை நடை பெறுகிறது. அக்டோபர் 18ம் தேதி சரஸ்வதி பூஜை யுடன் விழா நிறைவு பெறுகிறது.

நீர் ஸ்தலமான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் இன்று துவங்கும் நவராத்திரி விழா 19ம் தேதி வரை நடை பெறும். தினமும் ஆன்மிக சொற் பொழிவுகள், கச்சேரிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மலைக்கோட்டை மட்டுவார்குழலம்மை உடனுறை தாயுமானசுவாமி கோயிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. 19ம் தேதி வரை நடக்கிறது. தினசரி இரவு 7 மணிக்கு அம்பாள் உள்புறப்பாடு, 8 மணிக்கு கொலு மண்டபத்தில் தீபாராதனை நடை பெறுகிறது. துவக்க நாளான நேற்று ஏகாந்த சேவை நடந்தது. 11ல் தவக்கோலம், 12ல் மீனாட்சிஅம்மன், 13ல் கிருஷ்ணர், 14ல் தங்கக்குறிச்சி, 15ல் சரஸ்வதி, 16ல் சிவபூஜை, 17ல் ராஜராஜேஸ்வரி, 18ல் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்திலும் அம்பாள் காட்சியளிப்பார்.

19ம் தேதி இரவு 7 மணியளவில் அம்பு போடும் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து சுவாமி தங்க குதிரை வாகனத்திலும், அம்பாள் அன்னவாகனத்திலும் காட்சியளிப்பார். இறுதி நாளான 20ம் தேதி விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது. மண்ணச்சநல்லூர்: தமிழகத்தில் உள்ள சக்தி வழிபாட்டு தலங்களில் முதன்மையாக விளங்குவது சமயபுரம் மாரியம்மன் கோயில். நவராத்திரி விழா நேற்று துவங்கியது. நேற்று மாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு அம்பாளுக்கு குமாரிகா எனும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

தொடர்ந்து இரவு 8.30 மணியளவில் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடாகி உள் பிரகாரங்களில் வலம் வந்து நவராத்திரி மண்டபத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நவராத்திரி மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்த அம்பாளை திரளான பக்தர்கள் தரிசித்தனர். விழா நாட்களில் அம்பாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தில் நவராத்திரி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரும் 18ம் தேதி சரஸ்வதி பூஜையும், 19ம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்படுகிறது. விஜயதசமியன்று அம்பாள் வெள்ளிக்குதிரை வாகனத்தில் புறப்பாடாகி அம்புபோடும் முக்கிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையரும், செயல் அலுவலருமான குமரதுரை தலைமையில் கோயில் அலுவலர்களும், பணியாளர்களும் செய்துள்ளனர்.

Related Stories: